Published:Updated:

"திருக்கோயில் அறங்காவலர் குழுவில் இடமளிக்க வேண்டும்!"- முதலமைச்சருக்கு ஆன்மிக எழுத்தாளர்கள் கடிதம்

திருக்கோயில்
திருக்கோயில்

ஆன்மிக எழுத்தாளர்கள் முதலமைச்சருக்குக் கடிதம்!

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் திருக்கோயில்களுக்கான அறங்காவலர்கள் குழுவில் ஆன்மிக எழுத்தாளர்களுக்கு இடமளிக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சருக்கு ஆன்மிக எழுத்தாளர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஆன்மிக எழுத்தாளர்களான பனையபுரம் அதியமான், முத்தாலங்குறிச்சி காமராசு, தேனி மு. சுப்பிரமணி ஆகிய மூவரும் சேர்ந்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருக்கும் கடிதத்தில், தமிழ்நாட்டில், தமிழ் மொழியில் வெளியாகும் அனைத்துப் பத்திரிகைகளிலும் இடம் பெற்றிருக்கும் ஆன்மிகப் பகுதிகளில், ஆன்மிகம் தொடர்பாக எழுதும் ஆன்மிக எழுத்தாளர்கள் பலர் இருக்கின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை

தங்களின் எழுத்துகளின் வழியாக, ஆன்மிகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆன்மிக எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கான ஆலோசனைக்குழு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற திருக்கோயில்களில் அமைக்கப்படும் அறங்காவலர்கள் குழு போன்றவற்றில் ஆன்மிக எழுத்தாளர்களுக்குத் தகுந்த இடமளிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் முதலமைச்சருக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தமிழ் பத்திரிகைகளில் இடம் பெற்று வரும் ஆன்மிகப் பகுதிகளில் ஆன்மிகக் கதைகள், ஆன்மிகச் சிந்தனைகள், சமய வாழ்வியல் மற்றும் பண்பாடுகள், சமயப் பெரியோர்களின் வரலாறுகள், பெரியோர் பொன்மொழிகள், திருக்கோயில்கள் வரலாறு என்று பல்வேறு தலைப்புகளில் ஆன்மிகம் தொடர்பாக எழுதும் ஆன்மிக எழுத்தாளர்கள் பலர் இருக்கின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கான ஆலோசனைக்குழு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் குழு அமைப்பது அரசின் நடைமுறைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

ஆன்மிக எழுத்தாளர்கள்
ஆன்மிக எழுத்தாளர்கள்

இந்து சமய அறநிலையத்துறைக்கான ஆலோசனைக்குழு மற்றும் தமிழ்நாட்டிலுள்ள திருக்கோயில்களில் புதிதாக அமைக்கப்படும் அறங்காவலர்கள் குழுவில் ஆன்மிக எழுத்தாளர்களையும் இடம் பெறச்செய்தால், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அதன் கீழ் செயல்பட்டு வரும் திருக்கோயில்களின் வளர்ச்சிக்கு அது பயனுள்ளதாக அமையும். எனவே முதலமைச்சர் இது குறித்துப் பரிசீலித்து, இந்து சமய அறநிலையத்துறையின் ஆலோசனைக்குழு மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருக்கோயில்களுக்குப் புதிதாக அமைக்கப்படும் அறங்காவலர்கள் குழுக்களில் ஆன்மிக எழுத்தாளர்களுக்கு உரிய இடமளித்துச் சிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு