Published:Updated:

உதகையிலும் அருள்பாலிக்கும் பழநி மலை தண்டாயுதபாணியும் மலேசிய பத்துமலை முருகனும்... எங்கே தெரியுமா?

ஊட்டி பாலதண்டாயுதபாணி

ஊட்டிக்கு சுற்றுலா வரும் வெளியூர் மக்களும் இம்முருகப்பெருமானின் அருமை பெருமைகளை அறிந்து இத்தலத்திற்கு வந்து ஆர்வமுடன் வழிபாடு செய்கின்றனர் என்கிறார்கள் உள்ளூர் வாசிகள்.

Published:Updated:

உதகையிலும் அருள்பாலிக்கும் பழநி மலை தண்டாயுதபாணியும் மலேசிய பத்துமலை முருகனும்... எங்கே தெரியுமா?

ஊட்டிக்கு சுற்றுலா வரும் வெளியூர் மக்களும் இம்முருகப்பெருமானின் அருமை பெருமைகளை அறிந்து இத்தலத்திற்கு வந்து ஆர்வமுடன் வழிபாடு செய்கின்றனர் என்கிறார்கள் உள்ளூர் வாசிகள்.

ஊட்டி பாலதண்டாயுதபாணி
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடிகொண்டு அருள் பாலித்துக் கொண்டிருப்பார். அவ்வகையில், மலைகளின் அரசி என்றழைக்கப்படும் ஊட்டியில் பாலதண்டாயுதபாணி சுவாமியாக எழுந்தருளி பக்தகோடிகளைக் காத்து வருகிறார். முருகப்பெருமான் பழநி பாலதண்டாயுத சுவாமி வடிவினனாய் இங்கும் காட்சியளிப்பதாகவும் அதற்கான அபூர்வக் கதையையும் கூறி பக்தர்கள் வியக்கின்றனர்.
ஊட்டி பாலதண்டாயுதபாணி
ஊட்டி பாலதண்டாயுதபாணி

ஊட்டியில் வாழ்ந்த முருக பக்தர்கள் இருவர் ஆண்டுதோறும் பழநி சென்று முருகப்பெருமானை மனமுருக தரிசனம் செய்து வருவது வழக்கம். வயது மூப்பின் காரணமாக ஓராண்டு செல்வது தடைபட்டுப் போனது. எனவே, முருகப்பெருமான் பக்தர்கள் கனவில் தோன்றி, ஊட்டி நகரில் உள்ள எல்க்ஹில் குன்றிலேயே உறைவதாகவும், இங்கேயே வழிபடுமாறும் அருள் பாலித்தார்.

முருகப்பெருமானின் ஆணைக்கிணங்க, அவர்கள் இருவரும் சேர்ந்து ஊட்டி எல்க்ஹில் மலையில் பாலதண்டாயுதபாணி கோயிலை நிறுவினார்கள் என்பது செவிவழிச் செய்தியாகும்.

ஊட்டி பாலதண்டாயுதபாணி
ஊட்டி பாலதண்டாயுதபாணி

வேலுண்டு வினையில்லை என்பது போல, தொடக்கத்தில் வேலை வைத்து வழிபட்டனர். மலை உச்சியில் 60 அடி உயரம் கொண்ட ஞானவேல் நிறுவப்பட்டது. காலப்போக்கில் மலை உச்சியில் பலத்த காற்று வீசியதால் ஞானவேல் சாய்ந்தது. பின்னர், கோயில் நிர்வாகத்தினர் 60 அடி உயர ஞானவேலை அகற்றி விட்டு, 12 அடி உயரமுள்ள ஞானவேலை வைத்தனர். ஊட்டி என்றாலே, இயற்கை எழில் கொஞ்சும் நகரம். அவ்வண்ணம் கவின்மிகுந்த குன்றில் முருகப் பெருமான் காட்சியளிக்கிறார்.

இத்திருத்தலத்தில் நுழையும்போது முழுமுதற் கடவுளான விநாயகர் முதலில் காட்சி தருகிறார். விநாயகரை தரிசித்து விட்டு சற்று மேல்நோக்கி வலதுபுறம் திரும்பி சில அடி தூரம் நடந்து சென்றால் ஜலகண்டேஸ்வரி அம்மன் தாமரை மலரில் நான்கு கரங்களுடன் அருள் பாலித்து வருகிறார். ஜலகண்டேஸ்வரர் லிங்கவடிவமாக காட்சி அளிக்கிறார். முன்புறம் கொற்றவையான துர்க்கை அம்மன் சந்நிதியும், அங்கு மகிடனை வென்ற பத்ரகாளி அம்பிகையின் தோற்றமும் காணப்படுகிறது. அடுத்து, சொர்ணாகிருஷ்ண பைரவர் நவகிரகத்துடன் காட்சியளிக்கிறார். முருகப்பெருமான் இத்திருத்தலத்தில் தலையில் அக்க மாலையும், ஒரு கரத்தில் தண்டமும், ஒரு கரத்தை இடுப்பில் வைத்த கோலத்திலும் அழகுற காட்சி அளிக்கிறார்.

மலேசியா பத்துமலை முருகன்
மலேசியா பத்துமலை முருகன்

உலகப் புகழ்பெற்ற மலேசியா பத்துமலை முருகன் போலவே, இத்தலத்திலும் முருகப்பெருமான் வெளிப்புறத்தே கம்பீரமாக தகதகக்கும் நிலையில் வேலூன்றிக் காட்சியளிக்கிறார். இக்கோயிலில் 40 அடி உயர முருகன் சிலை, முருகப் பெருமானின் 6 படைவீடுகளை குறிக்கும் வகையில் 6 மண்டபங்கள், 108 திருநாமங்களை நினைவுகூரும் வகையில் 108 படிகள் ஆகியன உள்ளன. கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் வைகாசி விசாகத்தையொட்டி திருவிழாக்கள் விமரிசையாக நடைபெற்று வருகிறது. தைப்பூசம் 13 நாள்கள் திருவிழாவாக மிகவும் பிரமாண்டமாக நடக்கும். விழாவில் முருகன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வருவது கண்கொள்ளா காட்சியாகும்.

ஊட்டிக்கு சுற்றுலா வரும் வெளியூர் மக்களும் இம்முருகப்பெருமானின் அருமை பெருமைகளை அறிந்து இத்தலத்திற்கு வந்து ஆர்வமுடன் வழிபாடு செய்கின்றனர் என்கிறார்கள் உள்ளூர் வாசிகள்.

முருகப்பெருமானை மனமுருக வழிபட்டு அவரிடத்து, வைக்கப்படும் கோரிக்கைகள் உடனே நிறைவேறுவதாக பக்தர்கள் பூரிப்படைகின்றனர். கார்த்திகேயன் பிறந்தநாளே கார்த்திகை தீபமாகக் கொண்டாடப்படுகிறது என்கின்றன புராணங்கள். அம்முறையில், இத்திருத்தலம் கார்த்திகை தீபத் திருநாளிற்கு மிகவும் பிரசத்தி பெற்ற தலமாகும். மலை உச்சியில் கார்த்திகை தீப திருநாளன்று திருவிளக்கு பிரமாண்டமான முறையில் ஏற்றப்படும்.

எல்க்ஹில் முருகன் கோயில்
எல்க்ஹில் முருகன் கோயில்

பல ஆண்டுகளுக்கு முன்பு எல்க்ஹில் முருகன் கோயில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட பின்னர்தான், ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றுவார்கள். தற்போதும், கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் எத்தனை மணிக்கு மலை உச்சியில் தீபம் ஏற்றுவார்கள் என்று கேட்டுச் சென்று, அதன் படி தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வருகின்றனர்.

மலேசிய முருகன் உருவினை, பழநி மலை முருகன் வடிவினை ஊட்டி எல்க்ஹில் குன்றில் கண்டு வணங்கி மகிழ்வோம் வாரீர்!