மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 47

ஶ்ரீரங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீரங்கம்

திருவரங்கம் கோயிலின் வரலாறு!

ரகுநாத நாயக்கருக்கும் ஜக்கராயனுக்குமான யுத்தம் நள வருடம் - ஆஷாட மாதம், வளர்பிறை ஐந்தாம் தேதி அன்று தொடங்கி நடந்ததை, சரஸ்வதி மஹாலில் உள்ள ஏடுகள் உறுதி செய்கின்றன. இந்த வேளையில் காவிரிக்குத் தென்கரையில் தோப்பூருக்கு ஐந்து மைல் தொலைவிலுள்ள பழமானேரியில் ரகுநாத நாயக்கர் முகாமிட்டிருந்தார்!

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 47

க்கராயன் யுத்தம் தொடுக்கவும், அசராமல் `ராமபத்திரன்’ எனும் தனது பட்டத்து யானையின் மீது அமர்ந்தபடி, போருக்குப் புறப்பட்டுவிட்டார். அவரின் மூத்த மகனான ராம பத்ரனும் உடன் சென்றான்.

ரகுநாத நாயக்கர் ஒரு பரம ராம பக்தர். குலசேகர ஆழ்வாரோடு இவரைத் தாராளமாக ஒப்பிடலாம். இவருக்கு எங்கும் ராமன், எதிலும் ராமனே! தன் அரண்மனையிலும் ராமனுக்கு ஓர் ஆலயம் கட்டி, தினமும் ஆறுகால பூஜைகள் செய்வார். ஶ்ரீராம நாம பாராயணம் செய்யாமல் எந்த காரியத்தையும் செய்ததில்லை. உண்ணும்போதும் ஶ்ரீராமார்ப்பணம் என்று சொல்லிவிட்டே முதல் வாய் உணவை உண்பார். அவ்வளவு ராம பக்தி.

இந்தப் போரில் ரகுநாத நாயக்கருக்கு உதவியாக புருஷோத்தமய்யா, நரசப்பா ஆகிய படைத்தளபதிகளும் அங்கதப்பா, அழகப்பா எனும் படை ஒருங்கிணைப்பாளர்களும் துணை நிற்க, கும்பகோணத்தில் அரசனாக முடிசூட்டப்பட்ட ராமதேவராயனும் போரில் கலந்து கொண்டான். ஆங்கிலக் கணக்கின்படி, இந்த யுத்தம் கி.பி. 1616-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்ததாகத் தெரிகிறது. இந்தப் போர் 12 தினங்கள் நடந்தது. நிறைவில் ரகுநாத நாயக்கரே வெற்றி பெற்றார். அதன் பொருட்டு வெற்றித் தூண் ஒன்றை நிறுவி கொண்டாடினார்.

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 47

போர் நடந்தபோது ஜக்கராயனின் படைகள் திருவரங்கத்தில் முகாமிட்டிருந்தன. அதனால் திருவரங்கத்தை யுத்த பயம் சூழ்ந் திருந்தது. ஆலயத்தின் பூஜைகள், பாராயண வழிபாடுகள் எல்லாம் சற்று சலனம் கண்டன. இக்கட்டான இந்தக் காலகட்டத்தில்தான் பட்டர் திருமலாச்சார்யாருக்கும், உத்தம நம்பிக்கும் கருத்து வேற்றுமைகள் தோன்றி பிணக்கு உருவாகியிருந்தன. திருவரங்க ஆலயத்தில் ஶ்ரீராமாநுஜர் வகுத்த நியமப்படி, கருட முத்திரை உள்ளவருக்கே கோயிலும், அதன் சொத்துகளைப் பாதுகாக்கும் உரிமையும், அதிலிருந்து வரும்படிகளை வசூலிக்கும் உரிமையும் இருந்தன. அதன்படி திருமலாச்சார்யாருக்கே அந்த உரிமை இருந்தது. ஆனாலும் அவருக்கு அந்த உரிமை கிடைத்த விதம் விவாதத்திற்கு உரியதாக இருந்தது.

திருமலாச்சார்யாருக்கு ‘அழத்திவாழ்வித்தவன்’ (அழைத்து வாழ்வித்தவன்) என்றொரு சீடர் இருந்தார். அவரிடம் `காணி முத்திரை’ என்ற கருட முத்திரை இருந்தது. அதனால் அவருக்கு ஆலய நிலங்களிலும், கட்டடங்களிலும், தோட்டங்களிலும் கண்காணிப்பும் வருவாயும் இருந்து வந்தன. அவற்றை முறைப்படுத்தி வசூலித்துக் கோயில் பண்டாரத்தில் செலுத்தி தனது கடமையைச் செய்து வந்தார்.

ஒருகட்டத்தில் அவரின் மனைவி பிரசவத் தின்போது ஒரு பெண் குழந்தையைப் பெற்றுப் போட்டுவிட்டு இறந்துபோனாள். அந்த நிலையில் பலவிதமான செலவுகள் உண்டாயிற்று. அதற்காக திருமலாச்சார்யாரி டம் கடன் பெற்றார் அழத்தி வாழ்வித்தவன்.

அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத சூழலில், கடனுக்குப் பதிலாக தனது கருட முத்திரையை திருமலாச்சார்யாரிடம் ஒப்படைத்துவிட்டார். கோயிலின் ஊழிய உரிமையானது, இப்படி கடனுக்கான பரிகாரமாக மாறியதை உத்தம நம்பியால் ஏற்க முடியவில்லை. திருமலாச்சார்யார் அதைப் பெற்றுக்கொண்டது தவறு என்று வாதிட்டார். அதனால் இருவருக்கும் இடையே பிணக்கும், பேதமும் உண்டாயின.

நிறைவில் இந்த விஷயம் மதுரை மன்ன னான முத்து வீரப்ப நாயக்கனிடம் நியாயத்துக்காகச் சென்றது. முத்து வீரப்ப நாயக்கன் திருமலாச்சார்யார் கருட முத்தி ரையை உபயோகிக்கக் கூடாது என்று தடை விதித்தான். அத்துடன் கோயில் நகைகள், ஆபரணங்கள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் பண்டங்களைத் திருச்சிக் கோட்டைக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைக்கவும் கட்டளையிட்டான்.

ஆனால் திருமலாச்சார்யார் அரங்கனின் சொத்து திருவரங்கம் தாண்டக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தனது கருத்துக்கு உறுதி சேர்க்கும் நடவடிக்கையில் இறங்கினார். பல திரிதண்டி சந்நியாசிகளையும் ஶ்ரீவைஷ்ணவ அடியார்களையும் திரட்டி னார். அவர்களிடம் ஶ்ரீராமாநுஜ சத்தியைக் (கொடி) கொடுத்து அழைத்துச் சென்று, திருவரங்கத்து வைணவர்களின் இல்லங்களின் முன் நின்று ‘ஶ்ரீமத்ரங்கம் மஹத்தாம’ என்று கோஷமிடச் செய்தார். இதன் பொருள் `திருவரங்கம் கோயில் ஒப்பற்றது உயர்வானது’ என்பதாகும்.

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 47
Satish Parashar

மதுரை முத்துவீரப்ப நாயக்கர் திருவரங்கச் சொத்தைப் பாதுகாப்பதற்காக செய்த முயற்சி, இப்படியொரு கோஷத்தை உருவாக்கி யிருந்த நிலையில்தான்... ஜக்கராயனுடன் போரிட வந்திருந்த ரகுநாத நாயக்கர் திருவரங் கத்துக்கு அரங்கனை தரிசிக்க வந்தார்.

அவரின் அடப்பக்காரனும் (காவல் காரன் - சேவகன்) உடன் வந்தான். அப்போது பூரணகும்பம் கொடுத்து அவரை வரவேற்று தரிசனம் செய்துவைத்த திருமலாச்சார்யார், தனது கோரிக்கையைக் கூறி, தனக்குத் துணை நிற்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

இங்ஙனம் அவர் முத்துவீரப்ப நாயக்கரின் கட்டளைக்குக் கீழ்ப் படியாமல் ரகுநாத நாயக்கருடன் தனி வழியில் செல்வது, உத்தம நம்பிக்குப் பிடிக்கவில்லை. `என்ன செய்தால் திருமலாச்சார்யாரை தடுத்து நிறுத்தலாம்’ என்று யோசித்தவர், ஒரு காரியம் செய்தார்.

திருமலாச்சார்யார் மதுரை மன்னனான முத்து வீரப்ப நாயக்கர் பற்றி கோள் சொல்லி ரகுநாத நாயக்கருக்கு ஓலை எழுதியதாகவும், தாம் அதை கண்டுபிடித்து விட்டதாகவும் கூறி, போலியாக ஓர் ஓலையை தயார் செய்து முத்துவீரப்ப நாயக்கருக்கு அனுப்பினார்.

இதனால் மதுரை மன்னன் திருமலாச்சார் யார் மீது பெரும் கோபம் கொண்டான். திருமலாச்சார்யாருக்கு சத்திவாய் நாயக்கன் என்றொரு சிஷ்யனும் உண்டு. அவனை அழைத்து திருமலாச்சார்யாரை கைது செய்து அழைத்து வர பணித்தான். சத்திவாய் நாயக்கனும் தந்திரமாக யானை மேல் அமர்ந்து திருமலாச்சார்யார் இல்லத்துக்குச் சென்றான். அவரை யானையின்மீது அமர்த்தி அழகு பார்க்க விரும்புவதாகக் கூறினான். அவனும் யானை மீது ஏறி அமர்ந்துகொள்ள, அப்படியே முத்துவீரப்ப நாயக்கனிடம் கொண்டுசென்று ஒப்படைத்தான்.

முத்துவீரப்ப நாயக்கன் திருமலாச்சார் யாருக்கு ஆறு மாத காலம் திருச்சிராப் பள்ளி கோட்டையில் சிறை தண்டனை விதித்தான். அதனால் திருமலாச்சார்யார் குடும்பமே சிதறிப் போனது. அவர் வகித்த பொறுப்புகள், தாத்தாச்சார்யார் வம்சத்துக்குப் போனது.

ஒரு கோயில் வரலாற்றில் திருச்சேவை புரிபவர்களின் நடுவில் அரசாங்கம் மூக்கை நுழைத்தால், அது எப்படிப்பட்ட விளைவு களை உண்டாக்கும் என்பதற்கு இப்படியெல் லாம் சாட்சியங்கள் காணக் கிடைக்கின்றன.

சிறையில் வருந்திய திருமலாச்சார்யார் அரங்கனை எண்ணிப் பிரார்த்தித்தார். `உன் சொத்து உன்னை விட்டுப் போகக்கூடாது என்று நான் எண்ணியது தவறா. என்னை நீ கைவிடலாமா’ என்று கண்ணீர் சிந்தினார். அரங்கன் அருளால் திருமலாச்சார்யாரின் சீடர்களில் ஒருவனான துறையூர் ரெட்டி என்பவன் மூலம் விமோசனம் கிடைத்தது.

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 47

துறையூர் ரெட்டி முத்து வீரப்ப நாயக் கனைச் சந்தித்தான். 20 ஆயிரம் பொன்னை திருமலாச்சார்யாருக்கான தண்டனைக்குப் பதிலாக அபராதமாய் செலுத்தினான். திருமலாச்சார்யாரையும் அவரின் குடும்பத்தாரையும் விடுவிக்கச் செய்தான்.

அதன் பிறகு, திருமலாச்சாராயாரும் அவர் குடும்பத்தாரும் துறையூர் ரெட்டியின் உதவியோடு துறையூரில் வாழத் தலைப் பட்டனர். காலம் உருண்டதில் மதுரை மன்னனான முத்து வீரப்ப நாயக்கன் மரணித்தான். கிபி 1623-ல் திருமலை சௌரி என்பவன் மதுரை நாயக்க வம்சத்தின் அடுத்த அரசனாக முடிச்சூடினான். இவன் காலம் 1623 முதல் 1659 வரை.

அரங்கன் அருளால் திருமலாச்சார்யாரை நன்கு புரிந்து கொண்டான் திருமலை சௌரி. திருவரங்க ஆலயத்தில் அவருக்குப் பழைய பெருமைகள் திரும்ப கிடைக்கவும் ஆணை யிட்டான்.

காலத்தால் உத்தம நம்பியிடமும் மாற்றங் கள் ஏற்பட்டன. அவரும் இதை ஆதரித்து திருமலாச்சார்யாரிடம் தன் தொடர்பை மீண்டும் உருவாக்கிக் கொண்டு, அவரை மதிக்கவும் செய்தார். இதனால் பல நல்ல விளைவுகளும் ஏற்பட்டன. கோயிலுக்குள் பெரியவர், சிறியவர் என்ற பேதம் மறைந்தது.

பிறரை முன்னிறுத்தி தன்னைப் பின்னுறுத்திக்கொள்வதே நல்லதொரு ஶ்ரீவைஷ்ணவனின் உயர்ந்த லட்சணமாகும். தான் பட்டினி கிடந்தாவது பிறர் பசி ஆற்று வதும், பக்தர்கள் வடிவில் அந்த அரங்கனே நடமாடுவதாகக் கருதுவதுமே மேலான ஞானமாகும்.

ஆலய ஆகமங்கள் வரையிலும் அவற்றின் வழிப்படியே ஆண்டி முதல் அரசன் வரை செயல்பட வேண்டும். அரசனுக்காக விதி களைப் புறந்தள்ளுவது பாவமாகும்.

இப்படிப் பலவித தெளிவுகள் ஆலயமட்டத் தில் எல்லோரிடமும் ஏற்பட்டன. இதனால் ஆலய வழிபாடு அமைதி மிக்கதாய் மனதிற்கு இதமானதாய் ஆயிற்று.

சோதனைகளும் வேதனைகளும் சில நிரந்தர சாதனைகளுக்குக் காரணங்களா கின்றன. இதுவே கலியின் குணம். ஆக, இதற் குப் பிறகும் சில நடக்கக் கூடாத சம்பவங்கள் திருவரங்க ஆலயத்தை மையமிட்டு நடக்கவே செய்தன.

- தொடரும்...

ரங்க ராஜ்ஜியம் - இரண்டாம் பாகம் - 47

வேம்புக் கம்பத்துக்கு அபிஷேகம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், ஊரின் மையப் பகுதியில் கோயில் கொண்டிருக்கிறாள் அருள்மிகு நித்யசுமங்கலி மாரியம்மன்.

முன்பு இந்தப் பகுதி விளைச்சல் பூமியாக இருந்ததாம்! விவசாயி ஒருவர் நிலத்தை உழுத போது, அவரின் கலப்பையில் பீடம் ஒன்று தட்டுப்பட்டது. அதை குடிசை ஒன்றில் வைத்து, அம்மனாகவே கருதி வழிபட்டனர் மக்கள். பின்னர், மாரியம்மனின் திருவுருவ விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபடலாயினர்.

பிற்காலத்தில்... இந்தப் பகுதியை ஆட்சிசெய்த சிற்றரசன் நோய்வாய்ப்பட்டபோது, ராணி அம்மனிடம் வேண்டிக்கொள்ள மன்னன் குணம் பெற்றான். இங்ஙனம் ராணியின் தாலி நிலைக்க அருள் செய்ததால், நித்ய சுமங்கலி மாரியம்மன் என்று பெயர் கொண்டாளாம் இந்த அம்பிகை. அம்மன் சந்நிதிக்கு எதிரேயுள்ளது வேம்புக் கம்பம்.

உடல் நலக் குறைவு, திடீர் விபத்தில் படுத்த படுக்கையாகிவிட்ட நிலை... என கணவருக்கு ஏதேனும் பிரச்னை எனில், பெண்கள் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுகின்றனர்.

கோயில் கிணற்றிலிருந்து குடத்தில் தண்ணீரை எடுத்து வந்து, வேம்புக்கம்பத்துக்கு அபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமம் வைத்து பிரார்த்திக்கின்றனர். முடிந்தால் கம்பத்துக்கு பால் அபிஷேகம் செய்து, மஞ்சள்- குங்குமம் இட்டு, வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்ள கணவர் விரைவில் நலம் பெறுவார் என்பது நம்பிக்கை!

- கே.ராஜு, சத்தியமங்கலம்