Published:Updated:

ஆபத்திலிருந்து காப்பார் அன்னியூர் சனீஸ்வரன்... சனிப்பெயர்ச்சி சிறப்பு தலத்தின் மகிமைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அன்னியூர் ராமநாதீஸ்வரர் திருக்கோயில் | சனிப்பெயர்ச்சி 2020
அன்னியூர் ராமநாதீஸ்வரர் திருக்கோயில் | சனிப்பெயர்ச்சி 2020

வேண்டுவோருக்கு உடனே உதவ வரும் அன்னியூர் ராமநாதீஸ்வரரையும் அம்பிகை திரிபுர சுந்தரியையும், சனீஸ்வர பகவானையும் ஒருமுறை சென்று தரிசித்து வாழ்வில் நலமும் வளமும் பெறலாமே!

சனீஸ்வர பகவானை வழிபட்டு அவரது அருளைப் பெற்றவர்கள் வாழ்வில் உயர்ந்தும், சிறந்தும் விளங்குவர் என்பது ஜோதிட சாஸ்திரம் சொல்லும் விதி. இந்தியாவெங்கும் சிறப்பான சனீஸ்வர பகவான் ஆலயங்கள் இருந்தாலும் அன்னியூர் ராமநாதீஸ்வரர் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரனின் திருக்கோலம் அற்புதமானது. சனி பகவானின் வாகனமான காக்கையின் மீது வலது காலை ஊன்றி எழுந்து புறப்படும் கோலத்தில் அருளுகிறார். அதாவது 'என்னை மனம் நிறைந்து வேண்டி அழைக்கும் பக்தர்களுக்கு உடனே புறப்பட்டு வந்து உதவத் தயாராக இருக்கிறேன்!' என்பதே அந்த திருக்கோலத்தின் அடையாளம் என்கிறார்கள் பக்தர்கள்.

அன்னியூர் ராமநாதீஸ்வரர் திருக்கோயில் | சனிப்பெயர்ச்சி 2020
அன்னியூர் ராமநாதீஸ்வரர் திருக்கோயில் | சனிப்பெயர்ச்சி 2020

இப்படி வேண்டுவோரின் கஷ்டங்களை உடனடியாகத் தீர்த்து வைக்கும் சனி பகவானை இந்த சனிப் பெயர்ச்சி திருநாளில் வணங்கி நல்வாழ்க்கைப் பெறுவோம்.

வாலியை மறைந்திருந்து கொன்ற பாவம் தீர, ராமபிரான் அன்னியூர் ஈசனை பூஜித்ததால் ‘ராமநாதீஸ்வரர்’ என்கிற திருப்பெயர் உண்டானது என்கிறார்கள். இங்குள்ள அம்பிகை திரிபுரசுந்தரி. நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் அன்னை இவள். அன்னியூரைச் சுற்றியுள்ள பல தலங்களுமே ராமாயணக் கதையோடு தொடர்பு கொண்டவையாகவே உள்ளன. ஸ்ரீராமரோடு ஜானகி தேவி தங்கிய இடம் ‘ஜானகிபுரம்’ எனவும், ஜானகி தேவி மாய மானைக் கண்ட இடம் ‘கண்டமான்டி’ எனவும், மரகத நிற மாயமான் ஓடிய இடம் ‘மரகதபுரம்’ எனவும் இன்றும் இருந்து வருகிறது.

அன்னியூர் ராமநாதீஸ்வரர் திருக்கோயில் | சனிப்பெயர்ச்சி 2020
அன்னியூர் ராமநாதீஸ்வரர் திருக்கோயில் | சனிப்பெயர்ச்சி 2020

இந்த ஊர் மதுரையம்பதியைப் போலவே திட்டமிட்டு தேரோடும் மாட வீதிகளோடு அமைக்கப்பட்டுள்ளது. வடலூர் வள்ளல் பெருமான், காஞ்சி மகா பெரியவர் போன்ற ஞானியர் தரிசித்துச் சென்ற பெருமையும் இந்த ஊருக்கு உண்டு. இங்குள்ள தல மரமான வன்னி மரத்தடியில் தான் வடலூர் வள்ளலார் வழிபட்டார் என்பதற்கு அவர் பாடலே சாட்சியாக உள்ளது. இந்த கோயிலின் தல மரமான வன்னி மரத்தின் பெயரால் ‘வன்னியூர்’ என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்டு பிறகு ‘அன்னியூர்’ என்றானதாக இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். இக்கோயிலில் மூன்று நிலை ராஜகோபுரமும் பரந்து விரிந்த பிராகாரங்களும் விநாயகர், முருகர், நவகிரக சந்நிதிகளும் உள்ளன. இங்குள்ள 25 அடி உயரமான கல் கொடிமரம் வியப்பான ஒரு படைப்பு எனலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த தலத்தின் பெருமைகள் குறித்து இவ்வூரைச் சேர்ந்த அன்பர் அன்னியூர் சிவாவிடம் கேட்டோம். "திருமணம் கைகூடாமல் வருத்தப்படும் இளைஞர்கள், யுவதிகளுக்கு இந்த தலம் ஒரு சிறந்த திருமணப் பரிகாரத் தலமாக விளங்குகிறது. முறைப்படி இங்கு வந்து வழிபடுவோருக்கு நல்ல வரன் கிடைக்கும் என்பதற்கு பல பக்தர்கள் சாட்சியாக உள்ளார்கள். அறியாமல் செய்த தவறுகளுக்குப் பிராயசித்தம் தேடவும், சனி தோஷங்கள் நீங்கவும் இங்கு வந்து வழிபடலாம். சனி தோஷ நிவர்த்தி தலங்களுள் சிறப்பான இந்த அன்னியூர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன. வரும் வெள்ளிக்கிழமை 25-12-2020 முதல் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ள 27.12.2020 அன்று வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. சனி பகவானின் தோஷங்களால் அவதியுறும் அன்பர்கள் இங்கு வந்து வழிபட்டு நலம் பெறுமாறு வேண்டிக் கொள்கிறோம்." என்றார்.

அன்னியூர் ராமநாதீஸ்வரர் திருக்கோயில் | சனிப்பெயர்ச்சி 2020
அன்னியூர் ராமநாதீஸ்வரர் திருக்கோயில் | சனிப்பெயர்ச்சி 2020

வேண்டுவோருக்கு உடனே உதவ வரும் அன்னியூர் ராமநாதீஸ்வரரையும் அம்பிகை திரிபுர சுந்தரியையும், சனீஸ்வர பகவானையும் ஒருமுறை சென்று தரிசித்து வாழ்வில் நலமும் வளமும் பெறலாமே!

அமைவிடம்: விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கிச் செல்லும் சாலையில் 20 கிமீ தொலைவில் அன்னியூர் உள்ளது.

சக்தி விகடனும் ஸ்ரீவிஜய விஸ்வமாதா ராஜராஜேஸ்வரி பீடமும் இணைந்து நடத்தும் சனிப்பெயர்ச்சி சிறப்பு ஹோமத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளோர் இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு