கட்டுரைகள்
Published:Updated:

மதுரை to ரிஷிகேஷ்: குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! - 2

ரிஷிகேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
ரிஷிகேஷ்

‘கங்கை நதி பார்க்கணுமே’ என்று கங்கையின் செல்வன்கள் போல் எங்களை ஃபீல் செய்துகொண்டு பாடியபடி நடந்தோம். கங்கை ஆரத்தியை முடித்துவிட்டு, நதிக்கரை ஓரமாகவே நடந்து சென்றோம்.

கங்கை நதி பார்க்கணுமே..!

பயணமோ… வாழ்க்கையோ… வேலையோ… எல்லாமே சுமுகமாக அமைந்துவிடும் என்று நினைத்துவிடக்கூடாது. ஒன்று சொதப்பினால், மற்றொன்று செமயாக வாய்க்கும். அப்படித்தான் இந்த யாத்திரையில் நமக்கு அமைந்த ரயில் பயணம், நேசமணிக்கு அமைந்த அப்ரன்ட்டிஸ்கள் மாதிரி, எங்களைப் பாடாய்ப்படுத்தி எடுத்துவிட்டது ரயில்வே பயணம்.

ஆனால் ரயிலில் இருந்து காலடி எடுத்து வைத்ததும், எல்லாவற்றுக்குமே எண்ட் கார்டு போட்டுவிட்டது ரிஷிகேஷ். சிவனையும் பெருமாளையும் பார்க்க அந்தக் கார்த்திகேயனே வழிகாட்டினார். நாங்கள் கார்த்திகேய ஆசிரமத்தில் வந்து தங்கியதில், ஆசிரம நிர்வாகிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ‘‘இதுவரை இந்த ஆசிரமத்தில் வந்து தங்கியவர்கள் எல்லாம் பெரும்பாலும் வயசானவங்கதான்; இப்போதான் முதன்முறையாக சின்னப் பசங்க வந்திருக்கீங்க!’’ என்று அவர் சொன்னார்.

மதுரை to ரிஷிகேஷ்: குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! - 2

நிர்வாகிகளுக்கு எங்களை மிகவும் பிடித்துவிட்டது. சும்மாவா பின்னே... ‘90ஸ் கிட்ஸ் பீச், பார்க், அருவிக் குளியல், வீக் எண்ட் பார்ட்டி என்று திட்டமிடும்போது... நாங்கள் சிவபெருமானைத் தேடி இத்தனை கி.மீ தூரம் ஓர் ஆன்மிகப் பயணம் வந்தால் யாருக்குத்தான் பிடிக்காது’ என்று நினைத்துக்கொண்டோம். அங்குள்ள முருகன் கோயிலில் பூஜை செய்து பிரசாதம் கொடுத்து எங்கள் சுட்டி யாத்திரையைத் தொடங்கி வைத்தனர். முன்னதாகவே பேசி வைத்திருந்த டாக்ஸி எங்களுக்காகக் காத்திருந்தது. அதில் ஏறி சார்தம் யாத்திரையின் முதல் ஆலயமான  நீலகண்ட மஹாதேவ் ஆலயத்துக்குப் புறப்பட்டோம்.

நீலகண்ட மஹாதேவ் ஆலயம், ரிஷிகேஷில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் இருக்கிறது. ஒரு மணி நேரப் பயணம். ஆனால், மலைப்பாதையில் ஜிவ்வென்றிருந்தது பயணம். சின்னப் பிரசன்னா டாக்ஸியின் ஜன்னல் பக்கம் அமர்ந்துகொண்டு, இயற்கையை ரசித்தபடி, ‘செந்தாழம்பூவில்’ சரத்பாபு கணக்காக ஏதோ கவிதை எழுதவோ, பாட்டுப் பாடவோ முயன்றிருக்க வேண்டும். நல்லவேளையாக நாங்கள் தடுத்துவிட்டோம்.

ஒரு வழியாக அந்தக் கோவிலில் காலடி எடுத்து வைத்தோம். எங்கள் காலடியில் பெரிய பள்ளத்தாக்கு. மணிக்கூட், பிரம்மகுடா மற்றும் விஷ்ணுகூடா பள்ளத்தாக்குகளுக்கு இடையே அமைந்துள்ளது நீலகண்ட மஹாதேவ் ஆலயம். இங்குள்ள சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த விஷத்தை விழுங்கி, தன் தொண்டையில் நிறுத்தி வைத்து, தொண்டை நீல நிறத்தில் மாறியதால் நீலகண்டன் ஆனவர்.

மதுரை to ரிஷிகேஷ்: குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! - 2

எங்களை அழைத்துச் சென்ற ஓட்டுநர், அந்த ஏரியாவில் பெரிய கையாக இருக்க வேண்டும். கோயிலுக்கு மிக அருகிலேயே இறக்கி விட்டார் எங்களை. வெளியூர் வாகனங்களை தூரத்திலேயே பார்க் செய்துவிட வேண்டும் என்பது விதி. ஆனால், எங்கள் டிரைவர் சரசரவென எங்களை கோயில் அருகே விட்டுவிட்டு, ‘‘யஹாங் பூஜா கரானா கி சாமான் கரீத் சக்தே ஹே!’’ என்று கிளம்பி விட்டார். அவர் சிபாரிசு செய்த கடையில் சில பூஜை சாமான்களை வாங்கிவிட்டுக் கோயிலுக்குள் சென்றோம். என்னை வெகுவாகக் கவர்ந்தது கோயில் கோபுரம்தான். பார்க்க நம்மூர் கோபுரம் போலவே இருந்தது. அதில் அத்தனை புராணக்கதைகளையும் வடித்து வைத்திருந்தார்கள். பின்பு விசாரித்தால், அந்தக் கோபுரம் நம் கட்டடக்கலையில் கட்டப்பட்டது என்றார்கள்.

கூட்டம் இல்லாததால், விரைவாகவே தரிசனம் கிடைத்தது. மக்கள் கோயில் பின்புறமாக நின்று தீவிரமாகக் கண்ணை மூடி வேண்டிக்கொண்டிருந்தார்கள். அங்கே இருந்த கம்பிகளில் கயிறு கட்டி மனதில் நினைத்து வேண்டினால் நாம் வேண்டியது நடக்கும் என்பது ஐதிகம்.

நீலகண்டனை தரிசித்துவிட்டு மதிய உணவுக்கு ஆசிரமம் வந்துவிட்டோம். வெயில் தாழ்ந்த பிறகு, ஒரு இடத்துக்கு ஸ்கெட்ச் போட்டோம். அது கங்கை நதி. அதற்கு ராம் பாலம் என்றொரு இடம் வழியாகப் போக வேண்டும் என்றார்கள். பொதுவாக, நதிக்கரையோரம் பயணித்தால்… நெற்கதிர்களும் கரும்புச் செடிகளும், வயற்காடுகளும் பச்சைப் பசேலென விருந்து படைக்கும்தானே! ஆனால், ராம் பாலம் போகும் வழியெங்கும் மஞ்ச மஞ்சேரென்று மக்காச்சோளம். சோளங்களை முழுவதும் உரித்து, உப்பு மிளகாய்ப் பொடி தூவி விற்றுக்கொண்டிருந்தார்கள். நம் ஊரில் மேற்கத்திய ஸ்டைலில் ‘ஸ்வீட் கார்ன்’ என்று தின்போமே… அதே ஸ்வீட் கார்னை இந்த வடஇந்தியக் கிராமப் பயணத்தில் சாப்பிடும்போது அதன் சுவையே வேற லெவலில் இருக்கிறது.

கூடவே நவரத்தினச் சுண்டல் என்று ஒன்றை வாங்கினோம். சுண்டல், மிக்சர், பட்டாணி, கடலை, பாசிப்பயறு என்று 9 வகையான அயிட்டங்களைக் கலந்திருந்தார்கள். ரொம்ப சுவையாகவே இருந்தது. நவரத்தினச் சுண்டலையும், சோளத்தையும் கொறித்துக்கொண்டே, கங்கை ஆற்றை நோக்கி ராம் ஊஞ்சல் பாலத்தில் நடப்பது… ஆஹா!

மதுரை to ரிஷிகேஷ்: குட்டிப் பசங்களின் சுட்டி யாத்திரை! - 2

கங்கை நதிக்கரைக்குச் சென்றால், அங்கு இரண்டு தொங்கு பாலங்கள். ராமர் ஜூலா, லட்சுமண் ஜூலா என்று பெயர் சொன்னார்கள். (Jhula என்றால் ஊஞ்சல் என்று அர்த்தம்!) நிஜமாகவே ஊஞ்சல் மாதிரிதான் இருக்கிறது. நாங்கள் ராமர் ஊஞ்சலில் ஊஞ்சலாடியபடி நடந்தே கங்கைக்கரையின் அக்கறைக்குப் போனோம். இங்கே கங்கை ஆரத்தி என்றொரு விசேஷம் உண்டு. மாலை ஆறு மணி அளவில் கங்கை நதிக்கரை இருபுறமும் கங்கை ஆற்றைப் போற்றும் வகைகளில் ஆற்றை நோக்கி ஆரத்தி எடுப்பார்கள். மிதமான மாலை வெளிச்சத்தில், மெல்ல நம்மைக் கவரும் குளிர் வீசும் நேரத்தில் பாய்ந்தோடும் கங்கை நதியை நோக்கி ஆரத்தி எடுப்பதை தரிசிப்பது… கங்கை நதிப் பிரியர்களுக்கு உடலெல்லாம் என்னவோ செய்யும். எங்களுக்கும்தான்!

‘கங்கை நதி பார்க்கணுமே’ என்று கங்கையின் செல்வன்கள் போல் எங்களை ஃபீல் செய்துகொண்டு பாடியபடி நடந்தோம். கங்கை ஆரத்தியை முடித்துவிட்டு, நதிக்கரை ஓரமாகவே நடந்து சென்றோம். சிறிது தூரம் சென்றபின், எங்கள் கண்ணில் ஆற்றின் நடுவில் அமைந்துள்ள சிவன் சிலை பட்டது.

உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொன்னால்… சட்டென்று ‘அட ஆமால்ல’ என்று வியப்பீர்கள். ‘உத்தரகாண்ட் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு’ என்று செய்தி வந்தால், ஒரு சிவன் சிலை வெள்ளத்தோடு போவதுபோல் டி.வி-க்களில் காட்டுவார்களே, அந்தச் சிவன் சிலையைத்தான் நாங்கள் கடந்து கொண்டிருந்தோம். வெள்ளம் இல்லாத நேரத்தில் கம்பீரமாக இருக்கிறார் சிவன்.

அடுத்து எங்கள் திட்டம் கேதார்நாத் கோவில். அதற்கு 30 கிலோமீட்டர் நடக்க வேண்டியிருக்கும். ‘என்னது, 30 கிமீ நடக்கணுமா’ என்று சூனா பானா வடிவேலு மாதிரி சரிந்தான் பிரசன்னா!

(பயணம் தொடரும்)