
படங்கள்: வலங்கைமான் அரசு
ஓர் ஊரின் அழகாகவும் ஆற்றலாகவும் திகழ்வன ஆலயங்கள். நம்மைக் காக்கும் தெய்வங்கள் நம்மோடு உள்ளன எனும் மன தைரியத்தை நமக்கு வழங்கி, வாழ்வைக் கொண்டுசெலுத்துவதும் ஆலயங்களே. கோயில் உள்ள ஊர் மகிமையும் செழிப்பும் உடையதாகத் திகழும் என்பதை அனுபவத்தால் உணர்ந்ததாலேயே அக்காலத்தில் மன்னர்கள் ஊர்தோறும் பெரிய பெரிய ஆலயங்களை எழுப்பினர். அவை, கலைக் களஞ்சியங்களாகவும் கல்விக்கூடங்களாகவும் விளங்கின. அதனால்தான் பல்லவர் எழுப்பிய கோயில்களை சோழர்களும், சோழர்கள் எழுப்பிய கோயில்களை விஜயநகர மன்னர்களும் பேதமின்றி போற்றிப் பாதுகாத்தனர். ஆனால், பிற்காலத்தில் இப்படியான பல ஆலயங்கள் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து போயின!
கோயில்கள் எப்படிப் பராமரிக்கப்படவேண்டும் என்று ஆகம நூல்கள் விரிவாக விளக்குகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்பது ஆகம விதி. ஆனால், திருவாரூர் மாவட்டம் - வலங்கைமான் பகுதியில் திகழும் அற்புதமான ஆலயம் ஒன்று 75 ஆண்டுகள் ஆகியும் கும்பாபிஷேகம் காணாமல் தன் பொலிவை இழந்துவருகிறது. இதுகுறித்த செய்தி அறிந்ததும், சோழ மன்னர்களால் எழுப்பப்பட்டு பேரோடும் புகழோடும் திகழ்ந்த அந்த ஆலயத்தை தரிசிக்கப் புறப்பட்டோம்.

பஞ்ச ஆரண்ய க்ஷேத்திரம் என்று புகழப்படும் திருக்கருகாவூர், அவளிவநல்லூர், அரித்துவார மங்கலம், திருக்கொள்ளம்புதூர், ஆலங்குடி ஆகிய திருத்தலங்களுக்கு நடுவே அமைந்துள்ளது மருவத்தூர் என்னும் சிற்றூர்.
திருஞானசம்பந்த சுவாமிகள் தல யாத்திரை மேற்கொண்டிருந்தபோது, சோழமண்டலத்தில் அரித்துவாரமங்கலம் எனும் ஊரில் கோயில் கொண்டுள்ள ஈசனைத் தொழுதபின், ஆலங்குடி க்ஷேத்திரத்துக்குப் பயணப்பட்டார். வழியில், மருவத்தூர் எனும் இத்தலத்துக்கு வந்தும் ஈசனை வழிபட்டார் என்கிறார்கள். பெரியபுராணத்தில் வரும் இந்தக் குறிப்பின் வழி ஆராய்ந்தால், இந்தத் தலத்தின் தொன்மை கி.பி 5-ம் நூற்றாண்டுவரை செல்லும். இங்கு ஈசன் கயிலாசநாதர் என்ற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். அம்பிகை பெரியநாயகி. ராஜராஜ சோழனின் திருமந்திர ஓலை அலுவலரான அமுதன் தீர்த்தங்கரனாலும் புரவரி திளைக்களத்துக் கண்காணியாக இருந்த நமிநாதன் அரங்கனாலும் போற்றிப் பாதுகாக்கப் பட்ட திருக்கோயில் இது.

மூலவர் கயிலாசநாதர் வாயுதேவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்கிறது தலபுராணம். மாருதம் என்றால் காற்று என்று பொருள். வாயுதேவர் வந்து சிவனை வழிபட்ட ஊர் என்பதால் மாருதம் என்று பெயர்பெற்று, அதுவே மருவத்தூர் என்று மருவியதாகச் சொல் கிறார்கள். இந்தத் தலத்து தீர்த்தமும் வாயு தீர்த்தம் என்றே போற்றப்படுகிறது.
இந்த ஆலயத்தின் அதிஷ்டானம் முதல் பிரஸ்தரம் வரை கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளன. கருவறை மூன்று கோஷ்டங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. அம்பிகை பெரியநாயகி தெற்கு நோக்கிய சந்நிதியில் அருள்பாலிக்கிறாள். சங்கு சக்கரம் தாங்கி, அபய ஹஸ்த முத்திரைகளோடு அருளும் அன்னையின் எழிற்கோலம் காண்பவர் மனத்தைக் கொள்ளைகொள்கிறது. இந்த அம்பிகையை வேண்டிக்கொண்டால் காரிய ஸித்தி ஏற்படும் என்கின்றனர் பக்தர்கள்.
கோஷ்டத்தில் அனைத்து மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்துக்குச் சொந்தமான சண்டேசர், பிரதோஷ நாயகர் அஸ்திர தேவர் ஆகியோரின் திருமேனிகள், பாதுகாப்பு கருதி ஆலங்குடி ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஆலய வளாகத்தில் விநாயகருக்கும் முருகப் பெருமானுக்கும் தனிச்சந்நிதிகள் அமைந்துள்ளன.
இங்குள்ள பைரவ மூர்த்தியின் திருவடிவம் காண்பவர் வியக்கும் அற்புதத் திருமேனியாகத் திகழ்கிறது. கைகளில் நீண்ட சூலம் தாங்கி, இடது கரத்தில் கபாலம்கொண்டு, நீண்ட மணிமாலை சூடி, ஜுவாலைகளுடன் கூடிய மணிமுடி திகழ, கோரைப் பற்களுடன் நின்றகோலத்தில் வீராவேசமாகக் காணப்படுகிறார் பைரவர். இந்தப் பைரவரின் திருவடிவம் சோழர்களுக்கே உரிய சிற்ப மரபைக்கொண்டு திகழ்கிறது. இவரை தேய்பிறை அஷ்டமி அன்று அர்ச்சனை செய்து வணங்கினால் பகைவர்களால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும் என்றும் மன பயம் அகலும் என்றும் சொல்கிறார்கள். வாயு வழிபட்ட தலமாகக் கருதப்படும் இந்தத் தலத்தில் புதன்கிழமைகளில் புதன் ஹோரையில் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் இதயம் தொடர்பான நோய்கள், காசநோய் ஆகியவை தீரும் என்பது ஐதிகம்.
நோய் தீர்க்கும் ஈசன், வெற்றிதரும் அம்பிகை, பகை நீக்கும் பைரவர் என்று வளம் பல அருளும் தெய்வங்கள் நிறைந்திருக்கும் இந்தத் திருக்கோயில், திருப்பணி இன்றி இருப்பதைக் கண்டு அடியார்கள் மனம் வருந்தினர். உலகாளும் ஈசனின் வீடாகத் திகழும் இந்த ஆலயத்தை மீண்டும் புனரமைக்க வேண்டும் என்று விரும்பினர். தமக்குள் இணைந்து ஓர் அமைப்பை ஏற்படுத்தி பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பாலாலயம் செய்து திருப்பணிகளைத் தொடங்கிவிட்டனர்.

இந்த உலகில் நற்காரியங்கள் அவ்வளவு சீக்கிரம் நிறைவேறிவிடுகின்றனவா என்ன! பொருள் தேவையினால் திருப்பணிகள் பாதியிலேயே முடங்கிப் போய்விட்டன. ஆனாலும் அடியவர்கள் அந்த ஈசனின் கருணை தங்களுக்குத் துணை நிற்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இறைவனின் கருணை நல்லவர்கள் வழியே ஸித்திக்கும் என்கிறார்கள். இந்தத் திருப்பணியில் சக்தி விகடன் வாசகர்கள் பங்கேற்றால் மிகவும் மகிழ்வோம் என்ற தங்களின் விருப்பத்தையும் முன்வைத்தார்கள்.
அடியார்களின் நம்பிக்கை நிச்சயம் பலிக்கும். அரனாரின் அருளால் இந்த ஆலயத்தின் திருப்பணி விரைவில் மீண்டும் தொடங்கும்.
அதற்கு நாமும் நம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம். சிறிய தொகை என்றாலும் சிரம் தாழ்த்தி ஏற்கும் அந்த அடியவர் கூட்டத்துக்கு நம்மால் இயன்றதை அனுப்புவோம். திருப்பணியில் அவர்களோடு இணைவோம். நாம் அளிப்பது சிறியளவு செல்வமேயானாலும், அதைப் பன்மடங்காக்கி, நமக்கும் நம் சந்ததிக்கும் பேரருளாகத் தந்தருள்வார், கயிலாசநாதர்.
எப்படிச் செல்வது?! : கும்பகோணம் அருகில் உள்ள ஆவூர் அவளிவநல்லூர் சாலையில் அமைந்துள்ள விளத்தூரிலிருந்து கிழக்கில் 2 கி.மீ தூரத்திலும் அரித்துவாரமங்கலத்திலிருந்து வடக்கில் 3 கி.மீ தூரத்திலும் உள்ளது மருவத்தூர். கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.
வங்கிக் கணக்கு விவரம்:
Account Name : இறைவன் நற்பணி மன்றம்
A/c no : 119701000002961
IFSC Code : IOB A0001197
Branch : வலங்கைமான்
தொடர்புக்கு : ராமலிங்கம் (95979 62336)
மத்தியப்பிரதேச மாநிலம் - சிந்தவாடா அருகில் ‘சாம்வலி’ எனும் ஊரில், பள்ளிகொண்ட அனுமன் கோயில் உள்ளது. நாக்பூரிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரப் பயணம்.
உயரமான மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலை தொலைவிலிருந்தும் தெளிவாக தரிசிக்கலாம். இந்தக் கோயிலில் அருகில் கதாயுதத்தை வைத்துக்கொண்டு, அரைக்கண் மூடிய கோலத்தில், கால்மேல் கால் போட்டவாறு படுத்துறங்கும் நிலையில் அனுமன் அருள்புரிகிறார். ராமாவதாரம் முடிந்த பிறகு ஆஞ்சநேயர் இங்கு வந்து பெரிய மரத்தடியில் படுத்து, ஓய்வெடுத்ததாகக் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னால், இருமுறை அனுமனை நிற்க வைத்து கோயிலெழுப்ப முயற்சிகள் நடந்தன. ஆனாலும் அவை தோல்வியிலேயே முடிந்தன என்கிறார்கள்.
மர வேரிலேயே சுயம்புவாக அருள்பாலிக்கும் இந்த அனுமன் திருமேனி முழுவதும் செந்தூரம் பூசப்பட்டு காட்சியளிக்கிறார் (சுமார் 6 அடி நீளம்). முதல் சுற்றில் (பிராகாரத்தில்) ஆண்கள் மட்டுமே செல்லலாம். பெண்கள் இரண்டாம் சுற்றுப்பாதையில் சென்று (அனுமனின் கால் புறமாகச் சென்று) தரிசிக்கலாம். கோயில் நுழைவாயிலிலிருந்து உள்பக்கம் வரை, அனுமன் சாலீசா இந்தியில் எழுதப்பட்டிருக்கிறது. மனநிலை சரியில்லாதவர்கள் இந்த மாருதியை தரிசித்து வழிபட்டால் குணம் பெறலாம் என்பது நம்பிக்கை.
- என்.ராஜலக்ஷ்மி, சென்னை-4