Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 75

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம்

ரங்க ராஜ்ஜியம்

`கற்பகமேயென்று காசினியோரைக் கதிக்க மாட்டேன்
வெற்பிடையே நின்று வெந்தவத் தீயிலும் வேக மாட்டேன்
பற்பல கலைவல்ல பாவலனே பத்தரேத்தும் தூப்புல்
அற்புதனேயருளாயடி யேனுக்கு அரும்பொருளே!'


- பிள்ளை அந்தாதியில் ஶ்ரீநயினாராச்சாரியார்

`சாரங்கன் என்றோர் இளைஞன். அவனுக்குத் தாய் தந்தை இல்லை. கோயில் பணி செய்தும் சிலர் இடும் ஏவல்களைச் செய்தும் உயிர் வாழ்ந்து வந்தான். 35 வயதிற்கும் மேல் ஆகிவிட்டது. திருமணம் ஆகவில்லை.

அந்த நாளில் திருமணச் சடங்கின் நிமித்தம், பிள்ளை வீட்டார், பெண் வீட்டாருக்கு வரதட்சணை தரும் வழக்கம் இருந்தது. தான் கஷ்டப்பட்டு, பெற்று வளர்த்து ஆளாக்கும் தன் பெண்ணை, ஒரு தந்தை என்பவன் திருமணத்தின் மூலம் அப்படியே அல்லவா தூக்கிக் கொடுத்துவிடுகிறான்.

அதன்பின் அவன் தனித்து வாழ நேரிடுகிறது. அது ஒரு துன்பம் மட்டுமல்ல, முதுமையில் ஆதரவற்ற ஒரு நிலையும் தோன்றிவிடுகிறது. எனவே, அதை ஈடுகட்டும்விதமாக பெண் எடுப்போர் பெண்ணைப் பெற்ற தாய் தந்தைக்கு ‘வரன் காணிக்கை’ என்ற பெயரில் தட்சணை தரும் வழக்கம் இருந்தது. ஆகவே, திருமணம் நடக்கவேண்டும் என்றால், ஓர் ஆண் என்ற வகையில் பல்லாயிரம் பொன், பணம் இருக்கவேண்டும் என்கிற ஒரு நிலை இருந்தது.

சாரங்கனோ அநாதை. பணத்துக்கும் வழி இல்லாதவன். எனவே, அவன் வாழ்வில் திருமணம் என்பது ஒரு கனவே. இதை அறிந்த சில இழிபிறவிகள், அவனை ஶ்ரீவேதாந்ததேசிகரை சோதிக்கும் முகமாய் தூண்டிவிடத் தயாராயினர்.

‘`ஶ்ரீவேதாந்த தேசிகர்தான் சுத்த சுயம் பிரகாசம் ஆயிற்றே. நினைத்தமாத்திரத்தில் வரதனிட மும் அரங்கனிடம் பேசுபவராயிற்றே. அப்படிப்பட்டவரால் சாரங்கனுக்கு நிதியுதவி செய்து திருமணம் செய்து வைக்க முடியாதா என்ன...” என்று கேட்டு, சாரங்கனை வேதாந்ததேசிகரை நோக்கி ஓர் ஏவுகணை போல ஏவிவிட்டனர்.

ஶ்ரீவேதாந்ததேசிகரும் காஞ்சிப் பேரருளாளன் ஆலயம் சென்று வழிபாடு முடித்துத் திரும்பி யிருந்தார். அவரது கிரகத் தின் புறத்தில், அவரைத் தரிசிப்பதற்காகவும் ஆலோசனைகள் பெற்றிடவும் பலரும் காத்திருந்தனர். சிலர் புரவி ரதங்களில் வந்திருந்தனர். ஒரு தனவந்தர் பல்லக்கில் வந்திருந்தார். இவர்களில் ஒருவராக மணப்பாக்கத்து நம்பியும் நின்று கொண்டிருந்தார்.

ஶ்ரீதேசிகர் தன் சீடர் குழுவுடன் வரவும், எல்லோரும் கீழே தரையில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினர். தேசிகரும் அனைவருக்கும் ஆசி கூறும் முகமாய் கனிந்த பார்வையுடன் கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தார்.

ரங்க ராஜ்ஜியம் - 75

அப்போதுதான் அங்கே அந்த சாரங்கனும் வந்து நின்றான். ஓர் ஒழுங்கில்லாமல் அவன் தரித்திருந்த திருமண் காப்பும் அணிந்திருந்த கச்ச வேட்டியும், அவன் கவனிப்பார் இல்லாத போக்கை உடையவன் என்பதை, ஶ்ரீவேதாந்த தேசிகருக்கு முதல் பார்வையிலேயே உணர்த்தி விட்டன. அவனும் தேசிகரைக் குழைவுடன் பார்த்துச் சிரிக்கலானான். சிலர் அவனை `எங்கே வந்தாய்? இங்கு உனக்கு என்ன வேலை?' என்பது போலப் பார்த்தனர்.

“யாரப்பா... நீ உனக்கு என்ன வேண்டும்?” என்று கனிவுடன் அவனிடம் பேசலானார் ஶ்ரீதேசிகர்.

“என் பெயர் சாரங்கன். எனக்கு அப்பா அம்மால்லாம் இல்லை. நான் கொழந்தையா இருக்கறப்பவே அவாள்லாம் பரம பதிச்சுட்டாளாம்.”

சாரங்கன் சொன்னவிதமே மிகப் பரிதாபமாக இருந்தது.

“அடடே.. கவலைப்படாதே. உன் வரையில் நம் காஞ்சி வரதனும் தாயாருமே உன் தந்தை தாயாக இருந்து உன்னைக் காத்து ரட்சிப்பார்கள்.”

தேசிகரும் ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார்.

“எங்கே ரட்சக்கிறா... நான் சிரமப்பட்டுண்டுதான் இருக்கேன். இன்னும் கல்யாணம்கூட ஆகலை நேக்கு.”

“ஓ... கல்யாண விருப்பம் இருக்கிறதா உனக்கு?”

“நேற்றுவரை அதைப்பற்றி நினைக்கல. ஆனால், இன்னிக்கி சிலர் எனக்குள் அந்த எண்ணத்தை உருவாக்கி, உங்களண்டையும் என்னை அனுப்பியிருக்கா...”

“யார் அவர்கள்?”

“அவா பேரெல்லாம் தெரியாது. ஆனா எப்ப பார் ஒரு திண்ணைல அரட்டை அடிச்சிண்டே இருப்பா. அவாதான் என்னையைக் கூப்புட்டு, `என்னடா இப்படி ஒரு கல்யாணம் கார்த்திகைன்னு எதுவுமில்லாம ஒத்தையாக சுத்திண்டிருக்கே'ன்னா?”

“நீ என்ன சொன்னே?”

“கல்யாணம் பண்ணிக்கப் பணம் வேணுமே. ஆனா என்கிட்ட ஒரு வராகன்கூட இல்லையேன்னேன். ‘அதனால என்னடா... நீ போய் வேதாந்ததேசிகரைப் பார். அவர் உனக்கு மகாலட்சுமிகிட்ட இருந்தே பொன் வரவைச்சுக் கொடுப்பார். நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி வைப்பார்’னு சொன்னா.. அதான் கிளம்பி நேரா உங்கள பாக்க வந்துட்டேன்.”

“அப்படியா சொன்னார்கள்?”

“ஆமாம்! அப்படியேதான் சொன்னா. எனக்கும் லட்சுமியைப் பார்க்கணும்னு ரொம்ப நாளா ஆசை.”

“ஆமாம், அவர்கள் சொன்னதை நீ நம்பிட்டியா. நாமல்லாம் சாமானிய மனுஷப் பிறப்பு. அதுவும் விதி வழிப்பட்ட ஒரு காம்யார்த்த வாழ்வு. நம்மால் மகாலட்சுமியை எல்லாம் பார்க்க முடியுமா?”

“உங்களால முடியுமாமே... அதனாலதான் உங்களை சர்வதந்த்ர சுதந்திரர்னு எல்லாரும் சொல்றாளாமே... நீங்க கூப்பிட்டா மகாலட்சுமி என்ன... அந்த காஞ்சி வரதனே எதிர்ல வந்து விடுவானாமே?”

“அவர்கள் என் மேல உள்ள மதிப்பினால் அப்படிச் சொல் கிறார்கள். நான் ரொம்பவும் சாமானியன்.”

“அப்ப உங்களால முடி யாதா? எனக்குக் கல்யாணம் நடக்காதா?”

சாரங்கன் வருத்தமுடன் திருப்பிக் கேட்கவும், அங்கு இருந்தவர்களில் ஒருவர் இடையிடலானார்.

“ஸ்வாமி இவன் அப்பாவி. இவனைச் சிலர் தவறாக ஏவி விட்டுள்ளனர். இவனும் அவர்கள் ஏவிட்டது தெரியாமல் வந்துவிட்டான். இவனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் கிரகத்துக்குள் செல்லுங்கள்” என்றார். ஆனால் ஶ்ரீவேதாந்த தேசிகர் அதை மறுத்தார்.

“அவர்கள் ஏவியதாகவே இருக்கட்டுமே... அதனாலென்ன? இவனைப் போன்றவர்களுக்கு ஒரு வாழ்க்கைத் துணை அவசியம் இல்லையா?”

“ஸ்வாமி! யாரும் இல்லாத அனாதைக்கு, உருப்படியாக ஒரு நில புலனும் இல்லாதவனுக்கு, நாலாவித வர்ணங்களில் எந்த வர்ணத்திலும் அடங்காமல் சுற்றித் திரிபவனுக்கு யார் முன்வந்து பெண் தருவார்கள்?”

“உண்மைதான்... ஆயினும் அந்தப் பேரரு ளாளன் கருணை புரிய சித்தமாகிவிட்டால், கல்லும் கனியாகுமே... கல் மரத்திலும் பூ பூக்குமே?”

“ஸ்வாமி, இதற்கு மேல் நாங்கள் கூற ஏதும் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. ஏதாவது அதிசயம் நடந்தாலன்றி இவன் வாழ்வு மாறப்போவதில்லை. நீங்கள் அதிசயம் ஏதும் நிகழ்த்துகிறீர்களா என்று சோதிக்கவே இவனைச் சில திண்ணைப்பேச்சு மனிதர்கள் ஏவி விட்டுள்ளனர்.

உண்மையில் அவர்கள் நோக்கம் இவன் திருமணம் அல்ல. உங்களைச் சோதிப்பதே.”

“அதை நானும் அறிவேன். அவர்கள் என்னைச் சோதிப்பதாகக் கருதிக்கொண்டு நான் சார்ந்திருக்கும் கொள்கைகளைச் சோதிக்கிறார்கள்.”

“ஆம் இவர்களுக்கெல்லாம் நீங்கள் பதில் கூறத்தான் வேண்டுமா?”

“அவர்கள் எப்படி வேண்டு மானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இவன் அவர்களை நம்பி விட்டான். அதைவிட என்னைப் பெரிதும் நம்புகிறான். உங்களைப் போல இவனுக்குள் ஒரு கேள்வி இல்லை. சந்தேகம் என்பதும் துளியும் இல்லை. இப்படி ஒரு மனம் வாய்ப்பது அரிது. யோகம் தெளிந்தவர்களுக்கே இது சாத்தியப்படும். இவனது நம்பிக்கை அசாத்தியமானது. அதுதான் இன்று அதிசயம். இந்த அதிசயம் பல அதிசயங்களை நிச்சயம் நிகழ்த்தும்.”

ஶ்ரீவேதாந்த தேசிகர் உணர்ச்சி மேலிடப் பேசினார்.

“எப்படி ஸ்வாமி...” என்று ஒருவர் கேட்கவும் செய்தார்.

“எப்படி என்று எனக்குத் தெரியாது. ஆனால் பேரருளாளன் கைவிடமாட்டான். எம்பெருமாட்டியும் துணை நிற்பாள். இவன் பொருட்டு நான் அவர் களிடம் மன்றாடப் போகிறேன்...” என்றார் ஶ்ரீவேதாந்த தேசிகர்.

தொடர்ந்து, தன் கிரகத்திற் குள் சென்று கை கால்களைக் கழுவிக்கொண்டு வந்து நிஷ்டையில் ஆழ்ந்தார். பின் கண் மலர்ந்தவர், பெருந் தேவியாம் அந்தத் திருமகளை எண்ணிக் கவி பாடத் தொடங்கினார்.

ரங்க ராஜ்ஜியம் - 75

அந்த துதிப் பாடல் வரிகள் ஆற்று பெருக்காய்த் தங்கு தடையின்றிப் பீறிட்டது. அதேவேளை, வானில் பெரும் மேகக்கூட்டமும் கூடி மழையும் வரலாயிற்று. அதன் நிமித்தம் இடியும் மின்னலும் தோன்றிக் காஞ்சி நகரமே நடுங்கிற்று.

ஶ்ரீதேசிகரின் இல்லத்திற்கு அருகிலேயே இடி ஒன்று விழுந்ததில் நிலப்பகுதி தோண்டப் பட்டது போல் பிளந்து கொள்ள, உள்ளிருந்து ஒரு பெரும் புதையல் பானை வழிய வழிய பொற்காசுகளுடன் கண்ணில் படலாயிற்று.

அதைக்கண்ட சகலரும் திகைத்தனர். இன்ப அதிர்வுக்கு ஆளாயினர். ஶ்ரீவேதாந்த தேசிகரும் கண்கள் பனித்திடத் தன் பாடலை முடித்தார்.

அன்று அவர் அப்படிப் பாடிய பாடலே பின்னாளில் ‘ஶ்ரீஸ்துதி’ என்னும் மகாலட்சுமிக் கான ஸ்லோகமாக மாறியது. பெருமாட்டி கைவிடவில்லை. சாரங்கனும் அந்த நிதியால் மட்டுமல்ல, மதியாலும் மாறிப் போனான். திருமகளின் அருள் பெற்றுவிட்ட அவனுக்குத் தேடிக்கொண்டு வந்து பலர் பெண் கொடுக்க சித்தமாயினர்.

அவன் திருமணம் இனிது நடந்தேறிட ஶ்ரீதேசிகரைச் சோதித்தவர்கள் வாயடைத்துப் போனார்கள். இதையெல்லாம் காண நேர்ந்த மணப்பாக்கத்து நம்பி, ஶ்ரீதேசிகரின் திருவடிகளில் விழுந்து தன்னைச் சீடனாக்கிக் கொள்ள மன்றாடினார். ஶ்ரீதேசிகர் அவரை ஆதரித்ததோடு வரதனையும் சிக்கெனப் பற்றிக் கொள்ளும்படி பணித்தார். அதனாலும் அன்றாட வழிபாடு நிமித்தமாயும் வரதன் ஆலயம் ஏகிவிட்டு வந்த மணப்பாக்கத்து நம்பியின் கனவில் தோன்றினார் வரதன்.

`‘நம்பி! நீ திருவரங்கம் செல்வாயாக. அங்கே பிள்ளை லோகன் என்பான் வடிவில் நானே இருக்கிறேன். அவன் மூலம் நீ ஶ்ரீவைஷ்ணவ சித்தாந்தங்கள் சகலமும் கற்கலாம். அத்துடன் அங்கேதான் இப்போது பெரும் சலனங்களும் ஏற்பட உள்ளன. அவ்வேளை, உன் போன்ற பெரும் தொண்டர்கள் பிள்ளைலோகனோடு இருப்பது அவசியம். இம்மட்டில் தேசிகனே உனக்கு வழிகாட்டி அருளுவான்'’ என்றார்.

கண்விழித்த நம்பி, தான் கண்ட கனவினை ஶ்ரீவேதாந்த தேசிகரிடம் கூறவும் தேசிகர் சிலிர்த்தார். நம்பியையும் திருவரங்கம் செல்லப் பணித்து அனுப்பி வைத்தார்.

கி.பி. 1323 - பாரத தேசத்தை வடக்கில் டெல்லி யிலிருந்து கொண்டு, துக்ளக் வம்சத்தைச் சேர்ந்த கியாசுதீன் என்பவன் ஆட்சி செய்த காலம். பாரசீக மொழியே அப்போது அலுவல்மொழி. உருதுவும் பல்லோரால் பேசப்பட்டது.

பாரதத்தைத் தாயகமாகக் கொண்டோர், சம்ஸ்கிருதம் மற்றும் ஹிந்தியைப் பேசிய காலம். இந்த கியாசுதீனின் ஆட்சி நான்கு வருடங்களே நடந்தது. அதன் பின் வந்த முகமது பின் துக்ளக் 1351 வரை ஆட்சி செய்தான்.

வடக்கில் இவனது ஆட்சி என்றால், தெற்கே பாண்டிய மண்டலத்தில் மாறவர்மன் குலசேகரன் என்பவன் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு வாழ்ந்து வரலானான். அவனுக்குப் பின் அவன் புத்திரர்களான சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் ஆட்சி செய்து வந்தனர். இக்காலகட்டத்தில் காஞ்சியம்பதி வலுவிழந்த சோழர்களின் பிடியிலிருந்தது.

கர்நாடக தேசமும் அதனையொட்டிய ராஷ்ட்ரமும் விஜயநகரப் பேரரசின் கீழ் நிர்வகிக்கப்பட்டன. விஜயநகரப் பிரதிநிதிகள் காஞ்சியிலும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முற்பட்டனர். அதற்கேற்பக் காஞ்சியில் நகரக் காவலும், வரிவசூல், ஊர் நிர்வாகம் ஆகியவையும் இருந்தன.

மொத்தத்தில் தென் பகுதி முழுவதும், விஜயநகரப் பேரரசின் எழுச்சியின் காரணமாக, வடபகுதியைப் போன்று மிலேச்சர் கையில் சிக்கவில்லை. ஆயினும் எப்படியும் தென்பகுதியைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்துவிட துக்ளக் முயன்றான்.

அதில் திருவரங்கமே முதல்குறியாக இருந்தது.

அகண்டு விரிந்த காவிரியாறு - மையத்தில் கலைநயம் கொஞ்சும் ஆலயம். அந்த ஆலயத்தின்பால் பெரும் பற்று கொண்ட மக்கள், அவர்களை வழிநடத்திய ஆசார்யர்கள் என்று நம் சமயம் பெரும் உறுதிப் பாட்டுடன் விளங்கியதை மிலேச்சர்களால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே திருவரங்கத்தைச் சுற்றியுள்ள எல்லா ஆலயங்களையும் குறிவைத்துத் தாக்க முற்பட்டனர். சிலை வழிபாடு என்பது அவர்கள் மதக் கொள் கைக்கு எதிராக இருந்த தால், சிலைகளைச் சிதைப்பதையோ அழிப்ப தையோ அவர்கள் ஒரு பாரமாகவும் கருதவில்லை.

இப்படி ஒரு சூழல் ஶ்ரீராமாநுஜர் வாழ்ந்த நாள்களிலும் இருந்தது. ஆயினும் அப்போது பெரும் யுத்தங்களோ, கலகங்களோ இல்லை.

ஆனால், துக்ளக் வம்சத்தினர் பெரும் சீற்றத்துடன் படை எடுத்து வந்தனர்.

- தொடரும்...

ரங்க ராஜ்ஜியம் - 75

ஏழு புண்ணிய திருத்தலம்!

திருவாரூரிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கண்ணபுரம். எம்பெருமான் ஶ்ரீநீலமேக பெருமாள் எனும் திருப் பெயருடன் அருளும் ஊர் இது. உற்சவர்- ஶ்ரீசௌரிராஜபெருமாள்; தாயார் - ஶ்ரீகண்ணபுர நாயகி.

1. தலம் - கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம்

2. வனம் - கிருஷ்ணாரண்யம்

3. நகரம் - கிருஷ்ணபுரம்

4. விமானம் - உத்பலாவதக விமானம்

5. நதி - காவிரி

6. தீர்த்தம் - நித்திய புஷ்கரணி

7. கடல் - கிழக்கு நோக்கிய ஆலயம்; கிழக்குத் திசையில்தான் கடலும் அமைந்துள்ளது.

இப்படி ஏழு புண்ணியங்களைக் கொண்ட தலம் என்று திருக்கண்ண புரத்தைச் சிறப்பிக்கிறார்கள். திருக்கண்ணபுரம் - பூலோக வைகுண்டம் எனச் சிறப்பிக்கப்படும் க்ஷேத்திரம் என்பதால், இவ்வூரில் சொர்க்கவாசல் தனியே இல்லை என்பர்.

- கே.பிருந்தா, சென்னை-44

ரங்க ராஜ்ஜியம் - 75

எழுவர் வழிபாடு ஏற்றம் தரும்!

நினைத்ததை அருளும் மகத்து வம் கொண்ட ஞானநூல் தேவி மகாத்மியம். ஒருமுகப்பட்ட மனதுடன்... அஷ்டமி, சதுர்த்தசி மற்றும் நவமி நாட்களில் இந்தக் கதையைக் கேட்பவர்களுக்குப் பகைவர்களாலோ, தீய சக்திகளாலோ பாதிப்புகள் நேராது!

தேவிமஹாத்மியம் விவரிக்கும் சப்த மாதர்கள் வரலாறும் சிறப்பானது. முறைப்படி இவர்களை வழிபட, அனைத்து நலன்களும் கிடைக்கும்.

பிராம்மியை வழிபட ஞானம் பெருகும்; சரும நோய்கள் குணமாகும்.

மகேஸ்வரியை வழிபட, சர்வ மங்கலம் உண்டாகும்.

கௌமாரியை வழிபட, ரத்தம் தொடர்பான நோய்கள் நீங்கும்.

வைஷ்ணவியை வழிபட, விஷ ஜந்துக்களால் தொல்லைகள் ஏற்படாது.

வாராஹியை வழிபட, எதிரிகள் பயம் நீங்கும்; மனதில் தைரியம் பிறக்கும். விவசாயம் செழிக்கவும் இந்தத் தேவியை வழிபடுவர்.

இந்திராணியை வழிபட, தாம்பத்தியம் இனிக்கும்.

சாமுண்டியை வழிபட... சகல தீவினைகளும் அகலும்

- சி.வேண்டு, மதுரை-2