நம் தேசத்தின் பாரம்பர்யம் கோயில்களைச் சார்ந்தது. அவை கல்விக்கூடங்களாக, ஊர்கூடும் இடங்களாக, யாக சாலைகளாக, கருவூலங்களாக, புயல் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களுக்குப் புகலிடங் களாக விளங்கியவை. அதனால்தான் மன்னர்களும் சிற்றரசர்களும் கோயில்கள் எழுப்புவதை விருப்பமாகக்கொண்டிருந்தனர். அதற்கு நிவந்தங்களும் கொடைகளும் எழுதி வைத்து முறையாக வழிபாடுகள் நடக்க ஏற்பாடு செய்தனர். இதனால் மக்களிடையே பக்திநெறியும் நீதிமுறையும் வழுவாமல் இருந்தன.

காலப்போக்கில் அந்நியர் படையெடுப்பு களாலும் புற சமய ஆக்கிரமிப்புகளாலும் நம் புராதனக் கோயில்கள் கைவிடப்பட்டன. மக்கள் அவற்றின் மகிமைகளை மறந்துபோயினர். இறைவன் விருப்பமுடன் கோயில்கொண்ட பல தலங்கள் கவனிப்பாரற்றுச் சிதிலமடைந்தன. அற்புதங்கள் நிகழ்ந்த தலங்கள் அணுகுவாரின்றிப் பாழடைந்தன. ஆறுகால பூஜைகளும் அற்புதத் திருவிழாக்களும் நடந்த கோயில்கள் வௌவால் களின் கூடாரமாயின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அப்படிப்பட்ட தலங்களைக் கண்டறிந்து சீரமைத்து வழிபாடுகள் முறைப்படி நடைபெற ஏற்பாடு செய்வது, பணிகளிலெல்லாம் உயர்ந்த திருப்பணி. அத்தகைய திருப்பணிகளை எதிர்நோக்கியிருக்கும் திருத்தலங்கள் ஏராளம் ஏராளம். அவற்றில் ஒன்று, கோம்பூர் பசுபதீஸ்வரர் ஆலயம். இறைவன் சுயம்புவாய் எழுந்தருளி அருள்பாலித்த திருத்தலம் கோம்பூர் பசுபதீஸ்வரர் ஆலயம்.

ஈசனின் திருநாமங்களில் ஒன்று ‘பசுபதி’. பசு என்றால் விலங்கையும் ஜீவாத்மாக்களையும் குறிக்கும். உலக உயிர்கள் அனைத்துக்கும் பதியாக விளங்கும் சிவபெருமான் இந்த உலகில் சுயம்புவாய், பசுபதீஸ்வரராய் எழுந்தருளியிருக்கும் தலங்கள் பல.
ஈசனின் சுயம்புத் திருமேனிகள் பசுக்களால் வழிபடப்பட்டு உலகுக்கு அடையாளப்படுத்தப் பட்ட தலத்து இறைவனுக்கு பசுபதீஸ்வரர் என்று பெயர். பசுக்கள் ஈசனின் திருமேனிகளை இந்த உலகுக்கு அடையாளம் காட்டவும், தாம் வழிபட்டு உயர்நிலை அடையவும் மேய்ச்சலுக்குச் செல்லும்போது சுயம்பு மூர்த்தங்களின் மீது தாமாகப் பால் பொழியும். இந்த அதிசயம் கண்டு வியந்த மக்கள் அந்தப் பகுதியை சோதித்து அங்கு சிவலிங்க வடிவைக் கண்டுபிடித்து வழிபடுவர். அப்படி பசுக்களால் வழிபடப்பட்ட தலங்களில் ஒன்று கோம்பூர் பசுபதீஸ்வரர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவில் உள்ளது காக்கையாடி கோம்பூர் கிராமம். இங்கு ஓடும் வெண்ணாற்றின் தென்புறத்தில், இயற்கை எழில்சூழ்ந்த ஓர் இடத்தில் முன்னோர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்டு வழிபடப்பட்ட திருத்தலம் கோம்பூர். இங்கு அருளும் அம்பாளுக்கு மங்களாம்பிகை என்பது திருநாமம். ஆதிக்ஷேத்திரமாக விளங்கும் இந்தத் தலத்தின் கோயில் முற்றிலும் சிதைவுண்டு போனது. ஒருகாலத்தில் ஆறுகால பூஜைகளும் அற்புத விழாக்களும் நடந்த தலம், இன்று கால வெள்ளத்தில் உருக்குலைந்துபோனது. ஈசனின் லிங்கமும் மங்களாம்பிகையின் விக்கிரகமும் மட்டும் தற்போது குடிசையில் வைத்து வழிபடப்படுகின்றன.

இந்த ஊருக்கு நாற்திசைகளிலும் அற்புதமான திருத்தலங்கள் அமைந்துள்ளன.திருக்கொள்ளிக்காடு அருள்மிகு பாதநாயகி உடனுறை அக்னீஸ்வரர் பொங்குசனி ஆலயம், பிரம்மன் இந்திரன் வழிபட்ட திருத்தங்கூர் ரஜதகிரீஸ்வரர் ஆலயம் , தேவலோக மரங்களை நெல்லியாக மாற்றிய திருநெல்லிக்காவல் ஆம்லகேஸ்வரர் ஆலயம், ரத்தின வியாபாரியாக மாறி சோழ மன்னனுக்குக் காட்சியளித்த திருநாட்டியத்தான்குடி ரத்தினபுரீஸ்வரர் ஆலயம், தென்புறம் காக்கையாடி முருகப்பெருமான் ஆலயம், திருவண்டுதுறை, திருராமேஸ்வரம் ஆலயம், வடப்புறத்தில் முதன்மைத்தலமான அருள்மிகு தியாகராஜ சுவாமி ஆலயம், ஓகைப்பேரையூர் ஜகதீஸ்வரர் ஆலயம் என்று மகிமை நிறைந்த தலங்களால் சூழப்பட்டிருக்கும் அற்புதமான தலம் கோம்பூர்.
இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை பூஜித்தார் கோரக்க சித்தர் என்கின்றனர். எனவே, இங்கு வழிபடுபவர்களுக்கு சித்தரின் அருளாசி பூரணமாகக் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள். இந்தத் தலத்தின் விருட்சம் காசி வில்வம். ஈசான மூலையில் சிறப்புடைய புண்ணிய தீர்த்தம் அமைந்துள்ளது.

புகழ்பெற்ற அருள்மிகு ராஜமன்னார்குடி ராஜகோபாலசுவாமிக்கு திருமஞ்சனம் செய்ய பசுபதீஸ்வரர் ஆலய புண்ணிய தீர்த்தத்தையே பயன்படுத்தியதாகச் சொல்கிறார்கள் ஊர்மக்கள். ஒருகாலத்தில் இந்த ஆலயத்தைச் சுற்றி மிகப்பெரிய அக்ரஹாரம் இருந்ததாகவும் எப்போதும் வேதகோஷம் ஒலிக்கும் தலமாக இந்தத் தலம் விளங்கியது என்றும் சொல்கிறார்கள். இன்று அந்த நிலை மாறிவிட்டது. கோயிலும் சிதிலமடைந்துபோன நிலையில் மக்கள் பலரும் பிழைப்புக்காக நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர்.
பிரபஞ்ச நாயகனான சிவன் கோயில் கொண்டு அருள்வது நமக்காகத்தானே...
விளக்கு ஒளி கொடுக்கும். ஆனால், அதற்குத் தொடர்ந்து எண்ணெய் இடவேண்டியது நம் கடமை. முறையான வழிபாடுகள் நடந்து ஈசன் மனம் குளிர்ந்தால் அந்த ஊர் செழித்து உலகுக்கே ஒளியாகத் திகழும். ஆனால் அறியாமையால், சில பிள்ளைகள், பெற்றோரைக் கைவிடுவதைப்போல ஊர் மொத்தமுமாய் ஈசனைக் கைவிட்டுவிடுகிறது. ஈசனோ பாசத்தோடு தன்னைக் காணவரப்போகும் பக்தனுக்காகக் காத்திருப்பார். அருள்செய்ய வழி பார்த்திருப்பார்.

கோம்பூரில் வாழும் நல்லுள்ளம் படைத்த பக்தர்கள் சிலர் பரமேஸ்வரன் இப்படி ஓலைக் கொட்டகையின்கீழ் குடிகொண்டிருப்பது கண்டு மனம்நொந்து வாடினர். மீண்டும் கோயில் எழும்புமா, கோமகன் அதில் குடிபுகுவாரா என்று கலங்கினர். அந்த வாட்டத்தைப் போக்குமாறு ஈசன், பக்தர் ஒருவர் கனவில் தோன்றி இந்த ஆலயம் எழுந்தது போன்ற காட்சியருளினார். அந்த அற்புத தரிசனத்தில் மனம் மகிழ்ந்த பக்தர், அதைத் திருப்பணிகள் தொடங்க ஈசன் அருளிய ஆணையாகவே கொண்டார். பெருமுயற்சிகள் மேற்கொண்டு ஆலயத் திருப்பணிகளைத் தொடங்கினார்.
ஆலயத் திருப்பணிகள் நான்கில் ஒருபங்கு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் மீதிப் பணிகளை முடிக்க நகரங்களுக்குக் குடிபெயர்ந்துபோன இந்த ஊரின் வாரிசுகளைத் தேடிப்பிடித்து உதவி கேட்டனர். அவர்களும் தங்களால் இயன்ற கொடையை வழங்க, பணிகள் பாதிக் கும் மேல் முடிவடைந்துவிட்டன. இந்தத் திருப்பணி குறித்துக் கேள்விப்பட்ட சில நல்ல உள்ளங்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார்கள் என்றபோதும் முழுப் பணிகளும் முடிந்து குடமுழுக்கு நடத்த இன்னும் நிதி தேவைப்படுகிறது.
குபேரனுக்குக் குறைவற்ற நிதியை அருளிய சிவபெருமானின் ஆலயத் திருப்பணிக்குச் செய்யும் சிறு உதவியும் பெரும் நன்மையைக் கொண்டுவந்து சேர்க்கும். இன்றைக்குத் தேவைகள் மிகுதியாகிவிட்டன. வாழ்வில் செய்யும் செலவுகளில் பாதி பயனற்றவையாகப் போகின்றன. ஆனால், சிவ பணிக்குச் செய்யும் செலவு என்றும் வீண்போகாது. தலைமுறை தலைமுறையாக நம் சந்ததிகளுக்கு நற்பேற்றையும் புண்ணியத்தையும் கொண்டுவந்து சேர்க்கும். மண்ணில் விதைக்கும் சில விதை நெற்கள் பெரும் அறுவடையைத் தருவதுபோல இயன்றதில் கொஞ்சம் ஈசனுக்கென்று எடுத்துவைத்தால் பெருமளவு செல்வம் நம்மைத் தேடிவரும்.
நம் அன்புக்கொடையை எதிர்பார்த்துக் கோம்பூர் மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். விரைவில் ஈசன் புதிய கோயிலில் குடிபுகுந்து கும்பாபிஷேகம் காண வேண்டும், காணவரும் பக்தர்களுக்கெல்லாம் அருளை மாரிபோல் வழங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
சக்தி விகடன் வாசகர்கள் அள்ளித்தந்த கொடையால் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் கண்ட கோயில்கள் அநேகம். அந்த வரிசையில் கோம்பூர் பசுபதீஸ்வரர் ஆலயமும் சேர வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். வேண்டிய செல்வம் சேர்ந்து விரைவில் திருப்பணிகள் முடிய எல்லாம்வல்ல கோம்பூர் பசுபதீஸ்வரரை பிரார்த்திப்போம்.
வங்கிக் கணக்குப் பெயர் :
A. மகாதேவன், K. மோகன்ராஜ்
கணக்கு எண் : 6523259605
இந்தியன் வங்கி,கூத்தாநல்லூர்
IFSC : IDIB000K046
தொடர்புக்கு : C. கணபதி, தலைமை ஆசிரியர் (ஓய்வு)
9843770282