Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 79

ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. இப்போது நாம் இப்படிச் சிந்திக்கவும் அவனே காரணம்.

ரங்க ராஜ்ஜியம் - 79

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. இப்போது நாம் இப்படிச் சிந்திக்கவும் அவனே காரணம்.

Published:Updated:
ரங்க ராஜ்ஜியம்
பிரீமியம் ஸ்டோரி
ரங்க ராஜ்ஜியம்

`வணக்கம் ஒடுக்கம் வழக்கம்

ஒழுக்கம் இரக்கம் சேரும்

இணக்கம் உறக்கம் இழுக்கும்

அழுக்கும் இகந்து நிற்கும்

குணக்குலம் ஓங்கும்

இராமாநுசன் குணம் கூறும் தூப்புல்

அணுக்கனைப் பிள்ளைதனை

அரணாக அடைபவர்க்கே'

- ஸ்ரீநயினாச்சாரியார்.

``அரங்கன் திருச்சந்நிதிக்கு முன் சுவர் எழுப்பி சந்நிதியை மறைத்துவிட வேண்டும்'' என்று ஸ்ரீலோகாசார்யர் தன்னுடைய திட்டங் களில் ஒன்றை முன்வைத்தார்.

``நல்ல யோசனை'' என்றனர் சிலர்.

ஆனால் வேறு சிலர், முகத்தில் வாட்டத்தை எதிரொலித்தனர்.

``ஏன் இந்த முக வாட்டம்?''

``திருச்சந்நிதியைச் சுவர் எழுப்பி மறைப்பதா? நினைக்கவே நெஞ்சம் கலங்குகிறது'' என்றார் ஒருவர்.

``எனக்கு உள்ளம் பற்றி எரிகிறது...'' என்றார் இன்னொருவர்.

பிள்ளை லோகாசார்யர் தொடர்ந்தார்.

``எம்பெருமானின் திருமேனியை நாம் இங்கிருந்து கொண்டு சென்றுவிடலாம். நித்திய ஆராதனைகளுக்கு ஒரு குந்தகமும் வராதபடி நாம் நமக்குள் வழிபாடுகளை தொடர்வோம்.''

அவர் கூறியதைக் கேட்டு சிலர் வாய்விட்டு அழத் தொடங்கிவிட்டனர்.

``அழாதீர்கள்! அழுவது கோழைகளின் செயல். நாம் இப்போது விவேகமாக நடந்தாக வேண்டும்.''

``அழாமல் இருக்க முடியவில்லை ஸ்வாமி! இதயம் என்று ஒன்று இருக்கிறதே... இது எப்பேர்ப்பட்ட சந்நிதி... இந்த மூர்த்திதான் எவ்வளவு கீர்த்தி படைத்தவர்? பிரம்மனே ஆராதித்த மூர்த்தியைக் கொண்ட இந்தச் சந்நிதியையா சுவர் எழுப்பி மூடுவது?

`` எம்பெருமானின் திருமேனியையா நாம் தூக்கிக்கொண்டு ஓடுவது. அதற்கு இங்கேயே நின்று, எதிரியை எதிர்த்துப் போராடி சாகலாமே?''

``போராடி வெல்ல முடியும் என்று உங்களால் சொல்ல முடியவில்லை பாருங்கள்...''

``என்ன செய்வது? பகைவர்கள் குத்துவெட்டுக்கும், குருதி பார்க்கவும் அஞ்சாத கல்நெஞ்சக் காரர்கள். நாம் அப்படி வளர வில்லையே? எவருக்கேனும் காயம்பட்டு ரத்தம் வரக் கண்டாலே மயங்கி விழுந்துவிடுவோமே..?''

``அப்படிப்பட்ட நாம் ஆயுதங்களை நம்ப முடியாதல்லவா?''

``நிச்சயமாக!''

``அதனால்தான் அறிவுடைமையோடு இப்படி ஒரு முடிவு எடுத்தேன். சில சுவர்கள் காலத்துக்குமானவை. ஆனால், நாம் அமைக்கப் போகும் சுவர் தற்காலிகமானது. திருச் சந்நிதிக் குள் மிலேச்சனின் மூச்சுக் காற்று படுவதுகூட இழுக்கு. எனவே இதைத் தவிர வேறு வழியில்லை.''

``புரிகிறது ஸ்வாமி. அதேநேரம் எம்பிரானின் மூர்த்தத்தை நாம் வெளியே எடுத்துச் சென்று எப்படி ஆராதிக்க முடியும். சூழல் இடம் கொடுக்குமா?''

``மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. இப்போது நாம் இப்படிச் சிந்திக்கவும் அவனே காரணம். எதையும் நாம் நம் உழைப்பால் செய்வதாகக் கருதவேண்டாம்.

அவன் உள்ளிருந்து ஆட்டி வக்கிறான். நாம் ஆடுகிறோம். அதுவே உண்மை. ஆகவே, இந்த நொடி எது இலகுவோ அதைச் செய்வோம். மற்றவை எல்லாமே நடக்க நடக்க நாரணன் செயல்களே!''

``ஹூம்... இதுவா நாரணன் செயல்? மிலேச்சர்கள் மனத்தில் புகுந்து அவர்களையும் தன்னை வணங்கும்படிச் செய்தால் அதுதான் நாரணன் செயல். குறைந்தபட்சம் நரசிம்மம் போல் தோன்றி, ஒரு செருமி செருமி அவர்களை ஓடச் செய்தால், அது நாரணன் செயல். ஆனால், இங்கே நாரணனே அல்லவா சிக்கலில் சிக்கியுள்ளான்?''

``துளியும் செறிவில்லாத பாமரத்தனமான பேச்சு இந்தப் பேச்சு. இப்படிச் சிந்திப்பதாக இருந்தால், இத்தனை கேள்விகளையே கேட்கத் தேவையில்லையே.

மிலேச்சனை படைக்காமலேயே விட்டிருந் தால், இவ்வளவு பாடுகள் இல்லையே என்று ஒரு கேள்விக்குள் முடித்துவிடலாம் அல்லவா?

ஆக, நான் தொடக்கத்திலேயே சொன்னது போல இது ஒரு சோதனை. இது வேதனையாவ தும், சாதனையாவதும் நம் கைகளில்தான் உள்ளது. நம் புராணங்களைக் கவனித்தாலே தெரியும். அதில் தேவர்கள் மட்டுமல்ல அசுரர் களும் நிரம்ப இருப்பார்கள். அந்த அசுரர்கள் தேவர்களைப் பாடாய்ப் படுத்துவார்கள். இறுதியில் எம்பெருமான் வந்து நல்லோரைக் காத்து ரட்சிப்பான். தேவர்களைப் படைத்த எம்பெருமான், ஏன் அசுரர்களைப் படைத்து அவர்கள் மூலமாய்ப் பெரும் போராட்டங்களை உருவாக்க வேண்டும்?''

பிள்ளைலோகாசார்யர் இப்படிக் கேட்கவும், அங்குள்ள வைணவர்கள் பதில் கூறத் தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

``ஸ்வாமி! நாங்கள் உங்கள் அளவுவுக்குத் தெளிவில்லாதவர்கள். எங்களுக்குள் தோன்றும் எண்ணங்களை அப்படியே கொட்டி விடுகி றோம். பிழை இருப்பின் மன்னித்து எங்களை நெறிப்படுத்துங்கள். உங்கள் பதிலால்தான் நாங்கள் தெளிவுற வேண்டும்'' என்று ஒருவர் இதமாய்ப் பதில் கூறினார்.

ஸ்ரீரங்கம் கோயில்
ஸ்ரீரங்கம் கோயில்``அப்படியாயின் நான் சொல்லப் போவதைக் கூர்மையாகக் கவனித்து உள்வாங்குங்கள். ஓர் ஆலயம் என்பது, நம் வாழ்வு போல ஒரு நூற்றாண்டுகள் மட்டும் கொண்டதன்று. அது காலகாலத்துக்குமானது. தான் அழியாது நின்று, அழிந்துவிடும் நமக்கு அழியாத முக்தி தருவதற்காக மண்ணில் உருவானது. இதுவே இறைச் சித்தம்!

ஆகவே, காலகாலத்துக்குமான ஒன்றின் மதிப்பு, அதன் சொத்துகளால் ஏற்படுவதல்ல; அது எதிர் கொள்ளும் சகலத்தாலும் ஆனது. ஒருபுறம் புயல், மழை என்று இயற்கையின் சீற்றங்களை எதிர்கொண்டால், மறுபுறம் கொலை-கொள்ளை, சிதைவு என்று செயற்கையான இடப்பாடுகளையும் எதிர்கொள்கிறது.

இந்தத் திருவரங்க ஆலயம் காவிரியால் பலமுறை மூழ்கடிக்கப்பட்டு, பின்னர் நம் போன்றவர்களால் மீட்கப்பட்டுள்ளது. அதுபோல, இப்போது அது மிலேச்சர்களால் வரும் ஆபத்தையும் எதிர்கொள் ளும். இவையெல்லாம் வரலாறாக நின்று பிற் காலத்தில் சிந்திக்கப்படும்.

நாம் எல்லோருமே ஒருநாள் முதுமை கண்டு மரணிக்கவே போகிறோம். அந்த மரணம் எந்த நிலையிலும் காலத்தால் சிந்திக்கப்படாது. ஆனால் இப்போதைய இச்சோதனையின் பொருட்டு நமக்கு ஏதாவது நிகழ்ந்தாலும், அது வரலாற்றில் சிந்திக்கப்படும். அந்தச் சிந்தனை வருங் காலத்த வருக்கு ஒரு பாடமாகவும் அமையும்.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆலய வெளிக்குள் வரும் மனிதர்கள், இதை வெறும் கல் மண்ணாகப் பார்க்கமாட்டார்கள். ஒரு பேரழிவைச் சந்தித்து மீண்ட சக்திமிக்க ஒரு கலைக்களஞ்சிய மாகவும் அருட்கோட்டமாகவுமே இதைக் காண்பர்.

ஸ்ரீரங்கம் வைணவர்கள்
ஸ்ரீரங்கம் வைணவர்கள்மிலேச்சனே இல்லை; ஆபத்தும் இல்லை என்றால், நான் சொன்ன பாடங்கள் இல்லை; பதிவுகள் இல்லை. சுருக்கமாக கூறுவதனால் காரணம் இல்லாமல் காரியம் இல்லை. எனவே, நாம் இதை ஓர் அரிய வாய்ப்பாகக் கருதுவதே சரியான செயல்.

வரட்டும் மிலேச்சன்! சந்திப்போம் அவனை. அதேநேரம் நம் கலாசாரத்தை அவன் வலிமைக்குப் பலிகொடுத்து விடாதபடி தந்திரமாய்ச் செயல்படுவோம். காலத்தால் நின்று காட்டுவோம். வரலாறு நம்மை தியாகிகள் என்றும் அவர்களை எதிரிகள் என்றும்தான் சொல்லும்.''

பிள்ளை லோகாசாரியரின் நெடிய விளக்கம் அனைவரையும் சற்று ஆற்றுப் படுத்தியது. மெள்ள ஒரு சகஜ நிலை உருவாகி, ஒவ்வொருவரும் அப்போதே மணல் செங்கல் சுண்ணாம்பு, விலாம்பழச்சாறு பூச்சாங்கொட்டை என்று சுவர் எழுப்பத் தேவையான வற்றைச் சேமிக்கத் தொடங்கினார்கள்!

காஞ்சியிலிருந்து வேதாந்த தேசிகன் திருவரங்கத்துக்குப் புறப்பட்டுவிட்டார். இரண்டு குதிரைகள் பூட்டிய ஒரு ரதம்தான் அவர் பயணிக்கும் வாகனம். கிருஷ்ணபாண்டன் என்பவனே அவரின் ரத சாரதி.

கிருஷ்ண பாண்டன் நைச்சியமான வைணவ தாசன். நெற்றியில் திருமண்காப்பு, தலையில் துணிப்பாகையுடன் கச்ச வேட்டி உடுத்தி, மார்பின் குறுக்கே வஸ்திரப்பூணூல் தரித்து, கையில் தோல் கச்சை தரித்துக்கொண்டு, அவன் ரதத்தை ஓட்டும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

ரதசாரதியாக இருப்பதால், புரவிகளின் குணத்தையும் அவற்றின் வகைகளையும் அறிந்தவன். அவற்றுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதிலிருந்து அவற்றை ஆரோக் கியமாகப் பாதுகாப்பது வரையிலும் சகலமும் அறிந்தவன்.

அவன் நல்ல பலசாலியும்கூட. எச்சரிக்கை யாக காலில் காலணியை ஒட்டி கச்சணி ஒன்றில் கத்தியைச் செருகி வைத்திருப்பான். கத்தி வீசுவதிலும் வல்லவன்!

இந்தக் கிருஷ்ண பாண்டன் எச்சரிக்கையாக ரதத்தைச் செலுத்த, உள்ளே நாராயணத் தியானத்தில் இருந்தார் தேசிகன்.

நெடிய பயணத்தில் `எண்ணாயிரம்' என்ற பெயர் கொண்ட ஊர் எல்லைப்புறத்தில் வந்து நின்றது அவர்களின் ரதம்.

- தொடரும்...

சாந்தாகாரம் புஜக சயனம்...

விஷ்ணு சகஸ்ரநாமத்தில் `சாந்தாகாரம் புஜக சயனம்...' எனத் தொடங்கும் வரிகள் நமக்கு உணர்த்துவது என்ன தெரியுமா?

பகவான் விஷ்ணுவினது சாந்தமான உருவம். அவர், புஜகம் அதாவது பாம்பின் மேல் சயனம் செய்வதால், புஜக சயனம்.

தொப்புளில் இருந்து தாமரை வந்திருக்கிறது, பத்மநாபம். தேவர்களுக்கெல்லாம் தலைவர் என்பதால் சுரேசம். அவர் வடிவமே இந்த பூமிதான் என்பதால் விஸ்வாகாரம். அவர் ஆகாயமாக இருப்பதால், வடிவம் இல்லாத ககன சத்ருசம்.

அவர் உருவம், மேகத்தின் வர்ணமான சாம்பல் நிறத்தில் இருக்கும். சுபத்தைக் கொடுக்கும் உடல் உறுப்புகளைக் கொண்டதால், சுபாங்கம். மகாலட்சுமிக்கு, காந்தன். தாமரைக் கண்கள் கொண்டவர் என்பதால் கமல நயனம்.

அவரை அடைவது எப்படி? யோகிகளின் இதயம் இருக்கிறதே, அதுபோல யோகாப்பியாசம் செய்ய வேண்டும். அவர்களின் தியானத்தில்தான் அவர் இருப்பார் என்பதால் யோகிஹ்ருத்யான கம்யம். இந்த உலகத்தில் நமக்கு இருக்கும் எத்தனையோ விதமான பயங்களை அழிப்பதால் பவபய ஹரம். இவ்வளவு மகிமைகள் கொண்டவரே, சர்வ லோகங்களுக்கும் நாதனான பகவான். அவரை வணங்கு.

- கே.ஆண்டாள், மதுரை-1

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism