Published:Updated:

சங்கடங்கள் தீர்க்கும் சுயம்பு சனி... மகாபெரியவா பிரதிஷ்டை செய்த சோழவந்தான் படித்துறை சனிபகவான்!

சனிபகவான்
சனிபகவான்

சிறியவர் முதல் பெரியவர்வரை அந்தப் பகுதியில் பணி செய்துகொண்டிருந்தபோது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. மாவலிங்க மரத்தடியில் சுத்தம் செய்துகொண்டிருந்த பாலகன் ஒருவன் அங்கு தடுக்கி விழுந்தான். எது தடுக்கியது என்று அவன் பார்த்தபோது ஒரு கல்லால் ஆன விக்ரகம் போல ஏதோ தட்டுப்பட்டது.

நவகிரகங்களில் சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவார். இவரே ஒருவரின் வாழ்வில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துவார் என்பது ஜோதிட நம்பிக்கை. அப்படிப்பட்ட சனிபகவான் பெரும்பாலும் அனைத்து சிவாலயங்களிலும் நவகிரகங்களில் ஒருவராகவும் சில ஆலயங்களில் தனிச்சந்நிதி கொண்டும் அருள்பாலிப்பார். அதேபோன்று சனிபகவானே மூலவராக அருள்பாலிக்கும் தலங்களும் சில உண்டு. அவற்றுள் சுயம்புவாய் எழுந்தருளி பக்தர்களின் சங்கடங்கள் தீர்க்கும் மங்கள சனியாக அருள்பாலிப்பவர் சோழவந்தான் படித்துறை சனீஸ்வரர்.

சனிபகவான்
சனிபகவான்

சோழவந்தான், மதுரை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் தலம். இங்கு பாயும் வைகை ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது சனிபகவான் ஆலயம். முன்னொரு காலத்தில் நந்தவனமாக பூக்களின் புகலிடமாக விளங்கிய இந்த சோலைவனத்தில் பாரிஜாதம், நாகலிங்கம், மாவலிங்கம் உள்ளிட்ட பல்வேறு மரங்களும் மூலிகை செடிகளும் நிறைந்து விளங்கியிருக்கின்றன. எழில் கொஞ்சும் இந்தப் பிரதேசத்தில் இறைவனுக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட முடிவு செய்தனர் இந்த ஊர் மக்கள்.

சிறியவர் முதல் பெரியவர்வரை அந்தப் பகுதியில் பணி செய்துகொண்டிருந்தபோது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. மாவலிங்க மரத்தடியில் சுத்தம் செய்துகொண்டிருந்த பாலகன் ஒருவன் அங்கு தடுக்கி விழுந்தான். எது தடுக்கியது என்று அவன் பார்த்தபோது ஒரு கல்லால் ஆன விக்ரகம் போல ஏதோ தட்டுப்பட்டது. ஊர் மக்களைக் குரல் கொடுத்து அழைத்தான் சிறுவன். எல்லோரும் ஓடிவந்து அந்த இடத்தைத் தோண்டினர்.

அப்போது அங்கு அவர்களுக்கு ஓர் அழகிய விக்ரகம் கிடைத்தது. கண்டதும் அதை முருகப் பெருமான் என்றே முடிவு செய்தனர். ஆனால் உற்றுநோக்கினால் சிறு சந்தேகம் வந்தது. விக்ரகத்தில் இருந்த பறவையின் இறகுப் பகுதியில் இருந்து ஒரு நிஜ இறகு ஒன்று உதிர்ந்தது. என்ன அதிசயம் அது காகத்தின் இறகு. இப்போது விக்ரகத்தை சிற்ப சாஸ்திரம் தெரிந்தவர்கள் நன்கு ஆராய்ந்து அது முருகன் இல்லை. சனிபகவான் என்பதை எடுத்துச் சொல்லினர்.

சனிபகவான்
சனிபகவான்

சுயம்புவாய் சனிபகவான் சிலைகள் கிடைத்த தலங்கள் என்பன மிகவும் அபூர்வமானவை. எனவே சனிபகவானுக்கு இங்கு தனி ஆலயம் எடுக்க விரும்பினர் ஊர்மக்கள். ஆனால் அவர்கள் மனதில் பல சந்தேகங்கள். சனிபகவானை மூலவராக வைத்துக் கோயில் எழுப்பலாமா... என்று திகைத்தனர். தங்களுக்கு வழிகாட்ட மகான் ஒருவரின் உத்தரவு தேவை என்று எண்ணினர்.

அப்போதுதான் கலியுகத்தின் காருண்ய மூர்த்தி மகாபெரியவாவின் காதுகளுக்கு இந்தச் செய்தி எட்டியிருக்கிறது. அவர் நேரடியாக இந்தத் தலத்துக்கு வந்து விக்ரகத்தைக் கண்டார். அங்கே சனிக்கெனத் தனிக்கோயில் அமைக்க உத்தரவிட்டார். அவரின் சொல் விரைவில் செயல்வடிவம் பெற்றது.

சனிபகவானுக்குக் கோயில் எழுந்தது. மகாபெரியவா வந்திருந்து பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வித்தார். பகவான் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது ஒரு விசாக நட்சத்திர நாளில். எனவே விசாக நட்சத்திரக் காரர்கள் அந்த ஆலயத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால் தீராத வினைகள் எல்லாம் தீர்வதைக் கண்ணாரக் கண்டனர். சனிதசை நடப்பவர்கள் இங்குவந்து பகவானை தரிசித்து விளக்கேற்றி வழிபட்டால் சனியின் பார்வையால் விளையும் கெடுபலன்கள் உடனே நீங்கி நல்லபலன்கள் பெருகுகின்றன என்கின்றனர் பலன் பெற்ற அன்பவர்கள். எந்த மாவலி மரத்தின் அடியில் சுவாமி எழுந்தருளினாரோ அந்த மாவலி மரமே இங்கு தலவிருட்சமாய் உள்ளது.

சனிபகவானுக்கு தீபம்
சனிபகவானுக்கு தீபம்

இத்தலத்தின் அர்ச்சகர் ராமசுப்பிரமணியனிடம் பேசினோம்

"சனீஸ்வரன் தனிக்கோயிலாக விளங்குவது இத்தலத்தின் சிறப்பு. சமீபத்தில் இங்கு ராகு - கேதுவும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இங்கு பகவானை தரிசனம் செய்யப் படியேறி வரவேண்டும் என்பதால் சுவாமிக்குப் 'படித்துறை சனீஸ்வரன்' என்ற திருநாமமும் உண்டு. படியேறி வருபவர்களின் பாவங்களை பகவான் தன் அருள்பார்வையால் தீர்த்துவைக்கிறார். மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரியது என்பது போல இந்த சுவாமியின் சிறப்புகள் அநேகம். இந்தத் தலத்தில் சுவாமி அனுமன் போல் கையில் கதாயுதம் வைத்திருப்பது விசேஷம். பக்தர்களின் துன்பங்களையும் சத்ருக்களையும் பகவான் கதாயுதம் கொண்டு விரட்டி அடிப்பார் என்பது நம்பிக்கை.

சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்ட விசாகநட்சத்திர நாளில் இங்கு 11 வகை அபிஷேகங்கள் நடைபெறும். அதேபோன்று ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். யாரும் விரதம் இருந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் 'வேண்டியது விரைவில் நிறைவேறும்' என்று கடைப்பிடித்துப் பலன் கண்டபக்தர்கள் சொல்கிறார்கள். நெய் விளக்கு, எள் விளக்கு ஆகியன இந்த சுவாமிக்கு உகந்தன. அதேபோல இந்த சுவாமி அன்னதானப் பிரியர். இங்கு அன்னதானம் செய்யும் பக்தர்களின் வாழ்வில் உள்ள குறைகள் அனைத்தும் நீங்குவதோடு நினைத்த காரியங்களும் கைகூடுகின்றன. அவ்வாறு அன்னதானம் செய்து பலநூறு பக்தர்கள் குழந்தையின்மை, சொத்துப் பிரச்னை, உறவுச் சிக்கல்கள், வறுமை போன்ற சகல விதமான துன்பங்களும் நீங்கப்பெற்றுள்ளனர்.

சில குழந்தைகள் காரணமின்றித் தொடர்ந்து அழுதுகொண்டேயிருக்கும். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இத்தலத்தின் விருட்சமான மாவலிங்கமரத்தின் இலை எடுத்து குழந்தைகளின் படுக்கைக்கு அடியில் வைத்தால் குழந்தைகள் பயம் நீங்கி நிம்மதியாக உறங்கும் என்று இந்த ஊர்மக்கள் நம்புகிறார்கள்.

முன்பெல்லாம் சுற்றியிருக்கும் கிராமங்களிலிருந்து பக்தர்கள் வண்டி கட்டிக்கொண்டு வந்து வைகையில் நீராடி சுவாமி தரிசனம் செய்து திரும்பிச் செல்வார்கள். இங்கு தரிசனம் செய்வதன் காரணமாக குடும்பத்தில் இருக்கும் கடன் பிரச்னைகள் நீங்குவதோடு செல்வ வளமும் கிடைக்கும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை. மாணவர்கள் இங்குவந்து வேண்டிக்கொண்டால் கல்வியில் மேன்மை பெறுகின்றனர்.

விசாக நட்சத்திரத்திம் விருச்சிக ராசியில் நீச்சமடையும் கிரகம் சந்திரன். அதனால் அந்த ராசிக்காரர்கள் மனக்குழப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள் ஜாதகத்தில் சந்திரன் வலிமையாக இல்லாமல் இருக்கும் விசாக நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் மனவலிமை அதிகரிப்பதோடு துணிவும் தன்னம்பிக்கையும் மேம்படும் என்பதால் ஏராளமான விசாக நட்சத்திரக் காரர்கள் இங்குவந்து வழிபட்டுச் செல்கிறார்கள்" என்றார் ராமசுப்பிரமணியன்.

சோழவந்தான்
சோழவந்தான்

கோயிலை வலம்வந்தபோது அங்கு தீபமேற்றி வழிபாடு செய்துகொண்டிருந்த உள்ளூர் பெண் பக்தர் ஒருவரோடு பேசினோம்.

"எங்க ஊர்ல சனீஸ்வரன் ரெம்பவும் விசேசமானவர். நினைத்த காரியங்கள நிறைவேற்றி கொடுப்பவர். 'மண்டைக்கு பத்துபோடாம, எட்டா குலையையும் எட்டிக்கொடுப்பார்' ன்னு எங்க ஊர்ல சொல்லுவாங்க. அதாவது முடியாது என்கிற காரியத்தை சுலபமாக முடித்துக்கொடுப்பார் என்பது இதன் பொருள். என் குடும்பத்தில் நிறைய பிரச்னைகள் இருந்தன. தெரிஞ்ச அம்மா ஒருவர் 'இந்த சனீஸ்வரனை வேண்டிக்கோ' என்று சொன்னாங்க. நானும் நம்பிக்கையோடு இங்கு வந்து வேண்டிக்கிட்டேன். சில நாள்களிலேயே அனைத்துப் பிரச்னையும் சரியாகிவிட்டன. அதற்கு நன்றிக் கடனாத்தான் இப்போது ஒவ்வொரு சனிக்கிழமையும் கோயிலுக்கு வந்து வேண்டிக்கிறேன்" என்றார் பக்திப் பெருக்கோடு.

சங்கடங்கள் தீர்க்கும் சோழவந்தான் சனீஸ்வரன் கோயில் இந்து அறநிலையத்துறையின் ஒருவேளை பூஜை திட்டத்தில் செயல்பட்டுவருகிறது. விளக்கேற்றினாலே அள்ளி வழங்கும் வள்ளலாகத் திகழும் இந்த சனிபகவானுக்கு சகல பூஜைகளையும் காலம் தவறாமல் செய்தால் கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டோம். 'அந்தக் காலம் விரைவிலேயே வந்து சேரும்' என்பதுபோல அர்ச்சகர் அப்போது சுவாமிக்கு தீபாராதனை காட்டி ஆலய மணியை ஒலிக்கச் செய்தார்.

எப்படிச் செல்வது ?! மதுரையிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது சோழவந்தான். இங்கு வைகை நதிக்கரையோரம் அமைந்துள்ளது இந்தக் கோயில்.

தொடர்புக்கு : 9865318657

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

சக்தி விகடன் நடத்தும் சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம்

சக்தி விகடனும் ஶ்ரீவிஜய விஸ்வமாதா ராஜராஜேஸ்வரி பீடமும் இணைந்து வழங்கும் இந்த ஹோமம், பாண்டிச்சேரி - கடலூர் மார்க்கத்தில், இடையார்பாளையம் கிராமம் அருகில் ஞானமேடு கிராமத்தில் (சப்தகிரி நகர்) உள்ள அருள்மிகு சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

பைரவ குருஜீ முத்து குருக்கள் தலைமையில் ஹோமபூஜைகள் நடைபெறவுள்ளன. இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜையும், தேய்பிறை அஷ்டமி பூஜையும் மிகவும் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக சிறப்பு ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.

சனிப்பெயர்ச்சி பரிகார ஹோம வைபவத்தில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கிரகங்களின் மூலமந்திர ஹோமம், ம்ருத்யுஞ் ஜய ஹோமம், சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம் ஆகியன நடைபெற உள்ளன.

நீங்களும் இந்த ஹோமத்தில் சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அடுத்த கட்டுரைக்கு