பழைமையான சிவாலயங்கள் நிறைந்தது தொண்டை மண்டலம். அவற்றில் சில பிரபல மாகத் திகழ்ந்தாலும்; சில கோயில்கள் அறியப் படாமலேயே இருக்கின்றன. அப்படியான கோயில்களில் ஒன்று தையூர் அழகிய சொக்க நாதர் ஆலயம்!

தையூர் என்ற இடம், சென்னை - பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்த ஒரு குடியிருப்புப் பகுதி. காரப்பாக்கத்திலிருந்து சுமார் இரண்டரை கி.மீ. தொலைவிலும் மகாபலிபுரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது.
இன்று வானை முட்டும் நவீன அடுக்குமாடி கட்டடங்கள் நிறைந்திருக்கும் இந்த இடம், ஒரு காலத்தில் வளமையும், செழுமையும் நிறைந்த ஊராக விளங்கியதை, இலக்கியங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் வாயிலாக அறியலாம். திருவையாறு, திருமயிலை போல இவ்வூரிலும் சப்த சிவத்தலங்கள் இருந்திருக்கின்றன.
தையூரைப் பற்றிய பண்டைய தகவல்கள், `உத்தண்டன் கோவை' எனும் சிற்றிலக்கிய நூல் வாயிலாக வெளிப்படு கின்றன. இது பல பகுதிகளாகச் சுவடி வடிவில் கிடைத்ததனால், இதன் ஆசிரியர் யாரென உறுதிபட அறியமுடியவில்லை. உத்தண்டன் என்பவன் இந்தப் பகுதியை ஆண்ட குறுநில மன்னன். இவன் காலத்தில் இவ்வூர் எத்தகைய சிறப்புகளைப் பெற்றிருந்தது என்பதை இந்நூல் குறிப்பிடுகிறது.
`தை' என்றால் அலங்காரமான, அழகிய, இணைக்கின்ற அல்லது மரக்கன்றுகள் நிறைந்த என்று பொருள் கொள்ளலாம். இவ்வூரிலே உள்ள ஒரு சிவாலய இறைவனின் பெயர் அழகீஸ்வரர். மேலும் இவ்வூரின் பெரிய கோயில் இறைவனின் திருப்பெயர் - லான முருகீஸ்வரர். இவரை ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஒன்று `அழகிய சொக்கனார்' என்று குறிப்பிடுகிறது. இதன் மூலம் இவ்வூர் மிக அழகிய சோலைகள் நிறைந்த, பயிர்வளம் பெருகிய ஊராக இருந்திருக்கலாம் என்று அறிகிறோம்.

திருவிடந்தை நித்தியகல்யாண பெருமாள் கோயிலில் இருக்கும் 6 கல்வெட்டுகள், இவ்வூரைச் சார்ந்தவர்கள் கொடுத்த கொடை களைக் குறிப்பிடுகின்றன. அவற்றில் மூன்று கல்வெட்டுகள், முதலாம் ராஜராஜன் காலத்திற்கும் முற்பட்டவை. அவற்றில் இவ்வூர் `தலசயனபுரம்' என்று குறிப்பிடப்படுகிறது.
இவ்வூரின் ஒரு பகுதியாக விளங்கிய `செங்கண்மால்' ஆலயத்தின் பள்ளிகொண்ட விஷ்ணுவின் பெயரால் இவ்வாறு வழங்கிய தாகத் தெரிகிறது. இங்குள்ள ஆலயங்களில் முக்கியமானதும் மிக சிறப்பாகப் பராமரிக்கப் பட்டு வருவதுமான ஆலயம், மரகதவல்லி அம்பாள் சமேத முருகீஸ்வரர் ஆலயம்.
முருகப்பெருமான், திருப்போருரிலே தாரகா சுரனுடன் வான் மார்க்கமாக போரிடுவதற்கு முன்பாக, இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாகத் தலவரலாறு தெரிவிக்கிறது.
ஆலய முகப்பில் உள்ள மண்டபத் தூணில் முருகன் மயில் மீது ஏறி, வில் அம்போடு போர் புரிய புறப்படும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. பிற்கால பல்லவர்கள் காலத்தில் இவ்வாலயம் கட்டப்பட்டதற்குச் சாட்சியாக, இங்கிருக்கும் பிள்ளையார் மற்றும் சண்டிகேஸ் வரர் திருமேனிகள் காட்சியளிக்கின்றன.
பிள்ளையார், பின்னிரு கரங்களில் மழுவும் தந்தமும் ஏந்தி, முன்னிரு கரங்களில் ஏடும், மோதகமும் கொண்டு வீற்றிருக்கிறார். இவரின் பீடத்தில் `ஶ்ரீஉருமேற்று' என்ற வாசகம் காணப் படுகிறது. இது `கடுமையான இடி' என்ற பொருளைத் தருவதாகக் கல்வெட்டு அறிஞர்கள் கருதுகிறார்கள். இது பல்லவர்களின் பட்டப் பெயரான `பகாபிடுகு' என்னும் சொல்லைக் குறிக்கக் கூடும்.

மூலவர் முருகீஸ்வரர், கிழக்கு நோக்கிய கருவறையில் காட்சியளிக்கிறார். விஜயநகர காலம் (15-ம் நூற்றாண்டு) முதல் இவர் முருகீஸ் வரமுடைய நாயனார் என்று வழங்கப்படுகிறார். கருவறை முகப்பில் இரு புறமும் குறுஞ்சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றில், ஆலயத்தில் நந்தா விளக்கு வைத்தவர்களின் உருவங்களும் செதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருவறை முகப்பு, அர்த்த மண்டபம், மஹா மண்டபம் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் வியாக்கிரபாதரின் உருவம் காணப்படுகிறது. விமானம் ஒரு கோபுரத்தைப் போல் மூன்றடுக்கு கொண்டதாக விளங்குகிறது.
மகா மண்டபத்தில் நடுநாயகமாக மணல் கல்லாலான முருகப் பெருமான் காட்சியளிக் கிறார். மணல்கல்லுக்கு `தைஜகம்' என்று ஒரு பெயருண்டு. இதனாலேயே இவ்வூருக்கு இந்தப் பெயர் வந்ததாகச் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. முருகனைச் சுற்றி பிற்கால தேவியர், சண்டிகேஸ்வரர், மற்றொரு முருகன், மகாவிஷ்ணு, பராசக்தி, காலபைரவர், சூரியன் ஆகியோர் காணப்படுகின்றனர்.
அம்பாள் மரகதாம்பிகை, தனிச் சந்நிதியில் அருள்கிறாள். பக்தர்களை நாடிச் சென்று அருள்புரிவதில் இந்த அம்பிகைக்கு நிகரில்லை.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பெண் மணிக்கு பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. ஓரு நாள் அந்தப் பெண்ணின் கனவில் தோன்றிய மரகதாம்பிகை அவர்கள் தையூருக்கு வந்தால், தான் குழந்தை வரம் தருவதாக அருளியிருக்கிறாள்.
அப்பெண்ணுக்கோ, அவளின் குடும்பத்தி னருக்கோ தையூர் எங்குள்ளது என்றே தெரிய வில்லை. ஏறக்குறைய மூன்று மாத காலம் தேடி ஒரு வழியாக இந்த ஆலயத்திற்கு வந்திருக்கின்ற னர். இங்கு வழிபட்டுச் சென்ற ஓர் ஆண்டில் அப்பெண்ணுக்கு இரட்டைக் குழ்ந்தைகள் பிறந்தனவாம். பின்னர் குழந்தைகளுடன் ஆலயத்துக்கு மீண்டும் வந்து, நடந்த அற்புதங்களை எல்லாம் கூறிச் சென்றாளாம்.


பிராகாரத்தில் புத்தம் புதிய கொடிமரம் ஜொலிக்கிறது. வெளிப்புறச் சுவர்கள் முழுவதும் நாயக்கர் பாணி குறுஞ்சிற்பங்கள் மிக அழகாக காட்சியளிக்கின்றன. கும்ப பஞ்சரங்களில் குரங்குகள் குதூகலித்து விளையாடுகின்றன. காரைக்கால் அம்மையார், கண்ணப்ப நாயனார், கிராத அருச்சுனர் போர் புரிதல், பீமன் மற்றும் வியாக்ரபாதரின் சரித்திரம் செதுக்கப்பட்டுள்ளது.
மேலும் யானை, பசு, கடகம், பார்வதி தேவியார், முருகன் ஆகியோர் இறைவனை வணங்கும் காட்சிகளும், தேவார முதலிகளும், அரசர்களும் காணப்படுகின்றனர். இவ்வாலயத் தின் ஸ்தல விருட்சம் மாமரம். இங்குள்ள நந்தவனம் மிகச் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. அருகிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் வார இறுதி நாட்களில் இங்கு வந்து உழவாரப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
வைகாசி விசாகத்தன்று இறைவன் – இறைவி திருக்கல்யாணம் வெகு விமரிசையாகக் கொண் டாடப்படுகிறது. ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், மாசி சிவராத்திரி ஆகியவையும் சிறப்பாகக் கொண் டாடப்படுகின்றன. இந்த ஆலயம் காலை 7:30 முதல் 9:30 மணி வரையிலும்; மாலை 6 முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும் (தொடர்புக்கு - 99401 26814).

வழக்கில் வெற்றி வேண்டுமா?
போரில் வெற்றி பெற முருகன் வழிபட்ட தலம் ஆதலால் வழக்கு, வியாஜ்ஜியங்களில் சிக்கித் தவிப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால், நல்ல சுமுகமான தீர்வு ஏற்படுகிறது.
இங்கே சுற்றுவட்டாரப் பகுதியில் 7 ஆலயங்கள் தையூரின் சப்த ஸ்தான ஆலயங்களாக கருதப்படுகின்றன. அவை: செங்கண்மால் கோயில், முருகீஸ்வரர் ஆலயம், இதன் அருகிலுள்ள மாரீஸ்வரர் ஆலயம், ஜலகண்டேஸ்வரர் ஆலயம், சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள அழகேஸ்வரர் ஆலயம், கோமளீஸ்வரர் ஆலயம், சோழந்தாங்கல் எனும் ஊரில் உள்ள வானம் பார்த்த ஈசன் ஆலயம்.
இந்த ஏழு தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் சகல பாக்கியங்களையும் பெறலாம் என்கிறது, தையூர் தலபுராணம்!