Published:Updated:

ஆந்திர அரசியலில் நடந்த மாற்றம்! - திருப்பதியில் மீண்டும் ரமண தீட்சிதர்!#Tirupathi

முப்பது வருடங்களாகக் கோயிலில் பணியாற்றிய ரமண தீட்சிதருக்குப் பணி ஓய்வைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கியது.

திருப்பதி
திருப்பதி

ஆண்டவன் இருக்கும் இடம்கூட அரசியல்களுக்குத் தப்பிப் பிழைப்பதில்லைபோல. இதற்கு சமீபத்திய உதாரணம் திருமலை திருப்பதி. வேங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்ய நாளொன்றுக்கு சராசரியாக 60 ஆயிரம் பக்தர்கள் வருகிறார்கள். இதுவே வார இறுதியென்றால் கிட்டத்தட்ட 80 ஆயிரம் பக்தர்கள் வேங்கடவன் அருள்தேடி வருகின்றனர். இப்படிப்பட்ட ஆன்மிகத் தலத்தில் தலைமை அர்ச்சகர் தொடர்பான சர்ச்சையொன்று ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.

Tirupaty
Tirupaty

ஶ்ரீராமாநுஜர் காலம் தொடங்கி இன்றுவரை, திருப்பதியில் வைகாநஸ ஆகம முறைப்படி பூஜைகளும் ஆரத்திகளும் நடைபெற்று வருகின்றன. காலகாலமாக `கொல்லப்பள்ளி குடும்பம்’, `பைடப்பள்ளி குடும்பம்’, `பெத்தண்டி குடும்பம்’, `திருப்பதி அம்மா குடும்பம்’ என நான்கு குடும்பத்தினர் மட்டும்தான் இங்குள்ள மூலவருக்கு அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்து வருகின்றனர். ஆந்திர அரசுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கும் இடையில் பெரும்பாலும் மோதல் ஏற்படுவதில்லை. தேவஸ்தான அர்ச்சகர்களுக்கிடையேயும் பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் இருந்ததில்லை.

ஆனால், சந்திரபாபு நாயுடு அரசு ஆட்சிப் பொறுப்பிலிருந்தபோது அர்ச்சகர்களுக்குப் பணி ஓய்வு வயதை நிர்ணயம் செய்தபோதுதான் பிரச்னை எழுந்தது. அதாவது, அரசு நிர்ணயித்த பணி ஓய்வு வயதின்படி, திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை அர்ச்சகரான ரமண தீட்சிதருக்குப் பணி ஓய்வு அளிக்கப்பட்டது.

Ramana Dixithar
Ramana Dixithar

அவர் உடனே, ``ஆகம விதிகளுக்கு மாறாக திருப்பதி தேவஸ்தானம் இயங்குகிறது. கோயில் கருவறையை இரவு 10 மணிக்கு மூடிவிட்டு விடியற்காலை 2 மணிக்குத் திறக்க வேண்டும் என்பதுதான் விதி. அதையும் இவர்கள் மீறிவிட்டனர். கோயில் நகைகள் பல கொள்ளை போய்விட்டன. அவற்றில் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக்கல் ஒன்று வெளிநாட்டில் ஏலம் விடப்பட்டிருக்கிறது'' என்பன உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது எழுப்பினார்.

இதன்பிறகு, முப்பது வருடங்களாகக் கோயிலில் பணியாற்றிய ரமண தீட்சிதருக்குப் பணி ஓய்வைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கியது. தவிர, மேல்திருப்பதி ஶ்ரீவாரி ஆலயத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்த அவரின் இரண்டு மகன்களையும் கீழ்த்திருப்பதியிலிருக்கும் கோவிந்தராஜப்பெருமாள் கோயிலுக்கு மாற்றியது. இந்தச் சூழ்நிலையில் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு புதிதாகப் பொறுப்பேற்றது. உடனே, சந்திரபாபு நாயுடு அரசு ஓய்வு கொடுத்து அனுப்பிய ரமண தீட்சிதருக்கு மீண்டும் பணியை வழங்கியுள்ளனர்.

Jaganmohan Reddy
Jaganmohan Reddy

இந்தமுறை இளம் அர்ச்சகர்களுக்கு திருமலை திருப்பதி கோயிலின் ஆகம விதிகளை போதிக்கும் பணி, ரமண தீட்சிதருக்கு வழங்கப்பட்டுள்ளது. தவிர, அவரின் இரண்டு மகன்களும் ஶ்ரீவாரி ஆலயத்திலேயே சேவை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அறிவிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டிருக்கிறது.