Published:Updated:

சர்வ தரிசனம் கிடையாது; புரட்டாசி பிரம்மோற்சவம் எப்படி நடக்கிறது? திருப்பதி அப்டேட்ஸ்!

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி

திருமலை திருப்பதியில் மீண்டும் சர்வ தரிசனம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. மேலும் பிரம்மோற்சவம் குறித்த முக்கியமான அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பெருமாள் பக்தர்களின் நெஞ்சில் எப்போதும் இடம் பிடித்திருக்கும் திருத்தலம் திருப்பதி. ஆண்டுக்கு ஒரு முறையாவது திருப்பதி சென்று அங்கு தரிசனம் செய்வது பக்தர்களின் வழக்கம். இந்த ஆண்டு மார்ச் மாத இறுதிமுதல் கொரோனா பரவல் காரணமாக ஜூன் 11-ம் தேதிவரை பக்தர்களின் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஜூன் 11 முதல் பக்தர்கள் 300 ரூபாய் ஆன்லைன் புக்கிங் டிக்கெட்கள் மூலமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வந்தனர். கடந்த மாதம் முதல் சர்வ தரிசன டோக்கன்களும் வழங்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி

தற்போது நாடுமுழுவதும் லாக்டௌன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் பக்தர்கள் ஆலய தரிசனம் செய்ய ஆர்வமுடன் திருப்பதி வரத் தொடங்கினர். கடந்த 5-ம் தேதி அலிபெரியில் இருக்கும் சர்வ தரிசன டிக்கெட்கள் வழங்கும் பவானி காம்ப்ளெக்ஸ் கௌண்டர்களில் மக்கள் அதிக அளவில் திரண்டனர்.

ஆனால் திருப்பதியில் இன்னும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில் இதுபோன்ற மக்கள் வரவு அதிகரிப்பதால் பாதிப்பு இன்னும் அதிகமாகக் கூடும் என்று அதிகாரிகள் கருத்துத் தெரிவித்தனர். இதையடுத்து திருமலை தேவஸ்தானம் அதிரடியாக செப்டம்பர் 6 ம்தேதி முதல் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவதைத் தடை செய்தது. இந்தத் தடை வரும் 30 தேதிவரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்துவிட்டுப் பின் வருமாறு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பக்தர்களின் எண்ணிக்கையையும் நோய் பரவும் அபாயத்தையும் கட்டுக்குள் வைக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு..!
திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு..!

இத்தனை கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் நேற்று 6.9.2020 அன்று மொத்தம் 15,226 பேர் தரிசனம் செய்துள்ளனர். இதுவே கடந்த மூன்று மாதங்களில் ஒரு நாளில் அதிகமாக தரிசனம் செய்தவர்களின் எண்ணிக்கை இதுவேயாகும். பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்ட ஜூன் 11-ம் தேதியிலிருந்து நேற்றுவரை மொத்தம் ஆறுலட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் 10 நாள்களில் புரட்டாசி மாதம்... ஏகாந்த சேவையாக பிரம்மோற்சவம்!

பொதுவாகப் புரட்டாசி மாதம் திருப்பதி மலைக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு சர்வ தரிசனம் செப்டம்பர் 30 வரை தடை செய்யப்பட்டிருப்பதால் மக்கள் வருவது பாதிக்கப்படும். தொடர்ந்து கொரோனா பரவல் திருப்பதியில் அதிகரித்து வருவதையொட்டி திருப்பதியில் இருக்கும் ஸ்ரீ கோவிந்த ராஜ சுவாமி சத்திரம் மற்றும் ஸ்ரீ கோதண்டராம சுவாமி சத்திரம் ஆகியன கோவிட் நோயாளிகளுக்கான மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. திருமலைக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதை தேவஸ்தானம் உறுதிப்படுத்தி வருகிறது.

சணல் பைகள்
சணல் பைகள்
TTD PHOTO

இந்நிலையில் புரட்டாசி மாத பிரம்மோற்சவம் செப்டம்பர் 19 - 27 வரை நடைபெற இருந்த நிலையில் நேற்று திருமலை தேவஸ்தான அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, அர்ச்சகர்கள், பக்தர்கள் மற்றும் அலுவலர்களின் பாதுகாப்பு கருதி புரட்டாசி மாத பிரம்மோற்சவம் ஆலயத்துக்குள் ஏகாந்த சேவையாக நடத்தப்படும் என்று தெரிவித்தனர். அக்டோபர் மாதம் நடைபெற வேண்டிய நவராத்திரி பிரம்மோற்சவம் குறித்துப் பிறகு முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

நீசமாகும் ராகு... உச்சமடையும் கேது... எந்த ராசிக்கு என்ன பலன்? என்ன பரிகாரம்? #VikatanPhotoCards

பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக சணல் பை

திருமலையில் பிளாஸ்டிக்கிற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு லட்டு கௌண்டர்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சணல்பைகளை வழங்கிவருகின்றனர். 5 லட்டுக்கள் வைக்கக்கூடிய பைகள் 25 ரூபாய்க்கும் பத்து லட்டுகள் வைக்கப்படும் பைகள் 30 ரூபாய்க்கும் 15 லட்டுகள் வைக்கும் பைகளை 35 ரூபாய்க்கும் வழங்குகின்றனர். இருந்தாலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் இந்த நடவடிக்கை பக்தர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அமேசான்
அமேசான்

அமேசான் மூலம் டைரி மற்றும் காலண்டர்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆண்டுதோறும் வெளியிடும் காலண்டர் மற்றும் டைரிக்களுக்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இதுவரை அவற்றை திருப்பதி தேவஸ்தான அலுவலகம் மூலமே விற்பனை செய்துவந்தனர். ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பக்தர்களுக்கு கொரியர் மூலமும் இந்திய தபால் துறை மூலம் டெலிவரி செய்துவந்தனர். இந்த ஆண்டு கூடுதலாக அமேசான் மூலம் விற்பனை செய்யலாம் என்று தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே பாதுகாப்பான முறையில் இவற்றைப் பெறமுடியும். இதற்காக அமேசானின் விற்பனைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தேவஸ்தான அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அடுத்த கட்டுரைக்கு