தமிழ்க் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் முக்கியமானது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரத் திருவிழாவைப் போன்று வைகாசி விசாகத் திருவிழாவும் வெகுவிமர்சியாக நடைபெறும்.

முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளை வைகாசி விசாகம் ஜூன் 12 - ம் தேதியன்று வருகிறது. இதையொட்டி இன்று வைகாசி விசாகத் திருவிழா பழநியில் தொடங்கியது. பழநி கோயிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா இன்று காலை 11 மணிக்குக் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான அருள்மிகு முத்துக்குமாரசாமி வள்ளி - தெய்வானை திருக்கல்யாணம் 6 நாள் திருவிழா நாளான 11- ம் தேதியும், திருத்தேரோட்டம் ஜூன் 12 - ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவிலும் நடைபெறவுள்ளது. திருவிழா நடைபெறும் 10 நாள்களும் தினமும் இரவு தங்கமயில், வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் முத்துக்குமாரசாமி நான்குரதவீதிகளிலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
திருவிழா கொடியேற்ற நிகழ்வில் திண்டுக்கல் மட்டுமில்லாது தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான ஜூன் 12 -ம் தேதி நடைபெறவுள்ள தேரோட்டத்தையொட்டித் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பழநிக்கு வருவார்கள். காவடி எடுத்தும், பாதயாத்திரையாகவும் பக்தர்கள் வருவார்கள்.

எனவே பக்தர்களுக்கான அடிப்படை வசதி உள்ளிட்ட திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை பழநி திருக்கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் லட்சுமி ஆகியோர் செய்து வருகின்றனர்.