Published:Updated:

பக்தர்களின் தேவைக்கு மட்டும் நீர் சுரக்கும் அதிசய ஊற்று!

சொக்கம்பட்டி சுயம்பூற்றுநாதர் தரிசனம்

பிரீமியம் ஸ்டோரி

றைவனின் சாந்நித்தியமும் சித்தர்களின் திருவருளும் நிறைந்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் திகழும் தலங்கள் யாவும் மிகவும் உன்னதமானவை. வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய அந்தத் தலங்களில் ஒன்று சொக்கம்பட்டி அருள்மிகு சுயம்பூற்று நாதர் ஆலயம்.

நெல்லை மாவட்டம், புளியங்குடி அருகிலுள்ளது சொக்கம்பட்டி மலை. யோகிகளும், சித்தர்களும், தங்கியிருந்து நாடும் மக்களும் வளம் பெற இறையைப் பிரார்த்திக்கும் அற்புதத் தலம் இது. சித்தர் பெருமக்கள் வான்மார்க்கமாக வந்து வணங்கிச் செல்லும் சித்தர் மலையாகவும் இது திகழ்கிறது.

முன்னொரு காலம் சொக்கம்பட்டி மலைப்பகுதி மழையில்லாமல் கடும் பஞ்சத்தைச் சந்தித்தது. அருவிகளில் நீர் வரத்து இல்லாமல் பாறைகள் காய்ந்தன. சுனைகளும் வற்றிப்போய்விட்டன. கடும் உணவுப் பஞ்சம்.

 ஸ்ரீசுயம்பூற்று நாதர்
ஸ்ரீசுயம்பூற்று நாதர்

இந்த நிலையில் இந்தப் பகுதியில் வசித்த மேய்ப்பர் ஒருவர், தான் வளர்க்கும் ஆடு-மாடுகளின் உணவுக்கும் தண்ணீர் தேவைக்கும் வழியின்றி வருந்தினார்.ஆகவே, சில சூட்சும மூலிகைகளைத் தேடி உண்டு வந்தார். அவற்றின் மகிமையால் தன்னுடைய கால்நடைகளின் பசியை யும் தாகத்தையும் தணித்துவந்தார்.

ஆனால், மற்ற மக்களின் நிலைமை என்னாவது. ஆகவே, பஞ்சம் தவிர்க்க இறைவனைச் சரணடைய தீர்மானித்தார்.

ஒருநாள் இறைவனைப் பிரார்த் தித்து, ‘`ஐயா.. காத்தருள வேண்டும். மண்ணையும் மக்களையும் காக்க பெருமழைப் பொழியவேண்டும்’’ என வேண்டி நின்றார். அப்போது அவர் உள்ளத்தில் ஏதோ உணர்த்தப்படவே, கால்நடைகளைப் பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டு, தான் மட்டும் வேறோர் இடத்துக்கு நகர்ந்தார்.

 சுயம்பூற்று நீரில் மிதக்கும் கற்பூர தீபம்!
சுயம்பூற்று நீரில் மிதக்கும் கற்பூர தீபம்!

அங்கு மண்டியிட்டு அமர்ந்து, ஈசனை நோக்கி வேண்டினார்.

‘`ஐயனே.. மழை இல்லையென்றால். நான் இங்கேயே மடிந்துபோய்விடுவேன்’ என மன்றாடினார். என்ன ஆச்சரியம்... வானில் இடி இடித்தது; மின்னல் வெட்டியது. சற்று நேரத்தில் சூறைக்காற்றுடன் பெருமழை பொழிந்தது. அது மட்டுமா?

அருகில் குறிப்பிட்ட ஓரிடத்தில் ஊற்றுக்கண் திறந்து தண்ணீர் பெருகியது. மேய்ப்பன் தண்ணீரை கைகளில் அள்ளி கண்களில் ஒற்றிக்கொண்டார்; ஆசைதீரப் பருகினார்; குதூகலத்தில் துள்ளிக் குதித்தார்.

இறைவனுக்கு நன்றி செலுத்த நினைத்தவர், கீழே கால்நடைகளை நிறுத்திவைத்திருந்த இடம் அருகில், சிவனாரைப் பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபட்டார். மேலும், தானே தோன்றிய ஊற்றுக்கு `சுயம்பு ஊற்று’ என்றும், தான் வழிபட்ட சிவனாருக்குச் சுயம் பூற்று நாதர் என்றும் திருப்பெயர் சூட்டினார்.

அத்துடன், ``என் வேண்டுதலுக்காக தோன்றிய இந்த ஊற்றில், இனி எவர் இங்கு வந்தாலும் அவர்களின் தாகம் தீர்க்கும் பொருட்டு தண்ணீர் சுரக்கவேண்டும்’’ என்றும் பிரார்த்தித்தார். `அப்படியே ஆகட்டும்’ என்று ஈசனும் அருள் புரிந்தார்.

மலையேற்றத்தில் பக்தர்கள்...
மலையேற்றத்தில் பக்தர்கள்...

இன்றைக்கும் இந்த ஊற்று அதிசயம் நிகழ்த்தி வருகிறது. சொக்கம்பட்டிக்கு வந்து தங்கி வழிபடுவோர் எத்தனை பேரோ, அவர்களுடைய தேவைக்கு மட்டும் இந்த ஊற்றில் தண்ணீர் ஊறும். அதைத் தாண்டி ஊறாது என்பது, கலியுகத்தின் அதிசயம்தான். அதுமட்டுமல்ல, கெட்ட எண்ணத்துடனோ மாற்று நோக்கத்துடனோ ஊற்றின் அருகில் எவர் சென்றாலும், அடுத்த சில நிமிடங்களில் ஊற்று நீர் வற்றிவிடும் என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள், இப்பகுதி மக்கள். அவர்கள், இதை உயிருள்ள ஊற்றாகவே கருதி வணங்கி வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம் புளியங் குடி-தென்காசி சாலையில் உள்ளது சொக்கம்பட்டி. திருநெல்வேலி யிலிருந்து தென்காசி மற்றும் புளியங் குடிக்குப் பேருந்து வசதி உண்டு. சொக்கம்பட்டிக்குச் சென்று, அங்கிருந்து வாகனங்கள் மூலம் சுமார் 6 கி.மீ. தொலைவிலுள்ள சுயம்பூற்று விநாயகர் ஆலயத்துக்குச் செல்லலாம்.

அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு மலையேற வேண்டும். (கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000 அடி உயரம்). 5 அல்லது 6 மணி நேரத்தில் மலையேறி, சுவாமியின் கோயிலை அடைந்துவிடலாம்.

சுயம்பூற்று ஸ்ரீமகாகணபதி கோயில்
சுயம்பூற்று ஸ்ரீமகாகணபதி கோயில்

அந்தப் பயணம் முழுக்க நாம் எதிர்பார்க்காத பல அனுபவங்கள் வாய்க்கும். பாவு ஊற்று ஓடை, வண்ணாத்திப் பாறை, ஆலமரம், மலை முகடு எனப் பரவச அனுபவங்களோடு கரடுமுரடான பாதையின் வழியே மலையேற்றம் தொடரும்.

பஞ்சுப்பொதியென மிதந்துவந்து முகடுகளை முத்தமிட்டுச் செல்லும் மேகக்கூட்டங்கள், நம்மை மயக்கும்; நம் முகம் தழுவிச் செல்லும் மூலிகைக் காற்று, நம் பயணக் களைப்பை அறவே போக்கிவிடும். குறிப்பிட்ட ஓர் இடத்தை அடைந்ததும், மலைக்குப் மறுபகுதியில் இறங்கும் பாதையில் பயணம் தொடரும்.

ஒருபுறம் மலைச்சுவர் மறுபுறம் அதலபாதாளம் எனத் திகழும் அந்தப் பாதையில், ஓரிடத்தில் பாதைக்கு சற்று கீழே பெரிய பாறை ஒன்று தென்படும். அதன் இடுக்கில் பள்ளம் போன்ற பகுதியில் இறங்கிச் சென்றால், விசேஷமான ஒரு குகையை தரிசிக்கலாம். அமைப்பில் இரண்டு குகைகள் போல் தோன்றுகிறது. பாதையிலிருந்து மிகக் கவனமாக இறங்கி குகைக்குள் செல்லவேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சித்தர் பெருமக்களும் சாதுக்களும் தங்கி பூஜை செய்யும் இடம் இந்தக் குகை என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். குகைக்குள் நுழைந்ததுமே இனம் புரியாத அதிர்வை நாம் உணரமுடியும். அங்கே சிறிதுநேரம் தியானம் செய்வது சிறப்பு.

குகையிலிருந்து வெளியேறி பயணத்தைத் தொடர்ந் தால், அடுத்து வரும் பள்ளத்தாக்குப் பகுதியில் அருள்மிகு சுயம்பூற்று நாதரை தரிசிக்கலாம்.

பழைய லிங்கம் ஒன்று தனியே இருக்க. புதியதாகவும் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபட்டு வருகிறார்கள். அருகிலேயே பிள்ளையார் மற்றும் அம்மன் தரிசனம். அங்கிருந்து சற்று மேலே சென்றால் அதிசய ஊற்றைக் காணலாம்.

அகத்தியர் உள்பட சித்தர்கள் பூஜித்த குகை...
அகத்தியர் உள்பட சித்தர்கள் பூஜித்த குகை...

``இறைவனை மனதார வழிபட்டுவிட்டு கற்பூரம் ஏற்றி ஊற்று நீரில் கற்பூர தீபத்தை மிதக்கவிட்டால், அந்த தீபம் ஓம் எனும் பிரணவ வடிவில் வலம் வருவதுண்டு’’ என்று சிலிர்ப்போடு சொல்கிறார்கள் அடியார்கள் சிலர்.

அதிசய ஊற்றையும் தாண்டி மேலே பயணித்தால், அகத்தியர் முதலான சித்தர்கள் தங்கி தியானம் செய்த பாறைக் குகை ஒன்றைக் காணலாம். உலக மக்களின் வாழ்வுக்காக உயிர்களின் உயர்வுக்காக சதுரகிரி சித்தர்கள் இங்கு வந்து தவம் செய்வதாக நம்பிக்கை. சிவனடியார்களும் பக்தர்களும் அவசியம் தரிசிக்கவேண்டிய அற்புத மலைக்ஷேத்திரம் இது.

ஒருமுறை இந்தப் பகுதிக்குச் சென்று வந்தாலே பிணிகள் அனைத்தும் விலகும்; மன அழுத்தம் குறையும் என்பது பக்தர் களின் நம்பிக்கை.

சுயம்பூற்று ஸ்ரீவிநாயகர்
சுயம்பூற்று ஸ்ரீவிநாயகர்

இன்றைக்கும் சாதுக்கள் பலரும் இந்தக் கோயில் அமைந்திருக்கும் பகுதிக்கு வந்து, சுயம்பூற்று நாதரை வழிபட்டு தவம் செய்து வருகிறார்கள். அதிசய ஊற்றான சுயம்பூற்றுத் தண்ணீரை எடுத்துச்சென்று வீட்டுக் கிணற்றில், போர்வெல் இடங்களில் ஊற்றினால், அங்கு தண்ணீர் வற்றாமல் இருக்கும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை!

எப்படிச் செல்வது?: நெல்லை மாவட்டம் புளியங்குடி - தென்காசி மார்க் கத்தில், சொக்கம்பட்டி எனும் இடத்தில் இறங்கிக்கொள்ள வேண்டும்.

அங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் சுயம்பூற்று விநாயகர் கோயில். அங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு மலையேற வேண்டும். சுமார் 5 மணி நேரத்தில் சுயம்பூற்று நாதர் கோயிலை அடையலாம்.

எவ்விதக் காரணம் கொண்டும் அன்பர்கள் தனியே பயணிக்கக்கூடாது. தகுந்த வழிகாட்டலுடன் இந்த யாத்தி ரையை மேற்கொள்ளவேண்டும். மேலும் வனத்துறையின் அனுமதியைப் பெறுவதும் மிக அவசியம் ஆகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு