திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

தேடி வந்து கோயில் கொண்டார்!

பாணிபாபா கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
பாணிபாபா கோயில்

அதிசயங்கள் நிகழும் நாச்சியாபுரம் பாணிபாபா கோயில்

`என்னிடம் வருபவன், ஆறு கடலுடன் கலப்பது போல் என்னுடன் சேர்கிறான்' என்பது ஷீர்டி ஶ்ரீசாயிபாபாவின் அருள்வாக்கு. உண்மைதான்.

ஷீர்டிக்குச் சென்று ஶ்ரீசாயியை தரிசிக்கும் கணத்தில், உணர்வால் உள்ளத்தால் அவரின் பாதாரவிந்தங்களில் ஐக்கியமாகிச் சிலிர்க்கும் அனுபவம் பக்தர்கள் பலருக்கும் வாய்த்தது உண்டு.

பாணிபாபா கோயில்
பாணிபாபா கோயில்

ஆனால் தென்னகத்திலுள்ள எல்லோருக்கும் ஷீர்டிக்குச் சென்று சாயியை தரிசிக்கும் பேறு கிடைத்துவிடுமா? பொருளாதார வசதியிருந்தும் தேகநிலை இடம்கொடுக்காத அன்பர்கள் பலர் உண்டு. பொருளாதார வசதியின்மை சிலருக்குத் தடையாகலாம்; வயோதிகம் தடுக்கலாம். இப்படியான அன்பர் களுக்குத் தன் அருளைப் பரிபூரணமாய் வாரி வழங்க அந்த சாயிநாதன் திருவுளம் கொண்டார் போலும்.

ஆகவேதான் அவரே தென்னகத்தைத் தேடி வந்துவிட்டார். ஆம், திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் நாச்சியாபுரம் எனும் ஊரில் மிக அற்புதமாகக் கோயில் கொண்டுவிட்டார். அங்கே ஷீர்டி சாயி, பாணிபாபாவாகவும் அருள்கிறார். அவருக்கு பக்தர்களே அபிஷேகம் செய்யலாம் என்பது கூடுதல் சிறப்பு. அக்கோயிலுக்கு வரும் அனைவருமே பாபாவின் அருளால் தங்கள் குறைகள் நீங்கிய நிம்மதியோடு செல்கிறார்கள்.

பாணிபாபா கோயில்
பாணிபாபா கோயில்

நாச்சியாபுரத்தில் பாபா கோயில் கொண்ட திருக்கதை குறித்து, கோயில் கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த டாக்டர் முத்தையா விடம் கேட்டோம்: ``சுமார் 20ஆண்டுகளுக்கு முன்பாக உடல் நலமில்லாமல் என்னிடம் ஒரு பெண் நோயாளி வந்தார். அவரைச் சோதனை செய்ததில் அவருக்கு ஓர் உயிர்க்கொல்லி நோய் இருப்பது தெரியவந்தது. நான் அதைத் தயங்கித் தயங்கி அவருக்குத் தெரியப்படுத்தினேன். ஆனால் அவரோ அதுகுறித்துப் பெரிதாகக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

`என்ன இவ்வளவு இயல்பாக எடுத்துக் கொண்டீர்கள்...' என்று கேட்டதற்கு, `எல்லாம் பாபா பார்த்துப்பார் சார்' என்றார். அப்போதுதான் நான் என் வாழ்வில் முதன்முறையாகப் பாபாவின் பெயரைக் கேள்விப்பட்டேன். சரி, அவரவர் நம்பிக்கை என்று விட்டுவிட்டேன்.

பாணிபாபா
பாணிபாபா

அதே பெண்மணியை அடுத்த சில ஆண்டுகளுக்குப் பின் பார்த்தேன். நல்ல ஆரோக்கியத்தோடு இருந்தார். அதே முக மலர்ச்சியோடு என்னோடு பேசினார். அதன் பிறகுதான் பாபா யார் என்று அறிந்துகொள்ள விரும்பினேன். பாபாவின் சத்சரிதம் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். அதன்பிறகு என்னிடம் வரும் நோயாளிகளில் பலர் பாபாவின் பக்தராக இருப்பதைத் தெரிந்துகொண்டேன். அவர்கள் அனைவருமே வைத்தியத்தைவிட பாபாவின் மீதே பெரும் நம்பிக்கை கொண் டிருந்தனர். அதனால் நோயோ, வேறு எதுவுமோ அவர்களைப் பெரிய அளவில் பாதிக்க வில்லை. அப்போதுதான் நான் பாபாவின் மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினேன்.

நானும் என் மனைவியும் ஷீர்டி போய் வந்தோம். மனம் நிறைந்த தரிசனம். வாழ் வில் அதுவரை இல்லாத பெரும் அமைதி மனத்தில் குடியேறியது. அதன்பின் என் வாழ்க்கை முழுவதும் பாபாவால் நிறைந்தது. பாபா என்னையும் என் குடும்பத்தையும் கூடவேயிருந்து காப்பதை நான் அறிந்துகொண்டேன். அப்போதுதான் என் மனத்தில் அந்த எண்ணம் தோன்றியது. தோன்றியது என்பதைவிடத் தோற்று விக்கப்பட்டது அதுவும் பாபாவால் என்றுதான் சொல்ல வேண்டும்.

என் கிராமத்தில் இருக்கும் இடத்தில் ஒரு சிறு கோயில் ஒன்றை எழுப்ப வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. சின்னக் கூரையோடு ஒரு பாபா கோயில். அவ்வளவுதான் திட்டம். இடத்தை அளக்க இன்ஜினீயரோடு சென்றோம். அப்போது உடன் வந்த நண்பரை ஓர் இடத்தைக் காட்டி இங்கு நில்லுங்கள், `இதுதான் பாபா சிலை வைக்கும் இடம்' என்று சொல்லி நிற்கவைத்துவிட்டு, என்னை ஓரிடத்தில் நிறுத்தி `இதுதான் வாசல்' என்ற இன்ஜினீயர் இங்கிருந்து பாபாவை தரிசனம் செய்யலாம் என்று விளக்கிக்கொண்டிருந்தார்.

பாணிபாபா கோயில்
பாணிபாபா கோயில்

அப்போது எங்கிருந்தோ ஒரு சுழற்காற்று புறப்பட்டு வந்தது. பாபா சிலைவைக்கும் இடம் என்று சொன்ன இடத்தில் நிலைகொண்டு சுழன்றது. நாங்கள் சிலிர்த்துப்போனோம். ஒரு நிமிடம் அளவிலே அந்த இடத்திலேயே சுழன்ற அந்தச் சுழல் அதன்பின் அங்கிருந்து விலகி மறைந்தது. அப்போதுதான் ஒன்று புரிந்தது. பாபா அந்த இடத்தில் வந்து வாசம் செய்யத் திருவுளம் கொண்டுவிட்டார் என்றும் அதற்கு ஒரு கருவியாகத்தான் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதையும் புரிந்துகொண்டேன். சாதாரணக் கொட்டகை யில் அமைய வேண்டிய ஆலயம் இப்போது பரந்துவிரிந்து ஒரு பேராலயமாக மாறிவிட்டது'' என்றார் சிலிர்ப்போடு.

பாதுகாப்புச் சுவர்களுக்கு நடுவே அழகுற அமைந்துள்ளது பாணிபாபா கோயில். கோயிலின் கோபுரம் ஷீர்டியில் உள்ள அமைப்பைப் போன்று வடிவமைக்கப் பட்டுள்ளது. உள்ளே நுழைந்ததும் வலப்புறம் கை கால்களைச் சுத்தம் செய்துகொள்ளவும் தாக சாந்திக்குக் குடிநீர் வசதியும் உள்ளது. அதைக் கடந்து சென்றால் `அன்னபாபா' தரிசனம். பெரிய பானையில் ஒன்றில் பாபா உணவைத் தயார் செய்வதுபோன்ற திருவடிவம். அங்கிருந்த பிரார்த்தனை அரங்கத்தில் பாபாவின் பாடல்கள் ஒலித்த வண்ணம் உள்ளன. அனைவரின் மனமும் சாயியின் நாமத்திலேயே ஒருநிலைப்படுகிறது. மூலவர் ஷீர்டி பாபாவுக்கு இடப்புறத்தில்தான் பாணி பாபாவின் திருவுருவம் அமைந்துள்ளது.

மேலும் கோயிலுக்குள் ஒரு விநாயகர் சந்நிதியும் உள்ளது. பக்தர்களுக்கு விபூதி உருவாக்க தூனி அமைந்துள்ளது. இங்கு பூஜை செய்து கிடைக்கும் சாம்பலே விபூதியாக வழங்கப்படுகிறது.

``2018 ஏப்ரல் மாதம் இந்தக் கோயிலைக் கட்ட ஆரம்பித்தோம். வேலைகள் எல்லாம் அசுர வேகத்தில் நடந்தன. அதே ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தி முடித்துவிட்டோம். எங்களாலேயே இதை நம்ப முடியவில்லை. இந்தப் பகுதியின் முக்கியத் தேவை தண்ணீர். அதனால்தான் இங்கு பாபாவுக்குத் திருநாமம் சூட்டும்போதே பாணிபாபா என்று சூட்டினோம். பாணி என்றால் தண்ணீர். பாணிபாபாவுக்கு யார் வேண்டுமானாலும் அபிஷேகம் செய்யலாம் என்று வைத்தோம்.

பாணிபாபா கோயில்
பாணிபாபா கோயில்

மக்கள் ஆர்வமுடன் அபிஷேகித்து மகிழ்ந் தனர். அதன் பலன் இந்தப் பகுதியின் தண்ணீர்ப் பஞ்சம் முற்றிலும் நீங்கிவிட்டது. இந்தப் பகுதி மக்கள் பாபாவைத் தங்கள் இஷ்ட தெய்வமாகவே கொண்டாடத் தொடங்கி விட்டார்கள்.

ஷீர்டியில் நடைபெறும் பூஜா முறைகளே இங்கும் பின்பற்றப்பட வேண்டும் என்று உரிய பூஜாமுறைகளை அறிந்த அஜய் பாண்டே என்கிற புரோகிதரை வரவழைத்துள்ளோம். அவர் சிறப்பாக பூஜைகளைச் செய்து வருகிறார். இங்கு பாபாவிடம் வைக்கப்படும் வேண்டுதல்கள் உடனே நிறைவேறுவதாகச் சொல்வதைக் கேட்கும்போது மனம் மகிழ்கிறது. பாபாவே விரும்பிவந்து அமர்ந்த தலம் அல்லவா... அதனால் மகிமையும் அதிகமாகத்தான் இருக்கும்.

சென்ற ஆண்டு ராமநவமி, குரு பூர்ணிமா, விஜயதசமி, வருஷாபிஷேகம் அனைத்தையும் சிறப்பாகச் செய்து முடித்தோம். இந்த ஆண்டும் அதேபோன்று விழாக்கள் தொடரும். எல்லாம் பாபாவின் மகிமையே தவிர வேறில்லை'' என்றார் டாக்டர் முத்தையா சிலிர்ப்போடு.

நீங்களும் ஒருமுறை பாணிபாபா கோயிலுக் குச் சென்று, பாபாவை தரிசித்து வழிபட்டு வரம்பெற்று வாருங்கள்.

எப்படிச் செல்வது ? சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ளது நாச்சியாபுரம்

(தொடர்புக்கு 98410 37533).