Published:Updated:

ஜோதிடரின் கணக்கு!

கேரளக் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
கேரளக் கதைகள்

கேரளக் கதைகள் - 14 - `சாஸ்தா வியாசர்' அரவிந்த் சுப்ரமணியம்; ஓவியம்: ஜெயசூர்யா

ஜோதிடம் என்பது வேதத்தின் கண் என்று கூறப் படுகிறது. ஜோதிடத்தில் பல வகை உண்டு. பிறந்த நேரத்தை வைத்து ஜாதகத்தைக் கணிப்பது ஒரு வகை என்றால், கேரளத்துக்கு உரித்தான மற்றொன்று ப்ரச்ன ஜோதிடம். `தாம்பூல ப்ரச்னம்' என்று வெற்றிலையின் எண்ணிக்கை, அதன் தன்மையை வைத்து ஆரூடம் சொல்வதும் கேரள மரபு. அதேபோல் `தூத லட்சணம்' என்று... நாம் ஆருடம் கேட்க வரும் நேரம், அப்போது அங்கு காணப்படும் பொருள்கள், நடக்கும் நிகழ்வுகள் ஆகியவற்றை வைத்து பலன் சொல்லும் முறையும் உண்டு. இந்தக் கலையில் வல்ல ஜோதிடர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

ஜோதிடரின் கணக்கு!

பொருத்தமான ஜாதகம்

போத்தி ஒருவர், தன் திருமணத்துக்காக வந்திருந்த பெண் ஜாதகங்களை எடுத்துக்கொண்டு ஊரிலிருந்த ஒரு பெரியவரைப் பார்க்கச் சென்றார். அதேநேரம், பெரியவரின் நண்பரான நம்பூதிரி ஒருவரும் வந்து சேர்ந்தார். அவரிடம், ``இவர் தன் திருமணத்துக்காக ஜாதகங்களைக் கொண்டு வந்திருக்கிறார். அவற்றைப் பார்த்துவிட்டு நாம் பேசுவோமே'' என்றார் பெரியவர்.

உடனே நம்பூதிரி, ``நானே பார்த்துச் சொல்கிறேனே'' என்றபடி ஜாதகங்களை வாங்கி ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துவிட்டு, எவ்வித கணக்கும் போடாமல் தூரே போட்டுக்கொண்டிருந்தார். கடைசியாக ஒரு ஜாதகத்தை எடுத்து, “இந்த ஜாதகம்தான் உனக்குப் பொருந்துகிறது. ஆனால் இந்தப் பெண்ணை உன்னால் திருமணம் செய்ய முடியாது” என்றார்.

போத்தி அந்த ஜாதகத்தை வாங்கி அது யாருடையது என்று பார்த்தார். பிறகு, ``இது எங்களுக்கு வேண்டப் பட்ட குடும்பம். நான் சொன்னால் தட்டமாட்டார்கள். கட்டாயம் திருமணம் நடக்கும்” என்றார்.

அப்போது நம்பூதிரி அவரிடம், “நீ தாராளமாக முயற்சி செய். ஆனால் உனக்கு வேறு ஒரு பெண்தான் தலையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணை நீ மணந்தாலும், குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே அவள் இறந்து விடுவாள். நீ இன்னொரு திருமணம் செய்து, அதன் மூலமாகத்தான் உன் வம்சம் விருத்தியாகும்” என்றார்.

போத்தி மிகவும் வருந்தினார். `ஜாதகத்தையே இவர் பார்க்கவில்லை. ஆருடம் நிமித்தம் பொத்தாம் பொதுவாக பலன் சொல்கிறாரே' என்று ஆதங்கப்பட்டார். ஆகவே தன் முடிவில் உறுதியாக இருப்பது என்று முடிவுசெய்தார்.

எந்த ஜாதகத்தைப் `இது பொருத்தமானது ஆனால் இந்தப் பெண்ணை மணக்க முடியாது' என்று நம்பூதிரி சொன்னாரோ, அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று பேசினார். அவர்களும் ஒப்புக்கொள்ள திருமண ஏற்பாடுகள் நடந்தேறின.

திருமணத்தன்று மணப்பெண் மண மேடைக்கு வரவேண்டிய நேரத்தில், உறவினர் களுக்குள் ஏற்பட்ட சம்பந்தி சண்டையில், வாக்குவாதம் பெரிதாக திருமணம் நிறுத்தப் பட்டது. நம்பூதிரி கூறியபடியே தனக்கு நடந்து விட்டதே என்று போத்தி மிகவும் வருத்தப் பட்டார். அதேநேரம், கல்யாணத்துக்கு வந்திருந்த மற்றொரு நபர், போத்தியை வந்து சந்தித்தார்.

“உங்களை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. என் மகளை உங்களுக்குத் திருமணம் செய்து தருகிறேன்'' என்றார். போத்தி மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். கல்யாணம் கோலாகலமாக நடந்தது. சந்தோஷமாக வாழ்ந்தார் போத்தி. ஆனால் சிறிது காலத்திற்குள்ளாகவே அந்தப் பெண் இறந்துவிட்டாள். போத்தி கலங்கினார். நம்பூதிரியைத் தேடி ஓடினார். அப்போதும் அவரின் கையில் சில ஜாதகங்கள் இருந்தன.நம்பூதிரியிடம் ``இவற்றில் ஒரு ஜாதகத்தை நீங்களே பொருத்தம் பார்த்துத் தாருங்கள்'' என்று கேட்டுக்கொண்டார்.

நம்பூதிரியோ, ``நான் ஜாதகப் பொருத்தம், கணித்துச் சொல்வதில்லை. நிமித்தங்களையும் மற்ற விஷயங்களையும் வைத்தே பலன் சொல் கிறேன். அதன்படி, இப்போது உன்னிடம் உள்ள ஜாதகத்தில் கார்த்திகை நட்சத்திரத்துப் பெண் இருந்தால், அவளைத் தேர்ந்தெடுத்து மணந்துகொள். உனக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறப்பார்கள்” என்று கூறினார்.

அதன்படியே செய்தார் போத்தி. நம்பூதிரி சொன்னது போலவே மகன் இரண்டு, மகள் ஒன்று என பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். இதேபோல் ஜோதிடக்கலையின் பெருமையை உணர்த்தும் மற்றொரு சம்பவம் உண்டு.

ஜோதிடரின் கணக்கு!

சந்திராஷ்டமும் உபநயனமும்!

கோட்டயம் பகுதியில் வாழ்ந்த பிரபல பணிக்கரைச் சந்தித்தார் ஒரு நம்பூதிரி.

``மகனுக்கு உபநயனம் செய்ய முகூர்த்தம் குறித்துத் தரவேண்டும்'' என்று கேட்டார்.

உண்மையில் அந்த நம்பூதிரி ஏற்கெனவே வேறுசில ஜோதிடர்களை சந்தித்திருந்தார். ஆனால் அவர்களோ சரியான முகூர்த்தம் கிடைக்கவில்லை என்று சொல்லி அனுப்பியிருந் தார்கள். அதுகுறித்த விவரத்தை பணிக்கரிடம் மறைத்துவிட்டார் நம்பூதிரி.

பணிக்கர் கணக்கு களைப் போட்டுவிட்டு குறிப்பிட்ட ஒரு நாளைக் குறித்துக் கொடுத்தார். நம்பூதிரி அதை எடுத்துச் சென்று, ஏற்கெனவே தான் சந்தித்த ஜோதிடர்களை அழைத்து, “நாளே இல்லை என்றீர்களே... பணிக்கர் நாள் குறித்துக் கொடுத்திருக்கிறார் பாருங்கள்” என்றார்.

அந்த ஜோதிடர்களுக்குக் கடும் கோபம். `பணிக்கர் கொடுத்திருக்கும் தினம் சந்திராஷ்ட மம் ஆயிற்றே. இப்படி எவரும் செய்ய மாட்டார்களே...' என்று கருதினார்கள். ஆகவே, மன்னனிடம் சென்று புகார் செய்தார்கள். மன்னர் பணிக்கரை அழைத்து விசாரித்தார்.

பணிக்கர் விவரித்தார்: ``ஆம்! பொதுவாக சந்திராஷ்டம தினத்தில் முகூர்த்தம் வைக்க மாட்டார்கள். ஆனால் விசேஷ காரணங்களுக் காக விதிவிலக்குகள் உண்டு. ஜாதகக்காரனான சிறுவனுக்கு இந்த வருடமே உபநயனம் நடந் தாக வேண்டும். இல்லையெனில் அடுத்த மூன்று வருடங்களுக்கு நடக்காது. அதன் பிறகு வயது கடந்துவிடும். உபநயனம் செய்ய முடியாத நிலை ஏற்படும்” என்றார்.

``ஏன் அப்படி?” என்று எல்லோரும் ஒரே நேரத்தில் கேட்டார்கள்

``ஜாதகத்தைப் பார்த்தபோது அடுத்த வருடம் அவனின் தாய் இறப்பாள் என்பதை அறிந்தேன். அப்படி நடந்தால் அடுத்த ஒருவருடம் சுபகாரியம் எதுவும் செய்ய முடியாது. அதற்கும் அடுத்த வருடம் இவனுடைய ஜாதகத்துக்கு ஏற்றபடி எந்தவிதமான சுபமுகூர்த்தமும் இல்லை. மூன்றாவது வருடம் ஜாதகன் தன் தந்தையையும் இழப்பான். ஆக அவ்வருடமும் உபநயனம் தடைப்படும்.நிலைமை இப்படியிருக்க, சந்திராஷ்டமம் என்றாலும் உரிய பரிகாரங்களைச் செய்து உபநயனம் நடத்திவிடுவது எவ்வளவோ மேல் அல்லவா?'' என்றார் பணிக்கர்.

அங்கிருந்த மற்ற ஜோதிடர்கள் அசந்துபோய் அவர் கூறியதை ஒப்புக்கொண்டார்கள். அடுத்தடுத்து பணிக்கர் சொன்னவை பலித்தன!

ஜோதிடரின் கணக்கு!

`அடுத்த சவரம் எப்போது?’

ன்னர் ஒருவர் சவரம் செய்ய தயாராகிக்கொண்டிருந்த வேளையில் ஜோதிடர் வந்தார். அவரிடம் சற்று விளையாட நினைத்து, ``அடுத்த சவரம் எப்போது செய்வேன் என்று சொல்லும் பார்க்கலாம்'' என்றார். அந்த வேளையில் தாய்ப் பறவையும் குஞ்சுகளும் கத்தின.

ஜோதிடர் நொடியில் மனக்கணக்கு போட்டுவிட்டுச் சொன்னார்: “மன்னா! அடுத்த முறை சவரம் செய்வது இருக்கட்டும்... இன்று நீங்கள் சவரம் செய்துகொள்வதே சந்தேகம்தான்'' என்றார். மன்னர் சிரித்தார். ``ஜோதிடரே! எல்லாம் தயார்... என்னை எவரும் தடுக்க முடியாது. பிறகு எப்படி சவரம் செய்வது தடைப்படும்?'' என்றார்.

அப்போது அவசர அவரமாக வந்து சேர்ந்த மன்னரின் அன்னை ``உன் மனைவி கருவுற்றிருக்கிறாள் என்று மருத்துவச்சி உறுதிப்படுத்தியிருக்கிறாள். நீ சவரம் செய்து கொள்ளக்கூடாது அல்லவா... முதல் வாரிசு ஆயிற்றே... நீ கர்ப்ப தீக்ஷை தொடங்கவேண்டுமே... ஆகவேதான் வேக வேகமாக ஓடிவந்தேன்'' என்றாள்.

மனைவி கருவுற்றால் கர்ப்ப தீக்ஷையாகக் குழந்தை பிறக்கும் வரை தாடி மீசையை மழிக்காமல் இருப்பது வைதீக மரபு.

பிறகென்ன? ஜோதிடர் சொன்னதுபோலவே, சவரம் அன்று தடைப்பட்டது. அடுத்த ஒன்பதாவது மாதமே மன்னருக்கு சவரம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது!`