Published:Updated:

சதுரங்கத்திலும் சிவனே முதல்வன்; விஷக்கடி நீக்கும் அம்மன் - அதிசயக்க வைக்கும் பூவனூர் திருத்தலம்!

சதுரங்க வல்லப நாதர் கோயில்

சதுரங்க ஆட்டத்தில் வென்று, ராஜராஜேஸ்வரியை மணந்ததால், ஈசனுக்கு ‘சதுரங்க வல்லபநாதர்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது. அன்னை ராஜ ராஜேஸ்வரிக்கும் வளர்ப்புத் தாயாக வந்த சாமுண்டீஸ்வரிக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன.

சதுரங்கத்திலும் சிவனே முதல்வன்; விஷக்கடி நீக்கும் அம்மன் - அதிசயக்க வைக்கும் பூவனூர் திருத்தலம்!

சதுரங்க ஆட்டத்தில் வென்று, ராஜராஜேஸ்வரியை மணந்ததால், ஈசனுக்கு ‘சதுரங்க வல்லபநாதர்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது. அன்னை ராஜ ராஜேஸ்வரிக்கும் வளர்ப்புத் தாயாக வந்த சாமுண்டீஸ்வரிக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன.

Published:Updated:
சதுரங்க வல்லப நாதர் கோயில்
ஜூலை 28-ம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க உள்ளன. ஆகஸ்ட் 10 வரை நடைபெற இருக்கும் இந்தப் போட்டிகளில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000 மேலான வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

சதுரங்கம் இந்திய தேசத்தில் இருந்து தோன்றிய விளையாட்டு என்பது உலகறிந்த உண்மை. ஆனால் அதன் பூர்விகம் தமிழகம் என்கிறது நம் ஆன்மிகம். அதற்கு ஆதாரமாகத் திகழ்கிறது பூவனூர் திருத்தலம்.

பூவனூர், தேவாரப் பாடல்பெற்ற காவிரி தென்கரைத் திருத்தலம். நறுமணம் வீசும் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் வனமாக இந்த ஊர் இருந்ததால் இதற்கு ‘புஷ்பவனம்’ என்ற பெயர் ஏற்பட்டு பிற்காலத்தில் அது பூவனூர் ஆனது.

சர்வதேச செஸ் போட்டிகள்
சர்வதேச செஸ் போட்டிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சதுரங்கம் ஆடிய ஈசன்

இத்தலத்து ஈசனுக்கு ஶ்ரீசதுரங்க வல்லபநாதர் என்பது பெயர். உற்சவருக்கு புஷ்பவனேஸ்வரர் என்பது திருநாமம். இங்கு ஈசனுடன் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி ஆகிய இரு அம்பிகையர் அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் அன்னை சாமுண்டீஸ்வரியும் கோயில் கொண்டருள்கிறார்.

இங்கு அருளும் ஈசனுக்கு சதுரங்க வல்லபர் என்று திருநாமம் ஏற்பட்டது எப்படி என்பதற்கான புராணம் கூறும் வரலாறு சுவாரஸ்யமானது.

முற்காலத்தில் தென்பாண்டி நாட்டை வசுசேனன் என்னும் மன்னன் ஆண்டுவந்தான். அவனுக்கு வாரிசு இல்லாமல் இருந்தது. மன்னனும் அவர் மனைவி காந்திமதியும் சிறந்த சிவபக்தர்கள். பரிபூரண ஆயுள் கொண்ட இருவருக்கும் இந்த ஜன்மத்தில் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை அறிந்த அன்னை பார்வதி தேவியார், "உங்களை அனுதினமும் மறக்காது பூஜிக்கும் பக்தர்களை இப்படி மனம் வாடவிடலாமா? அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் அருளக்கூடாதா?" என்று ஈசனிடம் கேட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதற்குச் சிவபெருமான், "இந்த ஜன்மத்தில் அவர்களுக்குக் குழந்தை இல்லை என்பது விதி. ஆனால், நீ பூலோகத்தில் பிறந்து, அவர்களுடைய குழந்தையாக வளர்வாயாக. உரிய நேரத்தில் யாம் வந்து உம்மைத் திருமணம் செய்துகொள்வோம்!" என்று அருள் வழங்கினார்.

அதே தினத்தில், வசுசேனரும் காந்திமதியும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும்போது, தாமரை மலர் மேல் ஒரு சங்கைக் கண்டெடுத்தார்கள். அவர்கள் கையில் எடுத்ததும் அது அழகிய பெண் குழந்தையாக மாறியது. அது, ‘இறைவனே அனுப்பிய குழந்தை’ என்றுணர்ந்து அதற்கு ‘ராஜராஜேஸ்வரி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

சதுரங்க வல்லப நாதர் கோயில்
சதுரங்க வல்லப நாதர் கோயில்

சக்தியே குழந்தை வடிவாக பூமியில் இருப்பதால், குழந்தையை கவனமாக வளர்ப்பதற்கென, சப்தமாதாக்களில் ஒருவரான சாமுண்டியையும் பூமிக்கு அனுப்பினார் இறைவன். குழந்தையின் வளர்ப்புத் தாயாக உருவெடுத்து வந்த சாமுண்டீஸ்வரி, ஆய கலைகள் அனைத்தையும் குழந்தை ராஜராஜேஸ்வரிக்குக் கற்றுக்கொடுத்தாள். எல்லாக் கலைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்த இளவரசி, குறிப்பாக சதுரங்க விளையாட்டில் தன்னிகரற்று விளங்கினாள்.

அவள் திருமண வயதை எட்டியபோது, "என் மகளை சதுரங்க விளையாட்டில் யார் வெல்கிறார்களோ, அவர்களுக்கே அவளை மணம் முடித்துத் தருவேன்" என்று நாட்டு மக்களுக்கு அறிவித்தார் மன்னர்.

பல நாட்டு இளவரசர்களும் இளைஞர்களும் வந்தபோதிலும், யாராலும் ராஜராஜேஸ்வரியை சதுரங்கத்தில் வெல்ல முடியவில்லை. அனைவரும் தோற்றுப் போயினர். இதனால் கவலையுற்ற மன்னர், ‘யாருமே அவளை வெல்லமுடியவில்லையே! தம் மகளுக்குத் திருமணமே முடியாமல் போய்விடுமோ?’ என்று சஞ்சலமடைந்தார். ‘இனி சிவபெருமானிடமே முறையிடுவோம்’ என்று எண்ணியவராக, குடும்பத்தோடு காவிரியின் தென்கரையிலுள்ள சிவாலயங்களைத் தரிசிக்க தல யாத்திரை கிளம்பினார். பல சிவாலயங்களைத் தரிசித்த பின்னர் திருபூவனூர் வந்தனர். புஷ்பவன நாதரைத் தரிசித்து, தன் மனதின் பாரத்தை இறக்கி வைத்துவிட்டு, குடும்பத்துடன் அந்த ஊரிலேயே தங்கினார் மன்னர்.

மறுநாள் காலையில், வயோதிகர் ஒருவர் மன்னரைச் சந்தித்து, ‘‘என்னுடன் உங்கள் மகளால் சதுரங்கம் ஆடமுடியுமா?’’ என்று கேட்டார். அரசன் சம்மதிக்க, ஆட்டம் தொடங்கியது. அதுவரை சதுரங்கத்தில் தோல்வியே கண்டிராத ராஜராஜேஸ்வரி, அந்த முதியவரிடம் தோற்றுவிட்டாள்.

சதுரங்க வல்லப நாதர் கோயில் - கற்பகவல்லி - ராஜராஜேஸ்வரி
சதுரங்க வல்லப நாதர் கோயில் - கற்பகவல்லி - ராஜராஜேஸ்வரி

அரசருக்கு தனது அறிவிப்பு நினைவில் வந்தது. "இப்படி வயதில் முதிர்ந்த ஒருவருக்கு தன் இளம் மகளை எப்படித் திருமணம் செய்து கொடுப்பது?" என்று பெருங்கவலை ஏற்பட்டது. மீண்டும் அவர் சிவனாரைத் தியானிக்க, அங்கே முதியவர் மறைந்து சாட்சாத் சிவபெருமானே தோன்றினார். சதுரங்க ஆட்டத்தில் வென்று, ராஜராஜேஸ்வரியை மணந்ததால், அவருக்குச் ‘சதுரங்க வல்லபநாதர்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது. அன்னை ராஜ ராஜேஸ்வரிக்கும் வளர்ப்புத் தாயாக வந்த சாமுண்டீஸ்வரிக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன. இங்கு வந்து சதுரங்க வல்லப நாதரை வேண்டிக்கொண்டால் சதுரங்க விளையாட்டில் நல்ல தேர்ச்சி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

விஷக்கடி நீக்கும் சாமுண்டி

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான இந்த ஆலயம், ஆஸ்துமா தொந்தரவையும் பூச்சிக்கடி, விஷக்கடி, எலிக்கடி போன்ற பிரச்னைகளையும் தீர்க்கும் தலமாக விளங்கி வருகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோயிலின் அகன்ற திறந்தவெளிப் பிராகாரத்தில், அருள்மிகு கற்பகவல்லி அம்பாளும் அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்பாளும் தெற்கு நோக்கி அருள்கிறார்கள். அதே பிராகாரத்தில், தெற்குப் பகுதியில் சாமுண்டீஸ்வரி சந்நிதி வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது.

இங்கு கோயில் கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி, மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லாக் கோயில்களிலும் சப்தமாதாக்களுள் ஒருவராக இருக்கும் சாமுண்டி, இங்கே தனிச் சந்நிதியில் வீற்றிருப்பது சிறப்பு. மைசூருக்கு அடுத்தபடியாக, சாமுண்டீஸ்வரிக்கென தனிச் சந்நிதி அமைந்திருப்பது பூவனூரில் மட்டும்தான். எலிக்கடி மற்றும் விஷ ஜந்துக்களின் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து, சாமுண்டீஸ்வரி சந்நிதியில் வேர் கட்டிக்கொள்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை, சாமுண்டீஸ்வரி சந்நிதியில் இருக்கும் ஒரு வைத்தியர், எலிக்கடி மற்றும் விஷக்கடியால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு, மந்திரிக்கப்பட்ட ஒரு மூலிகை வேரைக் கையில் கட்டிவிடுகிறார்.

ஶ்ரீசாமுண்டீஸ்வரி
ஶ்ரீசாமுண்டீஸ்வரி

அதற்கு முன்பாக பக்தர்கள் க்ஷீர புஷ்கரணியில் நீராடவேண்டும். பிறகு சாமுண்டீஸ்வரி சந்நிதிக்கு வந்து, வைத்தியர் கொடுக்கும் வேரைக் கையில் கட்டிக்கொண்டு, சாமுண்டிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பிறகு வைத்தியர் கொடுக்கும் மந்திரித்த மிளகை வாங்கிச் சாப்பிடவேண்டும். அதன் மூலம் அவர்களுடைய உடலில் இருக்கும் விஷம் முழுவதுமாக குணமாகும் என்பது நம்பிக்கை.

சதுரங்கப் போட்டியை முன்னிட்டு...

நேற்று கும்பகோணம், ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர், தவத்திரு.திருவடிக்குடில் சுவாமிகள் தலைமையில் இந்த ஆலயத்தில் சதுரங்க வல்லப நாதருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. அப்போது பக்தர்களிடையே பேசிய திருவடிக்குடில் ஸ்வாமிகள், "சர்வதேச சதுரங்க போட்டிகள் தமிழகத்தில் நடைபெற உள்ள சூழலில் பழைமையான இத்திருக்கோயில் குறித்த செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கவும், இந்த விளையாட்டுக்கும் தமிழகத்துக்கும் உள்ள பழைமையான தொடர்பை மக்கள் அறிந்து கொள்வதற்கும் ஏதுவாக இந்தப் போட்டிகளை முன்னிட்டு பூவனூர், அருள்மிகு சதுரங்க வல்லபேஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

சகலத்திலும் சிவனே முதல்வன் என்கிறபோது சதுரங்கத்திற்கும் அவனே முதல்வன் என்பதை விளங்கும் இந்தத் தலம் நம் தமிழ்ச்சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று என்றால் அது மிகையில்லை.

எப்படிச் செல்வது?

கும்பகோணத்திலிருந்தும் திருவாரூரிலிருந்தும் பூவனூருக்குச் செல்லலாம். மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில், மன்னார்குடியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் நீடாமங்கலத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது.