ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

தைப்பொங்கல்... பிரத்யேக திருத்தலங்கள்... விசேஷ வழிபாடுகள்!

தைப்பொங்கல்
பிரீமியம் ஸ்டோரி
News
தைப்பொங்கல்

ஈசன் இங்கு மரமாகவே காட்சிகொடுக்கிறார். இங்கு அம்பிகைக்குத் தனிச் சந்நிதி இல்லை

தைப்பொங்கல் திருநாள், இந்திய மற்றும் தமிழகத்தின் ஆன்மிக, பண்பாட்டு வரலாற்றோடு மிக நெருங்கிய தொடர்புடையது. இந்த நாளில் ஆலய தரிசனமும் வழிபாடும் மிகவும் இன்றியமையாதவை. அவ்வகையில் தைத்திருநாளையொட்டி சிறப்பு பெறும் மூன்று தலங்களையும் அதன் காரணங்களையும் பகிர்ந்துகொள்வோம்.

பொங்கல் அன்று மட்டுமே நடை திறக்கும் சிவாலயம்!

பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப் பேட்டை செல்லும் வழியில் 12 கி.மீ தொலை வில் உள்ளது பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் திருக்கோயில். இக்கோயிலுக்குத் தனிச்சிறப்புகள் உண்டு. பெரும்பாலான கோயில்கள் அன்றாடம் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படும். ஒருசில கோயில்கள் மட்டுமே குறிப்பிட்ட சில தினங்களில் மட்டும் திறக்கப்படும் சிறப்பு பெற்றவை. அவ்வகையில் வாரம்தோறும் திங்கட்கிழமை அன்று இரவில் மட்டுமே நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்படும் கோயில், இந்தப் பொது ஆவுடையார் திருக்கோயில். அதுமட்டுமல்ல, வருடத்துக்கு ஒரே ஒரு நாள் மட்டும்தான் பகலில் திறக்கப்படும். அத்தகைய பெரும்சிறப்பு பெற்ற நாள், தைப்பொங்கல் திருநாள்.

 பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார்
பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார்

இரண்டு முனிவர்களுக்கு இடையே ‘முக்தி அடையச் சிறந்தது இல்லறமா துறவறமா...’ என்ற ஐயம் எழ, அதைத் தீர்த்து வைக்கத் தில்லைக்கூத்தனே அவர்கள் முன் தோன்றி அருள்பாலித்த தலம் இது. இந்தத் தலத்தில் வெள்ளால மரமாகக் காட்சி கொடுத்த ஈசன், இருவரின் சந்தேகத்தையும் தீர்த்து வைத்தார். முனிவர்களுக்கு மத்தியஸ்தம் செய்த ஈசன் என்பதால் இவருக்கு மத்தியபுரீஸ்வரர் என்பது திருநாமம். அழகு தமிழில் ‘பொது ஆவுடையார்’ என்று போற்றுகிறார்கள்

ஈசன் இங்கு மரமாகவே காட்சிகொடுக்கிறார். இங்கு அம்பிகைக்குத் தனிச் சந்நிதி இல்லை. இங்கு வந்து வேண்டிக்கொண்டால் விவசாயம் செழிக்கும் என்று இப்பகுதி மக்கள் நம்பு கிறார்கள். இங்கு பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் பொருள்களை எல்லாம் பொங்க லின்போது ஏலம் விடுவார்கள். இதை ஏலம் எடுத்துச் சென்றால், இல்லத்தில் செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.

ஒரு கருவறை... இரு வாசல்கள்!

ஒரு வீடு இரு வாசல் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கோயில் கருவறைக்கு இரு வாசல்கள் என்ற அபூர்வ அமைப்பைக் கொண்டது கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாள் கோயில். கோயிலின் கருவறை சூரியத் தேர் போல அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமந் நாராயணன் சூரிய நாராயணரின் ரதத்தில் வலம் வருவதாக ஐதிகம்.

இக்கோயிலில் கோமளவல்லி சமேத சாரங்க பாணிப் பெருமாள் என்னும் திருநாமத்தோடு பெருமாள் சேவை சாதிக்கிறார். ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற இந்தத்தலம் 108 திவ்ய தேசங்களுள் இது மூன்றாவது திவ்யதேசம். இங்கு பெருமாளுக்கு, ‘ஆழ்வார்’ என்று பெயர்; ஆழ்வாருக்கு ‘பிரான்’ என்று பெயர். இறைவனை ஆராவமுத ஆழ்வார் என்றும் திருமழிசை ஆழ்வாரைப் ‘திருமழிசைபிரான்’ என்றும் அழைத்துச் சிறப்பிக்கிறார்கள்.

தைப்பொங்கல்... பிரத்யேக திருத்தலங்கள்...  விசேஷ வழிபாடுகள்!

இத்தலத்தில் தவம் செய்த ஹேமரிஷியின் புதல்வியாகத் தாயார் வளர்ந்து வர, அவரைக் கரம்பிடிக்க, பெருமாள் இங்கு சூரியத்தேரில் வந்தாராம். இந்தத் தலத்தில்தான் சூரியன், சாரங்கபாணி பெருமாளை வழிபட்டு தன் சாபம் நீங்கித் தன் முழு ஒளியையும் பெற்றான். அதனால் இந்தத் தலம் ‘பாஸ்கர க்ஷேத்திரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

தேர் வடிவிலான இத்தலத்தின் கரு வறைக்கு இரண்டு வாயில்கள். இரண்டும் பக்கவாட்டு திசைகளில் அமைந்துள்ளன. ஒவ்வோர் ஆறு மாதத்துக்கும் ஒரு வாசல் திறந்திருக்கும். சூரியபகவானின் பயணம் என்பது உத்தராயணம், தட்சிணாயனம் என்று இருவகைப் படும். சூரிய பகவான் தெற்கு நோக்கிய பயணத்தை தட்சிணாயனம் என்றும் வடக்கு நோக்கிய பயணத்தை உத்தராயணம் என்றும் சொல்வர். அப்படிப்பட்ட உத்தராயணக் காலம் தைப்பொங்கல் அன்றுதான் தொடங்கு கிறது. அதனால் இத்தலத்தில் தைப்பொங்கல் அன்று தட்சிணாயனக் கதவு அடைக்கப்பட்டு உத்தராயணக் கதவு திறக்கப்படுகிறது.

தை தொடங்கி ஆனி முடிய உத்தராயண வாசல் திறந்திருக்கும். ஆடி முதல் மார்கழி வரையில் தட்சிணாயன வாசல் திறந்திருக்கும். இந்த நிகழ்வு மிகவும் சிறப்புடைய ஒன்றாகக் கருதப்படுகிறது. உத்தராயண வாசல் திறந் திருக்கும் நாள்களில் பெருமாளைச் சென்று சேவிப்பது மிகவும் விசேஷம்.

 நாட்டரசன்கோட்டை பொங்கல் விழா படையல்
நாட்டரசன்கோட்டை பொங்கல் விழா படையல்

செல்வ வளம் தரும் செவ்வாய்ப் பொங்கல்

சிவகங்கையிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலை விலுள்ளது நாட்டரசன்கோட்டை. கண் ணுடை நாயகியாய் அம்பிகை கோலோச்சும் இந்தத் தலத்தில் கொண்டாடப்படும் செவ் வாய்ப் பொங்கல் சிறப்புடையது. ஒவ்வோர் ஆண்டும் தை மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையில் இந்தக் கொண்டாட்டம் நடை பெறும். முன்னதாக நாட்டரசன் கோட்டை யைப் பூர்வீகமாகக் கொண்ட நகரத்தார்களின் பெயர்கள் அனைத்தையும் ஒரு துண்டுச் சீட்டில் எழுதி, அம்பாளின் சந்நிதிக்கு முன் வைத்து வணங்கிவிட்டு, குலுக்கல் முறையில் ஒவ்வொரு சீட்டாக எடுப்பார்கள்.

முதலில் யார் பெயர் வருகிறதோ, அவரின் குடும்பம் ‘முதல் பானைக்காரர்கள்’ என அழைக்கப்படும். அவர்களின் பானையில் அடுப்பு மூட்டிய பிறகே, மற்ற அனைவரின் அடுப்புகளிலும் தீ மூட்டப்படும். முதல் சீட்டு எடுத்த பின், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என வரிசையாகச் சீட்டுகள் எடுத்து, பெயர்களை அறிவிப்பார்கள். அந்தந்த எண்ணில், அந்தக் குடும்பங்கள் அடுப்பு வைத்துப் படையலிடுவார்கள்.

எண்களுக்கு ஏற்ப இடத்தைச் சுத்தம் செய்து, சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு, தங்களது அடுப்பையும் வைத்துவிடுவார்கள்.செவ்வாய்ப் பொங்கல் விழா முடிந்ததும், கோயில் அர்ச்சகர்கள், ஒவ்வொரு பானைக்கு அருகிலும் வந்து, தேங்காய் - பழம் கொண்டு அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, ‘இந்தக் குடும்பம் நல்லா இருக்கணும்; வாழையடி வாழையா வம்சம் செழிக்கணும்’ எனப் பிரார்த்தித்து அர்ச்சனை செய்வார்கள்.

அன்றிரவு அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள கருப்பர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவர். பிறகு, கருப்பருக்குக் கிடா வெட்டு நடைபெறும். நள்ளிரவு வரை நீளுமாம், இந்த வைபவம்.

 கும்பகோணம்... கோமளவல்லி தாயார்- சாரங்கபாணி சுவாமி
கும்பகோணம்... கோமளவல்லி தாயார்- சாரங்கபாணி சுவாமி

பொங்கல் வழிபாட்டுக்கு உகந்த நேரம்:

சூரிய உதய நேரத்தில் பொங்கல் வைப்பது உத்தமம். இந்த ஆண்டு தை மாதம் 14.1.2022 வெள்ளிக்கிழமை அன்று பிறக்கிறது. சாஸ்திர வல்லுநர்கள் உச்சிவேளை 12 மணி முதல் 1.30 வரை வழிபாட்டுக்கு உகந்தது என்று குறிப்பிடுகிறார்கள்.