மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 1

ரங்க ராஜ்ஜியம்
News
ரங்க ராஜ்ஜியம்

யுகங்களுக்கும் தொடங்கின. மனுக்கள் படைக்கப்பட, அவர்கள் மூலம் உலகம் இயங்கு கிறது. இதில் ஸ்வயம்பு மனு சூரிய குலத்தில் தோன்றியவன்.

தானே தனக்கொத்த தாள்தாமரைக்கு சரண் புகுந்தாள்

ஆனேன் இனியுன் அருளறியேன் எனதாருயிரே

தேனேயென் தீவினைக்கோர் மருந்தே பெருந்தேவர்க்கெல்லாம்

கோனே அரங்கத்தரவணை மேற் பள்ளி கொண்டவனே!

- பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்


இந்திரா சௌந்தர் ராஜன்
இந்திரா சௌந்தர் ராஜன்

திருவரங்கனின் நாமம் சொல்லி, அவரை வணங்கித் தொடங்குகிறது இந்த இரண்டாம் பாகம். முன்னதாய் முதல் பாகத்தில் இருந்து தொடக்கம் முதல் முடிவு வரை சில காட்சிகள்...

ஆதிப் பரம்பொருளாகிய எம்பெருமான் சுயம்புவாய் தோன்றிய நிலையில், வேதங்களைப் படைத்து, அவற்றைக் கொண்டு உயிர்களைப் படைக்கும் முடிவில் பிரம்மாவைத் தோற்றுவிக் கிறார். பிரம்மன் வசம் வேதங்களைத் தந்ததோடு தன்னையே ஒரு சிலை வடிவாக்கினார். அதைப் பிரணவாகார விமானம் எனும் ஒன்றில் நிலைப் படுத்தி, அதையும் பிரம்மனிடம் தந்து, ஒரு வழிபாட்டையும் உருவாக்கித் தந்தார்.

பிரம்மனும் சத்தியலோகத்தில் எம்பெருமானின் பிரணாவாகார மூர்த்தத்தை வழிபட்டுக் கொண்டு, எம்பெருமானின் கட்டளைக்கிணங்க பல உயிர்களையும் படைக்கிறார்.

யுகங்களுக்கும் தொடங்கின. மனுக்கள் படைக்கப்பட, அவர்கள் மூலம் உலகம் இயங்கு கிறது. இதில் ஸ்வயம்பு மனு சூரிய குலத்தில் தோன்றியவன். இவன் மகன் இஷ்வாகு பூவுலகை ஆள்கிறான். அதுவும் அயோத்தியை தலைநகராகக் கொண்டு. மனு நீதி உலகம் பின்பற்றிடும் நீதிநெறி ஆகிறது.

இப்படி ஒரு நாளில், சத்திய லோகத்தில் பிரம்மன் பிரணவாகார விமானத்தில் அருளும் ரங்கநாதரை பூஜிப்பதை கண்டு பிரணவாகாரம் பற்றி அறிந்தான், ஸ்வயம்பு மனு.

பின்னர் பூவுலகில் தன் புத்திரனான இஷ்வாகு வைக் காண வந்த இடத்தில், பிரணவாகார தரிசனம் பற்றி சிலாகிக்கிறான். அது ஒரு விதையாக இக்ஷ்வாகுவின் மனத்தில் விழுகிறது. இக்ஷ்வாகு பிரணவாகாரத்தை நிதமும் வணங்கிட விரும்புகிறான். எனவே, அதை வேண்டி தவம் புரிகிறான். இந்தத் தவத்தைக் கலைக்க பிரம்மா எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. இறுதியில் எம்பெருமானாகிய அரங்கநாதனே பிரம்மாவிடம் ``என்னை இஷ்வாகுவிடம் சேர்த்துவிடு. சத்திய லோகத்தில் இருந்த நான், இனி பூவுலகில் வாசம் செய்கிறேன்’’ என்றார்.

ஆக மொத்தத்தில் இஷ்வாகுவின் தவத்தின் வரமாக பிரணவாகார விமானமும் ரங்கநாதப் பெருமாளும் பூவுலகில் அயோத்தி எனும் நிலப் பரப்பை அடைந்து சரயு நதிக்கரையில் கோயில் கொண்டனர். விண் மூர்த்தம் மண் மூர்த்தமயிற்று!

இது ஒருபுறமிருக்க, பாரத தேசத்தின் தென் பகுதியில் சோழர் பரம்பரையில் வந்த தர்மவர்மா என்பவன், அயோத்தியில் தசரதன் நிகழ்த்தும் புத்ரகாமேஷ்டி யாக வைபவத்தில் கலந்துகொள்ள வந்தான். அங்கு பிரணவாகார விமானத்தையும் அரங்கநாதப் பெருமாளையும் தரிசித்தான். பிரணவாகார மூர்த்தம் அயோத்தி வம்சத்தவரால் மட்டுமே வணங்கப்படுவது, தர்மவர்மாவைச் சலனப்படுத்தியது. இப்பெருமான் தன் சோழ தேசத்தில் கோயில் கொண்டால், உலக மக்கள் வந்து வணங்கும் க்ஷேத்திரமாய்த் திகழுமே என்று எண்ணினான்.

திருவரங்க ஆலயம்
திருவரங்க ஆலயம்
Muralinath

அயோத்தியிலிருந்து அவன் திரும்பியபிறகு, நீலிவனத்து ரிஷிகளால் தூண்டப்பட்டு பிரணவாகாரம் தன் மண்ணுக்கு வரவேண்டும் என்று வேண்டி தவம் செய்தான். ரிஷிகளும் தவம் செய்தனர். அவர்களின் தவத்தை மெச்சிய பெருமாள், `உரிய வேளையில் உங்கள் நடுவே கோயில் கொள்வேன். அந்தக் கோயில் ஒரு க்ஷேத்திரமாகும்’ என்று அசரீரியாய் அருளினார்.

அந்தப் புண்ணிய வேளை விபீஷணன் வடிவில் வந்தது. ராமாயணக் காலத்தில், ராமன் சீதையை மீட்டபிறகு - வனவாசம் முடிந்த நிலையில் அயோத்திக்குத் திரும்பியதும், தனக்கு உதவியவர்களுக்குப் பல பரிசுகளை அளித்தான்.

அவ்வகையில் விபீஷணனுக்குப் பிரணவாகார விமானத்தைப் பரிசளித்தான். `விமானத்தை எங்கும் பன்னிரண்டு நாழிகைக்கு மேல் கீழிறக்கி வைக்கக்கூடாது. மீறினால் வைக்கப்பட்ட இடமே எம்பெருமானுக்கான கோயிலாகிவிடும்’ என்று வசிஷ்டர் உள்ளிட்டோர் சொல்லி அனுப்பினர். விபீஷணன் இலங்கையை நோக்கிப் புறப்பட்டான்.

காவிரி தீரத்தில், அந்த நதி மாலை போல் ஓடும் தீவுப் பகுதியைக் கண்டான். அங்கே சிரம பரிகாரம் செய்ய முற்பட்டான். அந்த இடத்துக்கு அருகில்தான் உறையூர் உள்ளது. பிரணவாகார விமானத்துடன் விபீஷணன் வந்திருக்கும் தகவல் அரசன் தர்மவர்மாவுக்குக் கிடைத்தது.

ஆவலுடன் வந்து விபீஷணனை வரவேற்றான் தர்மவர்மா. ஒரு வார காலம் அங்கேயே தங்கியிருந்து பிரம்மோற்சவம் காணட்டுமே என்றான். விபீஷணனும் வசிஷ்டர் கூறியதை மறந்து தர்மவர்மாவின் வேண்டுதலை ஏற்றான். ஆக, ஒரு வார காலத்துக்கு அந்த நன்னீர் தீவுப் பரப்பே வைகுண்டமானது; ஒரே கோலாகலம்!

நிறைவில் விபீஷணன் அங்கிருந்து புறப்பட முற்பட்டபோது, அவனால் பிரணவாகார விமானத்தைத் தூக்கவே முடியவில்லை. வசிஷ்டர் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. விபீஷணன் கலங்கிப் போய் நிற்கையில் அசரீரி ஒலித்தது.

`விபீஷணா வருந்தாதே! இலங்கையில் இந்தப் பிரணவாகாரம் கோயில் கொள்ளும் அமைப்பு இல்லை. அதனாலேயே நீயும் வசிஷ்டர் சொன்னதை மறந்தாய்... பாதகம் இல்லை... இங்கே பிரணவாகாரத்தில் சயனித்திருக்கும் என் பார்வை, தென் திசையில் உள்ள உன் இலங்கையை நோக்கியே உள்ளது. என் பார்வையாலேயே ரட்சித்தபடி இருப்பேன்.

இனி, திருவரங்கத்தைச் சிந்திக்கும் ஒருவர் உன்னையும் சிந்திக்காமல் இருக்க முடியாது. அந்த வகையில் நீ சிறப்பு பெறுவாய்’’ என்று அனைத்து குழப்பங்களையும் நீக்கியது அந்த அசரீரி வாக்கு.

தர்மவர்மாவும் நீலிவனத்து ரிஷிகளும் தங்க ளின் தவம் பலித்து, தங்களுக்கொரு க்ஷேத்திரம் கிடைத்துவிட்டதை எண்ணி ஆனந்தக் கூத்தாடினார்கள். தர்ம வர்மா, பிரணவாகாரத்தை நிலைப்படுத்தி சுற்றிலும் கோயில் எழுப்பினான். பிரணவாகார மூர்த்தமும் நிதமும் ஆயிரமாயிரம் பேரால் வணங்கப்பட்டது.

எவராக இருப்பினும் காவிரியில் நீராடிவிட்டே ஆலயம் வரமுடியும் என்பதால் ஆலயத்தின் பவித்திரம் வலிமையானது. பின்னர் காலச்சக்கர சுழற்சியில், ஒரு பெரும் பிரளயம் ஏற்பட்டது. காவிரி ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆலயம் மண்ணில் மூழ்கிப்போனது. பூமாதேவி, தனக்குள்ளே தனக்கென எம்பெருமானை வரித்துக் கொண்டது போல் ஆயிற்று.

சில காலங்களுக்குப் பின் சோழர் பரம்பரையில் வந்த ஓர் அரசன், அந்த தீவுப் பகுதிக்கு வேட்டைக்கு வந்தான். அங்கே சில ரிஷிகள் தவம் செய்துகொண்டிருந்தனர்.

அப்போது ஒரு கிளி குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து, தன்னுடைய சிறகுகள் படபடக்க...

காவேரி விரஜாஸேயம் வைகுண்டம் ரங்க மந்திரம்

ஸ வாஸுதேவோ ரங்கேச: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்

விமானம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்

ரங்க சாயி பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாசக:

- என்று பாடியது! அதைக்கேட்ட அரசன் பொருள் புரியாது திகைத்தான். அப்போது அங்கு வந்த ரிஷிகளில் ஒருவர் பொருள் கூறினார்.

``இந்தக் காவிரி வைகுண்ட நதியான விரஜைக்கு இணையானது. இந்த இடமான ரங்க மந்திரம் வைகுண்டம் போன்றது. இங்கேதான் பிரணவாகார விமானத்தில் எம்பெருமான் பிரத்யட்சமாய் கோயில் கொண்டுள்ளார். வேத வடிவான அவரை வணங்கிட, வாழ்வில் பிரகாசம் கூடி நலன்கள் விளையும்’’ என்று பொருள் கூறினார்.

அதைத் தொடர்ந்து, அந்த அரசன் மணலைத் தோண்டிப் பார்த்தான். பிரணவாகார விமானத் துடன் தர்மவர்மா கட்டிய ஆலயம் வெளிப் பட்டது. அந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்த அந்த மன்னனைக் கிளிச்சோழன் என்று வரலாறு கூறுகிறது.

இவன் காலத்துக்குப் பிறகு ராஜ மகேந்திரச் சோழன் அநேக கைங்கர்யங்கள் செய்தான். இவன் பெயரால்தான் ஆலயத்தைச் சுற்றியுள்ள ஏழு சுற்றுக்களில், 2-ம் சுற்று `ராஜமகேந்திரன் திருச்சுற்று’ என அழைக்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம் கோயில்
ஸ்ரீரங்கம் கோயில்
Balaji Srinivasan

இவனைத் தொடர்ந்து கைங்கர்யம் ஆற்றியவன் நந்த சோழன். இவனுடைய மகளான கமல வல்லியை எம்பெருமான் அழகிய மணவாளானாய் புரவி மீதேறி வந்து கவர்ந்தார். பிறகு, தன்னோடு ஏற்றுக் கொண்டார். இதையொட்டியே, உறையூரில் அழகிய மணவாளனாக எம்பெருமா னும் கமலவல்லியாக தாயாரும் சேவை சாதித்திட, ஒரு பேராலயம் உருவானது.

பின்னர் சேர மன்னனான குலசேகரப் பெருமானும் இங்கு பெரும் கைங்கர்யம் செய்ததோடு ஆழ்வார்கள் பட்டியலிலும் இடம்பெற்றார். இவரின் பெயர் கொண்ட குலசேகரச் சோழன் பெயராலேயே, மூன்றாம் சுற்று `குலசேகரன் திருவீதி’ எனப்படுகிறது. இச்சுற்றிலுள்ள சேனை வென்றான் மண்டபமும் இவரின் கைங்கர்யமே!

இப்படிச் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் காலத்தில் கோயில் செழிப்புற்ற தருணம், வங்காள தேசத்திலிருந்து வந்த அரசன் ஒருவன் பெருமாளுக் குப் பெரும் சீதனமாகத் தங்க, வைர நகைகளை அளிக்க முன்வந்தான். ஆனால் எம்பெருமான் அதை ஏற்கவில்லை.

காரணம், மன்னனிடம் `நான் செய்கிறேன்’ என்ற அகந்தை மிகுதியாக இருந்தது. பின் அவன் வங்காளதேசம் சென்றுவிட, அவனோடு வந்தவர்கள் கோயில் வாசலில் எம்பெருமான் நிமித்தம் அந்த நகை பொருள்களுடன் தினமும் காத்திருந்தனர். காலத்தால் பின் அதை பெருமாள் ஏற்றார். இங்ஙனம் அவர்கள் காத்திருந்த வாசலே `ஆரிய பட்டாள்’ வாசல் எனப்படுகிறது.

ஆலயத் திருப்பணிகளில் திருமங்கையாழ்வாரின் பங்கும் பெரியது. இவராலேயே அரங்கன் சந்நிதியில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாடப்படும் வழக்கம் உருவானது.

தொடர்ந்து சோளேந்திர சிம்மன் கைங்கர்யம் செய்தான். இவனைக் கங்கைதேவர் சிங்கணன் தண்ட நாயக்கர் என்பவர் தொடர்ந்தார். ஆரோக்கிய சாலை, திருநடை மாளிகை ஆகியவை இவரது கைங்கர்யமே!

விக்கிரமச் சோழன் எனும் அகலிங்கனும் கைங்கரியங்கள் பல செய்தான். ஐந்தாம் சுற்று இவன் பெயரால் அழைக்கப்படுகிறது.

இச்சுற்றில் உள்ள நான்கு கோபுரங்கள், வாயில்கள், வடமேற்கில் கோசாலை, பின் கிருஷ்ணன் சந்நிதி. தென்மேற்கில் ராமாநுஜருக் கான சந்நிதி, வடமேற்கில் நாச்சியார்கோவில், ஆலிநாடன் திருவீதியில் பெரிய திரு மண்டபத்தில் கருடன் சந்நிதியை ஆகியவற்றையும் இவனே நிர்மாணித்தான். பின்னர், குலோத்துங்கச் சோழன் காலத்தில் (1070 - 1122) கோயிலுக்குப் பல நிவந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன.

சோழர்களைத் தொடர்ந்து நாயக்கர்களும் திருவரங்க ஆலயப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். கம்பய தண்டநாயக்கர், கரியமாணிக்க தண்டநாயக்கர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அரசர் பெருமக்கள் ஒருபுறம் தங்கள் பொருள் செல்வத்தால் கைங்கர்யம் செய்த நிலையில் ராமாநுஜர், மணவாள மாமுனி, பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், பிள்ளை லோகாசார்யர், வேதாந்த தேசிகர் போன்றோர் தங்களின் அருள்செல்வத்தால் பெரும் கைங்கரியங்களைச் செய்தனர்.

இவர்களில் ராமாநுஜர் செய்த தொண்டு இன்றளவும் போற்றவும் பின்பற்றவும் தக்கதாய் உள்ளது. இவர் காலத்தில் அழகிய மணவாளப் பெருமானின் உற்சவர் திருமேனி மிலேச்சர்களால் கொள்ளையடிக்கப் பட்டு, பின்னர் அது டில்லி பாதுஷாவின் சகோதரிக்குப் பிரியமான ஒன்றாக மாறியது. அச்சிலையின் மேல் அவள் பெரும் காதல் கொண் டாள். மதமாச்சர்யங்களைக் கடந்து அவள் பிரேமை வளர்ந்தது.

இச்சிலையை டில்லி வரை சென்று ராமாநுஜரே மீட்டு வந்தார். பாதுஷாவின் தங்கையும் தொடர்ந்து வந்து, காலத்தால் துலுக்க நாச்சியார் என்ற போற்றுதலுக்கு உரியவளானாள்.

ராமாநுஜர் திருவரங்க ஆலய வழிபாட்டு முறைகளிலும் நடைமுறை களிலும் அநேக சீர்திருத்தங்கள் செய்து தந்தார். இவரின் சீடர் களான கூரத்தாழ்வார், திருவரங்கத்த முதனார், முதலியாண்டான் ஆகியோர் குருபக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்கள்.

ராமாநுஜர் திருவரங்க ஆலயத்தில் பத்து கொத்து என்னும் பெயரில் செய்த சீர்திருத்தம் பெரும்புகழ் பெற்றது. இவ்வாறு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்த திருவரங்கம், கலியுகத்தின் குணத்திற்கு ஏற்ப சில பெரும் சோதனை களையும் சந்தித்தது.

கி.பி.1323-ல் மிலேச்சப் படையெடுப்பில், அந்நியர்கள் தென் பகுதி ஆலயங்கள் அவ்வளவையும் அழிக்க முயன்றனர். கோயில் களின் கஜானாக்கள் சூறையாடப்பட்டன. பெரும் மத மாற்றங்களும் நிகழ்ந்தன. நம் பண்பாடு கலாசாரத்துக்கு பெரும் சோதனை ஏற்பட்டது.

இவ்வேளையில், பிள்ளை லோகாசார்யர் எனும் ஆச்சார்ய புருஷர், சதம் கடந்த தன் வயதில் முதுமையுடன் எம்பெருமானைக் காக்க போராடினார். இவரும் இவரின் சீடர்களும் அரங்கன் சந்நிதியைச் சுவர் கொண்டு மூடி, மூல விக்ரகம் மிலேச்சர் கண்களில் படாதவாறு செய்தனர்.

அதே காலகட்டத்தில், வேதாந்த தேசிகர் திருவரங்கம் வந்து பிள்ளை லோகாசார்யருக்குப் பெரும் உதவி செய்ய லானார். பிள்ளை லோகாசார்யர் தான் எழுதிய `அஷ்டதச ரகசியம்’ எகிற 18 நூல் கட்டுக்களை தேசிகன் வசம் தந்து, அவற்றைப் பாதுகாக்க வேண்டினார்.

பின்னர், எம்பெருமானின் உற்சவ மூர்த்தம், மதுரையை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது.

பிள்ளை லோகாசார்யரின் சீடர்களில் ஒருவன் சுதர்சனசூரி. இவனுடனும் இவன் பிள்ளைகளான மாலோலன், ஆனந்தன் ஆகியோருடனும் தேசிகன் திருவரங்கத்தை விட்டுப் புறப்பட முயன்ற நிலையில், மிலேச்சப்படை ஆலயத்தைச் சுற்றி வளைத்தது.

`பன்னீராயிரவர் கலகம்’ என்று இதனைக் கோயிலொழுகு சுட்டிக் காட்டுகிறது. மிலேச்சர்களின் படையெடுப்பில் சிக்கிக் கொண்ட வேதாந்த தேசிகர் என்னவானார்? பிள்ளை லோகாசார்யரால் எடுத்துச் செல்லப்பட்ட உற்சவ மூர்த்தி சிலை மதுரைக்குச் சென்றதா?

தொடர்ந்து திருவரங்க ஆலயம் சந்தித்த சோதனைகள் என்னென்ன?

இவை குறித்த விவரங்களைத் தொடர்ந்து பார்ப்போம்.

- தொடரும்...


பிணிகள் தீர்ப்பாள் பாகம்பிரியாள்

பாகம்பிரியாள்
பாகம்பிரியாள்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இருந்து கிழக்கே சுமார் 10 கி.மீ தொலை விலுள்ள திருவெற்றியூரில் அமைந்திருக்கிறது அருள்மிகு பழம்புற்று நாதர் கோயில். இங்கு அருளும் பாகம்பிரியாள் வரப்பிரசாதி.

வியாழக் கிழமைகளில் இரவில் இந்தக் கோயிலில் தங்கியிருந்து, வெள்ளிக் கிழமை அதிகாலை எழுந்து, வாசுகி தீர்த்தத்தில் நீராடி, ஸ்வாமி தரிசனம் செய்கின்றனர். இதனால் பிணிகளும், தோஷங்களும் விரைவில் நீங்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து, வாசுகி தீர்த்தத்தில் நீராடி, அம்பாளை வழிபட்டு, அவள் சந்நிதியில் தரப்படும் தீர்த்தப் பிரசாதத்தை அருந்தினால், சகல பிணிகளும் நீங்கும் என்பது ஐதிகம்.

- எம்.பாண்டி, மேலூர்