Published:Updated:

`அரோகரா கோஷத்தால் அதிரும் பழநி!' - தொடங்கியது தைப்பூசத் திருவிழா

பழநி தைப்பூசத் திருவிழா
பழநி தைப்பூசத் திருவிழா

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தைப்பூசத் திருவிழா.

அறுபடை வீடுகளில் முக்கியமான தலம் பழநி. முருகப் பெருமான் ஞான தண்டாயுதபாணியாகக் காட்சிதரும் தலம் இது. இங்கு நடைபெறும் விழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசம். இதற்காக மாலை போட்டு, விரதம் இருந்து பாதயாத்திரையாக வருவார்கள் முருக பக்தர்கள். தாரை, தப்பட்டை முழங்க, காவடி ஆட்டம் களைகட்டப் பழநி எங்கும் திருவிழாக் கோலமாக இருக்கும்.

தைப்பூச திருவிழா
தைப்பூச திருவிழா

இந்தாண்டு தைப்பூச பக்தர்களின் வருகை தொடங்கிவிட்டது. தமிழகம் முழுவதும் இருந்து தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். தற்போது நகரில் எங்கு பார்த்தாலும் முருக பக்தர்களாகக் காட்சியளிக்கிறார்கள். `அரோகரா.. அரோகரா' கோஷம் நகரெங்கும் எதிரொலிக்கிறது. இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கக் கொடியேற்றம் தொடங்கியது.

திருவருள் திருவுலா: தைப்பூச தரிசனம்

இன்று முதல் 10 நாள்களுக்குத் தைப்பூசத் திருவிழா நடைபெறும். இந்த நாள்களில் ரதவீதிகளில் தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையோடு உலா வருவார். விழாவின் முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறும்.

தைப்பூச திருவிழா
தைப்பூச திருவிழா

அதற்கு அடுத்த நாள், பிரசித்திபெற்ற தைப்பூச தேரோட்டம் நடைபெறும். பழநி பெரிய நாயகி அம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெறும். பிப்ரவரி 10-ம் தேதி தெப்பத் திருவிழாவுடன் தைப்பூசத் திருவிழா நிறைவடையும். இன்றைய கொடியேற்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருக்கோவில் இணை ஆணையர், துணை ஆணையர் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின் செல்ல