Published:Updated:

சிவ மகுடம்-75

சிவ மகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவ மகுடம்

மங்கையர்க்கரசியார் சரிதம் ஆலவாய் ஆதிரையான் ஓவியங்கள்: ஸ்யாம்

சிவ மகுடம்-75

மங்கையர்க்கரசியார் சரிதம் ஆலவாய் ஆதிரையான் ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
சிவ மகுடம்
பிரீமியம் ஸ்டோரி
சிவ மகுடம்

பெரும் வரம் கிடைத்தது!

திருவாய்மூர் எனும் அந்தத் தலம் பெரும்பேறு பெற்றது அன்று. அவ்வூரில் கோயில்கொண்டிருக்கும் இறை, தன் அன்புக்கினிய பிள்ளைக்கும், பக்தர்தம் நெஞ்சத்தில் நிறைந்த அப்பர் பெருமானுக்கும் திருவருள் புரிந்ததுடன், அவர்கள் மூலம் நம்மைப்போன்றோருக்கும் பெரும் வரம் ஒன்றைத் தந்தது!

சிவ மகுடம்-75

வத்தில் சிறந்த முதிர்வைக் காட்டும் தாழ்சடை, துவஜ மாகவும் வாகனமாகவும் திகழும் விடை, ஒருபாதியில் உமையுருவைத் தன்னுள் காட்டியருளும் கருணைக் கொடை ஆகிய அனைத்தும் பொலிய சீர்காழிப்பிள்ளைக்குச் சிவம் காட்சி கொடுத்தது. பிள்ளை அந்த அற்புதக் காட்சியை திருநாவுக்கரசருக்கும் காட்டினார்.

சிவத் திருக்கோலம் சிந்தையை நிறைக்க பரவசத்தில் சிலிர்த்துப் போனார் திருநாவுக்கரசர்!

அடியார்கள் யாவரும் பாடிப் பரவ, கணங்களும் பூதங்களும் சூழ்ந்திருக்க, ஆடல்வல்லானின் ஆடலுக்கேற்ப முழவங்கள் முழங்கும் சூழலைக் கண்டார். அனைத்துக்கும் நாயகமாக - அழகிய கரத்தில் அனல் ஏந்தியவரும், காந்தள் மலரும் நாகமும் பொருந்திய சடையில் கங்கையைத் தரித்தவரும், கொக்கின் சிறகைச் சூடியவரும், கொன்றை மாலையை அணிந்தவரும், உலர்ந்த தலையோட்டினைக் கையில் கொண்டவருமாக திருவாய்மூர் இறைவனை தரிசித்து அகம் மகிழ்ந்தார்.

இன்னும் பல காட்சிகளைக் கண்டு ஆனந்தம் கொண்ட அப்பர் பெருமான் அந்தக் காட்சியைப் பதிகமாக்கி நமக்கும் காட்டுகிறார் பாருங்கள்...

பாலின் மொழியாளோர் பாகங் கண்டேன்
பதினெண் கணமும் பயிலக் கண்டேன்
நீல நிறமுண்ட கண்டங் கண்டேன்
நெற்றி நுதல்கண்டேன் பெற்றங் கண்டேன்

காலைக் கதிர்செய் மதியங் கண்டேன்
கரந்தை திருமுடிமேல் தோன்றக் கண்டேன்
மாலைச் சடையும் முடியுங் கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே


ஆம்! பால் போன்று இனிக்கும் மொழியா ளாகிய பார்வதிதேவியை ஒரு பங்காகப் பெற்ற பரமனின் திருக்கோலக் காட்சியைப் பதிகமாகப் பாடி நமக்கும் கொடுத்தருளிவிட்டார் அப்பர் பெருமான். திருவாய்மூர் இறைவனைப் போற்றும் திருத்தாண்டகப் பாடல்கள் நமக்குக் கிடைத்தது, நாம் பெற்ற பெரும் வரம் அல்லவா?!

திருவாய்மூரில் இருந்து அப்பர்பெருமானும் திருஞானசம்பந்தரும் மீண்டும் திருமறைக்காட்டுக்குச் சென்று தங்கினார்கள். அவர்கள் அங்கு சென்றடைந்த ஓரிரு நாள்களில், பாண்டிய நாட்டுத் தூதுவர்கள் சீர்காழிப் பிள்ளையைச் சந்தித்தார்கள்.பாண்டிமாதேவியாரின் ஆணைக்கு ஏற்ப, பேரமைச்சர் குலச்சிறையாரின் வழிகாட்டு தலுடன், அவர்கள் இருவருடைய விண்ணப்பம் அடங்கிய ஓலையோடு வந்து சந்தித்தார்கள் அந்தத் தூதுவர்கள்!

பாண்டிய தேசத்தின் பிற்கால சரித்திரத் தையே மாற்றி அமைத்த அந்தச் சந்திப்பு நிகழ்வதற்கு முந்தைய நாள்களில், காலம் தன் கடமைகளைச் செவ்வனே ஆற்றிக் கொண்டிருந்தது மாமதுரையின் பரப்பில். அதில் ஒன்றுதான் அடிகளார் தன் அடிபொடிகளுடன் நடத்திக்கொண்டிருந்த சதி ஆலோசனை!

சிவ மகுடம்-75

அடிகளாரின் சதித் திட்டம்!

``கூர்ந்து கவனியுங்கள்... அவர்களின் போக்கிலேயே சென்று அவர்களை வீழ்த்த வேண்டும். இன்று நள்ளிரவில் பரதவர் படை வைகையில் தலைகாட்டும். அவர்களின் திட்டப்படி, தேவியாரின் சேனை அவர்களை எதிர்கொள்ளும். தேவியாருக்கு மாற்றாக வேறு எவரேனும் தலைமை ஏற்பார்கள் அந்தச் சேனைக்கு. இருதரப்பும் கைகலக்கும் என்றா லும் உயிர்ச்சேதம் நிகழாது.

அவர்கள் எதிர்பார்ப்பது துரோகிகளை... அதாவது நம்மை! எவ்விதத்திலேனும் நம்மை இனம் கண்டுகொண்டதும் இருதரப்பினரும் நம் மீது பாய்வார்கள்...’’

``ஆனால் நாம் அங்கு தலைகாட்ட மாட்டோம்; வேறு இடத்தில் இருப்போம் அப்படித்தானே?’’

அடிமைகளில் ஒருவன் கேட்டான். சிறு முறைப்போடு அவனை நோக்கிய அடிகளார், ``இல்லை’’ என்று மறுத்ததுடன், தொடர்ந்து ரகசியக் குரலிலேயே தனது கொலை பாதகத் திட்டத்தை விவரித்தார்.

``இங்கும் இருப்போம்; நான் சொல்லப் போகும் மாற்றிடங்களிலும் தோன்றுவோம்.

ஆம்! அவர்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கினால் அவர்கள் விழித்துக்கொள்ள வாய்ப்பு உண்டு. ஆகவே, நம்மில் சிறு அணி பாதுகாப்புச் சேனையுடன் கலந்திருக்க வேண்டும். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யவேண்டும். அத்துடன் இருதரப்பும் தயங்கும் காரியத்தையும் நாம் ஆற்றவேண்டும்.

ஆம்! பாதுகாப்பு சேனை - பரதவர் சேனை இரு தரப்பும் தாக்கிக் கொண்டாலும் எவருக்கும் உயிர்ச் சேதம் ஏற்படக் கூடாது என்று தேவியார் மூலம் ரகசிய உத்தரவு சென்றிருக்கிறது. அதை நாம் வாய்ப்பாக்கிக் கொள்ளவேண்டும். நம் அணியினர் அந்த இரு தரப்பிலும் கடும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்த வேண்டும். தேவியாரின் உத்தரவு மீறப்படுவதைக் கண்டு களத்தில் குழப்பம் ஏற்படும். இரு தரப்பினரும் தடுப்பதா, தாக்குவதா என்று தீர்மானிப்பதற்குள் அவர்கள் அதிக இழப்பைச் சந்திக்கவேண்டும்...’’

அடிகளார் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்க, ஒருவன் இடைமறித்துக் கேட்டான்... ``ஒருவேளே நம்மை அவர்கள் இனம் கண்டு கொண்டுவிட்டால்?’’

``நிச்சயம் கண்டுக்கொள்வார்கள். அப்போது நாம் சோழர் தரப்பு என்று நிறுவவேண்டும்’’

``பழியும் அதனால் ஏற்படும் கோபமும் சோழர் பக்கம் திரும்பும்’’

``ஆம்! மோதலில் கலந்துகொள்ளப்போகும் நம் அணி வீரர்கள் அனைவரின் புஜத்திலும் புலி இலச்சினை இருப்பது அவசியம்...’’

அடிகளார் சொல்வதன் காரணம் புரிந்தது அடிமைகள் இருவருக்கும். ஒருவன் வேறொரு சந்தேகத்தையும் தெளிவு படுத்திக்கொள்ள விரும்பினான்...

``நாம் குறிவைத்திருக்கும் அந்த மாற்று இடங்கள் எவையென்று அறியலாமா?’’

அவன் இப்படிக் கேட்டதும், இருவரையும் அருகில் இழுத்து, அவர்களின் செவிகளுக்கு மட்டும் கேட்கும் விதம் அந்த இடங்களை உச்சரித்தார் அடிகளார். அவர் கூறிய விவரம் ஏற்படுத்திய திகைப்பிலிருந்து அடிமைகள் இருவரும் மீள்வதற்குள், அந்த அறையிலிருந்து வெளியேற ஆயத்தமானார் அடிகளார்.

``தாங்களும் அங்கேதான் இருப்பீர்களா?’'

``இல்லை! நான் மணமேற்குடிக்குச் செல்கிறேன்...’’ என்று நின்று பதிலளித்துவிட்டு, வெளியேறினார் அடிகளார்.

மணமேற்குடியில் எவரை எதிர்பார்த்து அடிகளார் செல்கிறாரோ, அந்த நபர் எவரும் எதிர்பார்க்காத வேறொரு திசை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். ஏறக்குறைய அவரின் இலக்கு நோக்கியே பாண்டிய மாமன்னரும் சிறு படையணியுடன் நகர்ந்து கொண்டிருந்தார்!

சிவ மகுடம்-75

கள வேள்வி நிகழ்ந்தது!

ழந்தமிழ்ப் புலவர்கள் இருவேறு வேள்விகளைப் பற்றிச் சித்திரிக்கிறார்கள். ஒன்று எல்லோரும் அறிந்த மறைமுறை வேள்வி; மற்றொன்று கள வேள்வி ஆகும்.

`நளிகடல் இரும்குட்டத்து வளிபுடைத்த கலம்போலக் களிறு சென்று களன் அகற்ற...’ அதாவது கடல் நடுவே நீர் கிழித்துச் செல்லும் கலம் போன்று, பகைவர் படை நடுவே யானைகள் ஊடறுத்துப் பிளந்து செல்லும்.

அவ்வூடு வழியே வேலேந்திச் செல்லும் வீரர்கள், பகைவர்களைக் கொன்று அவர்களின் முரசைக் கவர்வார்கள். அத்துடன் நில்லாது பகைவரின் முடித்தலைகளை அடுப்பாக்கி, குருதியைப் புனலாகப் பெய்து, அவர்களின் கரங்களையே துடுப்பாகக் கொண்டு துலாவிக் களவெள்வி செய்வார்களாம்.

ஆம், பகையழித்து பெரும்புகழ் படைத்த பாண்டியர்தம் போர்க் கள தீரச் செயல்களையே களவேள்வி எனச் சிறப்பிக்கிறார், மாங்குடிக் கிழார் எனும் புலவர்.

மாமதுரையில் இப்போது நிகழப் போவதும் அப்படியானதொரு வேள்விதானோ?!

பொழுது நள்ளிரவைத் தாண்டி நகர்ந்துகொண்டிருந்தது. தெளிவான மதுரையின் வான்பரப்பில், வழக்கத்தைவிடவும் அதிகமாக ஒளி வீசிக் கொண்டிருந்தான் சந்திரன். அவனுடன் இணைந்து வைகையின் கரையில் நடக்கப்போகும் யுத்தக் காட்சியைக் காணும் ஆவலுடன் எண்ணிக்கையிலடங்கா தாரகைகளும் விழிபூத்துக் காத்திருந்தனர்.

நள்ளிரவு நிசப்தம் சட்டென்று ஒரு கணத்தில் உடைபட்டது. விண்ணதிர முழங்கியது போர் முரசு. தொடர்ந்து எக்காளங்களும் ஒலிக்க, அகிலம் வியக்கும் அந்தத் தலைநகரின் கோட்டைக் கதவுகள் திறந்துகொண்டன. அகழிப் பாலமும் இறக்கப்பட, சீற்றத்துடன் அதேநேரம் சீராக வெளிப்பட்டது பாண்டிய சேனை.

பரதவர் வந்துவிட்டார்கள் என்பதை எப்படிக் கணித்தார்கள் பாண்டியர் தரப்பினர்?

ஆம்! மிகச் சரியாக அதேவேளையில், வைகை நீர்ப்பரப்பிலிருந்தும் சில உருவங்கள் வெளிப்பட்டன.

தொடக்கத்தில் ஒன்றிரண்டாகத் தோன்றிய உருவங்கள், சற்று நேரத்தில் எல்லாம் நூற்றுக்கணக்கில் தோன்றிக் கரையேறின.கால்நாழிகைப் பொழுதில் இருதரப்பும் எதிரெதிரே சந்திக்க, ஆக்ரோஷத் துடன் மூண்டது போர். மரபை மீறிய மரபுடன் நடக்கும் போர்க் காட்சிகளைத் தெளிவாக காண முடியாதபடி, சந்திரனை மறைத் தன சில மேகங்கள்

அனைத்தும் பாண்டிமாதேவியார் யூகித்தபடியே நடந்து கொண்டிருக்க, அவர் எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத விபரீதம் ஒன்றும் நடக்க ஆரம்பித்தது. அந்த விபரீதப் பெருநிகழ்வு தேவியாரையும் போர்க்களத்தில் புகுத்தி, களவேள்வியாற்றத் தூண்டியது!

- மகுடம் சூடுவோம்...