Published:Updated:

வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில்: பாலாலயம் செய்து 10 ஆண்டுகளுக்குப்பின் தொடங்கிய திருப்பணி!

வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் பாலாலயம்

அட்ட வீரட்டத் தலங்களில் 6-வது தலமான வழுவூர் வீரட்டேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகளுடன் திருப்பணி தொடங்கியது.

வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில்: பாலாலயம் செய்து 10 ஆண்டுகளுக்குப்பின் தொடங்கிய திருப்பணி!

அட்ட வீரட்டத் தலங்களில் 6-வது தலமான வழுவூர் வீரட்டேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகளுடன் திருப்பணி தொடங்கியது.

Published:Updated:
வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் பாலாலயம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் கிராமத்தில் இந்து - சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள இளங்கிளைநாயகி அம்பாள் சமேத வீரட்டேஸ்வரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெற முடியும் என்பது சிறப்பாகும். இது 48 ஆயிரம் மகரிஷிகளுக்கு சுவாமி அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தை அளித்த தலமாகும். ஞானசபையில் சுவாமி வீரநடனம் புரிந்ததால் வீரட்டேஸ்வரர் என்ற பெயருடன் அருள்பாலிக்கும் சிவபெருமான், யானையை சம்ஹாரம் செய்ததால் கஜசம்ஹார மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு கஜசம்காரமூர்த்திக்குப் பின்புறம் தெய்விக யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த யந்திரத்தை வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். 

அமாவாசைதோறும் சுவாமி சந்ததியிலுள்ள தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார். அந்நாளில் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவோர்க்குப் புத்திர தோஷம் நீங்கி நன்மக்கட்பேறு பெறுவதாக ஐதிகம்.

வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் பாலாலயம்
வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் பாலாலயம்

இத்தகைய சிறப்பு பெற்ற வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கடந்த 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டு பாலாலயம் செய்யப்பட்டது. ஆனால் திருப்பணிகள் தொடங்காமல் இருந்த நிலையில் நேற்று (24.01.2022) தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் முன்னிலையில் கோபூஜை, மூல மந்திரம், அஸ்திர ஜபம், ஹோமம் மற்றும் பூமி பூஜைகள் நடைபெற்று, திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டன.

முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. குருமூர்த்தி சிவாச்சார்யர் தலைமையிலான 12 சிவாச்சார்யர்கள்  பூஜைகளைச் செய்து வைத்தனர்.  இந்நிகழ்ச்சியில், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. நிவேதா முருகன், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், ஆடிட்டர் குரு.சம்பத்குமார் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு திருப்பணிக்கு அடிக்கல் நாட்டினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் கயல்விழி மற்றும் கோயில் ஊழியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். உள்ளூர் மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism