திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 8

திருமால்
பிரீமியம் ஸ்டோரி
News
திருமால்

இரண்டாம் பாகம் இந்திரா செளந்தர்ராஜன்

ஆனிதனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தாருக்கு உபதேசம் அருளி வைத்தான் வாழியே
பானுதெற்கிற் கண்டவன் சொல் பல உரைத்தான் வாழியே
பராங்குசனார் சொற்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்திற் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே
நானிலத்திற் குருவரையை நாட்டினான் வாழியே
நலந்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே

-ஆசார்யர்கள் வாழி திருநாமத்திலிருந்து...

திருக்குடந்தை ஆராவமுதன் சந்நிதியில் ஶ்ரீமந் நாதமுனிகளின் காதில் விழுந்த திருவாய்மொழியின் ஐந்தாம் பத்தின் எட்டாம் பாசுரப் பாடல், நாதமுனிகளுக்குள் அதுபோல் ஆயிரம் பாடல்கள் இருப்பதை உணர்த்தியது.

முதல் காரியமாய் அங்குள்ளோரிடம்... குறிப்பாக அந்த எட்டாம் பாசுரத்தை பாடியவரிடமே மீதமுள்ள 999 பாடல்கள் எங்கு எவரிடம் உள்ளன என்கிற கேள்வியை எழுப்பினார். அவரோ சற்று திகைத்தார். பின் பதில் கூறலானார்.

``ஸ்வாமி! இதுகுறித்து நான் அறிந்தது ஒன்றுமில்லை. ஆனால் ஒன்றை மட்டும் நன்கு அறிவேன். இப்பாடல் இந்தக் குடந்தை சாரங்கபாணிக்கு மிக உவப்பான பாடல். இதை பக்தியோடு பாடிடும் தருணங்களில், அவன் என் மனதுக்குள் காட்சி தர கண்டிருக்கிறேன். நீங்கள் முயன்று பாருங்கள். அவன் காட்சி தரும் பட்சத்தில், அவனிடத்திலேயே கேளுங்கள். அவனே இதுகுறித்து அறிந்த சர்வக்ஞன்'' என்றார்.

ஶ்ரீமந் நாதமுனிகள் அதைப் பற்றிக்கொண்டார். அஷ்டாங்க யோகத்தில் அமர்ந்து அந்த பாசுரத்தை பாராயணம் செய்யலானார். 108 முறை பாராயணம் புரியவுமே ஶ்ரீமந் நாதமுனிகளின் மனக்கண்களுக்கு ஶ்ரீசாரங்கபாணி காட்சித் தரலானார்.

எழிலார்ந்த கோலத்தில் சுடரொளிப் பொன்னாய் காட்சி தந்து `யாது வேண்டும்?' என்று வினவினார். ஶ்ரீமந் நாதமுனிகள் எம்பெருமானின் திருவடி நிழலில் இளைப்பாற வரம் கேட்டிருக்கலாம்; பெருமாளும் அளித்திருப்பார். ஆனால் நாதமுனிகளுக்குத் துளியும் சுயநலம் இல்லை. எனவே, அவர் தன்னைச் சிந்தியாமல் அந்த ஆயிரம் குறித்து கேட்டார்.

``எம்பெருமானே... தயாபரனே... நான் செவிமடுத்ததும் பாராயணம் புரிந்ததும் உன் திருமுன் பாடிய ஒரே ஒரு பாசுரத்தையே. ஆனால், அதுபோல் ஆயிரம் உள்ளனவாமே

ரங்க ராஜ்ஜியம் - 8

கருணாசாகரனே! ஒற்றைக்கே காட்சி தந்து `யாது வேண்டும்' என்று நீ வினவினால், அந்த ஆயித்துக்கு என்னவெல்லாம் அளிப்பாய் என்று எண்ணிப் பார்க்கிறேன். அந்த ஆயிரமும் எங்கே எவரிடம் இருக்கின்றன என்று நான் அறிந்து அவற்றை அடைந்திடவேண்டும். பின்னர் அவை இந்தப் பூவுலகில் வாழும் உன் பக்தர்கள் அனைவரையும் அடைந்திட வேண்டும். அதற்கு நீயே வழியைக் காட்டியருள வேண்டும்'' என்று வேண்டி நின்றார்.

சாரங்கபாணியும் நகைமுகத்தோனாய், ``நாதமுனி! உனது வேட்கையை அறிந்தோம். நீ கேட்ட ஆயிரத்தை என்பொருட்டு யாத்தவன் சடகோபன் நம்மாழ்வானாவான். தாமிரபரணி நதி தீரத்துத் திருக்குருகூர் அவனது ஜன்ம பூமி! அங்கே நீ சென்றிடுக. வழிகளும் தானாய்ப் புலப்படும்'' என்று கூறி மறைந்தார்.

ஶ்ரீமந் நாதமுனிகள் உள்ளம் பூரித்தார். உடனடியாக தென் பாகத்திலிருக்கும் திருக்குருகூர் நோக்கி பயணிக்கலானார். முன்னதாய் ஆழ்வார்த் திருநகரி இடையிட்டது. அங்கே மதுரகவி ஆழ்வாரின் வம்சத்தில் உதித்தவரான ஶ்ரீபராங்குச தாசரைக் கண்டார். அவரிடம் தன் பயண உபதேசத்தைக் கூறலானார்.

``ஸ்வாமி... என் பெயர் நாதமுனி. சோழநாட்டுக் காட்டுமன்னார்கோவில் என் ஜன்ம பூமி. குடந்தை சென்று ஆராவமுதனை தரிசித்தபோது, `உழலையென்பின் பேய்ச்சி முலையூடு...' என்கிற சடகோபரின் பாசுரம் ஒன்றைக் கேட்க நேர்ந்தது. அது ஆயிரத்தில் ஒன்று என்பதோடு, மீதம் 999 உள்ளன என்பதையும் நான் அறிய நேர்ந்தது.

அதுகுறித்து நான் எம்பெருமானாகிய ஶ்ரீசாரங்கபாணியிடமே விண்ணப்பித்தேன். திருக்குருகூர் சென்றிட வழிகள் புலனாகும் என்றார் அவர். ஆகவே, இங்கு வந்துள்ளேன்'' என்றார். அதைக்கேட்ட ஶ்ரீபராங்குச தாசர் பரவசமுற்றார்.

``சுவாமி! தங்களின் மேலான எண்ணமும் முயற்சியும் எனக்குப் பிரமிப்பை அளிக்கின்றன. எங்கோ இருக்கும் உங்களுக்குள் இப்படி ஒரு தாக்கமா? ஆனால் இங்கே அதுபற்றி அறிந்த ஒருவர்கூட இல்லை. பல காலத்துக்கு முன் அவன் சந்நிதியில் சடகோபன் நம்மாழ்வார் ஜீவித்திருந்த வரை பாடப்பெற்ற அப்பாடல்கள், காலத்தால் அப்படியே வழக்கொழிந்து போயின. ஆயினும் ஶ்ரீநம்மாழ்வாரை தன் ஞானகுருவாகக் கொண்ட ஶ்ரீமதுரகவியாழ்வாரின் ‘கண்ணிநுன் சிறுத்தாம்பு’ எனும் பாசுரம் இங்கே தியானிக்கப்படுகிறது.

நான் மதுரகவி ஆழ்வாரின் வம்சா வழியினன். அம்மட்டில் எனக்கு ஒரு செய்தி நன்கு தெரியும். எவரொருவர் `கண்ணி நுன் சிறுத்தாம்பு' பாசுரத்தை பன்னீராயிரம் முறை வாசிக்கின்றாரோ, அவர் கண்முன் அந்த நம்மாழ்வாரே பிரத்யட்சமாவார். வேண்டுவனவற்றை அளிப்பார் என்பதே அச்செய்தி'' என்றார் ஶ்ரீபராங்குச தாசர்.

அதைக்கேட்ட ஶ்ரீமந் நாதமுனிகள், ``அப்படியாயின் அந்தப் பாசுரத்தை எனக்கு உபதேசிப்பீராக. நான் அதை உபாசிக்கத் தயாராக இருக்கிறேன்'' என்றார்.

ஶ்ரீபராங்குச தாசரும் அந்தப் பாசுரத்தை உபதேசிக்கத் தொடங்கினார். அதை பக்தியோடு செவிமடுத்தார் ஶ்ரீமந் நாதமுனிகள்.

பின்னர், தாமிரபரணி நதியில் நீராடிவந்தார். திருக்குருகூர் ஆலயத்தில் திருப்புளியாழ்வார் எனப்படும் புளியமரத்தடியின் கீழ், 32 ஆண்டு காலம் நம்மாழ்வார் எழுந்தருளி இருந்த இடத்துக்குச் சென்றார். தன் திருமேனி அந்த இடத்தில் பட்டிட, பன்னிரு திருமண் காப்புடன் விழுந்து வணங்கினார்.

தொடர்ந்து, அப்பாசுரத்தை பன்னீராயிரம் முறை உபாசிக்கத் தொடங்கி, யோக நிஷ்டையில் அமர்ந்தார். எல்லோராலும் இப்படி உபாசிக்க இயலாது. எதிர்பாராத இடையூறுகள் ஏற்பட்டு உபாசனை தொடராது தோல்வியுறும்.ஆனால் ஶ்ரீமந் நாதமுனிகள் வரையிலும் பன்னீராயிரத்தை வாசிப்பு எட்டவும் நம்மாழ்வார் ஶ்ரீமந் நாதமுனிகளுக்குக் காட்சி தந்து பேசலானார்.

``நாதமுனி! நீ என்னை உபாசித்த காரணத்தை நான் அறியலாமா?''

``தாங்கள் அறியாததும் ஒன்றுண்டா ஸ்வாமி. தங்களின் ஆயிரம் பாசுரங்களையும் அறியவே நான் வந்துள்ளேன். ஒற்றை பாசுரத்தால் ஶ்ரீசாரங்கபாணியின் தரிசனம் வாய்க்கப் பெற்றேன். மற்றைப் பாசுரங்களும் தெரிய வந்தால் உலகோர் உய்வார்களே?''

``நாதமுனி! உன் விருப்பம் மிக மேலானது. உன் போல் மதிப்பறிந்த ஒருவனால் அது பெறப்பட்டாலே, காலமுள்ள அளவும் வாழ்ந்திடும். இவ்வேளையில், நான் என் சிந்தையில் உதித்ததோடு மட்டுமன்றி, என் வழியில் மாலவன் மீது பக்தியோடு பாடிய மற்றையோரின் பாசுரங்களையும் உனக்கு உபதேசிக்க சித்தமாயுள்ளேன்.

அத்துடன் திருமந்திரத்வயம் மற்றும் சரம ஸ்லோகங்களையும், அஷ்டாங்க யோக ரகஸ்யத்தையும் உபதேசிப்பேன்.

உன்னால் இப்பாசுரங்கள் `நாலாயிர திவ்ய ப்ரபந்தம்' என்கிற திருநாமம் பெற்று வையம் உள்ள அளவும் வாழ்வாங்கு வாழ்ந்திடட்டும். மக்கள் இந்த நாலாயிரத்தைத் தன் நெஞ்சில் நிலை நிறுத்துவதற்கு, என்னையொத்த ஆழ்வார் பெருமக்களின் குருவருளோடு, மாலவனின் பெரும் கருணையும் சித்தித்து அவர்கள் வைகுந்த பதத்தை அடைந்து இன்புறுவர்'' என்றவர், ஶ்ரீமந் நாதமுனிகளுக்கு உபதேசிக்கலானார்.

- தொடரும்...