Published:Updated:

கண்டுகொண்டேன் கந்தனை - 23

முருகன்
பிரீமியம் ஸ்டோரி
முருகன்

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

கண்டுகொண்டேன் கந்தனை - 23

திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

Published:Updated:
முருகன்
பிரீமியம் ஸ்டோரி
முருகன்

திருவிடைக்கழி

திருவிடைக்கழி திருமுருகன் திருக்கோயிலின் அருமை பெருமை அநேகம். தமிழகத்தில்... ஏன் இந்தியாவிலேயே இந்தத் திருக்கோயிலில் மட்டுமே கருவறைக்குள் மற்றொரு கருவறையைக் காண இயலும். மூலவர் பாலசுப்ரமணியர் ஒரு முகம் இரண்டு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

அவரது திருக்கைவேல் - வடிவழகை நேரில் கண்டு அனுபவிக்க வேண்டுமே தவிர, வார்த்தைகளில் எழுத இயலாது. ‘முழுதும் அழகிய குமரன்’ என்று திருப்புகழ் போற்றும் திருவுருவ அழகு. அவருக்குப் பின்னே வடப் புறமாக அமைந்துள்ளது ஒரு கருவறை. அதில் அருள்மிகு பாபநாசப்பெருமான் எனும் சிவலிங்கத் திருமேனியை தரிசிக்கலாம். ஆக, சிவபிரானும் முருகனும் தம்முள் ஒருவரே என்பதை, அவர்கள் குமாரசிவமாக அருள்வதை இந்தக் கோயிலில் மட்டுமே காண இயலும்.

திருவிடைக்கழி திருமுருகன் திருக்கோயில்
திருவிடைக்கழி திருமுருகன் திருக்கோயில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேராசிரியர் ஆறுமுக மங்கலமுடையாரின் அயர்ச்சியில்லா முயற்சியில் உருவான ஏழுநிலை ராஜ கோபுரம் முருகன் சந்நிதிக்கு நேராகவும் உள் கோபுரம் பாபநாசப்பெருமானுக்கு நேராகவும் அமையும்படி கட்டப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இக்கோயிலில் சிவபிரானுக்குரிய தல விருட்சம் மகிழமரம். முருகனுக்குரிய விருட்சம் குராமரம். அதேபோல், இருவருக்கும் தனித்தனி சண்டேசர் சந்நிதிகள் அமைந்துள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தத் தலத்தில் முருகன் கோயிலுக்கு நேர் எதிரில் தல விநாயகரான `ஐந்நூற்று விநாயகர்' தனிக்கோயிலில் அருள்கிறார். இக்கோயில் தரைமட்டத்திலிருந்து சற்று உயரத்தில் அமைந்துள்ளது. திருவிடைக்கழி முருகன் கோயிலில் அனைத்துமே தனித்தன்மையுடன் இருப்பதைக் காணலாம். சோமாஸ்கந்தர் ஸ்தானத்தில் வள்ளிதெய்வானை சமேதராக முருகனும் தனி அம்மனாக தெய்வானையும் காட்சியளிப்பது இங்கு மட்டுமே.

சந்திரசேகர், பிரதோஷ நாயகர் முதலான மூர்த்திகளின் வலக்கரத்தில் வஜ்ர வேல் ஒளிர்கிறது. ஆக, எல்லாமே சுப்ரமண்ய சொரூபம் என்பதும் பிரதோஷத்தின்போது முருகனும் தெய்வானையும் சிறிய மயில் வாகனத்தில் உட்பிராகாரத்தில் வலம் வருவதும் குறிப்பிடத்தக்கன.

முருகன்
முருகன்

நடராஜர் இருக்கும் சந்நிதியில் தெற்கு நோக்கி ‘இரண்யாசுர சம்ஹார மூர்த்தி’ என்னும் வில்லேந்திய முருகன் வடிவம் உள்ளது. வலது முன்கரத்தில் அம்பும் இடது முன்கரத்தில் வில்லும் ஏந்தி, பின் இரு கரங்களில் வஜ்ரசக்தியும் சூலமும் கொண்டு, திரிபங்க வடிவில் திகழும் அற்புதமான விக்கிரகம். புராணப்படி சூரபத்மனின் மகன் இரண்யாசுரனை சம்ஹரிக்க எழுந்த கோலம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இடப்புறத்தில் நின்ற கோலத்தில் சோழர் காலத்து கலையம்சத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகிறாள் தெய்வானை. கந்தனின் முகத்தில் வெற்றிச் சிரிப்பையும் அருகில் அவனது அழகைப் பார்த்து இன்புறும் தேவசேனையின் முக வசீகரத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். மார்கழி திருவாதிரைத் திருநாளில், இந்த முருகனே நடராஜப்பெருமானாக பவனி வருவது, இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பம்சம்.

திருச்செந்தூருக்கும் திருவிடைக்கழிக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. செந்தூர் கடற்கரைத் தலம். திருவிடைக்கழி கடற்கரை அமைந்துள்ள பொறையாறுக்கு அருகில் உள்ள தலம். சூரபதுமனை வதம் செய்த தோஷம் நீங்க முருகன் சிவ வழிபாடு செய்த தலம் திருச்செந்தூர். சூரனின் மகனை வதம் செய்த தோஷம் நீங்க முருகன் வழிபாடு செய்த தலம் திருவிடைக்கழி.

முருகன்
முருகன்

ஏனைய தலங்களில் திரிசூலமே அஸ்திர தேவராக (தீர்த்தம் கொடுக்கும் வடிவமாக) அமைந்திருக்கும்; இங்கு வேலாயுதம் அஸ்திர தேவராகத் திகழ்கிறது.இத்தலத்தில் அனைத்து மூர்த்தங்களும் சுப்ரமண்ய சொரூபமாக விளங்குகிறது. இந்த அமைப்பு, இத்தலமே முருக வழிபாட்டில் முதன்மையானது என்பதை உணர்த்துகிறது. இது சிவாலய அமைப்பில் அமைந்த மிக விசேஷமான முருகன் ஆலயம்!

சென்னையிலுள்ள `சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழு'வினர் 2004-ம் ஆண்டில் ‘குஞ்சரி ரஞ்சித குமரன்’ (தேவசேனையை மகிழ்விக்கும் பெருமான்) என்னும் அரிய, புதுமையான பஞ்சலோக விக்கிரகத்தை இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்தத் திருவடிவில், இடப் புறத்தில் திகழும் தேவசேனையின் இடது தோளில் தன் இடது கரத்தை வைத்தபடி அருள்கிறார் முருகன். அவரின் வலக்கரம் அபய முத்திரையைக் காட்டுகிறது. தேவசேனையின் வலக்கரத்தில் நீலோத்பல மலர் திகழ்கிறது. ‘புகரில் சேவல’ என்று தொடங்கும் திருப்புகழில் ‘முருகனேசுர குஞ்சரி ரஞ்சித பெருமாளே’ என்று அருணகிரியார் அழைக்கும் முறையில் அமைந்த இந்தக் கோலம், வேறெங்கும் காண்பதற்கரியது.

சுவாமிமலை தேவசேனாபதி ஸ்தபதியாரின் புதல்வர்கள் இந்த விக்கிரகத்தை உருவாக்கினர். சிவாலயங்களில் சந்திரசேகரர் மற்றும் பிரதோஷ நாயகர் மூர்த்தங்களில் சிவன் - பார்வதியோடு காட்சியளிப்பார். தத்துவ அடிப்படையில் பார்வதியின் அம்சம் தெய்வானை. அந்த அமைப் பில் முருகன் - தெய்வானை இணைந்த இந்த வடிவம் தயாரிக்கப்பட்டது. திருமணப்பேறும் இனிய இல்லற வாழ்வும் அமைய இங்குவந்து தரிசித்து வேண்டிக்கொண்டால், விரைவில் அந்த வேண்டுதல்கள் பலிக்கும். வெளிப்பிராகாரத்தில் வடமேற்கில் குரா மரம் உள்ளதை முன்பே குறிப்பிட்டோம். முருகப்பெருமான் விரும்பி அணியும் மலர்களில் குரா மலர் குறிப்பிடத்தக்கது. பழநி மலையில் குரா மரத்தடியில் இடும்பனுக்கு முருகப்பெருமான் காட்சியளித்தார். அந்தச் சந்நிதி குராவடி வேலவர் சந்நிதி என்றழைக்கப்படுகிறது.

தெய்வத் தன்மையுடைய மலராகவும் தெய்வ மகளிரால் விரும்பப்படும் ஒப்பற்ற மலராகவும் உள்ளது குரா மலர். இம்மலர் இளவேனிற் காலத்தில் பூக்கும். அத்தருணத்தில் மிகுந்த மணத்தைக் காற்றில் பரப்பும். மலரில் தேனைப் பருகிட பல்வேறு வகையான வண்டுக் கூட்டங்கள் குரா மரத்தைச் சுற்றி மொய்க்கும். குரா மலரின் அரும்பு மிகக் கூர்மையுடையதாய் இருக்கும். ஆகையால், அதைப் பாம்பின் பல்லுக்கு உவமையாகக் கூறுவர். குரா மலரின் மணம் கயிலாயம், கந்தபுரி முதலான தெய்வலோகங்களில் வீசுகிறது என்பர்.

அதுமட்டுமா... சைவ, வைணவ, சாக்த, கௌமார சமய இலக்கியங்களிலும் பெளத்த, சமண சமய இலக்கியங்களிலும் இந்த மலர் விரிவாகப் பேசப்படுகிறது. இந்தக் குரா மரத்தடியில் முருகன் சிவனை பூஜித்தார் என்றும் இங்கு மிக்க மகிழ்ச்சி யுடன் உலா வந்தார் என்றும் அருணகிரியார் திருப்புகழில் அழகாகப் போற்றிப் பாடுகிறார். இப்படியான சிறப்புகள் மிகுந்த குரா மரத்தைத் தலவிருட்சமாகக்கொண்ட ஒரே முருகன் தலம் திருவிடைக்கழி மட்டுமே. எனவேதான் இதற்குக் குராவடி என்றும் பெயர்.

திருவிடைக்கழியை நாக தலம் என்று தல புராணம் கூறுகிறது. நாகமாகிய ராகு இத்தலத்தில் குரா மரத்தடியில் குமரனை வழிப்பட்டார். ‘குரா’ என்ற வார்த்தையைத் திருப்பினால் ‘ராகு’ என்று வருமல்லவா! இங்கு வந்து முருகனை வழிபட்டால், ராகு தோஷம் நீங்கும். நவகோள்களின் நாயகனும் அவர்களை ஆட்டுவிப்பவனுமாகிய குமரனே பிரதானமாக இருப்பதால், இங்கு நவகிரகச் சந்நிதி கிடையாது.

‘குராவடிக் குமரனைக் கும்பிடுவோர்க்கு அராவின் (ராகுவின்) தோஷம் நீங்கும்’ என்பது பலரும் உணர்ந்த அனுபவம். இடைக்கழி முருகனை வழிபட்டால் நவகோள்கள் நல்லதே செய்யும் என்பதை `திருவிடைக்கழி முருகர் அந்தாதி'யின் 71-ம் பாடல் உறுதி செய்கிறது.

குரா மரத்தடியில் ‘பத்ர லிங்கம்’ என்னும் பலி பீடம் உள்ளது. இதன் சிறப்பு என்ன தெரியுமா?

- காண்போம்...

கோமுக மகிமை!

தெய்வாம்சம் மிகுந்தது பசுவின் முகம். அதன் கண்களில் சூரிய சந்திரரும் முன் உச்சியில் சிவனாரும் இருக்கிறார்கள்; பசுவின் வாயிலிருந்து வரும் நீரில், கங்கை முதலான நவகோடி புண்ணிய தீர்த்தங்களும் அடங்கும் என்பது நம்பிக்கை.

கோமுக மகிமை
கோமுக மகிமை

இதையொட்டி, சிவாலயக் கருவறைகளில் புனிதநீர் பெருகிவழியும் இடத்தில் கோமுகம் அமைத்திருப்பார்கள். பிரதோஷ காலத்தில் இந்தக் கோமுகத்தைப் பார்வதிதேவியாகக் கருதி வணங்க வேண்டும் என்கின்றன பூஜா பத்ததி நூல்கள்!

- எம். குமரேசன், தூத்துக்குடி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism