Published:Updated:

விருட்ச வடிவில் பிருங்கி முனிவர்!

திருவாமாத்தூர்
பிரீமியம் ஸ்டோரி
திருவாமாத்தூர்

திருவாமாத்தூர் அற்புதங்கள்

விருட்ச வடிவில் பிருங்கி முனிவர்!

திருவாமாத்தூர் அற்புதங்கள்

Published:Updated:
திருவாமாத்தூர்
பிரீமியம் ஸ்டோரி
திருவாமாத்தூர்

பசுக்கள் தவம் செய்து கொம்புகளைப் பெற்ற தலம். ராமபிரான் போற்றிய க்ஷேத்திரம். மூவர் பெருமக்களால் பாடல்பெற்ற ஆலயம். நீதி வழங்கும் வட்டப்பாறை திகழும் ஊர். பிருங்கி முனிவரே ஸ்தல விருட்சமாகத் திகழும் பதி. இந்த அற்புதங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது திருவாமாத்தூர்.

விருட்ச வடிவில் பிருங்கி முனிவர்!

விழுப்புரத்திலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது திருவாமாத்தூர். இறைவனின் திருநாமம் அருள்மிகு அபிராமேஸ்வரர். அம்பாளுக்கு அருள்மிகு முத்தாம்பிகை என்று திருப்பெயர்.

ஆதியில் கொம்புகள் இல்லாததால் கொடிய விலங்குகளின் கடும் துன்புறுத்தலுக்கு ஆளாகினவாம் பசுக்கள். ஆகவே, தங்களுக்கும் கொம்பு வேண்டும் என்று விரும்பின. நந்தி மற்றும் காமதேனுவின் வழிகாட்டலின்படி, வன்னிக் காடாகத் திகழ்ந்த இந்தப் பகுதிக்கு வந்து தவம் இருந்து சிவனருளால் பசுக்கள் கொம்புகள் பெற்றனவாம்.

இங்ஙனம் பசுக்கள் அருள்பெற்ற க்ஷேத்திரம் ஆதலால் இவ்வூருக்கு திருஆமாத்தூர் (திரு+ஆ+மாத்தூர்) எனும் பெயர் வாய்த்தது என்கின்றன புராணங்கள்.

விருட்ச வடிவில் பிருங்கி முனிவர்!

ஸ்தல விருட்சமாகி நின்ற பிருங்கி முனிவர்!

ந்தத் தலத்தில் திகழும் ஸ்தல விருட்சம் பிருங்கி முனிவரின் அம்சம்; அந்த முனிவரே இங்கு வன்னி மரமாக அருள்பாலிக்கிறார் என்கின்றன ஞான நூல்கள். காரணம்?!

ஒருகாலத்தில் இங்குள்ள வன்னிக்காட்டில் பிருங்கி முனிவர் சிவபூஜை செய்து வந்தார். இவர் சிவபிரானை மட்டுமே வணங்கும் வழக்கமுடையவர். ஒருநாள் தரிசன வேளையில் அம்மையும் இறைவனுடன் இருக்க, முனிவரோ வண்டு உருவமெடுத்து சிவபிரானை மட்டும் வலம் வந்து வணங்கினாராம். இதனால் கோபம் கொண்டாள் சக்தி. அவளின் கோபாக்னியில் சாம்பலானாலும், அந்தச் சாம்பலிலிருந்து சிவனருளால் எழுந்து வந்தாராம் பிருங்கி முனிவர். ஆயினும் தன் ஆற்றலை இழந்து தவித்தார் முனிவர். ஆகவே அவருக்கு சிவபெருமான் ஊன்றுகோல் கொடுத்து அருளினார். அதனால் இறைவன் மீதும் கோபம் கொண்ட அன்னை, தனித்துச் சென்றாளாம்.

இதனால் பிருங்கி முனிவர் மனம் வருந்தினார். அன்றிலிருந்து அன்னையையும் வழிபடத் தொடங்கினார். அம்பிகை மகிழ்ந்தாள். இக்கோயிலில் ஸ்தல விருட்சமாக இருக்கும்படி பிருங்கி முனிவருக்கு வரம் வழங்கினாள்.

பிருங்கி முனிவருக்கு மூன்று கால்கள் என்பர். அதற்கேற்ப, இக்கோயிலின் வன்னிமரமும் மூன்று பிரிவுகளுடன் திகழ்ந்ததாம். தற்போது மரத்தின் சில பாகங்கள் மட்டுமே காணக் கிடைக்கின்றன. பிருங்கி தவமிருந்த இடம், முத்தாம்பிகை சந்நிதி அருகே இன்றும் காணப்படுகிறது.

விருட்ச வடிவில் பிருங்கி முனிவர்!

ராமன் வழிபட்ட ஈஸ்வரன்!

ந்தத் தலத்துக்கு ஆம்பலப் பொய்கை, தண்ட தீர்த்தம், பம்பை ஆறு என்று மூன்று தீர்த்தங்கள். சீதை மீட்கச் செல்லும் வழியில் ஶ்ரீராமன் அபிமானத்துடன் வழிபட்ட தலம் இதுவாம். ஆகவே, அபிராமேஸ்வரர் என்றும் இறைவனுக்குப் பெயர் வந்தது என்கிறார்கள்.

ராமன் ராவணனை வென்று சீதையுடன் திரும்பும்வழியில், இந்தத் தலத்தில் தனது அம்பால் தீர்த்தம் உண்டாக்கி இவ்வூர் இறைவனை அபிஷேகித்து வழிபட்டாராம். இங்கு ராமனுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. அந்தச் சந்நிதியில் ராமபிரானுக்கு வலப்புறமாக அனுமனும் லட்சுமணனும்; இடப்புறமாக சீதாதேவியும், சபரியும் திகழ, கருணை பொழியும் முகத்தோடு அருள்கிறார் ராமன்.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 53-வது தலமாகத் திகழ்கிறது திருவாமாத்தூர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் இத்தலத்து இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். 

ஸ்வாமி அம்பாள் இருவரின் சந்நிதிகளும் தனிக் கோயில்களாகவே திகழ்கின்றன. கருவறையில் கிழக்கு நோக்கியபடி லிங்கத் திருமேனியராக, இடப்புறம் சற்று சாய்ந்த நிலையில் அருள்கிறார் அபிராமேஸ்வரர். சுயம்புவான இவரின் திருமேனியில் பசுவின் கால் குளம்பு பதிந்த வடுவும் பசு பால் சொரிந்த அடையாளங்களும் உள்ளனவாம்.

விருட்ச வடிவில் பிருங்கி முனிவர்!

பிள்ளை வரம் அருள்வாள் முத்தாம்பிகை

ஸ்வாமியை தரிசித்த நிறைவோடு அன்னை முத்தாம்பிகையை தரிசிக்கச் செல்லலாம். அம்பிகை சந்நிதிக் கோபுரம் 5 நிலைகளுடன் திகழ்கிறது. அம்மைக்கென தனிக் கொடிமரம், பலிபீடம், சிம்மவாகனம் திகழ்கின்றன.கருவறையில் மேலிரு கரங்களில் நீலோத் பலம் மற்றும் தாமரை மலர் திகழ, இடது கரத்தை தொடைமீது வைத்து, வலக்கரத்தால் வரம் அருளும் கோலத்தில் காட்சி தருகிறாள் அம்பாள். மேற்குநோக்கி அருளும் அன்னை யின் மேனியில் பாம்பின் வால் போன்ற அமைப்பு உள்ளது என்கிறார்கள்.

செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் அம்பாளை நேரில் வந்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்கிறார்கள் பக்தர்கள்.

இந்தக் கோயிலில் கி.பி. 955 முதல்

கி.பி.1584-ம் ஆண்டு வரையிலான கால கட்டத் தைச் சேர்ந்த 26 கல்வெட்டுகள் காணப் படுகின்றன. விளக்கெரிக்கும் பணிக்குக் கால்நடைகள் தானம் வழங்கப்பட்ட விவரம், கோப்பெருஞ்சிங்கன் என்ற மன்னன் நலம் பெற்று வாழ இங்கு வாழ்ந்த அன்பர் இவ்வூர் இறைவனுக்கு ஆபரணங்கள் சமர்ப்பித்த விவரம் முதலான தகவல்கள் கல்வெட்டுகளில் உள்ளன.

மேலும் குலோத்துங்கச் சோழன் காலத்தில், பார்வையற்ற இருவருக்கு சுவாமியைப் போற்றிப் பாடும் பணி கொடுக்கப்பட்ட விவரம் சொல்லும் கல்வெட்டும் இங்கு உண்டு என்கிறார்கள்.

விருட்ச வடிவில் பிருங்கி முனிவர்!

தம்பதி ஒற்றுமை மேலோங்கும்

திருக்கோயிலின் வழிபாட்டு வைபவங்கள் குறித்து கோயிலின் மகேஷ் குருக்களிடம் பேசினோம்.

“இங்கு நான்கு கால பூஜைகளும் மாதாந்திர விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.இங்கு சுவாமியும் அம்பாளும் தனித்தனிச் சந்நிதிகளில் எதிரெதிர் திசையில் அருள் புரிகின்றனர். சுவாமியையும் அம்பாளையும் ஒருசேர வழிபட்டுச் சென்றால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; இல்லறம் நல்லறமாகும். அதேபோல், இங்கு வந்து திருமணம் செய்துகொள்வது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது. இந்தத் தலத்தில் திருவட்டப்பாறை தரிசனம் பிரசித்திபெற்றது. மனதில் உண்மையை நிறுத்தி வழிபட்டால் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை, நிலத் தகராறு ஆகியவற்றில் நல்ல தீர்வு கிடைக்கும்.

முருகனடியார் வண்ணச்சரபம் தண்ட பாணி சுவாமிகள் இந்த தலத்துக்கு வந்து, எல்லை தாண்டாத விரதம் இருந்து, இதே ஊரில் ஜீவ சமாதியாகிக் கோயில் கொண்டுள்ளார். அந்த இடம் சற்று தூரத்தில் உள்ளது. அவர் சந்நிதிக்கும் சென்று வழிபட்டால், குருவருளும் வாய்க்கும்'' என்று சிலிர்ப்போடு பகிர்ந்து கொண்டார்.

வாய்ப்பு ஏற்படுத்திக்கொண்டு நீங்களும் திருவாமாத்தூருக்குக் குடும்பத்துடன் சென்று வழிபட்டு வாருங்கள். அபிராமேஸ்வரர் அருளால் உங்கள் வாழ்க்கையில் நல்ல அபிவிருத்தி ஏற்படும்.

அமைவிடம்: விழுப்புரம் செஞ்சி மார்க்கத்தில் சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது திருவாமாத்தூர். விழுப்புரத்திலிருந்து போக்குவரத்து வசதிகள் உண்டு. திருக்கோயில் காலை 6 முதல் 12:30 மணி வரையிலும்; மாலை 4:30 முதல் 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீதி வழங்கும் வட்டப்பாறை!

ன்னை முத்தாம்பிகை சந்நிதிக்கு தென்மேற்கில் திருவட்டப் பாறை சந்நிதி உள்ளது. இதை, ‘சத்தியாநிர்தவிவேசனி’ என்றும் அழைக்கின்றனர்.

திருவட்டப்பாறையின் முன் நின்று பொய் சொல்வோர், தேவர்களாலும் மீட்க முடியாத துன்பக் கடலில் வீழ்ந்து மாய்ந்து போவார்களாம். அதேநேரம் உண்மையைச் சொல்லிப் பிரார்த்திக்க சகல நன்மைகளும் கிடைக்கும் என்கிறார்கள்.

ஒரு காலத்தில் இங்கு சகோதரர்கள் இருவர் வாழ்ந்தனர். அண்ணன்காரன், தம்பியின் சொத்துகளை அபகரித்துத் தனதாக்கிக் கொண்டான். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தம்பி தன் பங்கைக் கேட்டபோது அண்ணன் தர மறுத்துவிட்டான்.திருவட்டப் பாறையின் முன்பு பஞ்சாயத்து கூடியது.

அண்ணன், தம்பியின் சொத்துக்களை விற்று, அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் தங்கம் வாங்கி மூங்கிலால் ஆன கைத்தடிக்குள் மறைத்துவைத்தான். திரு வட்டப்பாறைக்கு முன் சத்தியம் செய்யும் வேளையில் அந்தத் தடியைத் தம்பியிடம் கொடுத்துவிட்டு, `தம்பியின் சொத்துகள் என்னிடம் ஏதுமில்லை' என்று சத்தியம் செய்தான். வேறு வழியின்றி பஞ்சாயத்து கலைந்தது.

பின்னர் தம்பியிடமிருந்து கைத்தடியைப் பெற்றுக்கொண்ட அண்ணன், தும்பூர் என்ற இடத்தை அடைந்தான். அங்குவைத்து `என்னை ஏதும் செய்யமுடியாது' என்று கூறி திருவட்டப் பாறையையும் அம்மனையும் ஏளனமாகப் பேசினானாம். அப்போது அங்கு தோன்றிய கருநாகம் அவனைத் தீண்டியது. அந்த இடத்திலேயே அண்ணன் உயிர்நீத்தான் நாகமும் அங்கேயே சிலையானது. இதன் சாட்சியாக தும்பூர் தாங்கலில் பெரிய நாக சிலையுள்ள நாகாத்தம்மன் கோயில் உள்ளது.

இந்த இடத்திலேயே ராமபிரானுக்கும் சுக்ரீவனுக்கும் இடையில் உடன்படிக்கை ஏற்பட்டது என்ற தகவலும் உண்டு. இந்த நாகத்தின் வால் பகுதியே முத்தாம்பிகையின் மேனியில் உள்ளது என்பார்கள்!