Published:Updated:

சிவ மகுடம் - 68

பழையாறை ஶ்ரீசோமேஸ்வரர் ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
பழையாறை ஶ்ரீசோமேஸ்வரர் ஆலயம்

மங்கையர்க்கரசியார் சரிதம்

சிவ மகுடம் - 68

மங்கையர்க்கரசியார் சரிதம்

Published:Updated:
பழையாறை ஶ்ரீசோமேஸ்வரர் ஆலயம்
பிரீமியம் ஸ்டோரி
பழையாறை ஶ்ரீசோமேஸ்வரர் ஆலயம்

ஊதலாய்த் தொடங்கி சட்டென்று விசைபெற்ற பெருங்காற்றொன்று வீசி, சோழர் மாளிகையின் புலிக்கொடியைப் பட்டொளி வீசிப் பறக்க விட்டது. படபடக்கும் அதன் ஓசை, தத்தமது புரவியின் மீது அமர்ந்தபடி அந்தப் பெரிய நகருக்குள் பிரவேசிக்கும் கோச்செங்கணையும், இளங் குமரனையும் ஆர்ப்பாட்டத்துடன் வரவேற்பது போலிருந்தது.

இளஞ்சூரியனின் கிரணங்கள் பட்டு தகதகத்து ஜொலித்த மாடங்களும் மாளிகை மகுடங்களும் பழையாறைப் பெருநகரை, அந்த வீரர்கள் இருவரின் கண்களுக்கும் சொர்க்கபுரியாய்க் காட்டின.

பழையறை சோமேஸ்வரர் ஆலயம்
பழையறை சோமேஸ்வரர் ஆலயம்

பழையாறை எனும் பெருநகரம்!

பழையாறை மண்ணில் புரவிகள் கால் பதித்ததும் - நதியில் தவழ்ந்து புலிக்கொடியில் மோதி புதுவித நறுமணத்துடன் வந்து தங்கள் முகத்தில் மோதும் அந்தக் காற்றினை சுவாசித்ததும், புதுவித பெருமித உணர்வுக்கு ஆளானார்கள் அவர்கள் இருவரும்.

அற்புதமான அந்த மண்ணில் உதித்த அற்புதமான தங்களின் எஜமானி யைச் சந்தித்து, திருமறைக்காட்டில் தாங்கள் கண்ட அற்புதத்தை அவரிடம் பகிர்ந்துகொள்ளவும், அவர் தங்களுக்கு இட்ட ஆணையைச் செவ்வனே நிறைவேற்றிவிட்டோம் என்பதைத் தெரிவிக்கவுமே பழையாறைக்குள் நுழைந்துகொண்டிருந்தார்கள் அந்த வீரர்கள்.

ஆம்! பழையாறை மண் மகத்துவமானது. அதில் குழந்தையாய்த் தவழ்ந்த பலரும் மாமன்னராய் தென்பரதக் கண்டத்தை... ஏன் இந்த உலகின் பெரும்பகுதியையே ஆண்டிருக்கிறார்கள்.

அதன் சரித்திர மேன்மையைப் படிக்கும் எவருக்கும், தன் மூதாதையரின் மேன்மையை நினைத்துப் பெருமிதம் கிளர்ந்தெழும் என்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை! வாருங்கள் நாமும் பழையாறையைப் படித்தறிவோம்.

ழையாறை - ஏறக்குறைய 430 ஆண்டு காலம் சோழப் பேரரசர்கள் போற்றிப் பரவிய பெருநகரம். இன்றைக்கு 1500 ஆண்டுகளுக்குமுன் நிறுவப் பெற்றதாகக் கருதப்படும் இந்தத் திருநகர், சில காலம் சோழர்தம் ராஜதானியாகவும் திகழ்ந்தது.

பிற்காலச் சோழர்களில் பெருமன்னனான ராஜராஜன் காலம் வரையிலும் பழையாறை எனப் பெயர்பெற்றிருந்த இவ்வூர், ராஜேந்திரன் காலத்தில் முடிகொண்ட சோழபுரம் என்று சிறப்புப் பெயரைப் பெற்றது. ஆம்! சோழமன்னர்களின் பட்டாபிஷேகமும் முடிசூட்டும் வைபவமும் இந்த நகரிலேயே நிகழ்ந்தன என்பார்கள்.

பிற்காலச் சோழ சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய விஜயாலயன் காலத்துக்கும் முந்தைய நகரம் இது. விஜயாலயச் சோழனுக்குப் பிறகு அவன் வழித்தோன்றலில் மூன்றாம் ராஜேந்திர சோழன் வரையிலும்... ஆதித்தன், பராந்தகன், கண்டராதித் தன், அரிஞ்ஜயன், சுந்தரச்சோழன், உத்தமச் சோழன், ராஜராஜன், ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன், அதிராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்ரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், இரண் டாம் ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜ ராஜன் போன்ற பேரரசர்கள் வாழ்ந்து போற்றிய மண் இது.

பழையாறை, முடிகொண்ட சோழபுரம் என்றெல்லாம் பெயர் பெற்ற இவ்வூர், இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் காலத்தில் நந்திபுரம் என்றும் இரண்டாம் ராஜராஜன் காலத்தில் ராஜராஜ புரம் என்றும் அழைக்கப்பட்டது என்கிறது சரித்திரம்.

வெற்றியின் நினைவாகவும், மாமன்னர்களின் நினைவாகவும் புதிய பெயர்களைப் பெற்று விட்டபோதிலும், பழையாறை என்ற பெயருக்குக் காரணம் என்ன ஆராயத் தலைப்பட்டால், இந்நகரின் தொன்மை நம்மை நீண்ட நெடுங்காலம் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடும் என்கிறார்கள், சரித்திர ஆர்வலரும் ஆய்வாளர்களும்.

பழைய+ஆறை என்பதே பழையாறை ஆனது என்று சிலர் ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள். ஆறை என்றால் கோட்டையைக் குறிக்கும். ஆனால் முற்காலச் சோழர்கள், இவ்வூரிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள ஆவூரில்தான் கோட்டை அமைத்திருந்தார்கள்.

ஆக, `பழைய கோட்டை அமைந்த நகர்’ என்ற காரணம் தொட்டு இந்தப் பெயர் ஏற்பட்டிருக்காது என்பது ஆய்வாளர்கள் சிலரின் முடிவு. எனினும் பண்டைய சோழப் பேரரசர்கள் பிறந்து வாழ்ந்த இடம் பழையாறை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பழம்பெறும் ஆற்றின் பெயர் கொண்டு இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்றொரு விளக்கமும் உண்டு.

பழையாற்று நந்திபுரம், பழையாற் றுக்கோல், பழையாற்றுப்பிடாகை பாவை, பழையாற்றுவடதளி... இங்ஙனம் பண்டைய நூல்கள், கல்வெட்டுத் தகவல்களில் வரும் சொல்லாடலைக் காணும்போது, ஆற்றின் பெயரைக் கொண்டு இவ்வூர் `பழையாறை’ என்று பெயர்பெற்றிருக்கக் கூடும் என்கிறார்கள்.

தற்காலத்தில் இந்தப் பெருநகரின் எல்லைகள் தகர்ந்து, கீழப் பழையாறை, பட்டீச்சரம், திருச்சத்தி முற்றம், அரிச் சந்திரபுரம், பாற்குளம், முழையூர், ராமநாதன்கோயில், ஆரியப்படையூர், பம்பப் படையூர், புதுப்படையூர், மணப்படையூர், நாதன்கோயில், தாராசுரம், திருமேற்றளிகை, உடையாளூர், ராசேந்திரன்பேட்டை எனப் பல சிற்றூர்களாகப் பிரிந்து திகழ்கிறது.

இவற்றில் பட்டீச்சரம், கீழப்பழையாரை ஊர்களுக்கு இடையே ஓடும் ஆற்றின் பெயர் திருமலை ராஜன் ஆறு. இந்த நதி, பாபநாசத்துக்கு மேற்கே 3 கி.மீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து, காரைக்காலில் திருமலை ராஜன் பட்டினத்தருகில் வங்க சமுத்திரத்தில் கலக்கிறது.

இந்த நதியின் பெயர் ஆதியில் `பழையாறு’ என வழங்கப் பட்டு, அதன் கரையிலிருந்த நகரமும் பழையாறை என்று பெயர்பெற்றிருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் சிலரின் கருத்து. `திருமலைராஜன் ஆறு’ எனும் பெயர் பிற்காலத்தில் நாயக்க மன்னர்கள் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்பது இவர்கள் தரும் விளக்கம்.

பழையாறை தற்போது பல ஊர்களாகப் பிரிந்து திகழும் நிலையில், திருமேற்றளி நந்தன்மேட்டில் மட்டுமே மிகப் பழைமையான பழம்பொருள்கள் கிடைத்துள்ளனவாம். ஆக, ஆவூரிலிருந்து நகர்ந்து நந்தன் மேட்டில் தொடங்கி விரிந்து, பழையாறை எனும் பெருநகரம் உருவாகியிருக்கவேண்டும் என்கிறார்கள்.

ஶ்ரீமங்கையர்க்கரசியார்
ஶ்ரீமங்கையர்க்கரசியார்

பிற்கால சரித்திரம் போற்றும் செம்பியன் மாதேவியார், குந்தவைப் பிராட்டியார் ஆகியோர் வாழ்ந்தும் பல அரசாணைகளைப் பிறப்பித்ததுமான இந்தப் பழையாறை மண்ணில்தான்... நம் கதையின் நாயகி மங்கையர்க்கரசியார் - மணிமுடிச் சோழன் தன்மகளாம் பண்ணினேர் மொழியாள் பாண்டிமாதேவியாரும் பிறந்து வளர்ந்தார்.

அன்றைய காலத்தில் பழையாறைப் பெருநகரில் 19 திருக் கோயில்கள் இருந்தன. ஆனால் காலவெள்ளத்தில் அவற்றில் சில மறைந்துவிட்டன!

மாமன்னர் ராஜராஜ சோழர் காலத்தில் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு 400 தலைசிறந்த ஆடல் மகளிரை நியமித்தார். அவர்களில் 30 பேர் பழையாறையிலிருந்து வந்தவர்கள். அவர்களைப் பற்றிக் கூறும் கல்வெட்டுகள் மூலம், பழையாறையில் இருந்த பழங்க்கோயில்கள் சிலவற்றின் பெயரை அறிய முடிகிறது.

தென்தளி, அரைஎருமான், தளி, முள்ளூர் நக்கன்தளி, சங்கீச்சரம் போன்ற கோயில்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தற்போதும் சிறப்புடன் திகழும் கோயில்களில் ஒன்று கீழப் பழையாறை சோமகலாம்பிகை சமேத சோமநாத சுவாமி திருக்கோயில்.

தேவார வைப்புத் தலம் இது. திருப்புகழ் பாடலும் இக்கோயிலுக்கு உண்டு. புகழ்பெற்ற பழையாறைப் பெருநகரின் மிஞ்சிய சுவடு களில் மிக முக்கியமானது இக்கோயில்.

சந்திரன் இங்கு வழிபட்டு தன் கலைகள் வளரவும் நோய் நீங்கவும் அருள்பெற்றான் என்கிறது புராணம். பிற்காலத் தில் ராஜராஜ சோழர் திருப்பணி செய்துள்ளார். அருண்மொழி தேவேச்சரம் என்றும் பெயர்பெற்ற இந்தத் திருக்கோயிலில், நம் அன்னை பாண்டிமாதேவியார் மங்கையர்க்கரசியாரின் திரு விக்கிரகமும் உள்ளது.

பார் போற்றிய இந்தப் பழையாறைத் திருநகருக்குள் பெருமித உணர்வோடு நுழைந்த கோச்செங்கணும், இளங்குமரனும் சோழர் மாளிகையை அடைந்து, சிரமப் பரிகாரத்துக்குப் பிறகு இரண்டொரு நாழிகைகள் கழிந்து பாண்டிமாதேவியாரைச் சந்தித்தனர்.

அவரிடம் முந்தைய நாளில் தாங்கள் கண்ட அற்புதர்களைப் பற்றியும் அவர்கள் நிகழ்த்திய அற்புதத்தைப் பற்றியும் உள்ளம் உவக்க விவரிக்கத் தொடங்கினார்கள்.

வாருங்கள்... அவர்கள் தேவியாரிடம் கூறி முடிப்பதற் குள் நாம் திருமறைக்காட்டுக்குச் சென்று அந்த அற்புதத்தை நேரிலேயே தரிசித்து விடுவோம்.

சிவ மகுடம் - 68

பதிகம் பிறந்தது...

திருமறைக்காடு!

மறைக்காடரின் ஆலயத்தின் முன் பெருங்கூட்டம் குழுமி இருந்தது. வேதங்கள் காப்பிட்டு மூடிய திருக்கதவு மூடியபடியே திகழ, அருகில் சிறியதொரு பக்கவாயில் ஒன்றும் இருந்தது.

இதுவரையிலும் இந்தப் பக்கவாயில் வழியாகவே அடியார் களும் அன்பர்களும் உள்நுழைந்து மறைக்காடரை தரிசித்து வந்தனர். `இப்போதாவது பெருங்கதவு திறக்காதா... பிரதான வாயில் வழியே நுழைந்து எம்பெருமானை தரிசிக்க மாட்டோமா’ என்று ஏக்கத்துடனும் `இந்த அடியவர்கள் இருவரும் இறையருளால் நிச்சயம் ஓர் அற்புதம் நிகழ்த்துவார்கள்’ என்ற நம்பிக்கையோடும் காத்திருந்தது அங்கு கூடியிருந்த கூட்டம்.

அவர்கள் அனைவருக்கும் கேட்கும்படி கணீரென ஒலித்தது சீர்காழிச் சிவக்கொழுந்தின் குரல்.

``அப்பர் பெருமானே! நம் அப்பனை - அண்டம் அனைத் திலும் நிறைபொருளாய் நிரம்பித் ததும்பி அருள்பாலிக்கும் நம் இறைவனை குறுக்குவழியில் சென்றா தரிசிப்பது... கூடவே கூடாது! மகிமைகள் நிறைந்த மறைக்காடரை, இந்த ஆலயத்தின் மூல வாயிலைத் திறந்து அதன் வழியே சென்றுதான் வணங்கிடல் வேண்டும்.

ஆகவே, பதிகம் பாடுங்கள். தங்கள் வாக்கு தமிழ் வேதமாகும். ஆகவே அந்த வேத நாயகனை தங்களின் பதிகம் மகிழ்விக்கட்டும்; அவரருளால் மக்கள் மகிழ பெருங்கதவின் தாழ் திறக்கட்டும்!’’ என்றார்.

திருமேனி சிலிர்க்க, உள்ளம் உவக்க, தெய்வக் குரலெடுத்து பாடத் தொடங்கினார் திருநாவுக்கரசுப் பெருமான்...

பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோ
மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக்காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே...

`பண்ணை ஒத்த மொழியாளாகிய உமை அம்மையை உடலின் ஒரு பாகத்தில் கொண்டவரே, உலகத்தவர்கள் வலம் வந்து வணங்கி வழிபடும் மறைக்காடரே, அடியேனாகிய நான் உமைக் கண்ணினால் கண்டு களிக்குமாறு, வேதங்களால் அடைக்கப் பெற்ற கதவுகளை, உறுதியாகத் திறந்து எமக்கு அருள் செய்யவேண்டும்...’

இங்ஙனம் மறைக்காட்டு ஈசனைப் போற்றி வணங்கிப் பாடத் தொடங்கிய திருநாவுக்கரசுப் பெருமான், பாடிக்கொண்டே இருந்தார்.

ஒன்றா, இரண்டா... பத்துப் பாடல்கள் பாடி முடித்தும் திரு மறைக்காட்டுத் திருக் கோயிலின் திருக்கதவம் தாழ் திறக்கவில்லை!

- மகுடம் சூடுவோம்...

அம்மையும் அப்பனும் ஒன்றே!

துரையில் அம்மையின் ஆட்சி; தில்லையில் அப்பனின் ஆட்சி என்றால், நெல்லையில் இருவருமே சமமாக ஆள்கிறார்கள் என்பதே அடியார்களின் கூற்று.

அதற்கேற்ப பிரதோஷத்தின் போது சிவனின் சந்நிதியில் உள்ள நந்தியம்பெருமானுக்கு பிரதோஷ பூஜை நடப்பதைப் போலவே காந்திமதியம்மன் சந்நிதி நந்திக்கும் நடைபெறுகிறது.

அதேபோல் சிவராத்திரி அன்று நடைபெறும் இரவு நான்கு கால பூஜை, அபிஷேகங்கள் யாவும் அம்பிகைக்கும் செய்யப்படுகிறது. ஆணாகிப் பெண்ணாகி நின்ற பெருமான் நெல்லையில் சமத்துவத்தை இன்றும் காட்டிவருகிறார்.

- எம்.வேணுகோபாலன், திருச்செந்தூர்