Published:Updated:

ரங்க ராஜ்ஜியம்! - இரண்டாம் பாகம் - 6

ஒருமுறை கம்பண்ணரும் அவர் மனைவி கங்காதேவியும் துங்கபத்திரை நதிக்கரை வனம் ஒன்றில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தார்கள்.

பிரீமியம் ஸ்டோரி

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற
மெய்ம்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய,
செம்மையைக் கருமை தன்னைத் திருமலை ஒருமையான
தன்மையை நினைவாரென்றன் தலைமிசை மன்னுவாரே...

- திருக்குறுந்தாண்டகத்தில் திருமங்கையாழ்வார்

ரங்க ராஜ்ஜியம்! - இரண்டாம் பாகம் - 6

கி.பி. 1371-ம் வருடம்!

பாரத தேசத்தின் பல பாகங்கள் மிலேச்சர்களின் வசம் இருந்தபோதிலும், சில இடங்களில் நம்மவர்களை மிலேச்சர்களால் ஏதும் செய்ய இயலவில்லை. அப்படியொரு பகுதிதான் செஞ்சி. விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் பிடிக்குள் திகழ்ந்த இந்தப் பகுதி, மிலேச்சர்கள் உட்புக முடியாதபடி பலத்தோடு திகழ்ந்தது.

விஜயநகர கம்பண்ணரின் அமைச்சர்களில் ஒருவர் கோபணார்யன். பிறப்பால் பிராமணராக இருந்தபோதிலும் யுத்தக் கலைகளில் ஈடுபாடு கொண்டு குதிரையேற்றம், யானையேற்றம், வாள் சண்டை, வில் பயிற்சி, மல்யுத்தம் என்று சகலத்திலும் தலைசிறந்து விளங்கினார் கோபணார்யன்.

ஒருமுறை கம்பண்ணரும் அவர் மனைவி கங்காதேவியும் துங்கபத்திரை நதிக்கரை வனம் ஒன்றில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தார்கள். அப்போது சிறுத்தைப்புலி ஒன்று கூடாரம் அருகில் வந்து கங்காதேவியைத் தாக்க முற்பட்டது. அதை விரட்ட வந்த வீரர்களையும் கடுமையாகத் தாக்கிவிட்டுச் சென்றது.

அன்றுடன் முடியவில்லை சிறுத்தைப் புலியின் அட்டகாசம். மீண்டும் மீண்டும் வந்து எல்லோருக்குள்ளும் அச்சத்தை விளைவித்தது. இந்த நிலையில் கோபணார்யன் ஒரு காரியம் செய்தார். கூடாரம் அருகில் ஓர் ஆட்டைக் கட்டி வைத்தார். சிறுத்தைப் புலி ஆட்டைக் கொன்று தின்ன வந்தது. அருகில் ஒரு மரத்தின்மீது அமர்ந்திருந்த கோபணார்யன், அம்பு எய்து அந்தச் சிறுத்தைப் புலியைக் கொன்றார்; அனைவரது அச்சத்தையும் போக்கினார். அவரின் வீரத்தைக் கண்ட கம்பண்ணர், அவரை செஞ்சிக்கு அனுப்பிவைத்தார். செஞ்சியின் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டது. செஞ்சியின் சிற்றரசனாகிவிட்ட கோபணார்யன், திருமலை திருவேங்கடவனின் தீவிர பக்தர்.

ஒருமுறை திருமலை தரிசனத்துக்குச் சென்றவர், அங்கே திருவரங்கத்து ஶ்ரீதேவி - பூதேவி சமேத ஶ்ரீஅழகியமணவாளப் பெருமாளை தரிசித்தார். `இந்த மூர்த்தங்கள் மலைக்காட்டியில் ரகசியமாக வழிபடப்படுவது ஏற்புடையது அன்று; இந்தப் பெருமாளை செஞ்சிக்குக் கொண்டு செல்கிறேன். இந்தப் பெருமாளுக்கும் பெருமாட்டிக்கும் செஞ்சியில் நித்ய உற்சவம் செய்வேன். உகந்த தருணத்தில் இந்த மூர்த்தங்கள் திருவரங்கம் சென்றடையும்’ எனக் கூறி, திவ்ய மூர்த்தங்களைச் செஞ்சிக்குக் கொண்டு சென்றார்.

அதேநேரம், தென்னாட்டு வைணவ தாசர்கள் பலரும் கோபணார்யனைச் சந்தித்தனர். திருவரங் கத்தின் கதியைக் கண்ணீருடன் அவரிடம் பகிர்ந்தனர். ஆலயம் பூட்டப்பட்டு பூஜைகள் இன்றி இருப்பதைக் குறிப்பிட்டனர்.

அனைத்துக்கும் காரணம் மிலேச்சன் என்பதை அறிந்தார் கோபணார்யன். மிலேச்சனின் பிடிக்குள் திருச்சிராப்பள்ளி நகரமே இருந்தது. திருவானைக்கோவில் ஆலயம் உட்பட சகல ஆலயங்களும் ஆராதனைகள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. சதாசர்வ காலமும் மந்திர முழக்கமும் நாகஸ்வர - மேளச் சத்தமுமாய் கோலாகலமாகத் திகழ்ந்த திருவரங்க ஆலயம் வெறுமையுடன் திகழ்ந்தது. மிலேச்சனை மீறி எதுவும் செய்ய இயலாத நிலையில் மக்கள் இருப்பதை வைணவ தாசர்கள் கோபணார்ய னிடம் எடுத்துக் கூறினர். அந்தக் கணத்திலேயே கோபணார்யண் தந்திரமாய் மிலேச்சர்களை விரட்டி திருவரங்கத்தை விடுவிக்கத் தயாராகி விட்டார் எனலாம்.

தன் நம்பிக்கைக்கு உரிய பிரதிநிதிகள் பலரை பாதசாரிகள் போன்று திருவரங்கத்துக்கு அனுப்பிவைத்தார். அவர்கள் திருவரங்கத்தை அடைந்து மிலேச்சர்களின் படைபலத்தையும் அறிய முற்பட்டனர். இவர்களுக்கு, திருவரங்கத் தைச் சேர்ந்த கிருஷ்ணராய உத்தம நம்பியும், சிங்கராயர் என்பவரும் பெரிதும் துணையாக நின்றனர்.

திருவரங்கத்தில் ஆயிரமாயிரம் மிலேச்ச வீரர்கள் ஊரெங்கும் காணப்பட்டனர். அவர்களுக்கான உடை, படைகலன்கள், போக்கு வரத்து வசதிகள் எல்லாம் டெல்லியிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டன. உணவு தேவைக்குப் பல வீடுகளுக்குள் புகுந்து அரிசி, பருப்பு முதலானவற்றைக் கொள்ளையிடவும் அந்த வீரர்கள் தயங்கவில்லை. மட்டுமன்றி, தேவைப் படும் நிலையில் வாழை, தென்னந்தோப்புகளையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். ஆலயக் கொடிமரம், தங்க விமானம் அனைத்தும் வீழ்த்தப் பட்டிருந்தன.

அப்போது சமயபுரம்தான் மிலேச்சரின் மையமாக இருந்தது. டெல்லி சுல்தானின் தளபதி களில் ஒருவனே சமயபுரத்தை மையமாகக் கொண்டு திருச்சி மாநகரையே தன் கட்டுக்குள் வைத்து, ஓர் அரசன் போல் திகழ்ந்தான்.

உயிருக்கும் உடைமைக்கும் பயந்து சிலர் மதம் மாறச் சம்மதித்தனர். சிலரோ தங்களுக்கும் நற்காலம் வருமென்று பொறுமையுடன் காத்திருந் தனர். இன்னும் சிலர், அடிமைப்பட்டு உயிர் வாழ்வதற்குச் சாதல் மேல் என்ற எண்ணத்துடன், அவ்வப்போது மிலேச்சர்களில் பலரைக் கொன்று விட்டு தாங்களும் உயிர்த்தியாகம் செய்தனர்.

இப்படியான நிலையில்தான் செஞ்சி கோபணார்யனின் ஆட்கள் திருச்சிக்குள் ஊடுறுவியிருந்தார்கள். அவர்கள், உள்ளூர் மக்களில் வீரம் மிக்கவர்களைக் கண்டறிந்து ஒன்றுசேர்க்கத் தொடங்கினர். இதன் பொருட்டு திருஈங்கோய் மலையைப் பயன்படுத்திக் கொண்டனர். அங்கே ரகசியமாய்க் கூடி திட்டம் தீட்ட இடமிருந்தது. காவிரியின் வடகரைப் பகுதி கிராமமும் பயன்பட்டது. மட்டுமன்றி காவிரிக்கரையோரம் இருந்த தோப்புகளும் கோரைக்காடுகளும் ஆயுதங்களை ஒளித்துவைக்க உதவின. ஒருபுறம் யுத்த நிமித்தம் இப்படிப்பட்ட செயல்கள் நடந்துகொண்டிருக்க, சிந்தாமணி என்ற தாசியொருத்தி தானும் இந்த விடுதலைப் போரில் பங்கேற்க விரும்பினாள்.

இவளின் உறவு வழி வந்தவளே வெள்ளையம் மாள். மிலேச்ச தளபதியை வெள்ளைக் கோபுரத் துக்கு மேல் அழைத்துச் சென்று, மேலிருந்து கீழே தள்ளிவிட்டுக் கொலை செய்தவள். இந்தச் சிந்தாமணியும் வெள்ளையம்மாள் போன்று தீரச்செயல் புரிந்திட சங்கல்பித்துக்கொண்டாள்.

சமயபுரத்திலிருந்த மிலேச்ச தளபதி மது அருந்துபவனாகவும் பெண் பித்தனாகவும் இருப்பதை அறிந்தாள். தன்னையே பணயம் வைக்கத் துணிந்தாள். வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டு அவனைச் சந்தித்தவள், தன் அழகால் அவனை மயக்கித் தன் மடியில் விழச் செய்தாள். அவனது அந்தப்புரத்தில் நிரந்தரமாய்த் தங்கிவிட்டவள், அவன் போதையின் வசப் பட்டிருக்கும் தருணங்களில் உளவு வேலையில் இறங்கினாள். மிலேச்சர்களின் படை பலம், அவர்களுக்கு ஆயுதங்கள் எங்கிருந்து கிடைக் கின்றன என்பது வரை சகலத்தையும் அறிந்து, கோபணராயனின் ஆட்களின் கவனத்துக்குக் கொண்டு சேர்த்தாள்.

ஆக, மிலேச்ச தளபதியின் சகல திட்டங்களும், தந்திரங்களும், பலமும் கோபணார்யனுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தன. அவ்வகையில் பத்தாயிரத்துக்கும் குறையாத மிலேச்ச வீரர்கள் இருப்பதைத் தெரிந்துகொண்டவ கோபணார்யன், அவர்களை அடியோடு ஒழிக்கவேண்டுமெனில், அவர்களோடு மோதும் படையில் இருபதாயிரம் பேர் இருக்கவேண்டும் என்றும் முடிவு செய்தார்.

ரங்க ராஜ்ஜியம்! - இரண்டாம் பாகம் - 6

வருக்குக் காலமும் கருணை காட்டியது. சமயபுரம் அரண்மனையில் மிலேச்ச தளபதி நோய்வாய்ப்பட்டான். அவன் உடல்நலம் குன்றத் தொடங்கியது. அவனுக்கு மருத்துவம் செய்ய சிலர் முன்வந்தனர். ஆனால் அவர்களைச் சாதுர்யமாக கோபணார்யன் ஆட்கள் தடுத்து நிறுத்தினர்.

மேலும் அந்தத் மிலேச்ச தளபதி பல மருத்துவர்களை நாடு கடத்தியிருந்தான். அதனால் அவன் உபாதைக்கு மருத்துவம் செய்ய போதிய மருத்துவர்கள் இல்லை. வேறு எங்கிருந்தாவது வைத்தியர்களை அழைத்துவரப் பணித்தான். இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, கோபராண்யரின் ஆட்கள் வைத்தியர் வேடத்தில் அரண்மனைக்குள் புகுந்தனர். அவர்களை இனம் கண்டுகொண்ட சிந்தாமணி மகிழ்ந்தாள்.

ஒருநாள் அவனால் எழுந்து நடமாடவும் முடியாமல் போனது. அவனது ரோகம் முற்றியது. மிகச்சரியாக இவ்வேளையில் கோபணார்யனின் படை திருச்சியின்மீது பாய்ந்தது. இந்த எதிர்பாராத தாக்குதலை மிலேச்சர்கள் எதிர்பார்க்கவில்லை. மூன்றே நாட்களில் திருச்சிராப்பள்ளியும் திருவரங்கமும் கோபணார்யனின் வசமாயின. சிந்தாமணி பூரித்துப் போனாள். திருவரங்க வீதிகளில் வெற்றி வீரனாக வலம் வந்த கோபணார்யன், ஆலயக் கதவைத்திறக்கச் செய்து மீண்டும் பூஜை வழிபாடுகள் நடக்க ஏற்பாடுகளைச் செய்தார்.

மட்டுமன்றி, திருமலையிலிருந்து செஞ்சிக்குக் கொண்டுவந்திருந்த அழகியமணவாளப் பெருமாள் மற்றும் பிராட்டியர் விக்கிரகங்களை அலங்கார ரதம் ஒன்றில் ஏற்றி திருவரங்கம் நோக்கி உலா வரச் செய்தார்.

எம்பெருமான் அன்று வந்த வழியெல்லாம் ஆனந்தக் கொண்டாட்டம்தான். திருவரங்க ஆலயக் கல்வெட்டுச் செய்தியின்படி கி.பி.1371-ம் வருடம் வைகாசி 17-ம் நாள் எம்பெருமானும் பெருமாட்டியும் திருவரங்க ஆலயத்துக்குத் திரும்பினர்.

ஶ்ரீபிள்ளை லோகாசார்யரால் 1323-ல் ரகசியமாக ஊர்மக்கள்கூட அறிந்திராதபடி திருவரங்கத்தைவிட்டு நீங்கிய அந்த அழகிய மணவாளன், 58 ஆண்டுகள் கழிந்த நிலையில், பாரத நாட்டின் தென் பாகங்களில் எல்லாம் உலா கண்டு, பெரும் சதிச் செயல்கள் - எதிர்ப்புகளை எல்லாம் தவிடுப்பொடியாக்கி ஆலயம் திரும்பிய சம்பவம், ஓர் அழியாத வரலாற்றுச் சம்பவமாகும்!

எம்பெருமானின் வருகைக்குப்பின் ஆலயம் புத்தெழுச்சியோடு ஆர்த்து எழுந்தது. கோபணார்யனே முன்னின்று உற்சவாதிகளைச் செயல்படுத்தினார். அனைவருக்கும் பல தான தர்மங்களைச் செய்த கோபணார்யன், இந்த வெற்றிக்கு பாடுபட்ட எல்லோரையும் பாராட்டி னார். அவர்களுக்குப் பல பரிசுகளையும் அளித்து மகிழ்ந்தார். குறிப்பாக தாசி சிந்தாமணியிடம் அவர் என்ன வேண்டும் என்று கேட்டார்.

`இந்த வாய்ப்பு தனக்கும் தன்னைப் போல் உள்ள கோயில் தாசிகளுக்கும் ஒரு அபூர்வ தருணமாகும்' என்று உணர்ந்த சிந்தாமணி, வெள்ளையம்மாள் போலவே தங்கள் இறப்பிற்குப் பிறகு தன் உடலை கோயில் மடைப்பள்ளி பிரசாத அடுப்பின் நெருப்பு கொண்டு தகனமூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாள்.

``பெருமாளுக்குச் சாத்திய மாலையை தங்கள் இறந்த உடலுக்கு அணிவித்து தீர்த்தமும் அளித்து, அதன் பிறகே தகனக்கிரியை செய்யப்பட வேண் டும். அதுவே என் மக்கள் சார்பாக நான் விடுக்கும் கோரிக்கை ஆகும்'' என்றாள்.

அதை ஈடேற்றுவதாக கோபணார்யன் கூறவும், தனக்கு மட்டுமல்ல பின்னால் இனி வரப் போகிற தாசிகளுக்கும் இது பொருந்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, தாசி இனத்துக்கே ஒரு பெரும் வெளிச்சத்தைப் பாய்ச்சினாள் சிந்தாமணி! அவளால் ஏற்பட்ட இந்த நடைமுறை தாசி ஒழிப்புச் சட்டம் அமலாகும் வரை தொடர்ந்தது.

சிந்தாமணியின் கோரிக்கையை நிறைவேற்ற உத்தரவிட்டதோடு, வீரம், விவேகம், சுயநலமற்ற தன்மைக்காக அவளுக்குப் பல பரிசுகளையும் அளித்த கோபணார்யன், சில காலம் வரையிலும் திருவரங்கத்தில் தங்கியிருந்து மிலேச்சர்கள் திரும்பி வந்துவிடாதபடி பார்த்துக் கொண்டார்.

திருவரங்கம் மீண்டழுந்தது போலவே திருச்சிராப்பள்ளியை சார்ந்த எல்லா ஆலயங் களும் பழைய நிலையை அடைந்தன.

முன்னதாய் அழகிய மணவாளப் பெருமான் திருவரங்கத்தைப் பிரிந்து சில மாதங்கள் வட காவேரிக்கு அப்பால் சில காலம் தங்கியிருந்து பூஜைகள் கண்டார். அந்தக் கிராமம் அழகிய மணவாளம் என்றழைக்கப்பட்டது.

அந்தக் கிராமத்து மக்கள் `தங்கள் கிராமமே இனி திருவரங்கப் பெருமானுக்கு உரியது' என்று சாஸனமே எழுதித் தந்து விட்டனர்.

இன்றும் அழகிய மணவாளச் சபையார் முன், `விருப்பன் திருநாள்' கொடி ஏற்றத்தின்போது, அந்தக் கிராமம் நம்பெருமாளால் குத்தகைக்கு விடப்பட்டு, அதற்கான பட்டயமும் வாசிக்கப்படுகிறது.

மேலும் கோபணார்யன் சார்பில் திருவரங்க மீட்சிக்காகப் போரிட்ட கிருஷ்ணராய உத்தம நம்பி, சிங்கப்பிரான் இருவருக்கும் கோபணராயனால் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இருவரும் விஜயநகரத்துக்கே நேரில் சென்று முதலாம் புக்கராயர் மகனான இரண்டாம் ஹரிஹர ராயனை திருவரங்கத்திற்கு அழைத்து வந்து சேவைசாதித்தனர்.

இந்த ஹரிஹர ராயரின் விருப்பத்தின் பேரிலும் இவருடைய சகோதரரான விருப்பண்ண உடையார் பெயரிலும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நிகழ்த்தவும் தீர்மானிக்கப் பட்டது. அதன்படி நெடுங்காலத்திற்கு பிறகு 1383-ல் பிரம்மோற்சவம் நிகழ்த்தப்பட்டது.

இவ்வாறு புத்தெழுச்சி பெற்ற திருவரங்கம் அதன் பின் பல சிதைவுகளில் இருந்தும் மீண்டு எழத்தொடங்கியது. இதன் மீட்சியின் பின்னாலும் பல அரிய சம்பவங்கள் நிகழ்ந்தன!

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு