சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

'வாழிரவி சுதன் வலக்கையால் எடுத்துக்

கொடுக்கும் முன்னே மனம் வேறாம் என்று

ஏழை மறையோற்கு இடக் கையாலே எண்

ணெய்க்கிண்ணம் ஈந்தான் அன்றோ?'

உதவலாம் வாருங்கள்


- கர்ணனின் கொடைச் சிறப்பை விளக்கும் பாடல் இது என எண்ணுகிறேன். மேற்காணும் வரிகளை புத்தகம் ஒன்றில் மேற்கோள் தகவலாகப் படித்தேன். இது எந்த நூலில் உள்ளது. விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங்களேன்.

- கே.அனுபமா, செங்கல்பட்டு

எனக்குக் குடந்தை சாரங்கபாணி தியான ஸ்லோகம் மற்றும் சாரங்கபாணி ஸ்தோத்திரம் பொருள் விளக்கத் துடன் தேவைப்படுகிறது. இந்த ஸ்லோகங்கள் அடங்கிய நூல் ஏதேனும் உள்ளதா, எங்கு கிடைக்கும்?

- என்.முருகன், தென்காசி

வேங்கடேச சுப்ரபாதம் போன்று ராம சுப்ரபாத மும் உண்டு. `ப்ராத: ஸ்மராமி ரகுநாதமுகார விந்தம்’ என்று தொடங்கும். இதைக் காலையில் படித்தால் மிகுந்த நன்மை உண்டாகும் என்று என் பாட்டி சொல் வார். எனக்குச் சில வரிகளே நினைவில் உள்ளன. முழுப் பாடலும் தமிழ் விளக்கவுரை யுடன் கிடைக்குமா?

- தன்விஹா ராஜா, சென்னை-103

ராகவேந்திரர் தியானத்தில் இருந்தபோது ஆஞ்ச நேயர் ஸ்வாமி அவருக்கு பஞ்சமுகத்துடன் காட்சி கொடுத்ததாகத் தகவல் உண்டு. இந்த அருள் சம்பவம் நிகழ்ந்த இடம் எங்குள்ளது?

- கி.வெங்கடேசன், திருச்சி-3

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் திருவில்வ மலை எனும் இடத்தில் வருடத்துக்கு ஒருமுறை மட்டும் குகைக்குள் தவழும் வழிபாடு நிகழுமாம். யாத்திரை சென்று வந்த நண்பர் ஒருவர் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். அந்தக் குகையைப் புனர்ஜனனி குகை என்று சொல்கிறார்களாம். இந்த வழிபாடு எப்போது நிகழும், இதற்கான தாத்பரியம் என்ன என்பது அந்த நண்பருக்குத் தெரியவில்லை. இதுகுறித்து விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிர்ந்தால், நானும் நண்பரும் பயனடைவோம்.

-எல்.பரணிதரன், மதுரை-3

வீரபத்திரர் தரிசனம்!
வீரபத்திரர் தரிசனம்!

சக்திவிகடன் 10.1.23 தேதியிட்ட இதழில், `அனுமந்தபுரம் வீரபத்திர சுவாமி திருக்கோயில் பிரசித்திபெற்றது. இதேபோல், சென்னைக்கு அருகில் வீரபத்திரருக்கான தனிக் கோயில் எங்குள்ளது? வீரபத்திரர் வழிபாட்டு விவரங்கள் அடங்கிய புத்தகமும் தேவை’ என்று தேனி வாசகர் வீ.பாலமுருகன் கேட்டிருந்தார். அவருக்கு வீரபத்திரர் குறித்த கீழ்க்காணும் விவரங்களை, சென்னை - திருவான்மியூர் வாசகர் என்.கணேசன் அளித்துள்ளார்:

`வீரபத்திரர்! ‘வீரம்’ என்றால் ‘அழகு’ என்று பொருள். ‘பத்திரம்’ என்றால் காப்பவன் என்று பொருள். இவருக்கு, வீரேசுவரன் என்றும் பெயர் உண்டு. இதற்கு, ‘வீரத்தால் மேம்பட்டவன்’ என்று பொருள். வீரத்தை ஐஸ்வரியமாகக் கொண்டவர் என்றும் கூறலாம். இவரின் சக்தி, ‘சத்ரு வித்வேஷ நாசினி’ என அழைக்கப்பெறுகிறாள்.

வீரபத்திரரது கோபத்தைத் தணித்து, சாந்தப்படுத்தும் விதம், அவருக்கு வெண்ணெய்க் காப்பு அணிவிக்கின்றனர். வெண்ணெய்க் காப்பு அணிவிப்பதால், வீரபத்திரர் நமது துன்பங்களைக் களைவார் என்பது நம்பிக்கை. வீரபத்திரருக்கு பிரியமானது, தும்பைப்பூ மாலை.

வீரபத்திரர்-பத்ரகாளி இருவருக்கும் தும்பைப்பூ மாலைகளை அணிவித்து வழிபட்டால் சத்ரு பயம் அகன்று நிம்மதியான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை. ‘வீரபத்திரரை பிரதிஷ்டை செய்து வழிபடுவதால் தீமைகள் அகலும்; மக்கள் துன்பம் நீங்கி, மகிழ்வுடன் வாழ்வர்!’ என்கின்றன ஆகமங்கள்.

வீரபத்திர விரதம் என்பது, செவ்வாய்க் கிழமை அன்று கடைப் பிடிக்கப்படுவது. இந்த நாளில், சிவப்பு நிறப் பூக்கள் மற்றும் செஞ்சந்தனத்தால் வீரபத்திரரை பூஜிப்பது விசேஷம். ஐப்பசி மாதம் வளர்பிறை அஷ்டமி நாளில், ‘மகா அஷ்டமி விரதம்’ இருப்பர். இது, வீரபத்திர மூர்த்தியையும் பத்ரகாளியையும் குறித்து இருக்கும் நோன்பு.

காரணாகமம் மற்றும் தத்வநிதி ஆகிய நூல்கள் வீரபத்திரரின் திருவடிவத்தை விவரிக்கின்றன. திருமுறைகளில் வீரபத்திர மூர்த்தியின் பராக்கிரமங்கள் போற்றப்படுகின்றன. வீரபத்திரர் வடிவங்களில் அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், ஜல வீரபத்திரர், பவன வீரபத்திரர், ரணவீரபத்திரர், உக்ர வீரபத்திரர், உத்தண்ட வீரபத்திரர் என பல வடிவங்கள் உண்டு.

திருவண்ணாமலை, பெரும்பேறுகண்டிகை, திருக்கடவூர், செம்பிய மங்கலம், கும்பகோணம்- பெரிய மடம், கும்பகோணத்துக்கு அருகே தாராசுரம் ஆகிய தலங்களில் உள்ள வீரபத்திரர் ஆலயங்கள் குறிப்பிடத் தக்கவை.

செங்கல்பட்டு அருகில் அனுமந்தபுரத்தில் அமைந்துள்ள வீரபத்திரர் திருக்கோயில் பிரசித்திபெற்றது. அதேபோல், சென்னை மயிலாப்பூரிலும் வீரபத்திரர் ஆலயம் உண்டு. இங்கே பிரசித்தி பெற்ற முண்டகக்கண்ணி அம்மன் கோயில் அருகில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.