Published:Updated:

குருசாமியைக் கேளுங்கள்...! வீட்டில் குழந்தை பிறந்து எத்தனை நாள்கள் கழித்து சபரிமலைக்கு மாலை போடலாம்?

யாரெல்லாம் சபரிமலைக்கு மாலைபோடலாம்... போடக்கூடாது? மாலைபோட என்ன தகுதி? என்கிற அடிப்படைக் கேள்விகள் சிலருக்கு உண்டு. அப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்குமாறு, 'குருசாமியிடம் கேளுங்கள்' பகுதியில் கேட்டிருந்தோம்.

சபரிமலை
சபரிமலை

கார்த்திகை மாதம் சிவனுக்குரியது. மாதங்களில் நான் கார்த்திகையாக இருக்கிறேன் என்கிறார் சிவபெருமான். மார்கழிமாதமோ பெருமாளுக்குரியது. ஹரனுக்கும் ஹரிக்கும் உகந்த இந்த இருமாதங்களிலும் ஹரிஹரபுத்திரனான ஐயப்பனை வழிபடுவது சிறப்புக்குரியது. ஐயப்பசாமிக்கு மாலையிட்டு விரதமிருந்து மலைக்குச் செல்லும்போது மேற்கொள்ள வேண்டிய சில நியமங்களை நம் பெரியவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் புதிதாக மாலைபோட்டுக் கொள்பவர்களுக்குக் குருசாமிகள் சொல்லித்தருவர்.

ஐயப்பன்
ஐயப்பன்

யாரெல்லாம் மாலைபோடலாம்... மாலை போடக்கூடாது? மாலைபோட என்ன தகுதி? என்கிற அடிப்படையான கேள்விகள் சிலருக்கு உண்டு. அப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்குமாறு , 'குருசாமியிடம் கேளுங்கள்' பகுதியில் நம் வாசகர்களிடம் கேட்டிருந்தோம். வாசகர்களின் கேள்விகளுக்கு மூத்த குருசாமி அரவிந்த் ஸுப்ரமணியம் பதில் அளித்துவருகிறார்.

சுரேஷ் என்னும் வாசகர், மின்னஞ்சல் மூலம் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.

"எனக்கு ஐயப்பன் அருளால் கடந்த அக்டோபர் 5-ம் தேதி மகன் பிறந்துள்ளார்.  நான் வருடா வருடம் கார்த்திகை முதல் நாள் மாலை போட்டு 48 நாள்கள் விரதமிருந்து மலைக்குச் செல்வேன். இந்த முறை ஐந்தாம் ஆண்டாக நான் மாலை போட்டுள்ளேன். சில பேர் குழந்தை பிறந்து மூன்று மாதம் முடியாமல் அதற்குள்ளாகவே மாலை போட்டுவிட்டாயே... என்கிறார்கள். இதில் ஏதும் தீட்டு இருக்கிறதா? கொஞ்சம் விளக்கவும்" என்று கேட்டிருக்கிறார்.

அரவிந்த் ஸுப்ரமண்யம்
அரவிந்த் ஸுப்ரமண்யம்

இந்தக் கேள்வியை குருசாமி அரவிந்த் ஸுப்ரமணியம் அவர்களிடம் கேட்டோம்.

"பொதுவாகக் குழந்தை பிறந்த தீட்டை 'விருத்தித் தீட்டு' என்று சொல்லுவோம். இந்தப் பக்தருக்குக் கடந்த அக்டோபர் 5-ம் தேதி குழந்தை பிறந்திருக்கிறது. பொதுவாகக் குழந்தை பிறந்த தீட்டுக் கணக்கு குடும்பத்துக்குக் குடும்பம் மாறக்கூடியது. அதிகபட்சமாக 10 நாள்களில் இருந்து 16 நாள்கள் வரை இருக்கும். தீட்டு முடிந்துதான் புண்ணியாக வாசனம் செய்து பெயர் இடுவது வழக்கம். அதைச் செய்துவிட்டாலே தீட்டு எல்லாம் முடிந்துவிட்டது என்று பொருள். மூன்று மாதமெல்லாம் தீட்டு என்று எந்தக் கணக்குமில்லை.

மனைவி கருவுற்று 5 மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தால் குழந்தை பிறந்து பெயர் வைக்கும்வரை மலைக்குப் போகக்கூடாது என்பதுதான் விதி. இவருக்குக் குழந்தை பிறந்து ஒரு மாதத்துக்குமேல் ஆகிவிட்டதால் இவர் சபரிமலை போவதில் எந்தத் தடையும் இல்லை. எனவே, இவர் தாராளமாக மலைக்குச் செல்லலாம். ஐயப்பன் அருள் அனைவருக்கும் எப்போதும் உண்டு" என்று பதில் சொல்லியிருக்கிறார்.

ஐயப்பன்
ஐயப்பன்

இதுபோன்ற சந்தேகங்கள் உங்களுக்கும் இருந்தால், கீழே உள்ள படிவத்தில் கேளுங்கள். ஆன்மிகப் பெரியவர்களிடம் கேட்டு உங்களுக்கான பதிலை பெற்றுத்தருகிறோம்.