Published:Updated:

இரிஞ்ஞாடப்பிள்ளி ராமன்: கோயிலுக்கு வழங்கப்பட்ட எந்திரன் யானை - சரித்திரத்தில் இடம்பிடித்த கேரளம்!

எந்திரன் யானை இரிஞ்ஞாடப்பிள்ளி ராமன்

யானையின் இயக்கத்துக்காக 5 மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கண், காது, வாய், வால் ஆகியவை தானியங்கி மோட்டார் மூலம் இயங்கும். துதிக்கையை பாகன் இயக்கும் வகையில் பட்டன் ஒன்று அமைக்கப்படுள்ளது.

Published:Updated:

இரிஞ்ஞாடப்பிள்ளி ராமன்: கோயிலுக்கு வழங்கப்பட்ட எந்திரன் யானை - சரித்திரத்தில் இடம்பிடித்த கேரளம்!

யானையின் இயக்கத்துக்காக 5 மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கண், காது, வாய், வால் ஆகியவை தானியங்கி மோட்டார் மூலம் இயங்கும். துதிக்கையை பாகன் இயக்கும் வகையில் பட்டன் ஒன்று அமைக்கப்படுள்ளது.

எந்திரன் யானை இரிஞ்ஞாடப்பிள்ளி ராமன்

கேரள மாநிலத்தில் கோயில் திருவிழா என்றாலே முதலில் வந்துநிற்பது யானைதான். நூற்றுக்கணக்கான யானைகளை வரிசையாக நிறுத்தி, அவற்றின்மீது சுவாமியை எழுந்தருளச்செய்யும் திருச்சூர் பூரம் உலக புகழ்பெற்றது. கோயில் திருவிழாக்களுக்கு மட்டுமல்லாது திருமணம், புதுமனை புகுவிழா என வீட்டு விசேசங்களிலும் யானையை வரவழைத்து அழகு சேர்ப்பது கேரள மக்களுக்கு வழக்கமாகிவிட்டது.

யானைகளை விழாக்களில் பயன்படுத்துவதில் பலருக்கும் மாற்றுக்கருத்தும் இருந்துவருகிறது. அதுமட்டுமல்லாது விழாக்களில் கலந்துகொள்ளும் யானைகளுக்குத் திடீரென மதம்பிடிப்பதும், அதனால் பாகன் உள்ளிட்ட சிலரைத் தாக்கும் சம்பவங்களும், உயிரிழப்புகளும் கேரளத்தில் நடந்துள்ளன.
எந்திரன் யானை
எந்திரன் யானை

இந்த நிலையில் கோயில் விழாக்களில் எந்திர யானையை பயன்படுத்தும் சரித்திரத்தில் இடம்பிடிக்கும் நிகழ்வு கேரளத்தில் நடந்துள்ளது. திருச்சூர்மாவட்டம் இரிஞ்ஞாடப்பிள்ளி ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் நேற்று புதிதாக மின்சாரத்தில் செயல்படும் எந்திரன் யானை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. 'பீப்பிள் ஃபார் தி எதிகல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ்' (PETA) விலங்கு நல அமைப்பினால் இந்த யானை நன்கொடையாக வழங்கப்பட்டது. எந்திரன் யானைக்கு 'இரிஞ்ஞாடபிள்ளி ராமன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த யானை மீது இறை ஸ்வரூபத்தை வைத்து 'எழுந்நேற்றம்' நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. முதலில் பார்க்கும் யாராக இருந்தாலும் உண்மையான யானை என்றே கூறும் அளவுக்குத் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

5 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட எந்திரன் யானை 11 அடி உயரமும், 800 கிலோ எடையும்கொண்டதாகும். ஒரே நேரத்தில் நான்குபேர் யானைமீது அமர்ந்து கொள்ளலாம். உண்மையான யானையை போன்று கண், காது, வாய், துதிக்கை, வால் ஆகியவற்றை அசைக்கும் வகையில் எந்திரன் யானை உருவாக்கப்பட்டுள்ளது.

துபாய் கலைவிழா நிகழ்ச்சிக்காக இயந்திர யானையை உருவாக்கிய சாலக்குடி போட்ட ஃபோர் ஹி ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸை சேர்ந்த சிற்பிகள் பி.பிரசாந்த், கே.எம்.ஜினேஷ், எம்.ஆர்.ராபின் மற்றும் சான்றோ ஜோஸ் ஆகியோர் இரண்டு மாதங்களில் எந்திரன் யானையை உருவாக்கியுள்ளனர்.
எந்திரன் யானை
எந்திரன் யானை

இரும்புகள் மூலம் யானையின் உருவத்தை உருவாக்கி வெளிப்பகுதியில் ரப்பர் போர்த்தி யானை வடிவமைக்கப்பட்டுள்ளது. யானையின் இயக்கத்துக்காக 5 மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கண், காது, வாய், வால் ஆகியவை தானியங்கி மோட்டார் மூலம் இயங்கும். துதிக்கையைப் பாகன் இயக்கும் வகையில் பட்டன் ஒன்று அமைக்கப்படுள்ளது. பட்டன் மூலம் யானையின் துதிக்கையை இயக்கினால் தண்ணீர் பீச்சியடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் தந்திரி எம்.ஆர்.சதீசன் நம்பூதிரி இந்த யானையைக் கோயிலுக்கு அர்ப்பணித்தார்.