Published:Updated:

இல்லம் தேடிவரும் ஈசன்!

திருப்புகலூர்
பிரீமியம் ஸ்டோரி
News
திருப்புகலூர்

வாஸ்து வரமாகும் செங்கற்கள் திருப்புகலூர் அற்புதங்கள்!

ஈசன் எழுந்தருளியிருக்கும் தலம் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அவ்வகையில் தன்னகத்தே அருளும் சிவ மூர்த்தியர் இருவரைச் சமயக்குரவர்கள் பாடியருளியதால் சிறப்பு பெற்ற தலம் திருப்புகலூர். நாயன்மார்கள் பலர் வந்து தொழுது அருள்பெற்ற தலம்

இது. அக்னி பகவானுக்குத் தனிச் சந்நிதி, நளனுக்கு அனுக்கிரகம் செய்த சனிபகவான் சந்நிதி ஆகியன இருக்கும் க்ஷேத்திரம் இது.

புன்னை மரமாகித் திருமாலே வாசம் செய்தவதும் இங்குதான். திருநாவுக்கரசர் ஒளிவடிவாகி ஈசனோடு கலந்த தலமும் இதுதான்.இப்படிப் பல்வேறு சிறப்புகளுடன் தேவரும், முனிவரும், அடியாரும் ஈசனைப் புகல் அடையும் (சரண் புகும்) ஊர் திருப்புகலூர்.

ஒருமுறை கார்காலத்தில் காவிரி வெள்ளப் பெருக்கு கொண்டது. ஆற்றின் கரையில் இருந்த கிராமத்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலி கண்டு துடித்தார். ஆற்றைக் கடந்து மருத்துவச்சி வரவோ அல்லது இவர்கள் போகவோ வழியில்லை. அந்தப் பெண் லோக மாதாவான அம்பிகையை நினைத்துக் கதறினாள்.

பிள்ளையின் கதறலைப் பொறுக் காத அம்பிகை, மருத்துவச்சியாய் வந்தாள். அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்து நல் மகவைப் பெற் றெடுக்க உதவி செய்து மறைந்தாள்.

மறுநாள் வெள்ளம் வடிந்தது. உண்மையான மருத்துவச்சி நலம் விசாரிக்க வந்தபோதுதான், அம்பிகையே நேரில் வந்து பிரசவம் பார்த்த உண்மை தெரிந்தது. சூல் பார்த்து சுகப்பிரசவம் தந்ததால் இத்தலத்து அம்மைக்கு `சூளிகாம்பாள்' என்ற திருநாமம் ஏற்பட்டது. இந்த அம்பாளின் அனுக்கிரகமாக இன்றும் இப்பகுதியில் யாரும் பிரவசத்தால் உயிரிழந்ததில்லை என்பது, புகலூரின் புகழில் மற்றுமொரு மகுடம்.

திருப்புகலூர், காவிரியின் தென்கரை தலங்களில் 75 மற்றும் 76-வது தலம். `நில மகளுக்கு முகம் போல்வது சோழநாடு' என்பது சேக்கிழார் திருவாக்கு. சோழநாடு முகமென் றால் அதன் திலகம் திருப்புகலூர் என்பர் அடியார். முதலாம் ராஜராஜன் காலத்துக் கல்வெட்டு இத்தலத்துக் கோயிலில் இருப்பது இதன் தொன்மையை உணர்த்தும்.

இந்தத் தலத்தின் ஈசன், ஶ்ரீகருந்தார்குழலி அம்மை சமேத ஶ்ரீஅக்னீஸ்வரர். அக்னி பகவான் தன் சாபம் நீங்குமாறு தவம் செய்து அருள்பெற்ற தலம் இது. ஆகவே, இத்தலத்து ஈசனுக்கு ஶ்ரீஅக்னீஸ்வரர் என்று திருப்பெயர். உருவமில்லாத அக்னிக்கு இத்தலத்தில் சிற்பத் திருமேனியோடு தனிச் சந்நிதி இருப்பது சிறப்பு.

மற்றொரு ஈசன், ஶ்ரீமனோன்மணி அம்மை உடனாகிய ஶ்ரீவர்த்தமானேஸ்வரர். இந்த இரண்டு சிவனாரையும் பாடிப்பரவியிருக்கிறார்கள் சமயக் குரவர்கள். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது.

திருப்புகலூர் கோபுரம்
திருப்புகலூர் கோபுரம்

அப்பர் ஐக்கிய காட்சி

அப்பர் சுவாமிகள் முக்திபெற்ற இத்தலத்தில், அவருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. சித்திரை மாத சதய நட்சத்திரத்தை ஒட்டி `அப்பர் ஐக்கிய காட்சி' இங்கு உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.

முருகநாயனார் அவதரித்த தும், அவர் நந்தவனம் அமைத்து ஶ்ரீவர்த்தமானீஸ் வரருக்குத் தம் வாழ்நாள் முழுவதும் புஷ்பத் தொண்டு புரிந்ததும் இத்தலத்தில்தான். இந்தத் திருத்தலத்திற்கு வந்த அப்பரடிகள், சுந்தரர், சம்பந்தர், திருநீலநக்கர், சிறுதொண்டர், திருநீலகண்டயாழ்ப்பாணர் ஆகியோரைச் சந்தித்து அளவளாவிய சிறப்பைப் பெற்றவர் முருகநாயனார்.

நெற்குன்றவாணர் என்ற அன்பர் இத்தலத்து ஈசன் மீது `புகலூர் திரிபந்தாதி' என்ற அரிய இலக்கிய நூலைப் படைத்துள்ளார்.

கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என முக்காலத்துக்கும் அருள்பாலிக்கும் பூதேஸ்வரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ்யேஸ்வரர் ஆகிய மூர்த்திகள் அருள்வது இக்கோயிலின் சிறப்பு.

இங்கு சனி அனுக்கிரக மூர்த்தியாக அருள்கிறார். இவரும் நளச் சக்ரவர்த்தியும் ஒரே சந்நிதியில் அருள்பாலிப்பது விசேஷம்.

நளனிடம் ``இங்கிருந்து 7 கல் தொலைவிலுள்ள திருநள்ளாறில், நான் உன்னை விட்டு விலகிக்கொள்கிறேன்'' என்று சனிபகவான் அசரீரி யாகச் சொன்ன தலம் இது. எனவே இத்தலத்தில் சனீஸ்வரரை வணங்கிய பின்பே திருநள்ளாற்றில் சனிபகவானை வணங்கும் வழக்கம் பக்தர்களிடையே உள்ளது.

செல்வ வளம் தரும் புன்னை மரம்!

இங்கு தல விருட்சம் புன்னை மரமாகும். `புன்னை பொழிற் புகலூர்', `புன்னை மலர்த்தலை வண்டுறங்கும் புகலூர்', `புன்னாக மணங்கமழும் பூம்புகலூர்' என்று திருமுறைகள் இந்தத் தலத்தைப்போற்றுகின்றன.

புன்னை தெய்வ மணம் கமழும் மரமாகும். முரன் என்ற அசுரனைக் கொன்ற பாவம் தீர இந்தத் தலம் வந்து வழிபட்ட திருமாலுக்கு, அருட்காட்சி வழங்கினார் ஈசன் என்கிறது தலபுராணம். இத்தலத்தின் மகிமையை அறிந்த திருமால், ``அடியேன் இத்தலத்தில் என்றென்றும் புன்னை மரமாக விளங்கவேண்டும். என் நிழலில் நீங்கள் எழுந்தருளி அடியார்களுக்கு வரம் தர வேண்டும்'' என்று வேண்டிக்கொண்டதாகப் புராணம் சொல்கிறது.

இந்தத் தலத்தில் பெருமாளே புன்னைமரமானார் என்பதால் திருமகளும் உடனுறைகிறாள். அதனால் இங்குள்ள புன்னை மரத்தின் இலை, தளிர், பூ, அரும்பு முதலியவற்றைக் கிள்ளினாலோ அல்லது மரத்துக்கு ஊறு செய்தாலோ அவர்களைவிட்டுத் திருமகள் நீங்குவாள் என்பது ஐதிகம். அதேவேளை, இவ்விருட்சத்தை வழிபட் டுப் பாதுகாப்பவர்களைத் திருமகள் பிரியாதிருப்பாள்.

ஒரு மண்டல காலம் தினமும் காலை மாலை இருவேளை யும், இம்மரத்தடியில் அமர்ந்து முக்தி பஞ்சாட்சரத்தைத் தினமும் 1008 முறை ஜபித்து உருவேற்றி, அக்னீஸ்வரரை

வழிபட்டால் மகேஸ்வர பூஜை செய்த பலன் எய்துவர் என்பது நம்பிக்கை. புன்னை மரத்தடியில் ஒரு தானம் செய்தாலும் கோடி தானம் செய்ததற்கு ஒப்பாகும்!

ஶ்ரீகோணப்பிரான் ஈஸ்வரர்
ஶ்ரீகோணப்பிரான் ஈஸ்வரர்

பக்திக்குத் தலை சாய்த்தவர்...

இத்தலத்து மூலவருக்குக் கோணப் பிரான் என்ற திருநாமமும் உண்டு. அக்னிக் கோட்டையை பாணாசுரன் என்ற அசுர வம்சத்தைச் சேர்ந்த அரசன் ஆண்டுவந்தான். அவனால் தேவர்களுக்குப் பெருந் துன்பம் ஏற்பட்டது.

அவர்கள் கண்ணபிரானைச் சரணடைய கண்ணபிரான் அவன் மீது போர் தொடுத்தார். அகந்தை யோடு போரிட்ட காரணத்தால் பாணாசுரன் தோற்றான்.

அவன் இழந்த வலிமையையும், அரசையும் மீண்டும் பெறும் பொருட்டு, அவனின் தாய் மாதினி சிவ பூஜை செய்யத் தொடங்கினாள். அந்தப் பூஜைக்கு தினம் ஒரு சுயம்பு லிங்கத்தைக் கொண்டுவந்து சேர்ப்பது பாணாசுரனின் பணி.

ஒருநாள் பூஜைக்கு திருப்புகலூர் ஈசனைப் பெயர்த்தெடுக்க முயன்றான். ஆனால் எவ்வளவு முயன்றும் அவனால் முடியவில்லை. `தன்னால் தன் தாயின் சிவபூஜை தடைப்படுவதைவிட, தான் உயிர் விடுவதே மேல்' என்று முடிவு செய்த பாணாசுரன் தன் தலையைத் தானே கொய்துகொள்ள முடிவெடுத்தான்.

அப்போது ஈசன் தோன்றி அவனைத் தடுத்தாட்கொண்டார். பின்பு, தான் இருக்கும் இடத் திலிருந்தே அவன் தாயாரின் பூஜைகளை ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார். அதன்படி இருந்த இடத்திலிருந்து சற்றே கோணலாகச் சாய்ந்து மாதினியின் பூஜையை ஏற்றாராம். அதனால் அவருக்குக் கோணப்பிரான் என்று திருநாமம்!

பிள்ளையார்
பிள்ளையார்

செங்கல் பொன்னாக மாறியது!

திருவாரூரில் தங்கி சிவத் தொண்டாற்றி வந்தார் சுந்தரமூர்த்தி நாயனார். தொண்டர்கள் தங்கு வதற்கு ஒரு மண்டபம் கட்டவும், அவர்களுக்கு உணவு அளிக்கவும் பொருள் தேவைப்பட்டது.

கேட்டவர்க்கு அளவில்லாது அருளும் ஈசன் உறையும் தலமான திருப்புகலூரை நாடி வந்தார் சுந்தரர். அவர் ஊர் வந்து சேரும்போது இரவு நேரமாகிவிட்டது. கோயில் கதவு அடைக்கப்பட்டிருந்தது.

தரிசனம் செய்யும் ஆவலோடு வந்த சுந்தரர், சிறு ஏக்கத்தோடு ஆலய வாயிலிலேயே மூன்று செங்கற்களைத் தன் தலைக்கு வைத்துக்கொண்டு படுத்துவிட்டார்.

தோழனின் மனவாட்டம் அறிந்த ஈசன், சுந்தரர் தலைக்கு வைத்திருந்த செங்கற்களைத் தங்கக் கட்டிகளாக மாற்றினார். மறுநாள் காலை விடிந்ததும் இந்த அற்புதத்தைக் கண்ட சுந்தரர் ஈசனைப் பாசுரம் ஒன்று பாடிப் போற்றினார்.

துர்கை
துர்கை
அம்பாள்
அம்பாள்

மூன்று செங்கற்கள்... வாஸ்து வழிபாடு!

சுந்தரர் அருள்பெற்ற நிகழ்வின் அடிப்படை யில், இந்தத் தலத்தை வாஸ்து முக்கியத்துவம் வாய்ந்த தலமாகவும் பார்க்கிறார்கள் பக்தர்கள். வாஸ்து சாஸ்திரத்தில் அக்னிக்கு முக்கியத்துவம் அதிகம். இந்தத் தலமோ அக்னியின் சாபம் நீக்கிய தலம். அதனால் இங்கு வந்து வணங்கு வோர்க்கு அக்னி பகவான் நிச்சயம் நல்லருள் புரிவார் என்பது நம்பிக்கை.

எனவே சோழமண்டலத்தில் புதிதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்துக்கு வந்து, மூன்று செங்கற்களை கொண்டு வாஸ்து பூஜை செய்கிறார்கள். பின்பு அந்தச் செங்கற்கைளைக் கொண்டு வீடு கட்டுகிறார்கள். மூன்று கற்களில் வாசல் நிலையின் அடிப்பகுதியில் ஒன்றும், மேல்பகுதியில் ஒன்றும், பூஜையறையில் ஒன்றும் வைத்துக் கட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதற்கென கோயில் வாசலில் செங்கற்கள் வைத்திருக்கிறார்கள்.

ஈசன் கருவறைக்கு முன்பு வாஸ்து பூஜை செய்து கொடுப்பதற்கான தனி பீடமும் உள்ளது. இந்தப் பூஜை செய்து செங்கற்களை இல்லத்திற்கு எடுத்துச் சென்றால் அந்த ஈசனே இல்லம் தேடிப் புதிய வீட்டில் குடி கொள்வதாகவும், பொன் பொருள் குறையாது நலமாக வாழ அருள்வதாகவும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

இக்கோயிலின் பரம்பரை டிரஸ்டியான வேளாக்குறிச்சி ஆதினகர்த்தர் ஶ்ரீலஶ்ரீசத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசார்ய சுவாமியிடம் பேசினோம்.

``இத்தலத்து ஈசன், கேட்ட வரம் தரும் தயாளன். இந்தத் தலத்தில் சாயரட்சை காலத்தில் அம்பிகை ராஜராஜேஸ்வரி கோலத்தில் அருள்கிறாள். எனவே இத்தல அம்பாளுக்கு வெள்ளை நிறப் புடவை அணிவிப்பது வழக்கமாக உள்ளது.

திருமணம் ஆகாத பெண்கள், அம்பாளை மனதார வேண்டிக்கொண்டு வெள்ளைப் புடவை சாத்தி வழிபட்டால், தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் திருமணம் கூடும்.

தேவியருடன் முருகப்பெருமான்
தேவியருடன் முருகப்பெருமான்

வைகாசி பிரம்மோற்சவம், சித்திரை பௌர்ணமி, அப்பர் ஐக்கிய விழா ஆகியவை இந்தத் திருக்கோயிலில் மிகச் சிறப்பாக நடைபெறும். ஏராளமான பக்தர்கள் இந்த உற்சவங்களில் கலந்துகொண்டு வழிபட்டு, வேண்டுவன யாவும் பெற்று நலமுடன் வாழ்கிறார்கள்.

இக்கோயில் குடமுழுக்கு நடந்து 17 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது திருப்பணிக்கு உபயதாரர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அறநிலையத்துறையின் அனுமதி கிடைப்பதில் தாமதமாகி வருகிறது. விரைவில் அனுமதி கிடைத்துக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று நம்புகிறோம்'' என்றார்.

நீங்களும் ஒருமுறை திருப்புகலூர் சென்று வாருங்கள். தலைசாய்த்த பரமன் உங்கள் வேண்டுதலுக்கும் செவிசாய்த்து அருள்வான்.

எப்படிச் செல்வது ?: நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் நன்னிலத்திலிருந்து கிழக்கே சுமார் 10 கி.மீ. தூரத்திலும், நாகப்பட்டினத்திலிருந்து மேற்கே 25 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது திருப்புகலூர் திருத்தலம்.