Published:Updated:

குடமுழுக்கு காணும் இலங்கை திருக்கேதீச்சரம்!

திருக்கேதீச்சரம்
பிரீமியம் ஸ்டோரி
திருக்கேதீச்சரம்

- பனையபுரம் அதியமான் -

குடமுழுக்கு காணும் இலங்கை திருக்கேதீச்சரம்!

- பனையபுரம் அதியமான் -

Published:Updated:
திருக்கேதீச்சரம்
பிரீமியம் ஸ்டோரி
திருக்கேதீச்சரம்

இந்தியாவும் இலங்கையும் இன்று வெவ்வேறு நாடுகள் என்றபோதும் இதிகாசமும் இலக்கியங்களும் இரண்டுக்கும் இடையிலான உறவை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கின்றன. சமயமும் பண்பாடும் கலாசாரமும் மொழியும் இரு நிலங்களுக்கும் பாலமாக உள்ளன. தேவார மூவர்களால் பாடல் பெற்ற தலங்கள் இலங்கையிலும் உண்டு. அவற்றில் ஒன்று திருக்கேதீச்சரம்!

குடமுழுக்கு காணும் 
இலங்கை திருக்கேதீச்சரம்!

ஞ்சேஸ்வரம் எனப்படும் ஐந்து ஈஸ்வரத் தலங்களில் முக்கியமானது இது. நவகிரகங்களில் கேதுவால் வழிபடப்பட்ட ஈசன் ஆகையால் இத்தல இறைவனுக்கு, ‘கேதீஸ்வரர்’ என்று திருநாமம் ஏற்பட்டது என்கிறார்கள். மட்டுமின்றி திருமால், இந்திரன், ராமன், ராவணன் தொடங்கி, மகான்களும் மன்னர்கள் பலரும் வழிபட்டு வரம்பெற்ற தலம் இது. `மாதோட்டங் கருத நின்ற கேதீச்சரங் கைதொழக் கடுவினையடையாவே’ என்று திருஞானசம்பந்தர் அருளியுள்ளார்.

`கறையார் கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருட்
சிறையார் பொழில் வண்டியாழ்செயுங் கேதீச்சரத் தானை
மறையார்புகழ் ஊரன்னடித் தொண்டன்னுரை செய்த
குறையாத் தமிழ் பத்துஞ்சொலக் கூடாகொடு வினையே’

- என சுந்தரரும் இத்தலத்தைப் போற்றி பாடியிருக்கிறார்.

புராணம் போற்றும் திருத்தலம்

ஒருமுறை ஆதிசேஷனுக்கும், வாயுபகவானுக்கும் தங்களில் யார் பலசாலி என்னும் போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் தன் ஆயிரம் படங்களால் மகாமேரு மலையை மறைத்தார். வாயுபகவானோ ஆதிசேஷனைத் தன் வேகத்தால் விலக்கி, மகாமேருவின் மூன்று சிகரங்களைப் பிடுங்கி எறிந்தார். அவை திரிகூடாத்திரி, கேதீச்சரம், கந்தமாதன மலை என்று மூன்று சிறு மலைகளாயின என்கிறது புராணம். இவற்றில் கேதீஸ்வரத்தில் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு கேதீஸ்வரர்.

மகாதுவட்டா என்ற தேவதச்சன் வணங்கித் திருப்பணி செய்த தால், இத்தலம் ‘மகாதுவட்டாபுரம்’ என்றும் வழங்கலானது. மகா துவட்டா, ராமாயணக் காலத்துக்கு முற்பட்டவர். ஆகவே இந்தத் தலம் ராமேஸ்வரத்துக்கும் முற்பட்டது என்கிறார்கள் பக்தர்கள். திருநாவுக்கரசரும் கயிலை மலையையும் கேதீஸ்வரத்தையும் தொடர்புபடுத்தி ‘கேதீச்சரமேவினார் கேதாரத்தார்’ என்று போற்றுகிறார்.

குடமுழுக்கு காணும் 
இலங்கை திருக்கேதீச்சரம்!

ஆய்வுகளும் தொன்மைச் சிறப்பும்!

6-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் 1,120 ஏக்கர் நிலப்பரப்பில் இரட்டை அகழியோடு சிறப்புற்றுத் திகழ்ந்ததாம். இங்கே மேற் கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட ரோம, அரேபிய, எகிப்திய, இந்திய நாணயங்கள் மற்றும் சீனக் களிமண் பொருள்கள், இந்த நகரின் தொன்மையைச் சிறப்புகளையும் நமக்கு உணர்த்துகின்றன.

சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரம் இத்தலத்தின் செழுமையைக் குறிப்பிடுகிறது. இத்தலத்தின் அருகேயுள்ள ‘மாளிகைத்திடல்’ என்ற ஊரும், அங்கே கிடைத்த சோழர்காலக் கல்வெட்டும், இதனை உறுதி செய்கின்றன. போர்த்துக்கீசர்கள் காலத்தில் இவ்வாலயம் முழுவதுமாகத் தகர்க்கப்பட்டு, இதன் சொத்துக்கள் கொள்ளையடிக்கப் பட்டனவாம்.

யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரின் திருப்பணி

இன்று இலங்கையில் உள்ள எண்ணற்ற பழங்கோயில்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து, அவற்றை உலகுக்கு ஆதாரங்களோடு வெளிப்படுத்திய அருளாளர் யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர். அவரால் வெளிப்பட்ட ஆலயங்களுள் பிரதானமாகத் திகழ்வது, திருக்கேதீச்சரம்.

கி.பி.1872-ம் ஆண்டு ஆறுமுகநாவலர் இவ்வாலயம் பற்றிய குறிப்புகளைத் தொகுத்து சைவ சமய மக்களுக்கு இதன் பெருமைகளை நினைவூட்டினார். அவரது காலத்திற்குப் பின்பு 21 ஆண்டுகள் கழித்து இத்திருப்பணி கைகூடியது. கொழும்பில் வணிகம் செய்து வந்த நகரத்தார், 43 ஏக்கர் நிலப்பரப்பை அரசிடம் இருந்து ஏலத்தில் எடுத்து, ஆலயத் திருப்பணிகளைச் செய்தனர். அதன்மூலம் ஆறுமுக நாவலரின் கனவு நனவானது.

சிவபாதசுந்தரம், சீமான் கந்தையா வைத்தியநாதன், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் பெருமுயற்சியால், புதையுண்ட விநாயகர், மகாலிங்கம், சுப்பிரமணியர், நடராஜர், சண்டிகேசுவரர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு, கி.பி. 1960-ல் குடமுழுக்கு நடந்தேறியது. ஆலயத்தை அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆலயமாக்கியவர், கந்தையா வைத்தியநாதன். 1976-ல் குடமுழுக்கு நடந்தேறியது. 1983- ல் இவ்வாலய விழாக்களில் ஐந்து தேர்கள் வீதியுலா வந்தன.

இலங்கை உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலகட்டத்தில் இந்தத் திருக்கோயில் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. இதன்பின் தற்போது பெரும் முயற்சியினால் புனரமைக்கப்பட்டு, 6.7.22 அன்று குடமுழுக்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் இந்திய அரசின் பங்களிப்பு பிரதானமானது. 32.5 கோடி ரூபாயை மானியமாக அளித்துத் திருப்பணிக்குப் பேருதவி புரிந்துள்ளது நம் இந்திய அரசு. தமிழகத்து ஸ்தபதிகள் இப்பணியினைச் சிரமேற்கொண்டு செய்து முடித்துள்ளனர். தற்சமயம் சுவாமி மற்றும் அம்பிகையின் கருவறை விமானங்கள் மற்றும் சுற்றுப் பிராகார சந்நிதிகள் ஆகியன முடிக்கப்பட்டுக் கும்பாபிஷேகத்துக்காகக் காத்திருக்கின்றன.

குடமுழுக்கு காணும் 
இலங்கை திருக்கேதீச்சரம்!

திருக்கோயில் தரிசனம்...

திருக்கேதீஸ்வரம் திருக்கோயில், கிழக்குநோக்கிய ஐந்துநிலை ராஜ கோபுரத்துடன் திகழ்கிறது. அதற்கு அருகே காண்டாமணியும், மண்டபமும் அமைந்துள்ளன. எதிரில் நந்திதேவர், மண்டபத்தினுள் சுவாமியை தரிசனம் செய்தபடி வீற்றிருக்கிறார். உள்ளே மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என அனைத்தும் ஒருங்கே அமைந்திருக்க, கருவறையில் மூலவர் திருக்கேதீசரநாதர் எழுந்தருளியிருக்கிறார்.

இவர் கி.பி. 1903-ம் ஆண்டு காசியில் இருந்து கொண்டு வரப்பட்டவர். கருவறையைச் சுற்றிய கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இதேபோல, அன்னை கௌரியம்பாள் சந்நிதி தெற்குநோக்கி அமைந்துள்ளது.

சூரியன், சந்திரன், சண்டேசுவரர், சனீஸ்வரர், நவகிரகங்கள், கேது பகவான், சமயக்குரவர்கள், சேக்கிழார், சந்தானக்குரவர்கள், சுந்தரர், விநாயகர், சோமாஸ்கந்தர், மகாவிஷ்ணு, அகழ்வாய்வின்போது கிடைத்த மகாலஷ்மி, பஞ்சலிங்கம், மகாலிங்கம், சுப்பிரமணியர் ஆகியோர் திருவுருவங்களும் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன. இவை தவிர்த்து, தெற்குநோக்கிய சந்நிதியில் வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப் பெருமான், சோமாஸ்கந்தர், பள்ளியறை, பைரவர் சந்நிதி ஆகியவையும் அமைந்துள்ளன.

ஆலயத்தின் வெளியே பிரமாண்ட திருஞானசம்பந்தர் - சுந்தரர் மடம் கலைநயத்துடன் எழுப்பப்பட்டுள்ளது. தங்குமிடம், அன்ன தானக் கூடம் என அனைத்தும் உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது இந்த மடம். ஆலயத்தின் நிர்வாகம், திருக்கேதீச்சரம் அறங்காவலர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,

எங்கு உள்ளது? இலங்கை வடக்கு மாகாணம், மன்னார் மாவட்டத்தில், மன்னார் நகரில் இருந்து கிழக்கே, யாழ்பாணம் செல்லும் பிரதான சாலையில் 10 கி.மீ. தொலைவில் திருக்கேதீச்சரம் அமைந்துள்ளது. கொழும்பிலிருந்து வடக்கே 320 கி.மீ. தூரத்திலும், யாழ்பாணத்திலிருந்து 110 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. காலை 7 முதல் பகல் 12 மணி வரையிலும்; மாலை 4 முதல் இரவு 7 மணி வரையிலும் கோயில் நடைதிறந்திருக்கும்.