Published:Updated:

வாசகர் ஆன்மிகம்!

வாசகர் ஆன்மிகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் ஆன்மிகம்! ( aijohn784 )

வாசகர்களின் பகிர்வுகள்

வாசகர் ஆன்மிகம்!

`மூன்றுவித சுகங்கள்!’

கீதையில் மூன்றுவித இன்பங்களைப் பற்றி உபதேசிக் கிறார் பகவான் கிருஷ்ணர். அவை: தாமஸ சுகம், ராஜஸ சுகம், சாத்விக சுகம்.

உருப்படியாக எதுவும் செய்யாமல் வெகுநேரம் தூங்கு வோருக்கும், கவனக் குறைவுடன் ஏனோதானோவென்று செயல்புரிபவர்களுக்கும், அந்தச் செயல்பாடுகள் ஏதோ சுகமாக இருப்பதுபோலத் தோன்றும்; ஆனால், உண்மையில் அது சுகமல்ல. தனக்கோ சமுதாயத்துக்கோ எந்தப் பயனும் தராத - கேடு விளைவிக்கும் இதுபோன்ற சுகத்தை மூன்றாம் தர சுகமாக ‘தாமஸ சுகம்’ என்று குறிப்பிடுகிறார் பகவான்.

சிலர், அதிகாலையில் எழுவார்கள்; சுறுசுறுப்பாக செயலாற்று வார்கள். ஆனால், இவர்களது செயல்பாடு பயனற்றதாக இருந்தால்?! இந்திரிய சுகங்களை அனுபவிக்கும்போது ஒரு சுகம் தோன்றும். அதாவது உண்ண ஆரம்பிக்கும்போது சுகமாகத் தோன்றுவது, சாப்பிட்டு முடித்ததும் ‘அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட விட்டோமே’ என்ற குற்ற உணர்வு கலந்த துக்கத்தை தரும். இப்படி பயனற்ற செயல்களால் கிடைக்கும் சுகத்தை இரண்டாம் தரமாகக் கருதி, ‘ராஜஸ சுகம்’ என்கிறார் கிருஷ்ணர்.

சுகங்களில் முதல் தரமானது ‘சாத்விக சுகம்’; பயிற்சியால் மட்டுமே வளரக்கூடியது. அதிகாலையில் கண் விழித்து, வாழ்க்கைக்கு பயனுள்ள செயல்களைச் செய்பவர்களுக்கே கிடைக்கும் இந்த சுகம், ஆரம்பத்தில் கசக்கும்; முடிவில் இனிக்கும். தர்மத்தை கடைப்பிடிப்பது ஆரம்பத்தில் கடினம்; போகப் போக இன்பமாகவும் சுலபமாகவும் இருக்கும்.

ஒழுக்கமாக வாழ்பவன், சாத்விக சுகத்தை அனுபவிக்கிறான். அவன் வாழ்வில் துக்கத்துக்கே இடம் இல்லை!(பூஜ்ய சுவாமி ஓங்காராநந்தரின் அருளுரைகளிலிருந்து...)

- தி.ஹரி, சேலம்

வாசகர் ஆன்மிகம்!
aijohn784

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அருந்ததி தரிசனம்!

வாழ்வின் நிறைவுக்கு தேவர்களைப் போற்றிப் புகழ்ந்தாலும், திருமணத்தில் அருந்ததியின் தரிசனமே நிறைவு தருகிறது.சீதையும் நாராயணியும் பொதுவாழ்வில் சரித்திரம் படைத்தனர் எனில், தனிமனித வாழ்வில் நிறைவை ஏற்படுத்தியவள் அருந்ததி.

வாழ்வின் உயர்வை, விண்ணுலகில் வீற்றிருந்தபடி, அனைவரும் வாழ்வில் உயர அருளுகிறாள் அவள்!அருந்ததி, பதிவிரதையருள் முதலாமவள்; நமது நற்செயல்களில், ஈடுபாட்டினை இரட்டிப்பாக்குபவள்; அறத்தையும் ஒழுக்கத்தையும் நம்மில் நிலைபெறச் செய்பவள் எனப் போற்றுகிற செய்யுள், புராணத்தில் உண்டு. (அருந்ததி நமஸ்துப்யம்... தர்மசீலபிரவர்த்தனி).

இறைவனைப் பணிந்து, வலம் வந்து, பிரார்த்தித்தால்தான் எண்ணம் ஈடேறும். ஆனால் அருந்ததியைத் தரிசித்தாலே போதும்; இன்பம் நிலைத்திருக்கும் என்கிறது சாஸ்திரம். இவளது பேரருளால், மறுபிறவி எடுக்காமலே பிறவிப்பயனை அடைந்துவிடுவர் பெண்கள்.

- சி. அருணா, கோவை-3

வாசகர் ஆன்மிகம்!

ஶ்ரீரமணர் அருளிய தீபாவளி பாடல்!

நர குடல் நானா நர குலகு ஆளும்

நரகன் எங்கென்று உசாவின்

ஞானத் திகிரியால்நரகனைக் கொன்றவன்

நாரணன் அன்றே நரக சதுர்த்தசி நல் தினமாமே!

கருத்து: `தான் வெறும் உடல் மட்டுமே’ என்பவன்தான் நரகன். நரகன் யார் என்று அறிந்து, ஞான திருஷ்டியால் அவனைக் கொல்பவனே நாராயணன். ஞானத்தால் நாம் உடல் அல்ல என்று அறிந்து கொள்வதுதான் தீபாவளியாகும்.

நரக உருவா நடலையில் உடல

கிரகம் அகம் எனவே கெட்ட

நரகனாம்மாயாவியை நாடி மாய்த்துத்

தானாய் ஒளிர்தல் தீபாவளியாம் தெளி

கருத்து: உடம்பு நரகம் போன்றது. `அதுவே நான்’ என்ற தவறான கருத்து உடையவன் நரகன். அந்தத் தவறான கருத்தை அழித்து, ஆத்மாவாக ஒளிவிடுவதே தீபாவளி.

- ஹரிராஜா, திருநெல்வேலி

வாசகர் ஆன்மிகம்!
Rajesh Kumar Singh

மூல தனம்!

ஷ்ய அறிஞர் டால்ஸ்டாயைப் பார்க்க ஒரு நாள், இளைஞன் ஒருவன் வந்தான்.

அவன், ‘‘ஐயா! நான் ஒரு தொழில் தொடங்கி, முன்னேற விரும்புகிறேன். ஆனால், மூலதனம் எதுவுமில்லை. தாங்கள் பணம் கொடுத்து உதவ முடியுமா?’’ என்று அவரிடம் கேட்டான்.

டால்ஸ்டாய் அவனிடம், ‘‘நூறு ரூபிள் (ரஷ்ய நாணயம்) தருகிறேன். அதற்கு உன் சுண்டு விரலைத் தர வேண்டும். தருவாயா?’’ என்றார்.

பதறிய இளைஞன்,‘‘சுண்டு விரலா?’’ என்றான்.

‘‘சரி! 1000 ரூபிள் தருகிறேன். உன் ஒரு காலைக் கொடுக்க முடியுமா?’’ என்றார் டால்ஸ்டாய்.

‘‘ஐயோ... காலா?!’’ என்றான் இளைஞன்.‘‘போகட்டும். 10,000 ரூபிள் தருகிறேன். உன் கண்ணைக் கொடுக்கிறாயா?’’ என்றார் டால்ஸ்டாய்.

அவ்வளவுதான் பதற்றத்துடன் அங்கிருந்து ஓடுவதற்கே தயாரானான் அந்த இளைஞன்.

அப்போது டால்ஸ்டாய் அன்போடு அவன் கரத்தைப் பற்றி, ‘‘தம்பி! உன் உடம்பிலுள்ள அத்தனை உறுப்புகளும் உயர்வானவை; விலை மதிக்க முடியாதவை. அவை ஆண்டவன் அளித்துள்ள அரிய பொக்கிஷம்; உன்னதமான மூலதனம்! அவற்றை வைத்துக் கொண்டு, நம்பிக்கையோடு உன் தொழிலைத் தொடங்கு. முனைப்போடு செயல் பட்டால் முன்னேற்றத்தின் முகட்டை எட்டிப் பிடிக்கலாம்!’’ என்று விளக்கினார்.

- வி.ராமு, கோவை-2

வாசகர் ஆன்மிகம்!

`ஐயன் அதிசயன்!’

றையனார் விற்கோலம் அருளிய தலம் திருவிற்கோலம். தற்போது கூவம் என வழங்கப்படுகிறது. சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், செம்பரம்பாக்கத்தை அடுத்து, திருவள்ளூர் நோக்கிச் செல்லும் சாலையில் சென்று கூவம் கூட்டு ரோட்டை அடையலாம்.

கூவம் என்பது ஒரு பழந்தமிழ்ச் சொல். சுனை அல்லது நிலத்தடி நீர் ஊற்று என்று பொருள். சம்ஸ்கிருதத்தில், இது ‘கூபம்’ எனப்படுகிறது.இத்தலத்தின் மூலவர் திருவிற்கோலநாதரை, `ஐயன் நல் அதிசயன்’ எனப் போற்றுகிறார் திருஞான சம்பந்தர்.

சென்ற நூற்றாண்டு வரை, இந்த சிவலிங்கம், சில அறிகுறிகளைக் காட்டியதாம். வெள்ளம் வருவதாக இருந்தால், முன்னதாகவே சிவலிங்கத்தின் மீது வெண்மை படருமாம்; அதேபோன்று, போர் வரப் போகிறது என்றால், செம்மை படருமாம். இப்போது இந்த அறிகுறிகள் தென்படுவதில்லை. இருந்தாலும், இதைக் குறித்தே ஞானசம்பந்தர் ‘ஐயன் - அதிசயன்’ என்று பாடியதாகச் சொல்லி போற்றுகிறார்கள் பக்தர்கள்.

- கே.ராஜா, விழுப்புரம்

வாசகர் ஆன்மிகம்!

வாரியார் சொன்ன கதை!

ன்பர் ஒருத்தர், பசி தாங்க முடியாமல் நடந்துகொண்டிருந்தார். வழியில் ஓரிடத்தில் சுண்டல் விநியோகம் நடந்தது. இவரும் வாங்கிச் சாப்பிட்டார். விக்கல் வந்தது.

சுண்டல் விநியோகம் செய்தவர் நீர் கொடுத்தார். அன்பரோ மறுத்துவிட்டார். குளம் எங்கே என்று கேட்டு, ஒரு கி.மீ. தூரம் நடந்து சென்று குளத்தில் தண்ணீர் குடித்தார்.

அவரைப் பின்தொடர்ந்த சுண்டல் தானம் செய்தவர், ‘என்னங்க இது... சுண்டலை வாங்கிக்கிட்டீங்க. தண்ணி தந்தா ஏத்துக்க மாட்டேங்கறீங்களே’ என்று கேட்டார்.

அதற்கு அன்பர், `‘ஐயா! சுண்டலை சாப்பிடலேனா செத்துப் போயிருப்பேன். அது ஆபத்து கால தர்மம். ஆனால், சுண்டலைத் தின்ன பிறகு உடம்புல தெம்பு வந்துருச்சு. அதுக்கு அப்பறமா, எனக்கு வேண்டியதை நானே உழைச்சு தேடிக்கணும்’ என்றார்.

- வே.ராமன், கரூர்

வாசகர் ஆன்மிகம்!

வெண்ணெய்க் காப்பு ஏன்?

ஶ்ரீ கிருஷ்ணன் வெண்ணெய் திருடி லீலைகள் செய்தபோது, குரங்கு ஒன்று அங்கு வந்தது என்று ஶ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.பகவான், தான் திருடிய வெண்ணெய்யை, மற்ற குழந்தைகளுடன் அந்தக் குரங்குக்கும் பகிர்ந்துகொடுத்தார்.

அனுமாரான அந்தக் குரங்குக்கு ஆனந்தம் தாங்கவில்லை. தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கூத்தாடிக் கூத்தாடி வெண்ணெய்யைத் தனது உடல் முழுவதும் பூசிக் கொண்டது!

அதிலிருந்துதான் அனுமாருக்கு வெண்ணெய்க் காப்பு சாற்றும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது என்பார்கள். அனுமாரும் தனக்கு யார் வெண்ணெய்க் காப்பு சாற்றுகிறார்களோ அவர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றி அருள்கிறார்.

- கே.கீர்த்தனா, சென்னை-64