Published:Updated:

`சத்திய சொரூபம் விசாலாட்சி!'

திருப்பட்டூர்
பிரீமியம் ஸ்டோரி
திருப்பட்டூர்

திருக்கோயில் திருவுலா திருப்பட்டூர் - அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்

`சத்திய சொரூபம் விசாலாட்சி!'

திருக்கோயில் திருவுலா திருப்பட்டூர் - அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்

Published:Updated:
திருப்பட்டூர்
பிரீமியம் ஸ்டோரி
திருப்பட்டூர்

திருப்பட்டூரின் மகிமைக்கு பிரம்மபுரீஸ்வரர் கோயில் ஒரு காரணம் என்றால், காசிவிஸ்வநாதர் கோயிலும் ஒரு காரணம் எனலாம். நான்கு யுகங்களிலும் தேவாதிதேவர்களாலும், ரிஷிகளாலும், மகான்களாலும் வணங்கப்பட்டவர் இந்த காசிவிஸ்வநாதர்.

`சத்திய சொரூபம் விசாலாட்சி!'

விதியை மாற்றி நல்வாழ்வை அருள்பவர் பிரம்மபுரீஸ்வரர் என்றால், தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த பாவங்களைப் பொசுக்கி சுபீட்ச வாழ்வை அருள்பவர் ஶ்ரீகாசிவிஸ்வநாதர். வடகாசியில் அருளும் ஶ்ரீவிஸ்வ நாதர் - விசாலாட்சியின் அதே மகத்துவத்தை, புண்ணிய காசியின் சாந்நி யத்தை இங்கேயும் உணரலாம் என்கிறார்கள், ஆன்மிக ஆன்றோர்கள்.

புராணச் சிறப்புகளால் மட்டுமல்ல இன்னும்பல அற்புதங்களைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது காசிவிஸ்வநாதர் திருக்கோயில். அவற்றில் ஒன்று இங்குள்ள சில சிற்பங்கள். ஆலயத்தின் சுற்றுப்புறச் சுவர்களில்... அன்னப் பறவைகள், மகர யாழி, வித்தியாச மீன் வடிவம், டைனோசர் போன்ற உருவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

உருவில் பெரிதான டைனோசர் போன்ற பிராணிகளைப் பற்றிய தகவல்களைக் கடந்த நூற்றாண்டில்தான் அறிவியல் உலகம் அறிந்து சொன்னது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அந்தப் பிராணியைப் போன்ற சிற்ப உருவங்கள் இந்தக் கோயிலில் செதுக்கிவைக்கப்பட்டுள்ளது, பெரும் ஆச்சர்யத்தை அளிக்கிறது!

`சத்திய சொரூபம் விசாலாட்சி!'
DIXITH
`சத்திய சொரூபம் விசாலாட்சி!'
DIXITH

மேலும், உள் பிராகாரம் ஓங்கார வடிவில் அமைந்துள்ளது, இந்த ஆலயம் நுட்பமான அதிர்வுகளைத் தன்னுள் கொண் டிருப்பதன் அடையாளம். இங்கு பாராயணம் செய்யப்படும் மந்திரங்கள் பன்மடங்கு பலன் தரும் சூட்சுமமும் இதுதான் என்கிறார்கள்.

இங்ஙனம் அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப் பிணைந்து திகழும் இந்தக் கோயிலின் நாயகனான காசிவிஸ்வநாதரும் உடல் - உள்ளப் பிணிகளை நீக்கும் அருளாளனாகத் திகழ்கிறார். மனநலம் குன்றியவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், நாகதோஷம், நவக் கிரக தோஷம் உள்ள அன்பர்கள் பலரும் இங்கு வந்து வழிபட்டு நிவர்த்தி பெற்றதாக நெகிழ்ச்சியோடு கூறுகிறார்கள்.

குறிப்பக வியாக்ரபாத முனிவர் அதிஷ்டானத்தின் அருகில் தியானம்-பிரார்த்தனை செய்தால், அற்புதமான ஓர் அதிர்வை உணர லாம். ஆழ்ந்த அமைதியும் சிந்தனையில் நல்ல தெளிவும் கிடைக்கும் என்பது அனுபவித்து உணர்ந்த பக்தர்களின் வாக்கு. இங்கே வியாக்ர பாதர் சூட்சும வடிவில் தியானம் செய்வதாக நம்பிக்கை.

அற்புதமான அந்த அதிஷ்டானத்தின் அருகில் அமர்ந்து தியானித்துக் கொண்டிருந் தார் இளம் பெண் ஒருவர். அவரின் முகத்தில் அப்படியொரு பிரகாசம். அவருக்குள் ஏதோ சொல்லப்படாத அனுபவம் இருக்கிறது என்பதை யூகிக்க முடிந்தது. விழித்ததும் பேச்சு கொடுத்தோம்.

`சத்திய சொரூபம் விசாலாட்சி!'
DIXITH

``இந்தக் கோயில் மகிமை மிக்கது. இங்கு வந்தால் பல அதிசயங்கள் நடக்கும் என்கிறார்களே, உங்களுக்கும் அப்படித் தோன்றுகிறதா’ என்று கேட்டோம். அவர் சத்திய வாக்குகளாக சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

``என் ஊரு விழுப்புரம். இரண்டு வருடங் களாக இந்தக் கோயிலுக்கு வந்துசெல்கிறேன். வாரம் ஒருமுறை தவறாம வந்துடுவேன். இந்த விசாலாட்சி என்னை இழுத்துட்டு வந்துடுறா என்றுதான் சொல்லணமும். அம்மா, மாமியார், நாத்தனார் என்று எந்த மூத்தப் பெண் உறவு களும் எனக்கு இல்லை. எனக்கு எல்லாமுமாய் இருப்பவள் இந்த விசாலாட்சி அன்னைதான்.

ஐந்து வருஷத்துக்கு முன்னாடி காதலிச்சுக் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன். இரண்டுபேர் வீட்டிலேயும் கடும் எதிர்ப்பு. யார் ஆதரவும் இல்லாமதான் வாழ்க்கையைத் தொடங்கி னோம். ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

எல்லாமே நல்லபடியா போய்க்கிட்டிருக்க, திடீர்னு அவருக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு. `கல்லீரல் வீக்கம்'னு சொன்னாங்க. என் தலைல இடி விழுந்தமாதிரி ஆகிப்போச்சு. `சரியா கவனிக்கலன்னா உயிருக்கே ஆபத்து'ன் னும் சொன்னாங்க.

தனியார் மருத்துவமனையில பார்க்குற அளவுக்கு வசதி இல்லை. அரசு மருத்துவ மனையிலதான் வைத்தியம் பார்த்துக்கிட்டாரு. எனக்கோ ரொம்ப பயம் வந்துடுத்துச்சு. அதுவரைக்கும் எனக்குள் கடவுள் பக்தின்னு பெரிதா எதுவும் கிடையாது. கஷ்டம் வரும் போதுதானே நம்பிக்கையும் வருது. அப்படித் தான் ஒருத்தர் சொல்லி திருப்பட்டூர் வந்தேன். குறிப்பா இங்கே வியாக்ரபாதர் சந்நிதிகிட்ட வேண்டிக்க சொன்னாங்க.

நானும் வந்தேன். அம்மா விசாலாட்சியைப் பார்த்ததுமே எங்க அம்மாவைப் பார்த்ததுபோல் உணர்வு... பொங்கி அழுதுட்டேன்.

`என்னை நட்டாற்றுல விட்டுடாதே தாயே... நானும் என் பிள்ளையும் அநாதை ஆயிடுவோம். அவரை எப்படியாவது காப்பாத்திடு. உன்னால தான் அது முடியும்'னு அழுதேன். சொன்னா நம்புவீங்களோ இல்லையோ... உங்கள மாதிரியே அப்பவும் ஒருத்தர் வந்து பேச்சு கொடுத்தார். என் கணவருக்கு இருக்கும் பிரச்னைகள் பற்றி கேட்டார்.

`சத்திய சொரூபம் விசாலாட்சி!'
DIXITH

‘கல்லீரல் வீக்கத்தின் ஆரம்ப நிலைதான், கவலைப்பட வேண்டாம். முறையா மருந்து எடுத்துக்கிட்டா அதுவே சரியாய் போகும்னு சொன்னார். துளசியும் கீரைகளும் எடுத்துக்கச் சொன்னார். இன்னும் சில சித்த மருத்துவ மூலிகைகள் பற்றிச் சொல்லி, அவற்றையும் வழக்கமான மாத்திரைகளுடன் எடுத்துக்கச் சொன்னார். உணவு பத்தியமுறைகளையும் சொன்னார். எல்லாத்துக்கும் மேல, `வாரம் ஒருமுறை இங்கு வந்து வேண்டிக்கோங்க'ன்னும் சொல்லிட்டுப் போய்ட்டார்.

நிஜமா சொல்றேன்... அந்த மனுஷ உருவில் வந்தது தெய்வமேதான்! என் கணவருக்குப் படிப்படியா நோய் குணமாகிடுச்சி. இங்கே வந்தா சகல நோய்களும் குணமாகும்னு சொல்றாங்க... அதுக்கு நானே சாட்சி!

விசாலாட்சி சத்திய சொரூபினி. என்னைக் கைவிடாம காப்பாற்றுன இந்த அம்மாவுக்கு நான் என்ன செய்ய முடியும். வாரா வாரம் வந்து என் கண்ணீரையே காணிக்கையா செலுத்திட்டுப் போறேன். அவ இருக்குற வரைக்கும் எனக்கு ஒரு குறையும் இருக்காது” என்று முடித்தவர், ‘நான் சொல்றது சரிதானே’ என்று அன்னை விசாலாக்ஷி சந்நிதியை நோக்கி அவளிடம் கேட்கும் பாவனையில் கேட்டார்!

அந்த நம்பிக்கையும் மலர்ச்சியும் கண்டு நெகிழ்ந்துபோனோம். இதுதான் நம் தர்மத்தின் ஆணிவேர். நம்பிக்கை கொண்டோரை காசி விஸ்வநாதரும் அன்னை விசாலாட்சியும் கைவிடுவதே இல்லை!

- திருவுலா தொடரும்...