Published:Updated:

ஞானத்தை அருளும் பட்டினத்தார் குருபூஜை வழிபாடு - திருவொற்றியூரில் இன்று நடைபெறுகிறது

சி.வெற்றிவேல்

`மனிதன் எவ்வளவுதான் பொருள் ஈட்டினாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூடக் கையில் கொண்டுசெல்ல முடியாது’ என்று உணர்ந்தவர் தமது செல்வம் அனைத்தையும் துறந்து துறவியானார்

பட்டினத்தார்
பட்டினத்தார்

பூம்புகார் எனப்படும் காவிரிப் பூம்பட்டினத்தில் தோன்றி சென்னை, திருவொற்றியூரில் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் முக்தியடைந்த மகான் பட்டினத்தார். இவரின் குருபூஜை இன்று (13.8.19) கொண்டாடப்படுகிறது.

பட்டினத்தார்
பட்டினத்தார்

சிவநேசர் - ஞானகலை தம்பதிக்கு மகனாக கி.பி 11-ம் நூற்றாண்டில் அவதரித்தவர் பட்டினத்தார். இவரது இயற்பெயர் திருவெண்காடர் என்பதாகும். இவருக்கு `சுவேதாரண்யன்' என்ற பெயரும் உண்டு. இவர் பூம்புகாரில் வணிகத்தொழில் செய்துவந்த பெருவணிகராவார்.

`மனிதன் எவ்வளவுதான் பொருள் ஈட்டினாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூடக் கையில் கொண்டுசெல்ல முடியாது’ என்று உணர்ந்தவர் தமது செல்வம் அனைத்தையும் துறந்து துறவியானார். இவரை மக்கள் பட்டினத்தார், பட்டினத்தடிகள் என்று அன்போடு அழைத்தனர்.

பட்டினத்தார்
பட்டினத்தார்

காசி மன்னனான பத்ரகிரியார் பட்டினத்தாரின் சீடராவார். சிவன் முதலில் பத்ரகிரியாருக்குக் காட்சி கொடுத்து முக்தி அளித்தார். பட்டினத்தார் தனக்கும் முக்தி வேண்டுமென்று சிவபெருமானிடம் வேண்டினார்.

சிவபெருமானோ கரும்பு ஒன்றைப் பட்டினத்தாரிடம் கொடுத்து, `இதன் நுனி எங்கு இனிக்கிறதோ, அங்கு உனக்கு முக்தி கிடைக்கும்’ என்றார். அதன்பிறகு பட்டினத்தார் சிதம்பரம், சீர்காழி என்று பல்வேறு தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்தார்.

பட்டினத்தார்
பட்டினத்தார்

திருவொற்றியூர் தலத்தில் கரும்பின் நுனி இனிக்க திருவொற்றியூரிலேயே ஜீவ சமாதி அடைந்தார், பட்டினத்தார். அவரது ஜீவ சமாதி திருவொற்றியூரில் கடலை பார்த்தபடி அமைக்கப்பட்டிருக்கிறது. இவரது குருபூஜை தினத்தில் பட்டினத்தாரின் ஜீவ சமாதியில் உள்ள லிங்கத்துக்கு எண்ணெய், கரும்புச் சாறு, அரிசி மாவு, கதம்பப் பொடி உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். குருபூஜை தினத்தில் பட்டினத்தாரை நினைத்து வழிபடுவதன் மூலம் மகானின் அருளைப் பெறலாம்.