Published:Updated:

`அதிகாலை நேரம்; மொத்தமே 10 பேர்!’ - எளிமையான முறையில் நடந்த குடியாத்தம் சிரசுத் திருவிழா

கோயிலுக்குள் வலம்வந்த அம்மனின் சிரசு
கோயிலுக்குள் வலம்வந்த அம்மனின் சிரசு

லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும் புகழ்பெற்ற குடியாத்தம் சிரசுத் திருவிழா மிகவும் எளிமையான முறையில் இன்று அதிகாலை நடைபெற்றது.

தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அம்மன் கோயில் திருவிழாக்களில், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள கெங்கையம்மன் சிரசு பெருவிழாவும் ஒன்று. ஆண்டுதோறும் வைகாசி முதல் நாள் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெறும். காப்புக் கட்டுதலுடன் தொடங்கி லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் சிரசு மிதந்து வரும். அப்போது, தாரைத் தப்பட்டை முழங்க மேள தாளங்களுடன் அம்மனுக்குச் சீர்வரிசை எடுத்து வரப்படும்.

கடந்தாண்டு விமர்சையாக நடைபெற்ற திருவிழா
கடந்தாண்டு விமர்சையாக நடைபெற்ற திருவிழா

ஊர்வலத்தைத் தொடர்ந்து சண்டாளச்சி அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அதன் பிறகு, கெங்கையம்மன் சாந்த சொரூபியாக மாறி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்தக் காட்சியைக் காண அவ்வளவு சிறப்பாக இருக்கும். சிரசு விழாவையொட்டி, அன்று ஒரு நாள் வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையும் விடப்படும்.

இந்த நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து மத விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், புகழ்பெற்ற சிரசுத் திருவிழாவுக்கும் அனுமதியில்லை என்று வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதனால், வேலூர் மாவட்ட மக்கள் மிகுந்த மன வருத்தத்துக்குள்ளாகினர்.

கோயிலுக்குள் வலம்வந்த அம்மனின் சிரசு
கோயிலுக்குள் வலம்வந்த அம்மனின் சிரசு

‘‘பல நூறு ஆண்டுகளாகத் தொன்றுதொட்டு நடைபெற்றுவரும் சிரசுத் திருவிழாவுக்குத் தடைபோட வேண்டாம். அது, நம்பிக்கை அடிப்படையில் விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, 10 நபர்கள் மட்டும் கலந்துகொண்டு சிரசுத் திருவிழாவைத் நடத்தி முடிக்க அனுமதி வழங்க வேண்டும்’’ என்று கோயில் நிர்வாகம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பல கட்டமாக ஆலோசனை நடத்தப்பட்ட பிறகு திருவிழாவை நடத்திக்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

பக்தர்கள் கூடுவதைத் தவிர்க்கவும் அவர்கள் வீட்டிலிருந்தபடியே அம்மனைத் தரிசனம் செய்யவும் உள்ளூர் தொலைக்காட்சியில் சிரசு நிகழ்வை ஒளிபரப்பு செய்ய கலெக்டர் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, இன்று அதிகாலை 1.30 மணியிலிருந்து 3 மணிக்குள்ளாகப் பாரம்பர்ய ஆகம விதிகளின்படி அம்மனின் சிரசை கோயிலுக்குள்ளேயே உலா வரச்செய்து சண்டாளச்சியம்மன் உடலில் பொருத்தி கண் திறக்கச் செய்தனர்.

இன்று அதிகாலை எளிமையாக நடைபெற்ற திருவிழா
இன்று அதிகாலை எளிமையாக நடைபெற்ற திருவிழா

பின்னர், சிரசு பிரித்தெடுக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மிகவும் எளிமையான முறையில் ஒன்றரை மணி நேரத்தில் திருவிழா நடந்துமுடிந்தது. அதிகாரிகளின் மேற்பார்வையில் விழா அமைப்பைச் சேர்ந்த 10 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். பக்தர்கள் கூடுவதைத் தவிர்க்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. எப்படியாகினும், சிரசுத் திருவிழா நடத்தப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு