Published:Updated:

மகா பெரியவா சுட்டிக்காட்டிய திருக்கோயில்!

பஞ்சலிங்கேஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
பஞ்சலிங்கேஸ்வரர்

காவேரிப்பாக்கம் பஞ்சபூத லிங்க மூர்த்தங்கள்!

மகா பெரியவா சுட்டிக்காட்டிய திருக்கோயில்!

காவேரிப்பாக்கம் பஞ்சபூத லிங்க மூர்த்தங்கள்!

Published:Updated:
பஞ்சலிங்கேஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
பஞ்சலிங்கேஸ்வரர்

சென்னையிலிருந்து வேலூர் செல்லும் வழியில், சுமார் 75 கி.மீ.தொலைவில் இருக்கிறது காவேரிப்பாக்கம். இவ்வூரின் பேருந்து நிலையத்துக்கு சுமார் 1 கி.மீ. முன்னதாகவே, நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது அந்த ஆலயம்.

ஆலயத்தை நெருங்கியதுமே மனம் புத்துணர்ச்சி கொண்டது. மனக்கண்ணில் மகா பெரியவாளின் முகம் வந்து போனது. மேனி சிலிர்த்தது. அது பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயம்!

வடக்கு நோக்கிய ஆலயம். உள்ளே நுழைந்த தும் பிள்ளையார் தரிசனம். உருவில் மட்டுமல்ல, அருள்வதிலும் பெரியவரான கணேசரை வணங்கி விட்டு, பஞ்ச லிங்க தரிசனத்துக்குத் தயாரானோம்.

மூலவர் மட்டுமல்ல, இங்கு எழுந்தருளி யிருக் கும் ஐந்து லிங்கங்களையும் பஞ்சலிங்கேஸ்வரர் என்றே அழைக்கிறார்கள். மூலவர் சந்நிதியில் ஈசன் லிங்க வடிவாய் எழுந்தருளி நம் மனத்தில் நிறைகிறார். அவரை தரிசித்து அப்படியே அவருக்கு எதிரே திரும்பினால், மகா பெரியவாளின் புகைப்படம். ஒரே கணத்தில் இரண்டு சந்திர மௌலீஸ்வரர் தரிசனம்.

மகா பெரியவா சுட்டிக்காட்டிய 
திருக்கோயில்!

மகாபெரியவா கைகளை உயர்த்தி ஆசீர்வதிக் கும் புகைப்படங்களே அதிகம். அவர் கைகூப்பித் தொழும் புகைப்படங்களைக் காண்பது அரிது.

இங்கே மூலவரைக் கைக்கூப்பித் தொழும் கோலத்தில் பெரியவாளின் படம். இது ஏதோ யதேச்சையாக வைக்கப்பட்டதில்லை என்று மனம் சொன்னது. அங்கிருந்த அர்ச்சகரை அணுகிப் பேச ஆரம்பித்தோம்.

“நீங்க, யூகம் பண்ணினது சரிதான், இங்க பெரியவா படம் இருக்கிறதுக்கு முக்கியமான காரணம் இருக்கு... ஏன் இந்தக் கோயில் இருக்கிறதுக்கே பெரியவாதான் காரணம்” என்று சொல்லி விவரிக்கத் தொடங்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகா பெரியவா சுட்டிக்காட்டிய 
திருக்கோயில்!

அந்தத் திருக்கதை உங்களுக்காகவும்...

தன் திருவடிகளால் இந்த பாரத தேசத்தின் புண்ணிய பூமி முழுவதும் அளந்து கடந்த அந்த காருண்ய மூர்த்தி யாத்திரை மேற்கொண்டிருந்த நேரம் அது. இந்தப் பகுதியைக் கடக்கிறார். முன்னாலும் பின்னாலும் சிஷ்ய கோடிகள். நடுவே பெரியவா. திடீர் என்று பெரியவா நின்றுவிட்டார். சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். எல்லோருக்கும் ஆச்சர்யம். ஸ்வாமிகள் ஏன் இங்கு நமஸ்கரிக்கிறார் என்று. அவர்களின் மனத்தைப் படித்த பெரியவா திருவாய் மலர்ந்தருளினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“அம்பாள் தவமிருந்து அந்த ஈஸ்வரனை வழிபட்ட புண்ணிய க்ஷேத்திரம் இது. இந்தத் தலத்தோட பேரு சிவபுரம். அதோ அங்கதான் புராதனமான அந்தக் கோயில் இருக்கு” என்று சுட்டிக்காட்டினார். கண் பார்வைக்கு எட்டிய தூரம்வரை புதர்க்காடுதான் இருந்தது. காமாட்சி சொன்னால் தவறாக இருக்குமா... சில பக்தர்கள் வேகமாக முன்னேறிப் புதர்க்காட்டுக்குள் சென்றனர். சில நிமிடங்களில் ஓடிவந்தனர். அங்கே ஒரு கோயில் இருப்பதாகவும் அதில் ஐந்து லிங்கங்கள் இருப்பதாகவும் சொன்னார்கள். ஊர்க்காரர்களுக்கே அது ஆச்சர்யம்.

மகா பெரியவா சுட்டிக்காட்டிய 
திருக்கோயில்!

கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆலயத்தின் மகிமை வெளிப்பட ஆரம்பித்தது. ஒருநாள் காஞ்சி மடத்துக்கு தரிசனம் வந்த பிரபல தொழிலதிபர் பிர்லாவிடம் மகாபெரியவா, சிவபுரம் கோயிலைப் புனரமைக்கும்படி உத்தரவிட்டார். மகா பெரியவா உத்தரவை மகேஸ்வரனின் உத்தரவாகவே பாவிக்கும் பிர்லா, மிகக் குறுகிய காலத்தில் கோயிலை புனர்நிர்மாணித்து கும்பாபிஷேகமும் செய்து வைத்தார். அதன் நினைவாகத்தான் கோயிலுக்கு அருகில், மகாபெரியவா பெயரில் தியான மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

அர்ச்சகர் சொன்ன திருக்கதையைக் கேட்டு மனம் குதூகலித்தது. மேலும் அந்தத் தலம் குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது.

“மகாபெரியவா, இது அம்பாள் தவமிருந்த தலம்னு சொன்னதாச் சொன்னீங்களே, அது என்ன... அதைச் சொல்லமுடியுமா?” என்று கேட்டோம். அவர் சற்றும் தயங்காமல் சொல்லத் தொடங்கினார்.

மகா பெரியவா சுட்டிக்காட்டிய 
திருக்கோயில்!

“ஒருமுறை, அறங்கள் குறைந்து அல்லல்களால் நிறைந்து தவித்தது பூவுலகம். ஜகன்மாதா கலங்கினாள். உலக உயிர்களின் துன்பம் தீர்க்க பூலோகம் செல்வது என்று முடிவெடுத்தாள். அருளாடலைத் தொடங்கினாள்.

ஒருநாள், விளையாட்டாக தன் கரங்களால் தன் நாயகனின் கண்களைப் பொத்தினாள். அதனால் அண்டசராசரங்களிலும் ஒருகணம் இருள் சூழ்ந்தது. அந்த இருளின் கருமை அன்னையின் மேனியிலும் படர்ந்தது. தன் கரிய நிறம் மாற, கயிலைநாதனிடமே வழி கேட்டாள். அம்பிகையின் எண்ணம் எதுவோ அதுவாகத்தானே சிவ சிந்தையும் இருக்கும். ‘பூலோகம் சென்று தவம் இயற்று. உன் மேனியின் கருமை நீங்கும்; பூமியின் கவலையும் தீரும்’ என்று உலகம் உய்ய, உமையாளுக்கு வழி சொன்னது சிவம்.

தேவியும் பூலோகத்தின் பத்ரிகாச்ரமத்துக்குக் குழந்தையாய் வந்தாள்; காத்யாயன முனிவரிடம் வளர்ந்தாள். குறிப்பிட்ட பருவம் வந்ததும், அவளிடம் சில பொருள்களைத் தந்த முனிவர், ‘காசிக்குச் சென்று சில காலம் அறம் நிகழ்த்தும் படியும், ‘பின்னர் தெற்கு திசை வரும்போது, ஓரிடத்தில் தான் கொடுத்த பொருள்கள் மாற்றம் அடையும்; அங்கே சிவனருள் கைகூடும்’ என்றும் கூறி, வழியனுப்பிவைத்தார்.

அதன்படி, அன்னை வடக்கே காசிக்குச் சென்று அன்னபூரணியாக அறம் வளர்த்து, நலம் சேர்த்தாள். தக்க காலம் வந்ததும் தெற்கே வந்தவள், மாங்காட்டில் பஞ்சாக்னியின் நடுவில், ஊசி முனையில் தவமியற்றினாள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு, காஞ்சியை அடைந்தாள். அங்கே முனிவர் அவளிடம் கொடுத்த பொருள்கள் மாற்றம் அடைந்தன.

புலித்தோல் சோம விருத்தமாக; குடம் குட தீபமாக; ருத்ராட்சம் வில்வ மாலையாக; குடை நாகாபரணமாக; யோக தண்டம் திரிசூலமாக; மணல் சிவலிங்கமாக மாறின. அங்கே, சிவ பூஜை செய்த அம்பாளுக்குப் பல சோதனை களுக்குப் பிறகு சிவ தரிசனமும் கிடைத்தது. ஆனால், அன்னை எண்ணிவந்த காரியம் இன்னும் முழுமை பெறவில்லையே! அதைப் பூரணமாக்கும் விதமாக சிவகட்டளை பிறந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘ராவண வதம் முடிந்து, நமது திருக்கல்யாணக் காட்சியை தரிசிக்க வேண்டி தகடூரில் காத்திருக் கிறான் ராமன். நீ அங்கு செல்’’ என்று பணித்தார் சிவனார். அதன்படி, தகடூருக்கு (தற்போதைய தர்மபுரி) அவள் வரும் வழியில் ஓரிடத்தைக் கண்டாள். உலகை உய்விக்க உகந்த இடம் அதுவே என்று உணர்ந்தாள்.

உலகின் மாற்றங்களுக்கும், உயிர்களின் துயரங்களுக்கும் பஞ்ச பூதங்களின் முரண்பட்ட செயலாற்றல்களே காரணம் அல்லவா... ஆகவே, ஐம்பூதங்களையும் ஆற்றுப்படுத்தும் விதமாக வும், அவர்களால் நல்லன மட்டுமே விளையும் படியாகவும் ஐந்து லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாள். அதன் பலனாக அன்னைக்கு இத்தலத்தில் சிவதரிசனம் கிடைத்தது. அப்போது அன்னை, ‘பஞ்ச பூதங்களின் பேராற்றலால் பூமியும் உயிர்களும் செழிக்கும்படி, தாங்கள் இங்கேயே கோயில் கொண்டருள வேண்டும்’ எனப் பிரார்த்தித்துக் கொண்டாள். சிவனாரும் பஞ்சலிங்கேஸ்வரராக அங்கே கோயில் கொண்டார்!

சிவபுரம் பஞ்சபூதங்களுக்கும் நாயகனான ஈசன், ஐந்து லிங்கங்களாய் அருளோச்சும் தலம் ஆயிற்று. மேலும், 12 ராசிகளையும் 4 வகையாகப் பிரித்து, வகைக்கு ஒரு லிங்கம் என்றும், தன்னுடைய ராசி எதுவெனத் தெரியாதவர்கள் வணங்க ஐந்தாவதாக ஒரு லிங்கம் எனவும் நியதிகள் வகுத்து, முன்னோர் வழிபட்டு வரம் பெற்ற புண்ணிய தலம் இது! அதுமட்டுமா... இங்கு, ஐந்து லிங்கங்கள் உள்ளபடியால், முறையே ஐந்து பிரதோஷங்கள் விரதம் இருந்து, இங்கு வந்து வழிபட்டால் சகல வரங்களும் கைகூடுமாம்” என்று அர்ச்சகர் நிறைவு செய்ய நாம் ஆலயத்தை வலம் வந்தோம்.

நடராஜர் சந்நிதியும், காமாட்சி அம்பிகை சந்நிதியும் உள்ளன. இந்தத் தலத்தில் இரண்டு காமாட்சிகள். மூலவருக்கான காமாட்சி, பிரதான மூலவர் சந்நிதிக்கு அருகில் சந்நிதி கொண்டிருக்கிறாள். அதேபோல், இந்தக் கோயிலில் கோஷ்டத்திலும் பிராகாரத்திலுமாக இரண்டு தட்சிணாமூர்த்திகள் அருள்கின்றனர். ஆகவே, இத்தலம் குரு வழிபாட்டுக்கு உகந்தது. தவிர, தேவியருடன் முருகன், பைரவர், நவகிரக மூர்த்தியரையும் இந்த ஆலயத்தில் தரிசிக்கலாம்.

இங்கே நடைபெறும் நட்சத்திர தீப வழிபாடு மிகவும் சிறப்புடையதாம். அதாவது இங்கு வந்து பஞ்சலிங்க சந்நிதிகள் ஒவ்வொன்றிலும் 27 நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட்டால், எண்ணிய காரியங்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதிகம்.

திருக்கோயில் திருப்பணிகள்...

வெகுநாள்களுக்குப் பிறகு தற்போது உபய தாரர்களின் உதவியுடன் புனரமைப்புத் திருப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை அறிய முடிந்தது.

பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், பொருளாதார பற்றாக்குறை காரணமாக ராஜ கோபுரம் மற்றும் மதில்களுக்கான புனரமைப்புப் பணிகள் தேக்கமடைந்துள்ளன. மேலும் நித்திய பூஜைகளுக்கும் போதிய நிதி கிடைக்காமல் இருக்கிறது என்பதையும் உள்ளூர் பக்தர்கள் மூலம் அறிந்து கலங்கினோம்.

மகாபெரியவா கருணையால் மீண்டெழுந்த கோயில் இப்போது புனரமைக்கப்பட சிவனெறிச் செல்வர்களின் பங்களிப்பைக் கோருகிறது. மேலும் ஐப்பசி அன்னாபிஷேகப் புண்ணிய தினம் 31-10-2020 அன்று வரவிருக்கிறது. உலகுக்கே படியளக்கும் அந்த பரமன், இங்கே நைவேத்தியத்துக்கும் வழியின்றி நிற்கிறார் என்று அறிந்ததும் மனம் கதறி கண்ணீர் விட நின்றோம்.

பிரமாண்ட ஆலயங்களில் ஐயனுக்கு அமோகமாக விழா நடப்பது மட்டும் விசேஷமன்று. இது போன்ற ஆலயங்களிலும் ஐயனுக்குச் சிறப்பாக அன்றாட வழிபாடுகளும் விழா வைபவங்களும் தங்குதடையின்றி நடைபெற வேண்டும்.

அவ்வகையில் அற்புதமான இந்தத் திருத் தலத்திலும் வழிபாடு குறையின்றி நடைபெறட் டும்; அன்னாபிஷேகம் முதலான விழா வைபவங்களும் குறையின்றி நிகழவேண்டும். அதற்கு நாமும் நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம். உலக அன்னைக்கும் அவள் மூலம் உலகுக்கும் கருணை பொழிந்த அண்ணல் நம் வாழ்வு சிறக்கவும் வரம் அருள்வார்.

எப்படிச் செல்வது?: சென்னையிலிருந்து வேலூர் செல்லும் வழியில், சுமார் 75 கி.மீ.தொலைவில் உள்ளது காவேரிப்பாக்கம். இந்த ஊரின் பேருந்து நிலையத்துக்கு முன்னதாக சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கோயில்.

வங்கிக் கணக்கு விவரம்:

A/c.Name: B.SENTHIL NATHAN & S.MAGESWARI

A/c. No: 30902796649

IFSC No: SBIN0013075

Bank Name: State Bank of India

Branch: Kaveripakkam

பஞ்சலிங்க வழிபாடு!

அப்பு லிங்கம்: வாமதேவ அம்சம். மீனம், கடகம், விருச்சிகம் ஆகிய அப்பு தத்துவ ராசிக்காரர்கள் இவரை வழிபடுவது விசேஷம்.

வாயு லிங்கம்: தத்புருஷ அம்சம். இந்த மூர்த்தியை மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் கட்டாயம் வழிபட வேண்டும்.

அக்னி லிங்கம்: அகோர அம்சம். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் இவரை வழிபடுவதால் வாழ்வில் ஜெயிக்கலாம்.

ப்ருத்வி லிங்கம்: சத்யோஜாத அம்சமாக அருளும் மூர்த்தி இவர். ரிஷபம், கன்னி, மகர ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்வாமி.

மூலவர் தரிசனம்: மேற்சொன்ன நான்கு லிங்கங்களோடு மூலவரையும் சேர்த்தே பஞ்சலிங்க தரிசனம் நிறைவு பெறும். மூலவர் ஆகாய லிங்கமாக அருள்கிறார். இவர் ஈசான அம்சத்தினர். தங்களின் ராசி எது என்று அறிய முடியாதவர்கள் வணங்கி அருள்பெற வேண்டிய தெய்வம் இவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism