சென்றது கருதமாட்டேன்; நாளைச் சேர்வதை நினைக்கமாட்டேன். இன்றே இப்போதே ஈசனின் பதம் பற்றினேன் என்றிருப்போரைக் கவலைகள் அணுகுவதே இல்லை. பார்ப்பதைக் கண் நம்புவதைப்போல், அன்பின் வெளிப்பாடாகத் தோன்றும் சகலத்தையும் இறைவனாக எண்ணி வழிபடுதல் நம் மரபு. அதற்காகவே மலைகளை, விருட்சங்களை, நதிகளை... ஏன் பறவை, விலங்குகளைக்கூட வழிபடத் தொடங்கினோம். எனினும், எங்கும் நீக்கமற இருந்து ஆட்டுவிக்கும் அருள் சுடரை ஆலயங்களில் வைத்து வழிபடுவது, தொன்றுதொட்டு நீடிக்கும் நம் வழக்கம். பல தேசங்களில் மக்கள் குடியிருப்பே தோன்றியிராத காலத்திலேயே, நம் தமிழகத்தில் பிரமாண்ட ஆலயங்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
காலத்தாலும் கலைச்செல்வங்களைக் கொள்ளைகொண்டு போன அயல்நாட்டவர்களாலும் நம் ஆலயங்கள் பலவும் பாழ்பட்டன. சிதிலமாகி மிஞ்சி நின்ற ஆலய அடையாளங்களைக்கொண்டு தற்போது அவற்றைப் புனரமைத்து வருகிறது இன்றைய தலைமுறை. தமிழகத்தின் பல ஊர்களில் இளைஞர்கள் ஒன்றுகூடி அந்தந்த ஊர்களின் ஆலயங்களைப் புனரமைத்து வருவது பெரும் பாராட்டுக்குரியது. `நம் பாரம்பர்ய அடையாளங்கள் புதைந்து கிடப்பதெல்லாம் ஆலயங்களில்தான் என்று புரிந்து கொண்டோம், எனவே, அவற்றை மீட்டெடுப்போம்' என்று பலரும் தொண்டாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு உதவவே இந்த `ஆலயம் தேடுவோம்' பகுதியும்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்த இதழுக்கான பழைமையான ஆலயம் 1,500 ஆண்டுகளைக் கடந்த விளத்தூர் சோமநாத ஸ்வாமி திருக்கோயில். சோழவள நாட்டின் காவிரி தென்கரைத் திருத்தலமான அவளிவநல்லூர் ஆலயத்துக்குத் திருஞானசம்பந்தர் செல்லும்போது, களத்தூரிலிருந்து ஆவூர் செல்வதற்கு முன்னால், இந்த விளத்தூர் ஆலயத்துக்கு வந்து சோமநாத ஸ்வாமியை வழிபட்டார் என்று பெரியபுராணப் பாடல் தெரிவிக்கிறது.

திருஞானசம்பந்தர் பாடிப் பரவிய - சௌந்தர்ய நாயகி சமேத சாட்சிநாதர் திருக்கோயில் கொண்டிருக்கும் அவளிவநல்லூர், பஞ்ச ஆரண் யத் தலங்களுள் ஒன்று. இந்தத் தலங்களுக்கு இணையான மகிமையோடு திகழ்ந்திருக்கிறது விளத்தூர் திருக்கோயில். பல்லவர் காலத்திலும் பிற்காலச் சோழர்கள் ஆட்சியிலும் பெரும்புகழைக் கொண்டிருந்தது இந்த ஆலயம்.
குறிப்பாக ராஜராஜ சோழரின் திருமந்திர ஓலை அதிகாரியான அமுதன் தீர்த்தகரன் என்பவராலும் வீர ராஜேந்திரரின் புரவரி தினைக்களத்து கண்காணியாக இருந்த நமிநாதன் அரங்கனாலும் இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டுப் போற்றிப் பாதுகாக்கப்பட்டது என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
இந்தத் தலத்து புராணப்படி விநாயகரால் சபிக்கப்பட்ட சந்திரன் இங்கு வந்து தோஷ நிவர்த்தி பெற்றார் என்கிறார்கள், ஊர் மக்கள். அதனால், விளத்தூர் மீனாட்சியம்மன் சமேத சோமநாதஸ்வாமி ஆலயம் திங்களுக்குரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பிரிந்திருக்கும் கணவன்- மனைவி இங்கு வந்து வழிபட்டால் ஒன்றுசேர்வார்கள் என்பது நம்பிக்கை. சந்திரனை மனோகாரகன் என்கின்றன ஜோதிட நூல்கள். ஆகவே, மனம் தொடர்பான பிரச்னைகள் நீங்க இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவது விசேஷம் என்கிறார்கள். மேலும் காய்ச்சல், காசநோய், வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள், தொற்றுநோய்கள் ஆகிய பிணிகளால் பாதிக்கப்பட்டோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு நலம் பெறலாம் என்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள்.

விளத்தூருக்கு அருகேயுள்ள ஆவூர், சங்ககால சோழர்கள் காலத்தில் பெரும் புகழைக்கொண்ட நகரமாகும். இந்த ஊரில் சங்க காலப் புலவர்களான ஆவூர் மூலங்கிழார், வெள்ளக்குடி நாகனார் போன்ற பலரும் வாழ்ந்திருக்கிறார்கள் என இலக்கியத் தகவல்கள் கூறுகின்றன. ஆவூர் கூற்றத்துக்கு அடங்கிய அழகிய ஊர் விளத்தூர் என்று செப்பேடுகள் கூறுகின்றன. புகழ்பெற்ற நாகை பௌத்த விகாரத்துக்கு ராஜராஜ சோழர் தானமளித்த செய்தியைச் சொல்லும் ஆனைமங்கலத்துச் செப்பேடுகள் இந்த விளத்தூரின் புகழை விவரிக்கின்றன.
ராஜராஜ சோழரின் பேரரான வீரராஜேந்திரரின் கங்கைகொண்ட சோழபுரக் கல்வெட்டிலும் இந்த ஊரின் புகழ் சொல்லப்பட்டுள்ளது. 12-ம் நூற்றாண்டு வரை பெரும் புகழைக்கொண்டிருந்த இந்த ஆலயமும் ஊரும் பிறகு கவனிப்பாரின்றிப் போயின. அந்நியர் ஆட்சியில் சோமநாத ஸ்வாமி ஆலயம் முற்றிலும் சிதைந்து போனது. மிகப் பிரமாண்டமாக விரிந்து பரந்திருந்த இந்த ஆலயம், எந்த அடையாளமும் இல்லாமல் உருக்குலைந்து போன நிலையில், மூலவரான லிங்கமூர்த்தி, அம்பிகை, பைரவர், கணபதி, ரிஷபர் உள்ளிட்ட சில மூர்த்தங்களே கிடைத்தன. அவற்றை வைத்து வழிபட்டனர் ஊர் மக்கள்.
காலப்போக்கில், சோமநாத ஸ்வாமியின் பேரருளால் நோய்கள் நீங்குவதையும் குறைகள் விலகுவதையும் கண்ட சுற்றுவட்டார மக்கள் இந்த ஆலயத்தை மீண்டும் பொலிவுடன் எழுப்ப தீர்மானித்தார்கள். ஊர்ப் பெரிய வர்களின் முயற்சியால் தற்போது ஆலயம் எழுந்து வருகிறது. போதுமான அளவு பொருள் வசதி இல்லாததால், அவ்வப்போது ஆலயப் பணிகளில் தடைகளும் உண்டா கின்றன. சிவனடியார்களும் பக்தர்களும் ஒன்றிணைந்து உதவினால் போதும், சோமநாதப் பெருமான் கருவறைக்குள் சென்று அமர்ந்துவிடுவார்.

உங்கள் கொடையால் இந்தக் கோயில் எழும்பட்டும். எத்தனை சிறியது என்றாலும் பரவாயில்லை; உங்கள் பங்களிப்பு இந்த ஆலயத்துக்குப் போய்ச் சேரட்டும். 10 செங்கல்கள் வாங்க நீங்கள் பணம் தந்தாலும் போதுமே, காலங்கள் கடந்தும் அதில் அந்த சிவம் அமர்ந்திருக்குமே. அழுதழுதும் நீங்காத இந்தப் பிறவிநோயை, இப்படி ஆலயங்களுக்கு உதவி செய்து தீர்க்கலாமே. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த விளத்தூர் சோமநாத ஸ்வாமி ஆலயம் விரைவில் எழும்பட்டும்; நம் வினைகளும் தீரட்டும்!
பக்தர்கள் கவனத்துக்கு...
ஸ்வாமி: ஸ்ரீசோமநாத ஸ்வாமி
அம்பாள் : ஸ்ரீமீனாட்சியம்மன்
பிரார்த்தனைச் சிறப்பு: சந்திர பலம் குன்றியவர்கள் இங்கு வந்து வழிபடலாம். பிரிந்துபோன உறவுகள் ஒன்றுசேர, இந்த ஆலயத்துக்கு வந்து தூய நெய் ஊற்றி விளக்கேற்றி வழிபட்டால், வேண்டுதல் கைகூடும்.
எப்படிச் செல்வது?:அம்மாபேட்டை - கும்பகோணம் வழித்தடத்தில், அம்மாபேட்டையிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது விளத்தூர். கும்பகோணத்திலிருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.
வங்கிக் கணக்கு விவரம் :
A/c.Name: GANESAN - N. GOPALSAMY
A/c.No: 279501000009621
Bank Name: Indian Overseas Bank
Branch: Avoor
IFSC No: IOBA0002795
தொடர்புக்கு: கோபால்சாமி (97877 97801)