மதுரையிலிருந்து விருதுநகர் செல்லும் வழியில் உள்ளது திருமங்கலம். இங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில், உசிலம்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஶ்ரீமீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில்.
மதுரை ஶ்ரீமீனாட்சி திருக்கல்யாணதின்போது மாப்பிள்ளை வீட்டார் சார்பில், அதாவது சிவனார் தரப்பில் இருந்து ஶ்ரீஅகத்திய மாமுனி, இந்தத் திருமங்கலம் திருத்தலத்துக்கு திருமாங்கல்யம் எடுத்து வந்து, லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
இந்தத் தலத்தில், அம்பிகை ஶ்ரீமீனாட்சிக்குத் திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டதால், இந்த ஊர் திருமாங்கல்யபுரம் என்று அழைக்கப்பட்டு, பிறகு அதுவே திருமங்கலம் என மருவியதாகச் சொல்வர். மூலவர்- ஶ்ரீசொக்கநாதர், அழகிய லிங்கத் திருமேனி. ஶ்ரீமீனாட்சி கொள்ளை அழகுடன் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறாள்.

ஶ்ரீமங்கல தட்சிணாமூர்த்தி, ஶ்ரீவிநாயகர், ஶ்ரீமுருகப்பெருமான், ஶ்ரீயோக சனீஸ்வரர், ஶ்ரீகாலபைரவர் ஆகியோர் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். ஸ்தல விருட்சம்- வில்வமரம். தீர்த்தம்- ஶ்ரீஆகாய கங்கை.
இங்கு வந்து ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு வேஷ்டி, புடவை சார்த்தி வேண்டினால், திருமாங்கல்ய தோஷங்கள் யாவும் விலகி, கல்யாண வரன் கைகூடும் என்பது ஐதீகம். இங்கு நடைபெறும் திருமஞ்சனத்தை தரிசித்தால் 100 ருத்ர ஹோமம் செய்ததற்கு சமமான பலனைத் தரும் என்கிறார்கள்.
ஆனித் திருமஞ்சன நாளில், மாலை வேளையில், ஶ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஶ்ரீநடராஜருக்கு அபிஷேக-ஆராதனைகள் சிறப்புற இங்கே நடைபெறும். மேலும், முக்கனிகளால் நடைபெறும் அபிஷேகத்தைத் தரிசித்தால், வறுமை நீங்கும்; ஐஸ்வரியம் பெருகும் என்கின்றனர் இவ்வூர் மக்கள்.
- கே.புனிதா, மதுரை -2