ஜோதிடம்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம்

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

இரண்டாம் பாகம் - 7

பாலிற் கிடந்ததுவும் பண்டரங்கம் மேயதுவும்
ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார் - ஞாலத்
தொரு பொருளை வானவர்தம் மெய்ப்பொருளை அப்பில்
அருபொருளை யானறிந்தவாறு

- நான்முகன் திருவந்தாதியில் திருமழிசையாழ்வார்.

ரங்க ராஜ்ஜியம்

மிலேச்சர் பிடியிலிருந்து விடுபட்ட திருவரங்கம், அதன்பின் வந்த பல்லோரால் பெரிதும் உயிர்த்தெழுந்து நின்றது. குறிப்பாக சாளுவமங்கு என்ற படைத் தளபதியின் பங்கு இதில் பளிச்செனத் தெளிவாகும். மிலேச்சர் படையை கோபணார்யன் தலைமையில் துவம்சம் செய்த போது, படைத் தளபதிகளில் ஒருவனாக இருந்தவன் சாளுவ மங்கு. சாளுவ குண்டு என்கிற இவன் சகோதரனும் முக்கியமான ஒருவன்.

சாளுவ வம்சாவழியில் - சாளுவ நரசிம்மனின் முன்னோர்களில் ஒருவன் இந்த சாளுவமங்கு. இவன் திருவரங்க ஆலயத்துக்கு 60,000 மடாஸ் தங்கத்தை வாரி வழங்கியதைப் பல சரித்திர சான்றுகள் வாயிலாக அறிய முடிகிறது. அத்துடன், திருவரங்க ஆலயத் துக்கு ஆயிரம் சாளக்ராமங்களையும் சாளுவமங்கு அளித்துள்ளான். அவற்றை அவன் அளித்தபோது, எம்பெருமானின் அஷ்டாட்சரங்களைக் குறிக்கும் விதமாக எட்டு கிராமங்களையும் காணிக்கையாகச் செலுத்தினான்!

இந்தக் காணிக்கை நிமித்தம் திருவரங்க வீதியில் பாகவதோத்தமர்களைக் கொண்டு, நடுவில் நாம சங்கீர்த்தன ஊர்வலத்தை நிகழ்த் தினான். பின்னர் சாளக்ராமங்கள் வழங்கப்பட, அவற்றுக்கு அபிஷேக ஆராதனைகள் நிகழ்ந்தன. அந்த வேளையில் சாளக்ராமத்தின் சிறப்பும் வெகுவாக சிந்திக்கப்பட்டது. `எங்கே சாளக்ராமம் உள்ளதோ அங்கே நானே எழுந்தருள்கிறேன்’ என்று மகாவிஷ்ணு துளசி மகாத்மியத்தில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு மன்னனின் மகளான துளசி, மகா விஷ்ணுவைத் தன் இஷ்ட புருஷனாகக் கருதி, விஷ்ணு பதம் அடைவதே பிறப்பின் இலக்கு என்று தவம் செய்தாள். முற்பிறப்பிலும் அவள் துவாரகையில் கோபிகையாகப் பிறந்து, ஶ்ரீகிருஷ்ணனின்மீது அதீத காதலும் பக்தியும் கொண்டிருந்தவள்.

பகவான் அவளின் காதலையும் பக்தியையும் உத்தேசித்து மாறுவேடத்தில் அவள் முன் சென்றார். மன்னன் மகளோ, வந்திருப்பது விஷ்ணு எனத் தெரியாமல் முன்கோபத்துடன் `என்னை ஏமாற்றிய நீ கல்லாகக் கடவது’ என்று சபித்துவிடுகிறாள். அதனால் உருவானதே சாளக்ராமக் கல்.

பின்னர் எம்பெருமான் `வந்திருப்பது நாமே’ என்று துளசிக்கு உணர்த்தினார். துளசி தான் சபித்ததற்காக வருந்தினாள். கடவுளே ஆனாலும் தூய்மையான உள்ளம் கொண் டோர் சபித்தால், அது பலித்தே தீரும்... தீரவும் வேண்டும்! இங்கேயும் அவ்வாறு ஆகிறது.

ரங்க ராஜ்ஜியம்

எம்பெருமான் துளசியைத் தேற்றினார்.

``துளசி வருந்தாதே! உன்னுள் இருந்து உன்னை இயக்குபவன் நானே. அவ்வகையில் `கல்லாகப் போ’ என்று நீ சபித்தது, என்னை நானே கல்லாக்கிக் கொள்ள விரும்பியதன் விளைவே! நீயும் கண்டகி எனும் நதியாக மண்மிசை பாய்வாய். அந்த நதியில்... நீ என்னை சதாசர்வ காலமும் தழுவிச் செல்லும் விதம் கற்களாக நான் கிடப்பேன். அவை, சாளக்ராமம் என்று பக்தர்களால் பெயரிடப்பட்டு பூஜிக்கப் படும். கல்லும் மண்ணும் நானே எனும் தத்துவத்துக்கும் இதன் மூலம் பொருள் கிட்டும்.

மட்டுமன்றி, சாளக்ராமம் உள்ள இடத்தில் உன் தொடர்பும் நீங்காது இருக்கும். அதாவது சாளக்ராம வழிபாடு என்பது, நதி நீராடி பவித்திரமாய் வணங்கிடும் ஒரு பலனை அளிக்கும். அதன் மூலம் உன் பிரேமை கலந்த பக்தியும் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். மனதால் தன்னைத் தாழ்மையாகக் கருதி விலகி நின்று பக்தி செய்யாமல், ஒருவர் சாளக்ராமத்தை தொட்டமாத்திரத்தில் உன் பக்தியும் பிரேமையும் அவர்களிடமும் உண்டாகிவிடும்’’ என்றார் எம்பெருமான்.

இப்படி எம்பெருமானாலேயே சிந்திக்கப் பட்டவையே சாளக்ராமங் கள். அவற்றையே ஆயிரம் என்ற எண்ணிக்கையில் திருவரங்க ஆலயத்துக்கு அளித்தான் சாளுவ மங்கு. இவனே திருச்சந்நிதியின் த்வஜ ஸ்தம்பம் என்கிற கொடி மரத்தையும் வெண்கலத்தில் செய்து நிறுவினான். முன்னதாக மிலேச்சர்கள் ஏற்படுத்திச் சென்ற சில சிதைவுகளைப் கோயிலொழுகு பட்டியலிடுகிறது. திருவரங்க ஆலயத்தின் பல பாகங்களில் மதில்கள் இடிக்கப்பட்டு, அங்கு கிடைத்த கற்களை மிலேச்சர்கள் தாங்கள் தங்கும் இடத்துக்குக் கொண்டு சென்று, தங்களுக்கான வழிபாட்டுத் தலத்தைக் கட்டிக் கொண்டனர் என்கிறது.

அதேபோல பெரிய பெருமாளின் தங்க விமானத்தின் தங்கத் தகடு அவ்வளவையும் தன்வசமாக்கிக் கொண்டான் மிலேச்சன். மேலும், முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனின் காணிக்கைத் தங்கத்தால் உருவாக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம், ஹேமச் சந்தன ஹரி, சேரகுலவல்லி போன்றோரின் காணிக்கைத் தங்கத்தாலான விக்கிரகங்கள், தங்க அணிகலன்கள் என்று சகலமும் கொள்ளையடிக்கப்பட்டன!

இங்ஙனம் கிட்டத்தட்ட நிர்மூலத்தில்... எம்பெருமானின் சயனத்திருமேனி கூட ஆதிசேஷன் குடை நிழலில்தான் இருந்தது. இப்படியொரு சரிந்த நிலையிலிருந்து மேலான நிலைக்கு திருவரங்க ஆலயத்தை மீண்டும் கொண்டுசெல்ல பாடுபட்டோரில் ஒருவரின் பங்கு பெரியது. அவர் பெயர் கிருஷ்ணராய உத்தம நம்பி!

அப்பராஜி என்பவரும், வீர புக்கண்ண உடையாரின் புத்திரர்களான பிரதானி, விட்டப்பர் ஆகியோரும் வீரகம்பண்ண உடையாரின் துணையுடன் மிலேச்சர் களால் அபகரிக்கப்பட்டிருந்த ஆலயத்துக்குச் சொந்த மான அவ்வளவு நிலங்களையும் மீட்டெடுத்தனர்.

இக்காரியத்தைப் பெரும் சிரத்தையுடன் செய்தவர் கிருஷ்ணராய உத்தம நம்பி. இதன் பொருட்டு இவருக்குத் திருவரங்கம் - திருவிக்ரமன் வீதியின் மேற்குப் பகுதியில் கல்மடம் ஒன்று தானமாக அளிக்கப்பட்டது.

ரங்க ராஜ்ஜியம்

மேலும் கிருஷ்ணராய உத்தம நம்பி, ஆலயத்துக்கென ஒரு பெரும் கையிருப்பு இருக்கவேண்டும் என்று முடிவு செய்தார். அதற்காக அரசன், மந்திரி என சகலரிடமும் பிக்ஷை கேட்டார். அதன் பயனாக 17,000 பொற்காசுகள் கிடைத்தன. அவற்றைக் கொண்டு 106 கிராமங்களை ஆலயத்துக்குக்கென்றே வாங்கினர்.

மேலும் ஹரிஹர மஹாராயர், விருப்பண உடையார், கோபண்ண உடையார், முத்தைய தென்நாயகர் (மந்திரி), தம்மண்ண உடையார், அவை ப்ரதானி சோமப்பர், காரியத்துக்கடவர் அண்ணர் ஆகியோரிடம் 5000 பொன்னை தானமாகப் பெற்று, அதைக் கொண்டும் 13 கிராமங்கள் வாங்கப்பட்டன. துலா புருஷ மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டது. அதில் விருப்பண்ண உடையார் எம்பெருமானுக்கென்று துலாபாரம் சமர்ப்பித்தார். குருவாயூரிலும் திருவனந்தபுரம் கோயிலிலும் இன்றளவும் துலாபாரம் சமர்ப்பணம் செய்யும் வழக்கம் உள்ளது. திருவரங்கத்தில் எதனாலோ காலத்தால் நின்றுபோனது!

கிருஷ்ணராய உத்தம நம்பியின் செயல்பாடுகளால் அன்றாட நைவேத்தியத்துக்கான அரிசி, பருப்பு, காய்கறிகள், பழ வகைகள், நெய், வெல்லம் போன்றவை தடையின்றி கிடைக்கத் தொடங்கின. திருவரங்க கோயிலுக்கென்று வாங்கப்பட்ட கிராமங்களில் வசித்த ஜனங்கள், தங்களின் நிலத்தில் விளைந்த நெல், கரும்பு போன்றவற்றையும் பசுமாடு, கன்று ஆகிய கால்நடைச் செல்வங்களையும் ஆலயத்துக்குத் தானமாக வழங்கினர்.

அப்படி அவர்கள் தானம் வழங்க வரும்போது, `கோவிந்த நாமம்’ சொல்லிக்கொண்டு கோஷ்டியாக வந்து எம்பெருமானை சேவித்து அவன் திருவருளுக்குப் பாத்திரமாயினர். இந்தச் செயலே அவர்களுக்கான அடையாளமாகி, அவர்கள் `கோவிந்தா கோஷ்டி’ என்றே அழைக்கப்பட்டனர். இவர்களில் ஒரு சாரார், சித்திரைத் தேரின் பின்புறத்தில் அமர்ந்து கிராமத்துத் தமிழில் நாட்டுப்புறப் பாடல்களையும் பாடினர்.

`பூலோக வைகுந்தம் நாம் காணும் திரு அரங்கம்
திரு அரங்கம் கழுத்தினிலே நீராலே ஒரு மாலை!
நீரான அம்மாலை காவேரி என்றாகும்.
அந்த காவேரி கரையோரம் நமக்கெல்லாம் ஒய்யாரம்...’

இப்படி அவர்கள் கூட்டமாகப் பாடிய பாடல்கள், திருவரங்கத்தின் வரலாற்றையும் கூறுவதாக இருந்தன.

வந்தானே மிலேச்சன் செய்தானே பெரும் பாவம்
அழித்தானே ஆலயத்தை அழித்த அவனையும்
ஒழித்தாரே கோபணார்யர்...
கோபணரின் பேருக்கொரு கோவிந்தா என்போமே
கோலாகல பெருவாழ்வு மண்ணில் நாம் வாழ்வோமே!


இப்படி, பல தினுசுகளில் அப்பாடல்கள் விளங்கின! இவற்றையெல்லாம் எழுதிவைத்துப் பாதுகாக்க அவர்களுக்குத் தோன்றவில்லை. ஆனாலும் பலரால் பாடப்பட்டும் செவி வழியாகக் கேட்கப்பட்டும் இன்றும் திருவரங்க சுற்றுவட்டாரத்துக் கிராம மக்கள் பலரின் மனதில் இந்தப் பாடல்கள் உயிர்ப்போடு வாழ்ந்து வருகின்றன.

இந்த மக்கள் இவ்வாறு ஆலயம் நோக்கி வந்து ஆடவும் பாடவும் வழிவகை செய்ததில் உத்தம நம்பிக்குப் பெரும்பங்கு உண்டு. பின்னா ளில் அவர் வம்சத்தில் வந்தோர் அவரது தொண்டை தொடர்ந்தனர்.

ரங்க ராஜ்ஜியம்

திருவரங்க வரலாறு குறித்து சிந்திக்கையில் எப்படி ஶ்ரீராமாநுஜர், ஶ்ரீவேதாந்த தேசிகர், ஶ்ரீபிள்ளை லோகாசார்யர் பற்றியெல்லாம் பெரிதும் சிந்தித்தோமோ, அவ்வாறே நாம் பெரிதும் சிந்திக்க வேண்டிய இன்னொருவரும் இதன் வரலாற்றில் இருக்கிறார்.

அவர்தான் ஶ்ரீமந் நாதமுனிகள். இவர் வாழ்ந்த காலம் குறித்து இருவேறு கருத்துகள் இருக்கின்றன. கி.பி. 824 - 918 என்பது டாக்டர் ந.ப. ராமானுஜம் என்பவரின் கருத்தாகும். `இல்லையில்லை... கிபி 852 - 952 என்கிற பூரணமான நூறு ஆண்டுகளே அவர் வாழ்ந்த காலம்’ என்பது மூ.ராகவய்யங்கார் என்பவரின் கருத்தாகும்.

ஶ்ரீமந் நாதமுனிகள் காட்டுமன்னார்கோவில் எனும் ஊரில் அவதரித்த தாகத் தெரிகிறது. இவ்வூரிலுள்ள பெருமாள் திருக்கோயிலான மன்னனார் சந்நதிதான் இவர் திருப்பணி செய்த ஆலயமாகும். இவராலேயே தமிழ் வேதம் எனப்படும் ஆழ்வார்கள் அருளிச் செய்த பிரபந்த பாசுரங்கள் அவ்வளவும் நமக்குக் கிடைத்தன என்றால், அதில் துளியும் மிகையில்லை. முன்னதாக திருவரங்கத்தின் ஒரு நடைமுறையை அறிந்துகொள்வது நல்லது.

திருவரங்கத்தில் எம்பெருமானுக்கு நாள்தோறும், பக்ஷங்கள் தோறும், மாதங்கள் தோறும், ஆண்டுகள் தோறும் நடைபெற வேண்டிய உற்சவங்கள் குறையின்றி நடக்கத் தொடங்கிய காலத்தில், குறிப்பாக பெரிய திருநாள் என்று கொண்டாடப்படும் அத்யயனோத்சவத்தில் திருவாய்மொழிப் பாடல்களும் இடம்பெற்றிருந்தன.

நம்மாழ்வார் அருளிச் சென்ற இப்பாடல்கள் திருச்சந்நிதியில் சொல்லப் படுவதன் பின்புலத்தில் இருந்தவர் திருமங்கையாழ்வார். இவரின் வேண்டுகோளை ஏற்று இராப் பத்து காலத்தில் நம்மாழ்வாரோடு திருவாய்மொழிப் பாடல்களைக் கேட்டு எம்பெருமானும் அகம் மகிழ்ந்தார். திருமங்கையாழ்வாரின் காலத்துக்குப் பின்னால் திருவாய் மொழிப் பாடல்களைப் பாடுவோர் மெள்ள குறைந்து, ஒரு கட்டத்தில் அவை பாடப்படுவது அப்படியே நின்றுபோனது.

இது தெரியாத நிலையில்தான் ஶ்ரீமந் நாதமுனிகள் ஒரு திவ்யதேச யாத்திரை மேற்கொண்டு, அதன் நிமித்தம் கும்பகோணம் எனப்படும் திருக்குடந்தைக்கு வந்து சேர்ந்தார்.

அங்கே ஆராவமுதன் திருச் சந்நிதி முன் திருவாய்மொழியின் ஐந்தாம் பத்து - எட்டாம் பதிகமான `ஆராவமுதே...’ எனத் தொடங்கும் பதிகத்தின் ஈற்றுப்பாட்டானது பாடப்பட்டது.

உழலை யென்பின் பேய்ச்சி முலையூடு
அவளை யுயிருண்டான்
கழல்கள் அவையே சரணாக் கொண்ட
குருகூர்ச் சடகோபன்
குழலில் மலியச் சொன்ன
ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய்
நோக்கியர்க்கே

- என்ற இப்பாடலைச் செவியுற்ற நாதமுனிகள், இப்பாடலின் மூலம் மேலும் ஓராயிரம் பாடல்கள் இருப்பதை உறுதிசெய்துகொண்டார்!

- தொடரும்...