Published:Updated:

பம்பையில் ஷவர், ரூ.100-க்கு தண்ணீர்... சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனிக்க வேண்டியவை!

சபரிமலை ஐயப்பன்
சபரிமலை ஐயப்பன்

சபரிமலை வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டும். இங்கும் சுகாதாரத்துறை மூலம் மற்றொரு சோதனை நடத்தப்படும் எனக் கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.

சபரிமலையில் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி முதல் மண்டல மகரவிளக்குக் கால பூஜைகள் தொடங்குகின்றன. வழக்கமாக மண்டல மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை சென்று தரிசனம் நடத்துவார்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவி வருவதால் சபரிமலையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை செய்யப்பட்டது.
பினராயி விஜயன்
பினராயி விஜயன்

தேவசம்போர்டு தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட அந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சபரிமலை கேரளத்தின் மிகவும் முக்கியமான வழிபாட்டுதலமாகும். கொரோனா காலமாக இருந்தாலும் சபரிமலை புனிதப்பயணத்திற்கும், மகரவிளக்கு பூஜைக்கும் பக்தர்களை அனுமதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபரிமலை லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் புனித தலம். ஆனால் கொரோனா அதிகமாக பாதித்து வருவதால் சபரிமலைக்கு வரும் பக்தர்களை சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க தீர்மானித்திருக்கிறோம்.

சபரிமலைக்குப் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். அதிலும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள். இருப்பினும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் சபரிமலையில் அனுமதிக்கப்படுவார்கள். அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை குறித்து முடிவு செய்ய தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டி ஏற்படுத்த முடிவு செய்யப்படுள்ளது. மாநில டி.எஸ்.பி, ஹோம் செக்கரட்டரி, தேவசம் போர்டு, சுகாதாரத்துறை, வனத்துறை செயலாளர்கள் அந்தக் குழுவில் இருந்து முடிவுகளை எடுப்பார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

வேறு துறைச் செயலாளர்களை இந்த கமிட்டியில் இணைக்கும் பொறுப்பு தலைமைச் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் தமிழகம் உள்ளிட்ட பக்தர்கள் அதிகம் வரும் மாநிலங்களில் உள்ள அமைச்சர்களிடம் தேவசம்போர்டு சார்பில் ஆலோசனை நடத்தவும் தீர்மானித்திருக்கிறோம். வெர்ச்சுவல் கியூ அடிப்படையில் ஆன்லைனில் புக் செய்ய ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொரு பக்தரும் வந்து சேரும் நேரம் அறிவிக்கப்படும். 65 வயதுக்கு மேல் உள்ளவர்களும், குழந்தைகளும் வரவேண்டாம். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டும். இங்கும் சுகாதாரத்துறை மூலம் மற்றொரு சோதனை நடத்தப்படும்.

பக்தர்கள் சாதாரணமாக சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டுச் சற்று கூடுதல் நேரம் அங்கு இருப்பார்கள். ஆனால் இந்த முறை தரிசனம் முடித்த உடனே திரும்பிவிட வேண்டும். சபரிமலையில் தங்கவோ, பயணத்தை விரிவைக்கவோ அனுமதி இல்லை. நிலக்கல்லில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். குடிதண்ணீருக்குத் தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பம்பையில் இருந்து 100 ரூபாய் கொடுத்தால் சில்வர் பாத்திரத்தில் பக்தர்களுக்குத் தண்ணீர் கொடுக்கப்படும். சபரிமலை சென்று திரும்ப வந்து அந்த சில்வர் பாத்திரத்தை ஒப்படைத்தால் ஏற்கனவே செலுத்திய நூறு ரூபாய் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

சர்வ தரிசனம் கிடையாது; புரட்டாசி பிரம்மோற்சவம் எப்படி நடக்கிறது? திருப்பதி அப்டேட்ஸ்!
சபரிமலை கோயில்
சபரிமலை கோயில்

அன்னதானம் நடத்தத் தடை இல்லை. பேப்பர் பிளேட்டில் அன்னதானம் நடத்த அனுமதிக்கப்படும். கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்ஸில் சமூக இடைவெளியுடன் கூடிய பயணம் அனுமதிக்கப்படும். இதற்காகக் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். மலை ஏறும்போது பக்தர்கள் மாஸ்க் அணிவது சிரமமாக இருக்கும். உடற்பயிற்சியின்போது மாஸ்க் வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளதால் மலை ஏறும்போது மாஸ்க் அணிய வேண்டுமா, வேண்டாமா என்பதுபற்றி சுகாதாரத்துறை முடிவெடுக்கும். நெய் அபிஷேகத்துக்கான நெய் தேவசம்போடு குறிப்பிடும் இடத்தில் சேகரிக்கப்படும். அபிஷேக நெய் பக்தர்களுக்கு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும். திருவாபரண ஊர்வலம் கொரோனா விதிகள படி நடத்தப்படும். கொரோனா காரணமாக எருமேலியிலும், பம்பை நதியிலும் இறங்கிக் குளிப்பதில் சிக்கல் உள்ளதால் ஷவர் சிஸ்டம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு