இந்தியத் திருக்கோயில்களில் பூரி ஜகந்நாதர் கோயில் மிகவும் குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் பூரி ஜகந்நாதருக்கு பக்தர்கள் உள்ளனர். லண்டனில் வாழும் சில பக்தர்கள் ஒன்றுகூடை ஶ்ரீஜகந்நாதா சொசைட்டி என்ற அமைப்பை உருவாக்கி ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இவர்கள் தற்போது ஶ்ரீ ஜகந்நாதா சொசைட்டி சார்பில் லண்டலில் பூரி ஜகந்நாதர் திருக்கோயிலை அமைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக லண்டன் மாநகரின் புறநகர்ப் பகுதியில் 15 ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளூர் அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளனர். இடத்துக்கான மதிப்பு இந்திய மதிப்பில் ரூ70 கோடி. இந்த இடத்தில் முதல்கட்டப்பணிகள் முடிக்கப்பட்டு 2024- ம் ஆண்டு ஆலயம் தொடங்கப்படும் என்று தெரிய வருகிறது.

இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் ஶ்ரீஜகந்நாதா சொசைட்டி சார்பில் அட்சய திருதியை நாளில் ஒரு கூடுகைக்கு ஏற்பாடு செய்தனர். இதில் லண்டன் நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் வாழும் 600 க்கும் மேற்பட்டவர்கள் வந்து இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளான, சுஜித் கோஷ் மற்றும் அமிஷ் திரிபாதி கலந்துகொண்டனர். நவ்நட் சென்டர், ஹயாஸ் என்னும் இடத்தில் நடைபெற்ற இந்தக் கூடுகையில் கஜபத் மகராஜ் சிறப்புரையாற்றினார்.
அதில் லண்டனில் ஜகந்நாத் கோயில் என்னும் கனவு விரைவில் நனவாகப் போகிறது என்று தெரிவித்தார். இந்தக் கூடுகையின் முக்கிய நிகழ்வாக ஒடிசாவைச் சேர்ந்த தொழிலதிபர் பிஸ்வநாத் பட்நாயக் 25 மில்லியன் பவுண்டு (ரூ 250 கோடி) பணத்தை ஜகந்நாதர் கோயில் அமைக்கும் பணிக்கு நன்கொடையாக வழங்கினார். வெளிநாடுகளில் ஓர் ஆலயப் பணிக்கு இவ்வளவு பெரிய தொகையை ஒருவர் நன்கொடையாக அளிப்பது இதுவே முதன்முறை.

இதற்காக சொசைட்டி சார்பில் பிஸ்வநாத் பட்நாயக்குக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது இனி ஆலயப் பணிகள் விரைந்துமுடியும் என்றும் 2024 ம் ஆண்டு ஆலயம் பக்தர்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என்றும் சொசைட்டியைச் சேர்ந்த அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.