Published:Updated:

அளவில்லாமல் வரம் அருளும் அப்ரமேய பெருமாள்!

அப்ரமேய பெருமாள் ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
அப்ரமேய பெருமாள் ஆலயம்

கர்நாடகத்தில் சோழர்கள் கட்டிய கோயில்! வாசகர் ஆன்மிகம் - விஜயசாந்தி

அளவில்லாமல் வரம் அருளும் அப்ரமேய பெருமாள்!

கர்நாடகத்தில் சோழர்கள் கட்டிய கோயில்! வாசகர் ஆன்மிகம் - விஜயசாந்தி

Published:Updated:
அப்ரமேய பெருமாள் ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
அப்ரமேய பெருமாள் ஆலயம்

நாகர்கோவில் எங்கள் சொந்த ஊர். சமீபத்தில் குடும்பத்தோடு பெங்களூரு சென்றிருந்தோம். அப்போது என் தோழி நித்ய கல்யாணி `பெங்களூரு - மைசூர் தேசிய நெடுஞ் சாலையில் 60 கி.மீ. தொலைவில், 3000 ஆண்டுகள் பழைமையான பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. சோழர்களால் திருப்பணி செய்யப்பட்ட ஆலயம்' என்ற தகவலைப் பகிர்ந்தார்.

அளவில்லாமல் வரம் அருளும் அப்ரமேய பெருமாள்!

உடனே புறப்பட்டோம். பெங்களூரூவின் கெங்கேரியைத் தாண்டி மைசூருக்குச் செல்லும் பாதையில், தொட்டமல்லூர் என்ற கிராமத்தில் அமைந்திருந்தது அந்த ஆலயம். அதாவது, சென்னப்பட்டினா எனும் நகரத்தைத் தாண்டி சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது தொட்டமல்லூர் கிராமம்.

பெருமாள் கோயிலை `ஶ்ரீஅப்ரமேய ஸ்வாமி ஆலயம்' என்கிறார்கள். இங்கிருந்து எதிர்ப்புறத்தில் செல்லும் சாலையில், நாடி நரசிம்மர்கோயிலையும் தரிசிக்கலாம்.

அழகும் அமைதியும் நிறைந்து திகழ்கிறது ஶ்ரீஅப்ரமேய ஸ்வாமி ஆலயம். கோயிலின் சிறப்புகள், ஸ்வாமியின் மகிமைகள் குறித்த தகவல்களை தோழி நித்யகல்யாணி பகிர்ந்து கொள்ள, சிலிர்ப்போடு தரிசனம் செய்தோம்.

‘அப்ரமேயர்’ என்றால் `அளவில்லாமல் கொடுப்பவர்' என்று பொருள். கிருத யுகத்தில் விஜயபாலா என்ற மன்னன் இங்கு விஷ்ணுவை அப்ரமேய வடிவில் பூஜித்து வந்ததாகவும், திரேதா யுகத்தில் கான்வ முனிவர் பூஜித்து வந்ததாகவும், கலியுகத்தில் ஶ்ரீராமாநுஜர், ஶ்ரீமகாதேசிகர், ஶ்ரீபுரந்தரதாஸர் போன்றோர் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.

அளவில்லாமல் வரம் அருளும் அப்ரமேய பெருமாள்!

கி.பி 4-ம் நூற்றாண்டில் முற்காலச் சோழ மன்னன் ஒருவன் இந்தக் கோயிலைப் புனரமைத்தான் என்றும் கி.பி 938-ல் முதுக்குடி முத்துதேவர் என்பவர், இந்த ஊருக்கு அருகில் பெரிய ஏரி வெட்டியதாகவும் கோயிலுக்கு நந்தா தீபக் கைங்கரியம் செய்ததாகவும் கோயிலின் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

ஆலயத்தின் தொன்மையை அறிந்து வியந்துபோய் நின்றோம். இந்தக் கோயில், மணல் பரப்பிலேயே கட்டப்பட்டுள்ளது; தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் பாணியிலான கட்டடக் கலையுடன் திகழ்கிறது. `சோழர்களின் திருப்பணி கண்ட ஆலயம்' என்பதற்கு இதுவே சாட்சி எனலாம்.

கன்வா நதிக்கரையில் அமைந்துள்ள இவ்வூரை `மாலூர்' என்றும் அழைக்கிறார்கள். ஆதிகாலத்தில் இங்கு மணல் மட்டுமே நிறைந்திருந்ததால், மணலூர் என்று வழங்கப் பட்டதாம். பிற்காலத்தில் மாலூர் என்று மருவியதாகச் சொல்கிறார்கள். மால் அருளும் இடம் மாலூர் என வழங்கப் பட்டதில் வியப்பில்லைதான்! இந்தத் தலத்தின் பெயருக்குக் காரணம் சொல்லும் இன்னொரு கதையும் உண்டு.

அளவில்லாமல் வரம் அருளும் அப்ரமேய பெருமாள்!
அளவில்லாமல் வரம் அருளும் அப்ரமேய பெருமாள்!

இந்தப் பகுதியை ஆண்ட தமிழ் மன்னன் ஒருவன் போரில் தோல்வி யுற்றான். பகை மன்னன் இவனைக் கொல்லாமல் கை-கால்களை வெட்டி முடமாக்கி, ஆற்று மணற்பரப்பில் விட்டுச் சென்றான்.

தமிழ் மன்னனோ திருமால் பக்தன். பாசுரங்களைப் பாடி பெருமாளை வேண்டி துதித்தான். அவர் அருளால் மன்னனுக்குப் புதிய கை-கால்கள் முளைத்தனவாம். செடி கொடிகள் முளைப்பது போல், மன்னனுக்குக் கை - கால்கள் முளைக்கக் காரண மான ஊரை, `முளை வந்த ஊர்' என்று அழைத்தனர். அதுவே முளையூர், மலயூர் என்றெல்லாம் மருவி, நிறைவில் மாலூராகி விட்டது என்கிறார்கள். தற்போது நாம் காணும் இந்த ஆலயம், மூன்று காலகட்டங்களில் படிப்படியான கட்டுமானங்களைப் பெற்றதாம். கோயிலின் மூலஸ்தானம் சோழர் கட்டுமானத்துடன் திகழ்கிறது. வெளிப்பிராகாரம் பிற்காலத்தில் அமைக்கப்பட்டது. ராஜ கோபுரம் விஜயநகரக் கட்டுமானம் ஆகும்.

ஆதியில் இந்தக் கோயிலை கண்வ மகரிஷி பிரதிஷ்டை செய்ததாகக் கூறுகிறார்கள். அவர் அசுவமேத யாகம் செய்த போது, பெருமாள் காட்சி தந்து அருள்புரிந்தாராம்!

கருவறையில் நின்ற கோலத்தில் அருள்கிறார் ஶ்ரீஅப்ரமேய சுவாமி. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அஸ்தம் நட்சத்திர திருநாளில் பெருமாளின் மீது சூரியன் தன் கிரணங்களைப் பதித்து வழிபடுமாம். அதாவது, அன்றைய தினம் உதய காலத்தில் சூரியக் கதிர்கள் பெருமாளின்மீது படும்விதத்தில் ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தாயார் ஶ்ரீஅரவிந்தவல்லித் தாயாராக அருள்கிறார்.

அளவில்லாமல் வரம் அருளும் அப்ரமேய பெருமாள்!

தனிச் சந்நிதியில் அருள்கிறான் நவநீத கிருஷ்ணன். தவழும் நிலையில் கையில் வெண்ணெய் ஏந்திபடி அருளும் நவநீதகிருஷ்ணனின் திருமேனி கல் விக்கிரகமாகும். குறும்புப் புன்னகையும் காந்தக் கண்களுமாக அழகுக் கோலம் காட்டுகிறான் இந்தக் கண்ணன்.

குழந்தை இல்லாத தம்பதிகள் இங்கு வந்து, இந்தக் கண்ணனை மனமுருக வேண்டினால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். `என் வீட்டில் தொட்டில் கட்ட நீ அனுக்கிரகம் செய்தால், உனக்கு நான் தொட்டில் கொண்டு வந்து கட்டுவேன்' என பக்தர்கள் வேண்டிச் செல்கிறார்கள்.

அதேபோல் வேண்டுதல் நிறைவேறியதும் குழந்தையுடன் இங்கு வந்து வெள்ளி, தங்கம் அல்லது மரத்தாலான தொட்டில் கட்டி வழிபட்டுச் செல்கிறார்கள். மேலும் துலாபாரம், வெண்ணெய்க் காப்பு, அன்னதானம் செய்தும் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.

அளவில்லாமல் வரம் அருளும் அப்ரமேய பெருமாள்!

மைசூர் மகாராஜா ஒருவருக்கு நீண்ட நாள்கள் குழந்தை இல்லாமல் இருந்ததாம். பின்னர் இந்த நவநீத கிருஷ்ணனின் அருளால் பிள்ளைப் பேறு கிடைத்ததாம். ஆகவே பெரும் பொருள் காணிக்கையைச் சமர்ப்பித்தாராம் மகாராஜா. இன்றும் அவரது பெயரில் இந்தக் கோயிலில் கைங்கர்யம் நடைபெற்று வருகிறது.

கி.பி. 13-ம் நூற்றாண்டில் அந்நிய படை யெடுப்பின்போது, காஞ்சியிலிருந்து நகர்ந்து இங்கு வந்து சேர்ந்தாராம் வேதாந்த ரிஷி. அவர் பிள்ளை வரம் வேண்டி, இந்தக் கிருஷ்ணன் மீது 20 பாடல்கள் பாடினார். அதேபோல் புரந்தரதாசரும் இங்கு வந்து ‘ஜகதோ தரணா அழகிதலே யசோதை’ என்ற பாடலைப் பாடினாராம். இந்தத் தகவல்களை கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.

நீங்களும் ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று, அப்ரமேய ஸ்வாமியையும் நவநீத கிருஷ்ணனையும் வழிபட்டு வரம்பெற்று வாருங்களேன்!