புத்தாண்டு ராசிபலன்கள்!
திருத்தலங்கள்
Published:Updated:

ஓட்டப்பிடாரத்தில் ஒருநாள்!

ஓட்டப்பிடாரம் 
உலகாண்ட நாயகி ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓட்டப்பிடாரம் உலகாண்ட நாயகி ஆலயம்

அம்பாளை வசை பாடிய ஆண்டான் கவிராயர் ஆன்மிகக் கதை - ஜி.மகேஷ்

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி அது. பச்சைப் பசேல் என்ற வயல்களும், பூத்துக் குலுங்கும் நந்தவனமும் சோலைகளும், வற்றாமல் பால் கறக்கும் ஆவினங்களும், செந்தமிழும் வளமாக நிறைந்த ஊர் அது. ஓட்டப்பிடாரம் என்று பெயர். தூத்துக் குடியின் அருகே இருக்கும் அழகான கிராமம். அந்த ஊரின் முக்கியத் தெருவின் மத்தியில் ஓர் ஆலமரம் இருந்தது.

ஓட்டப்பிடாரத்தில் ஒருநாள்!

ந்த ஆல மரத்தின் அடியில் ஓர் ஆசனத்தில் ஆசிரியர் அமர்ந்திருக்க, எதிரே தரையில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். கையில் ஓலைச் சுவடி வைத்திருந்த ஆசிரியர், எதிரே இருந்த ஆண்டான் என்ற மாணவனைத் திட்டிக்கொண்டிருந்தார்.

இது இன்று நேற்று இல்லை; பல நாள்களாக நடப்பதுதான். ஆண்டானுக்குச் சுட்டுப்போட்டாலும் படிப்பு வரவில்லை. ஆனால், அவன் தந்தை வைகுண்டத்துக்கும் தாய்க்கும் ஆண்டான் படித்துப் பெரிய புலவனாக வரவேண்டும் என்று ஆசை. பள்ளிக் கூடம் சேர்த்துவிட்டார்கள். அன்று முதல் ஆசிரியருக்குச் சோதனை ஆரம்பித்தது. ஆண்டானோடு தினம் மல்லுக்கட்டுவதே அவரது வேலையாகிப்போனது. தினமும் ஆண்டானை ஆசிரியர் திட்டித் தீர்த்தார். உடன் பயிலும் மாணவர்களின் கேலிக்கும் ஆளானான் ஆண்டான். அவன் வாழ்க்கையையே வெறுத்தான். எப்படியாவது இந்த ஆசிரியரிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைத்தவன், ஆசிரியர் திட்டிக்கொண்டிருக் கும்போதே அன்று ஓட்டம் பிடித்தான். 

அவனைத் துரத்திக்கொண்டு ஆசானும் ஓடினார். ஒருவழியாக ஆசானுக்குப் போக்குக் காண்பித்துவிட்டு, ஓட்டப்பிடாரம் காளி கோயிலருகே வந்தான். அங்கே, சடை முடி தாங்கி, இடையில் கோமணம் தரித்தவராய், கழுத்தில் ருத்ராட்சமும் மேனி முழுக்கத் திருநீறும் அணிந்திருந்த ஒரு சித்தர் பெருமான் இருந்தார்.

அவரது கண்ணில் தலைதெறிக்க ஓடும் ஆண்டான் தென்பட்டான். சித்தருக்கு என்ன தோன்றியதோ, தாவிச் சென்று ஆண்டானைப் பிடித்தார். ஆண்டான் திமிறினான்; தப்பிக்க முயன்றான். ஆனால், அவரது வலுவான பிடியிடம் அவன் தோற்றுப் போனான். தன்னை யார் பிடித்திருப்பது என்று அறிய முகத்தைத் திருப்பி சித்தரை நோக்கினான். அவரின் முகத்தில் இருந்த அற்புதமான அமைதியும் தெய்விகமும் அவனை ஈர்த்தன. தன்னையறியாமல் அவரை வணங்கினான்.

ஓட்டப்பிடாரத்தில் ஒருநாள்!

வலக்கரம் உயர்த்தி ஆசீர்வதித்த சித்தர், பேச ஆரம்பித்தார். “அப்பனே, நீ போன ஜென்மத்தில் காளி தேவியை ஊனும் உயிரும் உருகப் பூஜித்திருக்கிறாய். அதன் பயனாக, காளி அன்னையின் ஆணைப்படி காளி தேவியின் மூல மந்திரத்தை நான் உனக்கு உபதேசிக்கிறேன். அதை ஜெபித்த படி காளி தேவியை சரணடை. நீ வாழ்வில் பெறமுடியாத பாக்கியங்கள் எல்லாம் பெறுவாய்” என்றார்.

எந்த மந்திர உபதேசத்திற்காக தேவி உபாசகர்கள் பலரும் தவம் கிடக்கிறார்களோ அந்த அற்புத மந்திரத்தை, தேர்ந்த சித்தர் ஒருவர் ஆண்டானுக்கு உபதேசிக்கிறேன் என்கிறார். இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்? ஆனால் ஆண்டான், பாவம் குழந்தைதானே... சித்தரை நம்பவில்லை. 

“சித்தரே, நீங்கள் சொல்வதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல நான் புண்ணியசாலியாக இருந்தால் நான் ஏன் மக்காகப் பிறக்க வேண்டும்? எனக் குப் புத்தி தர அந்தக் காளி ஏன் மறந்து போனாள்?”

துடுக்காகக் கேட்ட சிறுவனைக் கண்டு சித்தர் நகைத்தார்.

“எல்லாம் விதி அப்பனே... ஆனால் நீ படிக்காமலேயே பரம பண்டிதன் ஆகப்போகிறாய். நீ செய்ய வேண்டியதெல்லாம் நான் சொல்லும் மந்திரத்தை ஜெபிக்க வேண்டியது மட்டும்தான். ஆனால் நினைவில் கொள். இந்த மந்திரம் நெருப்பைப் போன்றது இதை வைத்து அடுப்பையும் பற்ற வைக்கலாம் கூரையையும் பற்ற வைக்கலாம். முடிவு உன் கையில்தான் இருக்கிறது” என்று எதையோ பூடகமாகச் சொல்லிவிட்டு, மந்திரத்தை உபதேசித்தார். பின்பு வந்த வேலை முடிந்து விட்டது என்பதுபோல எங்கோ சென்று மறைந்துபோனார். 

ஆண்டான் காளி மந்திரத்தை ஜெபித்த படியே நடக்க ஆரம்பித்தான். காளி கோயி லுக்கு வந்தவன், சுற்றுமுற்றும் பார்த்தான். ஆசான் கண்ணில் படாமல் காளி மந்திரத்தை ஜெபிக்கத் தகுந்த இடம் தேடினான். காளி தேவியின் சந்நிதியே வசதியாக இருக்கும் என எண்ணினான்.

மெள்ள உள்ளே சென்றவன், கதவைச் சாத்தி உட்பக்கமாகத் தாளிட்டுவிட்டுத் திரும்பினான். அவனுக்கு எதிரே அற்புதமாக `உலகம்மை’ எனப் போற்றப்படும் காளியின் திருவுருவம். ஆண்டானுக்குள் சிலிர்ப்பு. அம்பிகையின் திருமுகத்தில் இதயம் தொலைத்தவனாக மந்திரத்தில் மூழ்கினான்.

பல மணி நேரம் உருண்டோடியது. ஆண் டான் அமர்ந்த இடம் விட்டு அசையவில்லை. திடுமென, `டம டம டம...’ என்று யாரோ கர்ப்பக்கிரகத்தின் கதவைத் தட்டும் ஓசை.

சிறுவனின் தியானம் கலைந்தது. ஆசிரி யர்தான் வந்துவிட்டாரோ என்று அச்சம் எழுந்தது அவனுக்குள். “ய...யா...யார் அ..அ.. அது?” என்று வாயால் தந்தி அடித்தான். 

ஒரு பெண்ணின் சிரிப்பு அதற்குப் பதிலாக வந்தது. அந்த அட்டகாசத்தின் நடுவே இடி வேறு இடித்தது. ஹாசத்தின் நடுவே “அப்பனே, நான்தான் இந்த ஓட்டப்பிடாரத்துக் காவல் தெய்வம், உலகாளும் நாயகி உலகம்மை... காளிதேவி வந்திருக்கிறேன். நகர்வலம் சென்று வருவதற்குள் என் சந்நிதியில் வந்து அமர்திருக்கும் ஆண்டானே... போதும் விளையாட்டு. கதவைத் திற” என்றபடி மீண்டும் நகைத்தாள் அம்பிகை.

வந்திருப்பது அம்பிகையே என்பதை நம்பத் தயாரில்லை ஆண்டான்.

“நீங்கள் காளிதேவிதான் என்பதை நான் எப்படி நம்புவது? என்னைக் குருவிடம் சேர்க்க, என் அம்மா ஆடும் நாடகமாகக்கூட இது இருக்கலாமே!” எனக் கேட்டான்.

குழந்தையின் பயத்தை எண்ணிக் குறுநகை பூத்தாள் அம்பிகை. அவன் ஐயத்தையும் அச் சத்தையும் போக்கும்விதமாகப் பேசினாள்.

“ஞானமும் கவிப்புலமையும் காளியின் அருளால் வருபவை. அவற்றை உனக்குத் தருகிறேன். ஆனால், கவியில் இரண்டு வகைக் கவி உண்டு. அவற்றில் எது வேண்டும் என்று நீதான் தீர்மானிக்க வேண்டும். நொடியில் பாடும் வல்லமை கொண்ட ஆசுகவியாக வேண்டுமா, இல்லை வசைகவியாக வேண்டுமா?’’

உலகாளும் நாயகி சந்நிதிக்குள் செல்வதற்கு, சின்னஞ்சிறு குழந்தையிடம், புலமையைப் பேரம் பேசி லீலை புரிய ஆரம்பித்தாள்.

“தாயே, வசை கவி என்றால் என்ன?”

“நீ யாரை வைது (திட்டி) வசை பாடினாலும், நீ பாடிய வசை அப்படியே நடக்கும். அதற்குப் பெயர்தான் வசைகவி!”

குழந்தை யோசித்தான். தன்னைத் தொல்லை செய்யும் ஆசிரியர், கேலி செய்யும் சக மாணவர்கள் எல்லோரும் தன்னைக் கண்டால் அஞ்சவேண்டும் என்று ஆசை பிறந்தது அவனுக்கு.

“எனக்கு வசைகவி பாடும் வல்லமைதான் வேண்டும்!’’

ஓட்டப்பிடாரத்தில் ஒருநாள்!

`கனி போன்ற ஆசுகவி இருக்க, காய் போன்ற வசைகவி பாடும் வல்லமையைக் கேட்கிறானே' என்று ஆண்டானை எண்ணி அம்பிகையின் தாய் உள்ளம் கலங்கியது. ஆனாலும் விதி வலியது அல்லவா? தன் னைத் தேற்றிக்கொண்ட அம்பிகை “அப்பனே, கதவைத் திறந்து உன் நாக்கை நீட்டு!” என்று ஆணையிட்டாள்.

“தாயே, எனக்கு இன்னமும் இது என் ஆசிரியரின் சூழ்ச்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. ஆகவே, நான் இந்த சாவித் துவாரம் வழியே நாக்கை நீட்டுகிறேன்” என்றவன், அப்படியே செய்தான். அவன் நாவில் சூலத்தின் முனை கொண்டு எழுதினாள் அம்பிகை. உடன் அனைத்து ஞானமும் பள்ளம் கண்ட வெள்ளம் போல ஆண்டானிடம் சேர்ந்தன.

அதை ஆண்டானாலேயே நன்கு உணர முடிந்தது. இது காளி தேவியின் அருள் என்றும் விளங்கியது. சந்நிதியின் கதவைத் திறந்தான். வாசலில் ஒய்யாரமாக நின்றிருந்த அம்பிகையின் பாதத்தில் விழுந்து வணங்கினான்.

அம்பிகை ஆனந்தமாக ஆசி வழங்கினாள். அப்போது விதி மீண்டும் வேலை செய்தது. `தான் வசைகவி பாடினால் பலிக்குமா’ என்று அம்பிகை அளித்த வரம் குறித்தே சந்தேகம் கொண்டான். இதை உணர்ந்துகொண்ட அன்னை, ஒரு புன்னகையோடு சொன்னாள்: ``தயக்கம் வேண்டாம்! உன் முதல் வசைகவியை என்மீதே பாடு. அப்போதாவது உனது சந்தேகம் தீர்கிறதா என்று பார்ப்போம்!”

முதலில் தயங்கிய ஆண்டான், பின்பு ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு, தான் வணங்கிய காளிதேவி சிலையின் இடது தனம் அறுந்து விழவேண்டும் என்று பாடினான். அடுத்த நொடி காளி தேவியின் சிலையின் ஒரு தனம் அறுந்து விழுந்தது. ஆண்டான் அதிர்ந்தான். `அம்மா’ என்று அலறியபடியும், கண்ணீர் சிந்திய படியும் காளியின் பாதத்தில் விழுந்தான். அவளோ கற்பூரம் போல காற்றோடு காற்றாகக் கலந்துபோனாள்!

தமிழில் வெண்பாவுக்குப் புகழேந்தி, விருத்தத்துக்குக் கம்பன், கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக் கூத்தர், கலம்பகத்திற்கு இரட்டைப் புலவர்கள். இந்த வரிசையில் வசைகவிக்கு எனத் தனியாகப் பெயர் பெற்றவர் ஒருவரும் இல்லை. காளமேகம் சில வசைகவிகள் பாடினாலும், அவர் சிலேடை கவிக்குப் பெயர்போனவர். 

வசைகவியைத் தொல்காப்பியர் தனது இலக்கண நூலில் `அங்கதம்’ என்று குறிப்பிட்டு அதற்குத் தனி இலக்கணத்தையே சொல்லியிருக்கிறார். அந்தத் தொல்காப்பியத்தை அடியொற்றி முழுக்க முழுக்க வசைகவியை மட்டுமே பாடியவர், வசைகவி ஆண்டானைத் தவிர வேறு எவரும் இல்லை.

இப்படி தெய்விகத் தமிழ்மொழியில் வசைகவி இல்லாத குறையைத் தீர்க்க, வசைகவி ஆண்டானைத் தந்து, ஆண்டா னுக்குத் தந்த வரத்தை சோதிக்கத் தன்னையே தந்து, செந்தமிழை மேலும் அழகாக்கிய ஓட்டப்பிடாரம் காளியின் அருளைப் புகழ வார்த்தையே இல்லை. அதனால்தான் இந்த ஓட்டப்பிடாரம் காளியை, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் அவர்கள் `வேண்டியதையெல்லாம் தருபவள்’ என்று சொல்கிறார். தூத்துக்குடி அருகில் ஓட்டப் பிடாரத்தில் வீற்றிருக்கும் இந்த அன்னையை நாமும் வணங்கு வோம், வாழ்வில் எல்லா நலமும் பெறுவோம்.

நெல்லிக்காய் நைவேத்தியம்!

மார்கழி மாதத்தில் தினமும் திருப்பாவை பாடி ஆண்டாளையும் பெருமாளையும் மனமுருகி வழிபட்டால், தடைகள் எல்லாம் நீங்கி கல்யாண பாக்கியம் கிடைக்கும்.

இந்த மாதத்தில் அதிகாலையில் பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று திருப்பள்ளி எழுச்சி வைபவத்தைத் தரிசிப்பதால், நம் பாவங்கள் தொலையும்; விருப்பங்கள் யாவும் பழுதின்றி நிறைவேறும் என்கின்றன ஞானநூல்கள். அதேபோல், பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் என்ன பிடிக்குமோ அதை நைவேத்திம் செய்து பூஜிப்பது விசேஷம். அந்த வகையில் மார்கழியில் பெருமாளுக்கு வெண்பொங்கலும், ஆண்டாளுக்கு நெல்லிக்காயும் நைவேத்தியம் செய்வது சிறப்பு. இதனால் ஆயுள் பலம் அதிகரிக்கும்; தடைப்பட்ட திருமணம் விரைவில் கூடிவரும்; குடும்பத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது நிச்சயம்.

- சி.மித்ரா, தேனி-2