Election bannerElection banner
Published:Updated:

`தொடர் விடுமுறை; ஐயப்ப பக்தர்கள் வருகை!' -ரூ.1 கோடியைத் தாண்டிய ராமேஸ்வரம் கோயில் உண்டியல் காணிக்கை

ராமேஸ்வரம் கோயில்
ராமேஸ்வரம் கோயில்

ராமேஸ்வரம் கோயில் வரலாற்றில் இந்த அளவு காணிக்கை வசூலாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்துக்களின் புனிதத் தலமாக விளங்கும் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலின் உண்டியல் காணிக்கை, ரூ.1 கோடியைத் தாண்டியுள்ளது. கோயிலின் வரலாற்றில் உண்டியல் காணிக்கை இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

ராமேஸ்வரம் கோயில்
ராமேஸ்வரம் கோயில்

காசிக்கு நிகராகத் தெற்கில் அமைந்திருப்பது ராமேஸ்வரம். இலங்கையில் இருந்த சீதாவை மீட்கச் சென்ற ஶ்ரீராமர், அங்கு ராவணனைக் கொன்று திரும்பினார். ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்க, ராமேஸ்வரம் கடற்கரையில் மணலால் செய்த லிங்கத்துக்கு ஸ்ரீராமர், பூஜை செய்தார் என்பது காப்பிய வரலாறு.

ராமனால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கத்துக்கு, இலங்கை மன்னன் பராக்கிரமபாகு சிறு கோயில் ஒன்றை அமைத்தார். அதைத் தொடர்ந்து, சேதுபதி மன்னர்கள் உலகப் பிரசித்திபெற்ற நீளமான 3 பிரகாரத்தை அமைத்தனர். இக்கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதையும், காசிக்குச் செல்பவர்கள் இங்கிருந்து மணல் எடுத்துச் சென்று கங்கையில் கரைப்பதும், அங்கிருந்து எடுத்துவரும் கங்கை நீரை இங்குள்ள சுவாமிக்கு அபிஷேகம் செய்வதும் காலம் காலமாக நடந்துவருகிறது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

இதற்காக, ராமேஸ்வரத்துக்கு ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கில் வந்துகொண்டிருந்த பக்தர்களின் எண்ணிக்கை, கடந்த சில ஆண்டுகளாக ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையும் எப்போதும் இல்லாத அளவுக்கு, அதாவது ரூ.1 கோடியைத் தாண்டியுள்ளது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

தொடர் விடுமுறை, ஐயப்ப பக்தர்கள் வருகை போன்றவற்றின் மூலம், கடந்த 28 நாள்களில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள், கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. நள்ளிரவு வரை தொடர்ந்த இந்தப் பணியின் முடிவில், பக்தர்கள் செலுத்திய காணிக்கைத் தொகை ஒரு கோடியைத் தாண்டியது.

இதன்படி, ரொக்கமாக ரூ.1 கோடியே 23 லட்சத்து 45 ஆயிரத்து 774 -ம், 64 கிராம் தங்கம், 2 கிலோ 822 கிராம் வெள்ளி ஆகியவற்றுடன், வெளிநாட்டுக் கரன்சிகளும் காணிக்கையாக வந்துள்ளன. கோயில் வரலாற்றில் இந்த அளவு காணிக்கை வசூலாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு