Published:Updated:

சிவபுரம்! - இராஜராஜேசுவரமுடையார் மகாதேவர் கோயில் - ஆன்மிகம்

சிவபுரம்
பிரீமியம் ஸ்டோரி
சிவபுரம்

மு.அரி

சிவபுரம்! - இராஜராஜேசுவரமுடையார் மகாதேவர் கோயில் - ஆன்மிகம்

மு.அரி

Published:Updated:
சிவபுரம்
பிரீமியம் ஸ்டோரி
சிவபுரம்

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து.

மாணிக்கவாசகர் தமது சிவபுராணத்தின் நிறைவு வரிகளில் ஈசனின் இருப்பிடம் என்று சிவபுரத்தைக் குறிப்பிடுவார். சோழ தேசத்தில் பாடல் பெற்ற சிவபுரம் ஒன்று உண்டு. நாம் இங்கே பார்க்கப் போகும் சிவபுரம், தொண்டை மண்டலத்தில் உள்ளது.

சென்னை - பூந்தமல்லி - செம்பரம்பாக்கம் வழியாக அரக்கோணம் செல்லும் சாலையில், பேரம்பாக்கத்திலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்திலும், கூவம் எனும் தலத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தூரத்திலும் உள்ள ஊர் இது. வற்றாத ஜீவநதி என புராணங்களால் போற்றப்படும் கூவம் நதி தீரத்தில் அமைந்துள்ளது இவ்வூர். தற்போது சிற்றூராகத் திகழும் சிவபுரம், முன்பு பேரரசுகளால் ஆளப்பட்டு, பெரும் நகராக இருந்துள்ளது. இதை, இவ்வூரின் அமைப்பைக் கொண்டும் கோயிலின் கம்பீரத்தைக் கொண்டும் அறியலாம்.

சிவபுரம்! - இராஜராஜேசுவரமுடையார் மகாதேவர் கோயில் - ஆன்மிகம்

இவ்வூரின் தென் கிழக்கே பழங்குடியினர் அதிகம் வாழும் இருளஞ்சேரி எனும் கிராமமும், தெற்கே ஓம்மங்களம் என்ற கிராமமும் உள்ளன. இவ்வூரிலும் இதன் அருகிலுள்ள ஊர்களிலும் வீரக் கலைகள் மற்றும் வைத்திய அறிவு மிகுந்த ஆசான்களும், விவசாயத்தில் சிறந்தோரும், இசையறிவில் வல்லுநர்களும் அதிகம் இருந்துள்ளனர்.

இந்தச் சிவபுரத்தின் அருள்மிகு இராஜராஜேசுவரமுடையார் மகாதேவர் திருக்கோயில் கல்வெட்டுகளுக்கும், சோழர்களின் கட்டடக் கலைக்கும், அவர்களின் ஆட்சித் திறனுக்குக் கட்டியம் கூறும் தகவல்களுக்கும் பெயர் பெற்றது. இது, தமிழ்நாடு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னமாகும்.

இக்கோயில் கி.பி. 10 மற்றும் 11-ம் நூற்றாண் டுகளில் சோழப் பேரரசர் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.

சிவபுரம்! - இராஜராஜேசுவரமுடையார் மகாதேவர் கோயில் - ஆன்மிகம்

அகநாழிகை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம் என்ற அமைப்பில் திகழும் இந்த ஆலயம், முழுக்க கிரானைட் கற்களால் ஆனது. கோயிலின் முன் மண்டபச் சுவர்ச் சுற்று முழுக்க கல்வெட்டு எழுத்துக்கள் காணப்படுகின்றன.

முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், ராஜாதிராஜன், முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் ஆகியோருடைய கல்வெட்டுகள் ஒருசேர இக்கோயிலில் கிடைக்கப் பெறுவது பெரும் சிறப்பு. இவற்றில் இந்த அரசர்களின் மெய்க்கீர்த்தி, கொடைகள், நில விவரம், கோயிலில் செய்யவேண்டிய தானங்கள், கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

சிவபுரம்! - இராஜராஜேசுவரமுடையார் மகாதேவர் கோயில் - ஆன்மிகம்

இக்கோயிலின் மண்டபங்கள் வழிபோக்கர்கள், சாதுக்கள், இறை அடியார்கள் தங்கிச் செல்லும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக கோயில்கள் பலவும், மக்கள் தங்கள் ஆலோசனைகள், பொதுக் காரியங்கள் மற்றும் சிறு பஞ்சாயத்துகளை நிகழ்த்தி, காரியங்களைச் செவ்வனே நிறைவேற்றும் இடமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், இறைவனுக்கு உணவு படைத்தல் மூலம் ஊரில் உணவின்றி வாடும் மக்களுக்கும் உணவு கிடைக்கும் வகையில் ஆலயங்கள் அமைந்தன. `படமாடும் கோயில் பரமர்க்கொன்று ஈந்தாலும் நடமாடும் கோயில் நம்பர்க்கு ஆகும்’ என்பதற்கேற்ப, இறை வழிபாட்டின் மூலம் மக்கள் பயனடை யும் விதமாக, தென்னாட்டு அரசர்களால் அதிகக் கோயில்கள் நிறுவப்பட்டன.

சிவபுரம்! - இராஜராஜேசுவரமுடையார் மகாதேவர் கோயில் - ஆன்மிகம்

ஏரி, குளங்கள் அமைத்தல், கால்வாய் வழியில் நீர் வளத்தை கடத்துதல், மழை நீரைச் சேகரித்து நாட்டை வளப்படுத்துதல்... என்று நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கி யுள்ளன நம் பண்டையகால பேரரசுகள். அவ்வகையில் திருக்குளங்களோடும் சமூகப் பணிகளோடும் திகழ்ந்த கோயில்கள், நாட்டையும் நாட்டு மக்களையும் வளப் படுத்தும் அறக் குடில்களாகவே திகழ்ந்துள் ளன. `கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ எனும் சொல் வழக்கின் சாரமும் இதுவே.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சிவபுரம்! - இராஜராஜேசுவரமுடையார் மகாதேவர் கோயில் - ஆன்மிகம்

தத்துவம் உணர்த்தும் கோயில்கள்

கோயில் - உடல், சிவலிங்கம் – உயிர் எனும் தத்துவத்தில் அமைக்கப்பட்டவை கோயில்கள். உடலுயிர்த் தத்துவப்படி அமைவதே ஆகம விதி.

`உள்ளம் பெரும் கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்...’ எனும் திருமூலரின் திருமந்திரப் பாடலும் இதையே உரைக்கிறது. சீவன் என்ற ஆன்ம தத்துவமே சிவலிங்கம் என்கிறது திருமந்திரம். அப்படியான லிங்க வடிவம் கோயிலின் மூல மூர்த்தமாகத் திகழும். சிவலிங்கச் சந்நிதியின் பின்புறம் அகநாழிகைப் பகுதியில் லிங்கோத்பவ மூர்த்தம் இருக்கும். ஆன்மாவுக்குள் இறைத் துகளாகிய உயிர் திகழும் என்பதை உணர்த்துவது, லிங்கோத்பவ சிற்பம்.

தியாகத்தை உணர்த்தும் நந்தி மாடு வடிவமாகக் காட்டப்பட்டுள்ளது. ஏனெனில், மாடு காலம் முழுக்க தன் எசமானருக்குப் பணி செய்யும், எந்த ஒரு பலனையும் எதிர்பாராது. மனிதனுக்குத் தேவையான தானிய, பயிர் வகைகளைப் பெறும் விதம் உழுது கொடுத்த பிறகு, மனிதனுக்குத் தேவையற்ற வைக்கோல், பிண்ணாக்குகளை உண்டு வாழ்கிற தியாகப் பிறப்பு அது. இவ்வகையான தியாக உள்ளமே இறையைக் காணும் வழி என்ற தத்துவத்தின்படி நந்தியும், அவர் தரிசித்து உய்வடையும் வகையில் சிவலிங்கமும் அமைக்கப்பட்டன.

சிவபுரம்! - இராஜராஜேசுவரமுடையார் மகாதேவர் கோயில் - ஆன்மிகம்

ஞானத்தின் ஆரம்ப சக்தியாய் விநாயகர், மழு ஆயுததுடன் காணப்படுகிறார். இது `சர சாத்திரம்’ எனப்படும் நாடி ஓட்டத்தை உணர்த்துவதாகக் கூறப்படுகிறது. ஞானக் கல்வியைப் போதிக்கும் குருவாகத் திகழ்கிறார் தட்சிணாமூர்த்தி. அவர் தம் திருக்கரங்களில் சின்முத்திரை, ருத்திராட்ச மாலை, சுவடி, சோதி ஆகியவற்றை ஏந்தியபடி அருள்கிறார்.

சைவ சித்தாந்த தத்துவம் பதி (பரமாத்மா), பசு (ஆன்மா), பாசம் (ஆணவம்), மாயை, கன்மம் ஆகிய ஐந்தையும் ஐந்துவிரல் தத்துவ மாகக் கொள்கிறது. பெரு விரல் - பதி; ஆள்காட்டி விரல் - பசு அதாவது ஆன்மா. இந்த ஆன்மா பரமாத்மாவைச் சேரும் யோகத்தைக் குறிப்பதாக சின்முத்திரையைப் பற்றிச் சைவ சித்தாந்தம் கூறுகிறது.

சிவபுரம்! - இராஜராஜேசுவரமுடையார் மகாதேவர் கோயில் - ஆன்மிகம்

வர்ம சாத்திரத்திலும் மன எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் முத்திரையாகக் குறிக்கப்படுகிறது, சின்முத்திரை. தீய குணங்களை (முயலகன்) அடக்கி நற்குணத்தை வெளிப் படுத்தும் தத்துவமாய் அமைந்துள்ளார் தட்சிணாமூர்த்தி. இவரின் கால்களுக்கடியில் மானும் சிம்மமும் சண்டையிடாது அமைதியாய் அமர்ந்திருக்கும் சிற்பம், உலக அமைதியை வலியுறுத்துகிறது.

மட்டுமன்றி, திசைக்கொரு முகத்துடன் திகழும் நான்முகக் கடவுளும், கையில் மழுவுடன் சண்டிகேசுவரரும், `ஆன்மா இது’ என்று தன் ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டும் துவார பாலகர்களும் சிவாலயங் களில் அருள்பாலிப்பார்கள்.

இவ்விதமான அனைத்து அம்சங்களையும் கொண்டு திகழ்கிறது சிவபுரம் அருள்மிகு இராஜராஜேசுவரமுடையார் ஆலயம். இங்குள்ள சந்திர, சூரிய தெய்வச்சிலைகள், தஞ்சை சரஸ்வதி மகாலில் பாதுகாக்கப் படுவதாக இவ்வூர் மக்கள் கூறிய செய்தி, புதிய தகவல்.

கொற்றவை வழிபாடு!

கொற்றவை எனும் போர்த் தெய்வத்தின் பரிமாற்ற வடிவமே விஷ்ணு துர்கை எனக் கருதப்படுகிறது. போர்களில் தம்மையும் தம் மக்களையும் காக்கவேண்டி கொற்றவை தெய்வத்தை ஆரம்ப காலம் முதலே சோழர்கள் வழிபட்டனர். மக்களைக் காக்கவும், அரசு நீதிப்படி செங்கோல் ஆட்சி நடத்தவும் ஆயுதங்களைக் கையாளும் மன்னனைப் போலவே, உலக தர்மத்தைக் காக்க தெய்வங்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து வடிவமைத்துள்ளனர்.

உலகின் பல நாடுகளில் பெண் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் கொடுங்கோல் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில், நம் மன்னர்கள் பெண் தெய்வத்தைக் கொண்டாடியதும், அவர்களை வழிபட்டுவிட்டே போருக்குச் செல்லும் பண்பாட்டைக் கடைப்பிடித்ததும் மிகவும் சிறப்பு. திருக்கோயில்களில் பெண் தெய்வ வழிபாட்டைப் பின்பற்றி மகிழ்ந்தது, நம்மவர்கள் பெண்களுக்கு கொடுத்த சமத்துவ நிலையைப் பறைசாற்றுகிறது.

இங்ஙனம் அறம் போற்றுதல், மறை போற்றுதல், ஆட்சி பரிபாலனம், ஆதுரச்சாலை முதலாக அனைத்துக்கும் மைய இடமாக ஆலயங்கள் திகழ்ந்துள்ளன. அதற்கு சிவபுரம் கோயிலும் ஒரு சாட்சி!

கோயிலின் திருவிழாக்கள்

ஐப்பசி மாதம், சோம வாரம் மற்றும் பிரதோஷத்தன்று அன்னத்தால் அபிஷேகித்துப் பூசை சிறப்பாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் 10, 11, 12 ஆகிய மூன்று நாள்கள் ஆதவனின் கிரணங்கள் லிங்கத் திருமேனியைத் தழுவி வழிபடுவது, கண்கொள்ளா காட்சியாகும். திருக்கோயில் தெற்கு பார்த்த வாசல் கொண்டது. ஆகவே, இங்குள்ள ஈசனுக்கு வில்வத்தால் பூசை செய்தால் நினைத்தவை நடக்கும் என்பது ஐதிகம்.

அரசர்களின் வீரமும் பண்பும்

சிவபுரம் திருக்கோயில் இவ்வூரின் பழைமை, மக்களின் வாழ்வியல் பண்பு, செழிப்பு, வீரம், அரசர்களின் குணங்களுக்கான ஆதாரங்களைக் கொண்டதாகத் திகழ்கிறது எனப் பார்த்தோம்.

அவ்வகையில் இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் சோழர்களின் மாண்பை அறியமுடிகிறது. சோழப் பேரரசு பெரிய ஆட்சிப் பரப்பைக் கொண்டது, இவர்களது வெற்றிக்குக் காரணம் இவர்களின் வீரமும், துணிவும்தான். அவற்றை வழங்கியவை சோழர்கள் கையாண்ட கலை களே. ஆம், சோழர்கள் உடல், மனம், உயிரென ஆகியவற்றைப் பிரித்துணர்ந்து செம்மைப்படுத்தும் கலைகளைக் கையாண் டனர். அவற்றில் முக்கியமா னவை: களரி, வர்மம், வைத் தியம், யோகம், கட்டடக் கலை.இன்னமும் இம்மரபின் வழிக் கலைகளைச் சார்ந்த வாழ்வியலை மேற்கொண்டு வரும் குடும்பங்கள் சில உண்டு. அவர் களின் வாழ்வியலை ஆராய்வ தன் மூலம் முற்கால பேரரசுகளின் வாழ்வியல் முறைகளைத் தெளிவாக அறியலாம்.

போர் வீரனைவிடவும் கட்டடக் கலைஞனுக்கு அதீத பலம் தேவை. ஏனெனில், இக்காலத்தைப் போல் பளு தூக்கும் இயந்திரங்கள் அப்போது இல்லை. உடைத்தல் செதுக்குதல் போன்ற பணிகளைச் சிற்பி தன் கைகளாலேயே செய்ய வேண்டும். இது போர்க் களத்தில் வாள் சுற்றி போர் செய்பவர்களின் திறனைக் காட்டிலும் மிகக் கடினம்.

பல ஆண்டுகள் தொடர்ந்து ஒரு போர் நடப்பது இல்லை. ஆனால் பல ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்து சிற்பிகள் கோயில்களைக் கட்டியதுண்டு. மேலும் சிற்ப சாத்திரம் பயின்ற சிற்பிகள் பலரும் வர்மம் என்ற உயிர்க் கலையான போர் யுக்தி முறைகளை அறிந்திருந்தார்கள் என்பது என் ஆய்வுத் தேடலில் அறிந்த உண்மை. `வர்மம்’ எனும் உயிரோட்டப் புள்ளிகளைக் குறித்து அறிந்தால்தான் உயிராட் டம் வாய்ந்த சிற்பங்களைச் செய்யமுடியும்.

மாமல்லபுரம், காஞ்சி, தஞ்சை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, திருவனந்தபுரம், சிவபுரம் போன்ற ஊர்களில் நம்மால் இவ்வகை ஆசான்களை இனம்காண இயலும்.

ஆக, சிற்பிகளும் போர்க்கலையை அறிந்திருக் கக் கூடும் என்பது இதில் தெளிவாகிறது. எனவே சிற்பிகள் தன் வீரத்துக்கு ஆசானான தன் அரசனைப் பற்றிய கல்வெட்டை செதுக்குவதிலும், கோயில்களை அமைப்பதிலும் முழுமனத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள். இதை சிவபுரத்துக் கோயிலின் கம்பீரத்திலும் சிற்ப அழகிலும் காண முடிகிறது.

சிவபுரம் கல்வெட்டுகள்!

இக்கோயிலின் தென் பகுதி வாசலின் வலப்புறத்தில் வீரப் பேரரசர் ராஜராஜச் சோழரின் மெய்க்கீர்த்தி கல்வெட்டு காணப்படுகிறது. நம்மில் பலரும் அறிந்த மெய்க்கீர்த்திதான் அது.

“ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல

பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை...’

எனத் தொடங்கும் கல்வெட்டு, ராஜராஜனின் பல மாண்புகளையும் வெற்றிகளையும் குறிப்பிடுகிறது. குறிப்பாக `காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி...’ எனும் வரி காந்தளூர் வெற்றியைச் சொல்கிறது.

காந்தளுர்ச் சாலை புகழ்பெற்ற வர்மம் மற்றும் களரிப் படையினர் வாழ்ந்த இடம்; மாந்திரீகம் மிகுந்த இடம். இன்றளவும் பல ஆசான்கள், களரி வீரர்கள் இங்கு வாழ்வதைக் காணலாம். காந்தளூர் போர் குறித்த ஆய்வுக் கருத்துகளில் சர்ச்சைகள் நீடித்திருப்பது உண்மையே. எனினும் எனது நேரடி ஆய்வில் சில தெளிவுகள் கிடைத்தன.

சிவபுரம்! - இராஜராஜேசுவரமுடையார் மகாதேவர் கோயில் - ஆன்மிகம்

கடல் கடந்து பெரும் நாடுகள் பலவற்றை வெற்றிகொண்டாலும், காந்தளூர் வெற்றியையே மிகப் பெருமையாகக் கருதினார் ராஜராஜர். ஆனைமுடி மலைப்பகுதியில் காந்தளுர்ச் சாலை அமைந்துள்ளது.

ரஷ்ய நாட்டின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கூடிய - உலகப் பாரம்பர்ய இடங்கள் குறித்து ஆராயும் குழு, ஆனைமுடி மலைத் தொடரை உலகப் பாரம்பரிய மலைத் தொடராகத் தேர்வு செய்துள்ளது. இதிலிருந்தே இந்த மலைப்பகுதியின் தொன்மையை அறியலாம்.

வீரத்திலும் பண்பிலும் குறைவிலா புகழையுடைய ராஜேந்திர சோழன், தன் தந்தையின் ஆட்சிக்குப் பிறகும் தொடர்ந்து இக் கோயிலுக்கும், இவ்வூர் மக்களுக்கும் செய்த கொடையை இங்குள்ள கல்வெட்டில் காணமுடிகிறது.

ராஜராஜன் ராஜேந்திரன் மட்டுமன்றி ராஜாதிராஜனின் கீர்த்தியைச் சொல்லும் கல்வெட்டும் இங்கு உள்ளது. இங்ஙனம், தலைமுறை தவறாது ஊரின் மேன்மையைக் காத்த அரசும், அரசர்களும் பன்மடங்கு பண்பில் உயர்ந்தவர்கள் என்ற உன்னதமான உண்மையை எடுத்துக்காட்டுகின்றன இந்தக் கல்வெட்டுகள்.

சடையவர்மன் சுந்தர பாண்டியன் குறித்த கல்வெட்டையும் இங்கே காணலாம். இவர் போசள அரசனை வென்று கண்ணணூரைக் கைபற்றினார். இலங்கை, சேந்தமங்கலம், நெல்லூர் போன்ற இடங் களையும் கைப்பற்றி தனது வீரத்தை நிலைநாட்டினார். சிவபுரம் இராஜராஜேசுவரமுடையார் மகாதேவர் கோயிலில் தெற்கு வாசல் இடபுறம், வலபுறமுமாய் அமைந்துள்ளன இவருடைய கல்வெட்டுகள்.