
பூனைக் கண்களும், துண்டு தாடியும், சிரம் மேல் அணிந்திருக்கும் மினார் வடிவ தலைப்பாகையும், தளபதியைத் தனித்துக் காட்டிற்று.
ஆடல் மாவல வன்கலி கன்றி
அணி பொழில் திருவரங்கத் தம்மானை
நீடு தொல்புக ழாழிவல் லானை
எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்!
பாட நும்மிடலப் பாவம் நில்லாவே’
- பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார்
ஆத்ம பலத்தால் பெரும் காரியம் செய்ய முடிவெடுத்த வெள்ளையம்மாள், சர்வ அலங்காரத்துடன் அழகு தேவதையாக, ஆரியப்பட்டாள் வாயிலுக்குச் சென்று மிலேச்சர் படையின் வரவுக்காகக் காத்திருந்தாள்.
வெகுவிரைவில் மிலேச்சர் கூட்டம் உள் நுழைந்தது. முகப்பில் படைத் தளபதி கம்பீரமாய் நடந்து வர, அந்த தளபதிக்கு ஒருவன் குடை பிடித்தபடி வந்தான். பின்னால் கையில் வாளுடன் ஒரு பெரும் கூட்டம்.
திபுதிபுவென்று பலரை வெட்டிச் சாய்த்துக்கொண்டு உள்நுழைந்து, கோயிலைக் கொள்ளையிட்டு பொருள்களை அள்ளிச் செல்வது அவர்கள் திட்டம்.
இப்படியான திட்டத்துடன் அவர்கள் வரும் போது, ஆரியபட்டாள் வாயிலில் எழில் துலங்க வெள்ளையம்மாள் நிற்பதைப் பார்த்த தளபதிக்கு, அந்தக் காட்சி ஆச்சரியம் மிக்கதாக இருந்தது. தன்னோடு வந்த உபதளபதியிடம், ``யார் இவள்... எதற்காக இங்கு நிற்கிறாள்?'' என்று கேட்டான்.

அதற்கு அந்த உபதளபதி பதில் கூறுமுன் வெள்ளையம்மாள் முன்வந்து பேசலானாள்...
``ஹீசூர்... அவரிடம் என்ன கேள்வி? என்னிடம் கேளுங்கள்... நானே சொல்கிறேன்... நான் ஒரு கோயில் தாசி. அப்படிச் சொன்னால் உங்களுக் குப் புரியுமோ புரியாதோ... நடன மாது என்றால் புரியும் என்று எண்ணுகிறேன். என் நாட்டியத் துக்கு மயங்காதவர்களே கிடையாது’’ என்று ஆரம்பித்தாள்.
``ஆனாலும்... உனக்குத் தைரியம் அதிகம். உங்கள் ஊரில் எங்களைப் பார்த்து எல்லா பெண்களும் ஒளிந்து கொண்டார்கள். நீயோ என் முன் தைரியமாகப் பேசுகிறாயே பலே...’’ என்றான் தளபதி.
பூனைக் கண்களும், துண்டு தாடியும், சிரம் மேல் அணிந்திருக்கும் மினார் வடிவ தலைப்பாகையும், தளபதியைத் தனித்துக் காட்டிற்று.
வெள்ளையம்மாளும் அசரவில்லை. ``தைரியம் என்னுடன் சேர்ந்து பிறந்த ஒன்று. நான் சராசரி மனிதர்களுக்கெல்லாம் கட்டுப்பட்டவள் இல்லை. உங்களைப் போல மாவீர தளபதிகள்தான் என் இலக்கு’’ - என்றாள்.
``என் இலக்கு என்றால்...’’ அந்த தளபதி, அவள் பொடி வைத்துப் பேசியதைப் புரிந்துகொண்டு கேட்டான்.
வெள்ளையம்மாள், ``அதைப் போகப் போக பார்க்கத்தானே போகிறீர்கள்’’ என்று மீண்டும் ஒரு பொடி வைத்தாள். அவளின் தைரியமும் பேசிய விதமும் அங்குள்ள பலரையும் சந்தேகப்பட வைத்தது. அவள் ஏதோ திட்டத்தோடு பேசுகிறாள் என்பது அவர்களுக்குப் புரிந்துவிட்டது!
ஆனால் வெள்ளையம்மாள் அசராமல் பேசினாள்: ``ஹீசூர்... நான் உங்களைக் காண்பதற்கும் உங்களுக்கு உதவுவதற்காகவுமே இங்கே காத்திருந்தேன். ஆனால் நீங்கள் என்னைப் புரிந்துகொள்ளாமல் சந்தேகப்படுவது, எனக்குப் புரிகிறது'' என்று தன் பேச்சில் ஒரு வலையை விரித்தாள். அதில் அந்தத் தளபதியும் விழலானான்.
``நீ எனக்கு உதவி செய்யப் போகிறாயா? வேடிக்கையாக இருக்கிறது உன் பேச்சு!''
``அப்படியென்றால் விட்டுவிடுங்கள் எப்போதுமே, வலிய சென்று உதவி செய்கிறேன் என்றாலே இப்படித்தான்...'' வெள்ளையம்மாள் சிணுங்கினாள்.

``சரி சரி... அது என்ன உதவி... சொல்?''
தளபதி தன் மொழியில் அருகிலிருக்கும் துபாஷியிடம் சொல்ல, துபாஷி அதைத் தமிழில் வெள்ளையம்மாளிடம் கூறிட, இருவரின் உரையாடலும் தொடர்ந்தது.
``ஹீசூர்... இந்தக் கோயில் கஜானா இருக்கும் இடம் எனக்குத் தெரியும். மூல விக்கிரகம் ஒளித்து வைக்கப்பட்டுள்ள இடமும் எனக்குத் தெரியும். அவற்றை என்னால் காட்ட முடியும்...'' என்றாள்.
`கஜானா' என்றதுமே தளபதியின் முகத்தில் பல மின்னல்கள்! ``எங்கே எங்கே?'' என்று படப்படத்தான் அவன்.
``என்னோடு வாருங்கள் காட்டுகிறேன்!''
``ஆச்சரியமாக இருக்கிறதே... இப்படிக் காட்டிக் கொடுக்கிறாயே, உனக்கு விசுவாசம் கிடையாதா?''
``இதற்கான பதிலை கஜானாவை உங்களுக்குக் காட்டியபிறகு சொல்கிறேனே...''
``சரி! கஜானா எங்கே இருக்கிறது என்று காட்டு. நான் என் வீரர்களை அனுப்புகிறேன்.''
``அதுதான் இல்லை... நீங்கள்தான் வரவேண்டும். நீங்களே வந்தால்தான் காட்டுவேன்.''
``ஏன் அப்படி?''
``அது அப்படித்தான்... அது எவ்வளவு பெரிய விஷயம். அதை, பெரிய தளபதியான உங்களுக்குக் காட்டுவதே சரி...''
``சரி... பதிலுக்கு நீ என்ன எதிர்பார்க்கிறாய்..?''
“அதையும் நான் கஜானாவையும் விக்கிரகத் தையும் காட்டிய பிறகு சொல்கிறேன்...”
வெள்ளையம்மாள் அந்தத் தளபதியைத் தன் சாதுர்யமான பதில்களால் சற்றுக் குழப்பவும் செய்தாள். அதைப் பார்த்தபடி இருந்த வீரர்கள் சிலருக்கோ, வெள்ளையம்மாள் பெரிதாக ஏதோ செய்யப்போகிறாள் என்பது தெரிந்துவிட்டது.
அதற்குள் தளபதி ஒரு முடிவுக்கு வந்தவனாக, ``சரி வா... நானே வருகிறேன்'' என்று கூறி அவளோடு நடக்கலானான்.
மற்ற வீரர்களும் உடன் வரத் தொடங்கினர். அதை கவனித்தவள் ``நீங்கள் மட்டுமே வரவேண்டும். இவர்கள் யாரும் வரக்கூடாது'' என்றாள். உடனேயே தளபதியிடம் தயக்கம்.
``என்ன ஹீசூர்... என்னோட வர உங்களுக்குப் பயமாக உள்ளதா?'' என்று கேட்கவும், அந்த கேள்வி அவனை உறுத்தியது. அவனுக்கு ரோஷம் வந்தது. ``எனக்கென்ன பயம்..?'' என்றவன், தன் வீரர்களிடம் ``நீங்கள் யாரும் வர வேண்டாம். நானே சென்று என்னவென்று பார்த்து விடுகிறேன்'' என்று ஆணையிட்டுவிட்டு, அவளோடு நடந்தான்.
வெள்ளையம்மாள் முன்னால் நடந்தாள். அவன் தொடர்ந்தான். அவள் கால்கள் கிழக்குல் கோபுரம் நோக்கித் திரும்பின. பின்னர், கோபுரத்தை அடைந்து அதன் உட்கூடுகளுக்குள் புகுந்து, மேலே ஏறலானாள்.
``இது என்ன... ஏன் மேலே செல்கிறாய்?''
``மேலேதான் பொக்கிஷங்கள் ஒளித்து வைக்கப்பட்டுள்ளன!''
``அப்படியா?'' என்று கேட்டுவிட்டு அவனும் மேலே ஏறினான்.
வெள்ளையம்மாள் ஒரு வழியாக கோபுர உச்சியை அடைந்தாள். அவனும் வந்து சேர்ந்தான். அங்கிருந்து பார்த்தால், திருவரங்க நகரம் முழுவதும் நான்குபுறமும் பளிச்சென தெரிந்தது. காவிரிக் காற்று முகத்தில் அறைந்து வீசியது.
தளபதி நாலாபுறமும் பார்த்துக் கொண்டே ``எங்கே சிலை.. எங்கே கஜானா செல்வம்...'' என்று கேட்டான்.
வெள்ளையம்மாள் அங்கிருந்த படியே திருவரங்க பெருமானின் திருச்சந்நிதிக்கு மேலுள்ள கோபுரத்தையும் அதில் காட்சி தரும் பரவாசுதேவ சொரூபத்தையும் காட்டி, ``அதோ பாருங்கள்... அதுதான் சிலை!'' என்றாள். அவனும் கண்டான்.
``இதைக் காண கொடுத்துவைத்திருக்க வேண்டும். நீங்களும் கொடுத்து வைத்தவர்'' என்றாள்.
``சரி, எங்கே கஜானா?'' என அடுத்து கேட்டான்.
``அதோ அருகில்...'' என்று அவனை கோபுர விளிம்புக்கு அழைத்து சென்றாள். விளிம்பை அடைந்ததும் ``எங்கே... எங்கே...'' என்று பரபரத்தான் தளபதி. மேலும் தாமதிக்காமல் அவனைத் தன் இரு கைகளாலும் பிடித்துத் தள்ளி விட்டாள் வெள்ளையம்மாள்.
அவ்வளவுதான்... அந்தத் தளபதியின் உடல் உடைவாள் சகிதம் கோபுர உச்சியிலிருந்து கீழே விழுந்து சிதறி சின்னாபின்னமானது. அதைக் கண்ட வெள்ளையம்மாளின் கண்களிலும் கனல். அப்படியே பரவாசுதேவ ரூபத்தைப் பார்த்தாள். அனல் கக்கிய கண்களில் இப்போது கண்ணீர்.
கீழே வீரர்கள் ஓடோடி வந்தனர். தளபதியின் உடலைப் பார்த்து, நடக்கக் கூடாதது நடந்துவிட்டதைக் கண்டு பதைத்து நின்றனர். ஒருசிலர், வெள்ளையம்மாளை பிடிக்கும் வெறியுடன் கோபுரத்துக்கு மேல் ஏறத் தொடங்கினர்.
அதைப் பார்த்த வெள்ளையம்மாள் ``எம்பெருமானே! என்னால் ஆனதைச் செய்துவிட்டேன். இவன் எதிரியாக இருப்பினும், உன்னை தரிசித்த நிலையில் இறந்துள்ளான். இவனுக்கும் உன் கருணை ஸித்திக்கட்டும். என்னையும் உன்னிடம் சேர்த்துக்கொள்'' என்றபடி கோபுரத்திலிருந்து தானும் குதித்தாள். கீழே குதித்த வெள்ளையம்மாள் இறந்துவிட்டதாகக் கருதி, தளபதியின் உடலைத் தூக்கிக்கொண்டு வீரர்கள் சென்றுவிட, வெள்ளையம்மாளின் தியாகத்தை எண்ணிச் சிலிர்த்த சில தாசர்கள் அருகே வந்து அவளைப் பார்த்தனர். அவள் உடலில் உயிர் ஒட்டிக்கொண்டிருந்தது

அதேநேரம், அவளின் தியாகத்தைக் கண்ட பலரும் எழுச்சிபெற்று படையோடு மோதத் தொடங்கிவிட்டனர். தளபதி இல்லை ஆதலால் படையிடம் பெரும் தடுமாற்றம். இடையில் வெள்ளையம்மாள் உடலை தூக்கிக் கொண்டு பாதுகாப்பான ஓரிடத்துக்குச் சென்ற சிலர், அவளைக் காப்பாற்ற இயலுமா என்று முயன்றனர். ஆனால் வெள்ளையம்மாள், தன்னைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம் என்றவள், ``எனக்கு ஒரே ஒரு விருப்பம்தான். அதை நிறைவேற்றினால் போதும்'' என்றாள்.
உயிர் பிரிந்த பின் தன் உடலுக்கு ஆலயத்து மடப்பள்ளி யிலிருந்து நெருப்பை எடுத்து வந்து கொள்ளியிடவேண்டும். பெருமாளுக்குச் சாத்திய மாலையை சாற்றி தன்னை வழியனுப்ப வேண்டும். எனக்கு மட்டுமல்ல, என் அடியொற்றி வரும் கோயில்தாசிகள் அனைவருக்கும் இந்தப் பேற்றினை அருள வேண்டும்'' என்று வேண்டினாள்.
அவளின் விருப்பம் மிகுந்த சிரமத்துக்கு இடையில் நிறைவேற்றப்பட்டது. அவளுக்குப் பிறகு வந்த தாசிகளுக் கும் இந்தப் பேறு கிடைத்தது. கிழக்குக் கோபுரமும் வெள்ளையம்மாளின் தியாகத்தைப் போற்றும் விதம் வெள்ளைக் கோபுரம் என்றே பெயர்பெற்றது!
- தரிசிப்போம்...
******
பாகவதம் எனும் பொக்கிஷம்!
கிருஷ்ணன் என்ற சொல்லுக்கு ‘பூமிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவன்’ என்று பொருள். ஸ்ரீகிருஷ்ண சரித்திரமே ஆனந்தம்தானே!. ஸ்ரீகிருஷ்ணனும் ஸ்ரீகிருஷ்ண சரித்திரமும் வெவ்வேறல்ல!
மற்ற நூல்களைப் படிப்பதை விட, ஸ்ரீபாகவதம் படிப்பது உயர்ந்தது. மகாபாரதத்தை இயற்றிய வியாஸர், ஸ்ரீபாகவதத்தையும் எழுதினார். அவரே, மகாபாரதத்தால் கிடைக்காத ஆனந்தம் பாகவதத்தால் தமக்குக் கிடைத்ததாகப் பரவசப்படுகிறார்.
பகவானைப் பற்றிப் பேசுவதால் ஸ்ரீகிருஷ்ண சரித்திரத்துக்கு பாகவதம் என்று பெயர். கேட்பவர் மற்றும் படிப்பவர் மனதில் பக்தியை விதைத்து, முக்தி மார்க்கத்துக்கு அழைத்துச்செல்லும் அற்புத பொக்கிஷம் பாகவதம்.
‘கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரண்’ என்று உபதேசிக்கிறார் நம்மாழ்வார். நாமெல்லாரும் பிறந்தது நமது கர்மங்களின், ஊழ்வினைகளின் காரணமாக! ஆனால், இறைவனார் பிறப்பது கர்மத்தின் காரணமாக அல்ல; நம்மிடம் கொண்டிருக்கும் அன்பின் காரணமாக.
நமது சரித்திரம், நமது வாழ்க்கை முறை, நமது நடத்தைகள் பல தருணங் களில் நமக்கே பிடிப்பதில்லை. ஆனால், பகவானது அவதாரங்கள் எப்படி நமக்கு ஆனந்தத்தைத் தருகின்றனவோ, அப்படியே அவனுக்கும் ஆனந்தத்தை விளைவிக்கின்றன. எவனொருவன் அவதார ரகசியத்தைப் பற்றிய ஞானத்தை உடையவனோ, அவன் மீண்டும் பிறப்பதில்லை என்கிறது கீதை. ஆக, பாகவதத்தைப் படித்து பகவானின் அவதார லீலைகளில் திளைக்கும் அன்பர்களுக்கு நாளும் நன்மைகளே நடக்கும்; முக்திபேறும் கிடைக்கும்.
- கே.வேணு, திருநெல்வேலி-3