Published:Updated:

மாங்கனி கொடுத்தார் பிள்ளை வரம் கிடைத்தது

சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர்
பிரீமியம் ஸ்டோரி
சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர்

சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர்

மாங்கனி கொடுத்தார் பிள்ளை வரம் கிடைத்தது

சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர்

Published:Updated:
சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர்
பிரீமியம் ஸ்டோரி
சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர்

ஏறக்குறைய 170 வருடங்களுக்குமுன் நிகழ்ந்த சம்பவம். மதுரை- மானாமதுரை செல்லும் வழியில் திருப்பாச்சேத்தி அருகில் அமைந்துள்ள கட்டிக்குளம் பகுதியில் அமைந்த அந்தக் கோயிலுக்குள் தந்தையுடன் நுழைந்தான் அந்தச் சிறுவன்.

அவனை வளாகத்தில் இருக்கச் சொல்லிவிட்டு பூஜை செய்வதற்காக சந்நிதிக்குச் சென்றார் தந்தை. சிறிது நேரத்தில் பூஜையை முடித்துவிட்டு சந்நிதியைவிட்டு வெளியே வந்தவர், தான் கண்ட காட்சியால் அதிர்ந்து போனார். மகன் குத்துக்காலிட்டு தியானத்தில் அமர்ந்திருந்தான்.

அவன் தலைக்கு மேல் பாம்பு ஒன்று படமெடுத்து ஆடிக் கொண்டிருந் தது. பயந்துபோன அவன் தந்தையார் `கடவுளே என் மகனைக் காப்பாற்று’ என்று வாய்விட்டு அலறினார். மறுகணம்... அந்தச் சர்ப்பம் அங்கிருந்து மெள்ள நகர்ந்து மறைந்துபோனது. அன்று மட்டுமல்ல ஒவ்வொருமுறை அந்தச் சிறுவன் கோயிலுக்குச் செல்லும்போதெல்லாம், சர்ப்பமும் வந்தது. அவனின் திருமேனியில் ஊர்ந்து விளையாடியது.

யார் இந்தச் சிறுவன் தெரியுமா? அவன்தான் பிற்காலத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்தி பக்தர்கள் உள்ளத்தில் நிரந்தரமாகக் கோயில் கொண்டுவிட்ட சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர்.

கட்டிக்குளம் கிராமத்தில் வாழ்ந்த குப்ப முத்து வேளாளர் - கூத்தாயி அம்பாள் தம்பதிக்கு மகனாக, காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தன்று (1858 ஜூலை) பிறந்தவர் மாயாண்டி சுவாமிகள். இளம் பருவத்திலேயே தெய்வக்கலையுடன் வளர்ந்தார் சுவாமிகள். அவரின் இளம் பருவத்திலேயே மேலே சொன்ன அதிசயமும் நிகழ்ந்தது.

சுவாமிகளின் 12-வது வயதில் உபநயனம் நிகழ்ந்தது. பரம்பரைச் சொத்தான வைத்தியச் சுவடிகளையும் சித்தர் நூல்களையும் படித்துத் தேர்ந்தார் மாயாண்டி. அடிக்கடி மதுரைக்குச் சென்று மீனாட்சி அம்மனைத் தரிசித்து வருவார். இந்த நிலையில் உறவுக்காரப் பெண்ணான மீனாட்சியை அவருக்கு மணம் முடித்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர். மெள்ள மெள்ள சுவாமிகளின் மனம் தவ வாழ்க்கையின் மீது திரும்பியது.

இந்தச் சூழலில் ராமேஸ்வரம் யாத்திரை செல்லும் வழியில் கட்டிக் குளம் கிராமத்துக்கு வந்த செல்லப்பா சுவாமிகளைக் குருவாக ஏற்றார் மாயாண்டி. தொடர்ந்து யாத்திரைக்குக் கிளம்பினார். பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். மனைவியும் விடவில்லை. அவள் சுவாமிகள் நகரமுடியாதபடி அவரின் வேட்டியைக் கெட்டியாகப் படித்துக் கொண்டாளாம். ஆனால் சுவாமிகளிடம் அவளின் முயற்சி எடுபடவில்லை. வேட்டியை விட்டுவிட்டு கெளபீனத்துடன் புறப்பட்டு விட்டார் சுவாமிகள்.

பல ஊர்களுக்கும் யாத்திரை மேற்கொண்டவர் நிறைவில் மதுரை திருக்கூடல் மலையில் தங்கினார். சித்தர்கள் பலரையும் தரிசித்தார். அவர்களின் அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்று ஆவல் கொண்டார். இந்த நிலையில்தான் இருளப்ப கோனார் என்பவர் மாயாண்டி சுவாமிகளை தரிசிக்க வந்தார்.

`இளம் வயதிலேயே மரணம்’ என்பது இருளப்பருக்குப் பலரும் சொன்ன ஜோதிட வாக்கு. ஆனால் மாயாண்டி சுவாமிகள் ``நீண்ட காலம் வாழ்ந்து அறப்பணி செய்வாய்’’ என்று வாழ்த்தினார். அதுமட்டுமா? இருளப்பர் அனுபவிக்க வேண்டிய மரண அவஸ்தைகளை தாமே ஒரு மண்டல காலம் அனுபவித்தாராம் சுவாமிகள். அதற்காகத் தரையில் குழி தோண்டி உள்ளே அமர்ந்து, மூடிய குழிக்குள் ஒரு நாள் முழுக்க தியானம் இருந்தார்; இருளப்ப கோனாரின் ஆயுள் விருத்தியானது.

1930-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 13-ம் தேதி இருளப்பக் கோனாரின் தோளில் சாய்ந்தபடியே சுவாமிகள் சமாதி அடைந்தார். சுவாமிகளின் திருமேனிக்கு அபிஷேகம் அலங்காரங்கள் செய்து சமாதி வைக்கப்பட்டது. சுவாமியின் விருப்பப்படி, தினமும் அவர் வணங்கி வந்த பிள்ளையார் விக்கிரகத்தைச் சமாதியின் மீது வைத்தனர்.

சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சமாதித் திருக்கோயில், மதுரை-திருப்பரங்குன்றத்தில் தியாகராஜர் பொறியியற் கல்லூரிக்குத் தென் பகுதியில், திருக்கூடல் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. சித்தர் காகபுசுண்டர் தவம் செய்த காரணத்தால், இந்த மலை புசுண்டர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது இருளப்பக் கோனாரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இந்த சமாதிக் கோயிலைப் பராமரித்து வருகின்றனர். தினசரி பூஜைகளும் நடத்தி வருகின்றனர்.

சூட்டுகோல் மாயாண்டி சித்தருக்குத் தாமிர பரணிக் கரையில் உள்ள ஆழ்வார் திருநகரியிலும் மடாலயம் அமைந்துள்ளது. தாமிரபரணிக் கரையில் மகா சித்தர் மாயாண்டி சுவாமிகளின் மகிமை பல நடந்துள்ளது.

மாயாண்டி சுவாமிகள்
மாயாண்டி சுவாமிகள்

பிள்ளைக் கனி கிடைத்தது

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் பலவேச வேளார் என்பவரின் மகன் குமாரசாமி வேளார் - அண்ணாமலையம்மாள் தம்பதிக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லை. அப்போது மாயாண்டி சுவாமிகள் தன் சீடர்களுடன் செய்துங்கநல்லூருக்கு வந்தார்.

அவர்களைக் குமாரசாமி வேளார் வரவேற்று, தன் வீட்டு முற்றத்தில் கட்டிலில் அமரவைத்தார். இரவு சுவாமிகள் அங்கேயே தங்கவேண்டும் என்றும் விண்ணப்பித்துக் கொண்டார். சுவாமிகளும் ஒப்புக்கொண்டார். பூஜைகள் முடிந்து சுவாமிகள் தூங்கும் நேரம் வந்தது. முற்றத்தில் சுற்றிலும் சீடர்கள் படுத்துக்கொள்ள, சுவாமிகள் கட்டிலில் படுத்தார்.

இரவு 12 மணி அளவில் சுவாமிகள் திடீரென விழித்தார். குமாரசாமி வேளாரின் மனைவி அண்ணாமலை அம்மாளை அழைத்து, “விளக்கை சரி பாரம்மா” என்றார். அதன்பின், “விடியும் வரை விழித்திரு” என்று சொல்லிவிட்டு படுத்துக்கொண்டார்.

நள்ளிரவில் மழை பொழிந்தது. சீடர்கள் எழுந்துவிட்டார்கள். சுவாமிகள் மட்டும் உறங்கிக் கொண்டிருந்தார். மழையில் அனைவரின் ஆடை களும் நனைந்துவிட, சுவாமிகள் படுத்திருந்த பகுதியில் துளி நீர் படாமலும் துணிகள் நனையா மலும் இருந்தன. சட்டென்று விழித்தெழுந்த சுவாமிகள் ``மழை பொழிகிறதா?’’ என்று கேட்டார்.

பின்னர் அண்ணாமலை அம்மாளிடம் மாம்பழம் ஒன்றைக் கொடுத்து, “இதைச் சாப்பிடு. உனக்குக் குழந்தை பிறக்கும்” என்று கூறிவிட்டு, அங்கிருந்து ஆவேசமாகக் கிளம்பிச் சென்று விட்டார்.

அவரின் திருவாக்கு பலித்தது. அண்ணாமலை அம்மாளுக்குப் பங்குனி உத்திரத்தன்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மாயாண்டி ராமசுந்திரம் என்று பெயர் வைத்தனர். தற்போதும் இந்தக் குடும்பத்து வாரிசுகள் சிறந்த ஜோதிட வல்லுநர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.

மாயாண்டி சுவாமி
மாயாண்டி சுவாமி


மனநோய் குணமானது

கருங்குளம் ஆழ்வார்திருநகரிக்கு அருகிலுள்ள ஊர். இங்கே வசித்த அன்பர் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை விலங்கு பூட்டித் தனியறையில் வைத்திருந்தார்கள். இதை ஞானதிருஷ்டி மூலம் தெரிந்துகொண்டார் சுவாமிகள்.

உடனே அந்த அன்பர் இருக்கும் தெருவில் வந்து அமர்ந்து உணவு அருந்தினார். பின்னர் நேராக அந்த அன்பரின் வீட்டுக்குச் சென்றார். வீட்டில் உள்ளவர்கள் “அருகில் நெருங்கினால் கடித்துவிடுவார். அவர் அருகில் போகாதீர்கள்...’’ என்று கூறி சுவாமிகளைத் தடுத்தனர்.

அவரோ, ``வீட்டில் சாப்பாடு எதுவும் உள்ளதா?’’ என்று கேட்டார். உடனடியாக ஒரு தட்டில் தயிர்சாதம் கொண்டுவரப்பட்டது. சுவாமிகள் ஓன்றிரண்டு கவளம் சாப்பிட்டுவிட்டு, மனநலம் பாதிப்பட்ட அன்பருக் கும் ஊட்டிவிட்டார். பின்னர் அவரின் உடம்பு முழுக்க தடவிக் கொடுத்து உச்சி முகர்ந்தார். மறுகணம், அந்த அன்பரின் விலங்குகள் தெறித்தன. அவர் சித்தம் தெளிந்தார். சுவாமிகளின் கால்களைக் கட்டிக்கொண்டு வணங்கித் தொழுதார்!

செல்வம் கொழித்தது

தென்திருப்பேரையைச் சேர்ந்த மாட்டு வண்டிக்காரர் மாயாண்டி ஆசாரி. ஒருநாள் இவரின் வண்டியில் படுத்துக் கிடந்தார் சுவாமிகள். அப்போது அங்கு வந்த வண்டிக்காரர் சுவாமிகளைப் பார்த்ததும், “சுவாமி! இன்று எனக்கு போனியே ஆகவில்லை’’ என்று வருத்தம் தொனிக்கக் கூறினார். ஆனால் சுவாமிகளோ ``இன்று உன் வீட்டில்தான் சாப்பாடு’’ என்றார்.

வண்டிக்காரர் திகைத்தார். ``இன்னும் போனி ஆகவில்லை. வீட்டிலும் சமைக்க ஒருபொருளும் இல்லை. இந்த நிலையில் சுவாமிகளுக்கு எப்படி சாப்பாடு தயார் செய்வது’’ என்று கலங்கினார். மாயாண்டி சுவாமிகளோ அவரின் பதிலை எதிர்பார்க்கவில்லை. நேராக வண்டிக்காரரின் வீட்டுக்குச் சென்றார். அவரின் மனைவியிடம் ``மதியம் சாப்பாடு தயாராக இருக்கட்டும். நான் சற்று நேரத்தில் வருவேன்’’ என்று கூறிச் சென்றார்.

அந்த அம்மாவுக்கும் திகைப்பு. ``கணவரும் இன்னும் வரவில்லை... வீட்டிலும் சமைக்க எதுவும் இல்லை... என்ன செய்வது...’’ என்ற சிந்தனையுடன் வீட்டுக்குள் சென்றார்.

அங்கே, தேவையான பொருள்கள் அனைத்தும் இருந்தன. அந்த அம்மாளுக்கு இன்ப அதிர்ச்சி. எல்லாம் சுவாமிகளின் அருள் என்பதைப் புரிந்துகொண்டார். சுவாமிகளுக்கு அறுசுவை உணவு படைத்துச் சமர்ப்பித்தாள். அன்றிலிருந்து அவர்களின் வீட்டில் செல்வம் கொழித்தது.

காவடி
காவடி
விளக்கு பூஜை
விளக்கு பூஜை


முருக பக்தரின் தாகம் தணிந்தது

ஆழ்வார்திருநகரியில் சுவாமிகள் வீடு வீடாகச் சென்று தினமும் உணவைத் தானமாகப் பெறுவார். அவற்றை காவடி போன்று கம்பில் கட்டி தூக்கிச் செல்வார்.

இந்த உணவை திருச்செந்தூருக்குப் பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வழங்குவார். அவ்வாறு அவர் வழங்கும் உணவு, அப்போதுதான் சமைத்தது போன்று ஆவிபறக்கத் திகழுமாம்!

ஒருமுறை யாத்திரை சென்ற பக்தருக்குத் தாகம் எடுத்தது. வழியில் ஒரு கிணறு தென்பட்டது. அருகில் சென்று பார்த்தார். தண்ணீர் மிகவும் அடிமட்டத்தில் கிடந்தது. வாளி இருந்தது என்றாலும் கயிறு இல்லை. தன் விதியை நொந்துகொண்டார் அந்த யாத்திரிகர். அப்போது மாயாண்டி சுவாமிகள் அந்தப் பக்கம் வந்தார்.

“என்ன அப்பு... தண்ணீர் தாகம் எடுக்குதா? இந்தா இந்தத் துண்டைக் கட்டி வாளியை கிணற்றுக்குள் இறக்கு... தாகம் தீரும்” என்றார்.

`அவ்வளவு ஆழமுள்ள கிணற்றில் நீர் இறைக்க இந்தச் சின்னத் துண்டு எப்படி போதும். இந்தக் கோவண சாமி ஏன் இப்படிச் சொல்கிறார்...’ என்று யாத்திரிகருக்குக் குழப்பம்.

எனினும் சுவாமிகளின் கூற்றுப்படி துண்டைக் கட்டி வாளியை கிணற்றுக்குள் வீசினார். மறுகணம் துண்டு எட்டும் அளவுக்குக் கிணற்றில் நீர் பொங்கிப் பெருகியது. தாகம் தீர்ந்த பக்தர் சுவாமியை வியப்புடன் வணங்கித் தொழுதார்.

இதுபோன்று இன்னும்பல அற்புதங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். திருநெல்வேலி - திருச்செந்தூர் மார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் அமைந்திருக் கிறது ஆழ்வார்திருநகரி.

பிரசித்திபெற்ற வைணவ திருத்தலம் இது. இவ்வூரில் பிரதான பேருந்து நிறுத்தத்திலிருந்து அரை பர்லாங் தொலைவில் அமைந்திருக்கிறது சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் மடாலயம். தற்போது இங்கு திருப்பணிகளுக்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

தினமும் மாலை தீப வழிபாடு உண்டு. பௌர்ணமி தோறும் திரு விளக்கு பூஜை, சரஸ்வதி பூஜை, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரியில் ஒன்பது அலங்காரம், சங்கடகர சதுர்த்தி முதலான வைபவங்கள் நடைபெறுகின்றன.

ஆண்டு தோறும் புரட்டாசி கேட்டையில் சுவாமி களின் குருபூஜையும், ஆடி- பூரட்டாதி நட்சத்திரத்தன்று அவதார தினமும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாயாண்டி சுவாமிகளின் பக்தரான தேவரான் பிள்ளை என்பவர் சுவாமிகளைப் புகைப்படம் எடுத்தாராம். சுவாமிகள் சடாமுடியுடன் புலித் தோல் மீது நிற்கும் கோலத்தில் உள்ள அந்தப் படத்தை மடாலயத்தில் தரிசிக்கலாம். பக்தர்களுக்காக மாயாண்டி சுவாமிகள் சுமந்த அன்னக்காவடியும் இங்கு உள்ளது.

பக்தர்கள் இங்கு வந்து அமர்ந்து தியானம் செய்து, சுவாமிகளின் திருவருள் பிரசாதத்தைப் பெற்று சென்றால், அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். சங்கடங்கள் விலகி ஓடும். சுவாமிகளின் திருவருளால், திருமணத் தடைகள் நீங்கும், கடனும் பிணிகளும் தீரும், வியாபாரம் பெருகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

வல்லமை மிக்க சூட்டுக்கோல்!

மாயாண்டி சுவாமிகள் வைத்திருந்த சூட்டுக்கோல் மிகவும் வல்லமை மிக்கது. இது, அவரின் குரு செல்லப்பா சுவாமிகளுக்கும் குருவான சூட்டுக்கோல் ராமலிங்கம் சுவாமிகளிடம் இருந்ததாம். அவரிடம் இருந்து குரு வழியாக மாயாண்டி சுவாமிகளிடம் வந்து சேர்ந்ததாம்.

சூட்டுக்கோல் மாயாண்டிச் சித்தர் தன்னிடம் வரும் பகதர்களின் மனநிலையை உணர்ந்து அவர்களுக்கு உதவுவார். அதேநேரம் பேராசையுடன் வருவோரை, பொய் சொல்வோரை எளிதில் இனம் கண்டு கொள்வார். தேடி வருவோரின் கையை நீட்டச் சொல்லி, சூட்டுக்கோலால் அவர்களது கையை மெள்ள தொடுவார்.

வந்திருப்பவர் பேராசை உள்ளவர்களாக - பொய் சொல்பவர்களாக இருந்தால், சூட்டுக்கோலின் சூட்டைத் தாங்க இயலாதாம்! அவர்களிடம் சுவாமிகள், “என்ன அப்பு சுடுதா... மனசுல இருக்கிற அழுக்கை முதல்ல சூட்டுப் பொசுக்கணும் அப்பு...” என்பாராம். இந்தச் சூட்டுக்கோல் தற்போதும் திருக்கூடல்மலை சமாதித் திருக்கோயிலில், சுவாமியின் சமாதி அருகே உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism