Published:Updated:

குருசாமியைக் கேளுங்கள்... சபரிமலைக்கு மாலை போட்டவர்கள் பிற மலைக்கோயில்களுக்குச் செல்லலாமா?

குருசாமி
குருசாமி

குருசாமியைக் கேளுங்கள்... விரதமுறைகள் குறித்த பக்தர்களின் சந்தேகங்களுக்கான பதில்கள்!

ஒவ்வோர் ஆண்டும் சபரிமலைக்கு மாலையிட்டு விரதமிருந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. 41 நாள்கள் முறையாக விரதமிருந்து இருமுடிகட்டி சபரிமலை செல்பவர்கள் தங்கள் வாழ்வில் அடையும் நன்மைகள் அளவிட முடியாதவை. அப்படிப்பட்ட அற்புதமான அனுபவமாக அமையும் இந்த விரதமுறை குறித்த பலவிதமான சந்தேகங்கள் சாமிகளிடம் காணப்படுகின்றன.

குருசாமி
குருசாமி

விகடன் வாசகர்களுக்காக, குருசாமியைக் கேளுங்கள் என்ற பகுதியை உருவாக்கி அதில் உங்கள் விரத முறைகள் குறித்த சந்தேகங்களைக் கேளுங்கள் என்று அறிவித்திருந்தோம். நிறைய ஐயப்ப பக்தர்கள் தங்களின் சந்தேகங்களை முன்வைத்திருக்கின்றனர். இந்தக் கேள்விகளுக்கான பதில்களை மூத்த குருசாமி அரவிந்த் ஸுப்ரமண்யம் அளிக்கிறார்.

கேள்வி : ஐயப்பனுக்கு மாலைபோட்டிருக்கும் சாமிமார்கள் பிற மலைக்கோயிலுக்குச் செல்லலாமா? ஐயப்பனுக்கு மாலைபோட்ட பின்பு பிற மலைக்கோயிலுக்குச் செல்லக்கூடாது என்று சொல்கிறார்களே அதுசரியா?

மூத்த குருசாமி அரவிந்த் ஸுப்ரமண்யம்
மூத்த குருசாமி அரவிந்த் ஸுப்ரமண்யம்

சபரிமலைக்கு மாலைபோட்டிருக்கக்கூடிய காலகட்டத்தில் பிற மலைக்கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய எந்தத் தடையும் இல்லை. அதேவேளையில் சபரிமலை ஐயப்பன் விரதத்துக்கு பங்கம் இல்லாததாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக பழநி முருகன் கோயில், திருப்பதி வேங்கடாசலபதி கோயில் ஆகியவற்றுக்குச் செல்லலாம். அங்கு செய்யப்படும் வழிபாடுகளிலும் கலந்துகொள்ளலாம். காவடி எடுக்கலாம், கல்யாண உற்சவம் செய்யலாம் தவறில்லை. ஆனால், மொட்டை போடுவதுபோன்ற வேண்டுதல்களைச் செய்யக்கூடாது. நம் ஐயப்பனுக்கு விரதம் இருக்கும்போது, முடிவெட்டாமல் ஷேவ் செய்யாமல் தீட்சை விடுவது வழக்கம். அதைக் குலைக்கும் வகையிலான காரியங்களில் ஈடுபடக் கூடாதே தவிர மலைக்கோயில்களுக்குப் போவதிலோ வணங்குவதிலோ எந்தப்பிழையும் இல்லை. ஆனால், இருமுடி கட்டிய பின்பு பிற மலைக்கோயில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகள் செய்வதென்பது கூடாது.

கேள்வி: ஐயா என் மகன் முதல் முறையாகக் கன்னிசாமியாக மாலை அனிந்துள்ளார். நான் ஆண்டுதோறும் என் தாயாருக்குத் திதிகொடுப்பது வழக்கம். இப்போது என் மகன் மாலை அணிந்துள்ளதால் இந்த வருடம் திதி கொடுக்கலாமா, ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளனவா?

பதில்: சந்தேகமேயில்லாமல் திதி கொடுக்கத்தான் வேண்டும். தெய்வ காரியங்கள் வேறு, முன்னோர்களுக்குச் செய்யும் கடமைகள் வேறு. சொல்லப்போனால், சபரிமலை யாத்திரையின்போது பம்பையில் திதி, தர்ப்பணம் பண்ணுகிற வழக்கங்கள் எல்லாம்கூட உண்டு. தெய்வ காரியமா, பித்ரு காரியமா என்ற கேள்வி வரும்போது பித்ரு காரியங்களுக்கே நம் முன்னோர்கள் முன்னுரிமை கொடுத்துள்ளனர். அந்த அளவுக்கு அது முக்கியமானது. உங்கள் விஷயத்தில் நீங்கள் கட்டாயம் திதி கொடுக்கலாம். தவறில்லை. சபரிமலை ஐயப்பன் உங்களுக்குத் துணையிருப்பான். சுவாமியே சரணம் ஐயப்பா!

குருசாமியைக் கேளுங்கள்...! வீட்டில் குழந்தை பிறந்து எத்தனை நாள்கள் கழித்து சபரிமலைக்கு மாலை போடலாம்?

கேள்வி: என் மகளுக்கு 10 வயது முடிந்து 3 மாதங்கள் ஆகின்றன. அவளது பிறந்த நாள் 15.8.2009. அவள் சபரிமலை செல்லலாமா?

பதில்: சுவாமி சரணம். இது ஒரு டெக்னிகலான கேள்வி. உங்கள் மகளுக்கு 10 வயது முடிந்துவிட்டது. 2019 ஆகஸ்ட் 15-ல் 10 வயது பூர்த்தியாகிவிட்டது. அதனால் சபரிமலையில் அனுமதிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. தற்போது அங்கும் 10 வயதிலிருந்து 50 வயதுவரை இருக்கும் பெண்கள் வர வேண்டாம் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். பாக்கி அமைப்புகளும் இதை வலியுறுத்துகின்றனர். கண்டிப்பாக இப்போது அடையாள அட்டை கேட்பார்கள். அதனால் அங்கு சென்ற பின்பு குழந்தையை அனுமதிக்கவில்லை என்றால் மனசு கஷ்டமாக இருக்கும். எனவே, உள்ளூரில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது என்று தோன்றுகிறது. ஐயப்பனின் அனுக்கிரகம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.

குருசாமியைக் கேளுங்கள்... சபரிமலை விரத மகிமைகளும் பக்தர்களின் கேள்விக்கான பதிலும்!
சபரிமலைக்குச் செல்வதற்கு இரண்டுபேரின் சம்மதம் வேண்டும். ஒன்று குடும்பத்தினருடையது. மற்றொன்று குருசாமியுடையது.
மூத்த குருசாமி அரவிந்த் ஸுப்ரமண்யம்

கேள்வி: என் தந்தையின் ஒன்றுவிட்ட தம்பி ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் ஒருவருடத்துக்கு மலைக்கோயில்களுக்குச் செல்லக் கூடாது என்று சொல்கிறார்கள். நான் மாலையிடக் கூடாதா?

பதில்: கேள்வி கேட்பவர், கர்மா செய்தவரா என்பது முக்கியமான கேள்வி. ரத்த பந்தத்தில் இருப்பவர்கள் இறந்தால் ஒராண்டுக்கு மலைக்கோயில்களுக்குச் செல்லக் கூடாது என்பது சில குடும்பங்களில் வழக்கம். தகப்பனாரின் ஒன்றுவிட்ட தம்பி என்று சொல்கிறார். கேள்விகேட்டவருக்குக் கர்மா காரியங்களில் பங்கு உண்டு என்றால் அவர் மலைக்கோயிலுக்குச் செல்லக் கூடாது என்று அவர்கள் குடும்ப வழக்கத்தில் இருந்தால் அவர் கண்டிப்பாகப் போகக் கூடாது. தந்தையின் ஒன்றுவிட்ட தம்பி என்கிறபோது அவர் நேரடி சித்தப்பாகூட இல்லை. எனவே, கண்டிப்பாக ஒராண்டு விதியைப் பின்பற்ற வேண்டுமா என்று தெரியவில்லை.

குருசாமி
குருசாமி

இதேபோன்ற கேள்வியைக் கீர்த்திவாசன் என்ற வாசகரும் கேட்டிருக்கிறார். அவர் தாத்தாவின் சித்தப்பா பையன் அதாவது சின்ன தாத்தா இறந்துவிட்டார், மாலை போடலாமா என்று கேட்டிருக்கிறார். இவருக்கும் அதே பதில்தான். கர்மா காரியங்கள் செய்பவர் என்றால் போகக் கூடாது.

இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் குடும்பம் சம்பந்தப்பட்டது. குடும்பத்துக்குக் குடும்பம் மாறுபடும். பொதுவாக சபரிமலைக்குச் செல்வதற்கு இரண்டுபேரின் சம்மதம் வேண்டும். ஒன்று குடும்பத்தினருடையது. மற்றொன்று குருசாமியுடையது. இந்த இருவரில் ஒருவர் ஆட்சேபித்தாலும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.

கேள்வி: ஐயா நான் 1994-ம் ஆண்டு சபரிமலைக்குப் பெரிய பாதை வழியாகச் சென்றேன். அவ்வாறு மற்றொருமுறையும் சபரிமலை போயிருக்கிறேன். அதன்பின் என்னால் மலைக்குப் போக முடியவில்லை. 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏதாவது தடங்கல் வந்துகொண்டேயிருக்கிறது. என்ன காரணமாகயிருக்கும்? எனக்கு இன்னும் ஒருமுறையாவது சபரிமலைக்குச் சென்று ஐயனை தரிசிக்க ஆர்வமாயிருக்கிறேன். இதற்கு என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பக்தரின் கேள்வி கொஞ்சம் வித்தியாசமானது. பொதுவாக, சபரிமலைக்குச் செல்வதற்கு முதலில் பகவானிடமிருந்து நமக்கு அழைப்பு வர வேண்டும். பகவான் நம்மை அழைக்க வேண்டும் என்றால் நாம் அதற்காக அவனிடம் மன்றாட வேண்டும். அதற்கான முயற்சியையும் நாம்தான் மேற்கொள்ள வேண்டும். தான் பாதி தெய்வம் பாதி என்பது வழக்கு. நாம் தொடர்ந்து இறைவனிடம் ஒவ்வோர் ஆண்டும் சபரிமலைக்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும். அதற்காகவே நாம் சரண கோஷம்போடும்போதும் மாலையைக் கழற்றும்போதும் விசேஷமாக மீண்டும் மீண்டும் வரும் பாக்கியம் தரணும் என்பதாக வேண்டுவது உண்டு.

அதனால் நீங்கள் தொடர்ந்து ஐயப்பனிடம் முறையிடுங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் அருகிலிருக்கும் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வேண்டுதல் செய்து வர நிச்சயம் உரிய பதில் கிடைக்கும். ஐயப்பன் அருள்செய்வார்.

இதுபோன்ற சந்தேகங்கள் உங்களுக்கும் இருந்தால், கீழே உள்ள படிவத்தில் கேளுங்கள். ஆன்மிகப் பெரியவர்களிடம் கேட்டு உங்களுக்கான பதிலை பெற்றுத்தருகிறோம்.

அடுத்த கட்டுரைக்கு